Monday, July 15, 2019
Sunday, July 14, 2019
பல்செல்வம் ஈட்டிப் பயனென் பழுதில்லாப்
பல்செல்வம் பெறாஅர் எனின்? 1
பல்செல்வம் பெறாஅர் எனின்? 1
பல்லார் பழிக்கப் பெறுவர்வாய் பேணாத
பல்லார்தாம் பல்நோய்வாய்ப் பட்டு. 2
பல்லார்தாம் பல்நோய்வாய்ப் பட்டு. 2
கற்க கசடறப் பல்நலம் கற்றிடேல்
நிற்க மருத்துவர் முன். 3
நிற்க மருத்துவர் முன். 3
தொட்டால் துடிப்போம் பிறபுண்ணால் பல்லோநீர்
பட்டாலும் நோகும் பழுத்து. 4
பட்டாலும் நோகும் பழுத்து. 4
பல்லால் கிடைத்த பயனெல்லாம் சொத்தைவரில்
சொல்லாமல் ஏகும் துறந்து. 5
சொல்லாமல் ஏகும் துறந்து. 5
பல்காத்துப் பல்”டாக்டர்” சொல்காத்துப் பின்வரும்
”பில்”பார்த்துப் போகும் வலி. 6
.மண்ணுலகும் தீநரகாய் மாறுமே பற்களிடைப்
புண்ணுழைந்த போதில் பொரிந்து. 7.
வலிசூழ்ந்த பல்லெனக் காட்டிநம் இன்பம்
பலிகொள்ளும் பாவி உணர். 8
பல்லால் விளைஇன்னல் வாழ்வில் படும்துன்பம்
எல்லாவற் றுள்ளும் தலை. 9
யாகாவா ராயினும் வாய்காக்க காவாக்கால்
சோகாப்பர் பல்லழுக்குப் பட்டு. 10
சோகாப்பர் பல்லழுக்குப் பட்டு. 10
... அனந்த்
9-7-2019
Saturday, July 13, 2019
என் கதை (கானடா காவடிச் சிந்து)
என் கதை
(அல்லது கானடா காவடிச் சிந்து)
கானடா என்றொரு தேசம்
அதில் வாசம்
தந்த நேசம் - நல்ல
காதலைப் போலொரு பாசம்- வந்த
விதமே யொரு கதையே யதன்
பதமே வெகு புதுமை சொலக்
காத்திருந் தேன்பல காலம் - இன்று
காட்டிடு வேனதன் கோலம் (1)
நானிங்கு வந்திட்ட வேளை
யிளங் காளை
நல்ல மூளை- மணம்
நான்முடித் தேன்அழ காளை- உளத்
தடியே வெகு துடியோ டொரு
படியாகவே குடியேறிட
நான்வந்து சேர்ந்தனிக் கண்டம்-அந்த
நாள்முதல் வாழ்வெம கண்டம் (2)
காலையும் மாலையும் வேலை
பணி ஆலை
ஒரு மூலை- அதைக்
கண்டுபி டிக்கவே சாலை- தனில்
கனவே கமாய்த் தினமே வளி
எனவே செல மனம்போ லொரு
காரெனும் ஊர்தியைக் கொண்டு-அதில்
கண்டதுன் பம்பல வுண்டு (3)
சூரிய னென்றொரு பேச்சு
வெறும் ஏச்சு
எனப் போச்சு - உடல்
சூடுபோய் நாள்பல வாச்சு -பனி
தலைமீ திலும் நிலமீ திலும்
அலையாய் விழக் குலையா ததைத்
தள்ளித்தள் ளியென்றன் தேகம்-மண்ணில்
சாய்ந்திடு மேஅதி வேகம் (4)
பேய்ப்பனிக் காலத்தைக் கொன்று
வாயில் மென்று
தின்ன நன்று - வரும்
பேரிளம் வேனிலு மென்று - மனம்
ஜதியோ டொரு குதிபோட் டிட
அதிலே ஒரு மிதியாய்ப் புதர்
போலவே ஓங்குபுல் வெட்டித்- தினம்
பேர்ந்திடு மேஎன்றன் நெட்டி (5)
ஓரிரண் டேதிங்கள் நின்ற
வெம்மை சென்ற
பின்னர் தென்றல் - இனி
உள்ளபடி வரு மென்ற-எந்தன்
எதிர்பார்ப் பினில் விதிகூட் டிடும்
சதியோ யென அதி வேகமாய்
ஓடி யிலையுதிர் வேளை -வரும்
ஓவென்று நெஞ்சிடும் ஊளை (6)
சூறாவ ளீயெனக் காற்று
மரம் ஏற்று
விழும் தோற்று- அதன்
சூரத்திற் கில்லையோர் மாற்று - அது
சுழலும் விதம் அழகா யினும்
பழகா தவர் விழுவா ரதில்
சுற்றிச்சுற்றி வந்து பார்க்கும்-அது
சும்மாயி ருந்தாலும் தாக்கும் (7)
நல்லதும் உண்டிங்கு கேளும்
பல நாளும்
களி மூளும் - அதை
நான்சொல வேகதை நீளும்-அணி
அணியாய் மிகத் துணிவோ டிவர்
பணிசெய் திடத் துணியே என
நீண்டதோர் சாலையில் ஏகும்- விதம்
நித்திய மும்நடந் தாகும் (8)
இந்தநன் நாட்டினில் பஞ்சம்
இல்லை; கொஞ்சம்
உண்டு வஞ்சம்- எனில்
இந்தியா போலில்லை லஞ்சம் - இங்(கு)
அதனால் ஒரு விதமா கவும்
நிதவாழ் முறை சிதை யாமலே
யாவரும் ஒற்றுமை பேணும்-வகை
எல்லாவி தத்திலும் காணும் (9)
ஆனவ ரைக்கு(ம்)நன் றாகக்
கதை போக
நல மாக- இங்கு
ஆண்டுகள் முப்பதும் ஏக- உடல்
உதிர்வே ளையை எதிர்பார்த் துளம்
அதிரா மலே சதிரா டிடும்
ஆனந்தத் தாண்டவன் தாளை- எண்ணிப்
போக்கிடுவேன் வரு நாளை (10)
எங்கும் கணபதி
நதியரு கேனும் நடுத்தெரு வேனும்
... அதிலொரு கணபதி உண்டு-அவன் ... அழகினை உணும்மன வண்டு
அதிசய மான ஒலியுடன் ஆனைக்
... கதியுடன் கூடிய சந்தம் - பதம்... குதிநடம் ஆடர விந்தம்
... சுதிபுகழ் அதிபல சூரன் - உமை
... மகிழ்வுடன் அணைசுகு மாரன்
மதியுடன் கொன்றை யணிபர மேசன்
... மகனிவன் மாமதி யாளன்-நெடு... மலையினும் வலிமிகு தோளன்
...தனக்கிவ னொருமரு கோனாம் - இவன்
... தனக்கிளை யவன்முரு கோனாம்
எதிர்வரு கின்ற துயர்பல கண்டு
... அதிர்வெதும் அடைந்திட லில்லை-அவன் ... துதிசொலின் விலகிடும் தொல்லை
எதிலுளம் சாரு மினியெனக் கேட்பின்
... அதுஅவன் எழிலுரு தானே- அதில்... அமிழ்ந்தென திடர்களை வேனே
கொதிதரு வாழ்வில் குளிர்தரு போலக்
... கருணையி னுருஅவன் காணீர்-அவன்... கழலடி சிரமதில் பூணீர்!
குறிப்பு:
அதிசயமான ஒலி= ஓங்காரம்;
ஆனைக் கதி= யானையின் நடை;
விதி=நான்முகன்;
சுதி=மறை;
ததி=தயிர்
அதிசயமான ஒலி= ஓங்காரம்;
ஆனைக் கதி= யானையின் நடை;
விதி=நான்முகன்;
சுதி=மறை;
ததி=தயிர்
Monday, June 17, 2019
சந்தவசந்தம் பொன்விழாக் கவியரங்கம்-50
தலைமை: கவிமாமணி திரு. மீ. விசுவநாதன்
தலைப்பு: அகவலில் தகவல் - பேசும் படம்
இறை வணக்கம்
முன்ன மொருநாள் தன்னை யறிதல்
என்ன தென்பதை இருடியர் நால்வர்க்(கு)
ஆசான் ஆகப் பேசா துரைத்த
ஈசன் அருளை இறைஞ்சுவன் இன்றே.
பொன்னம் பலத்தில் பொற்புடன் நடஞ்செய்
என்னை யனவன் இங்கிக் குழுவின்
பொன்விழாக் கவிதை அரங்கம் பொலிவுறத்
தன்னருட் கரத்தால் தருகநல் லாசியே.
அவை வணக்கம்
குழுவில் மரபு வழுவாக் கவிதைகள்
அழகுற மிளிர அனுதினம் உழைக்கும்
இலந்தை யார்க்கும் ஈங்குள கவிதைப்
புலமை நிறைஅவை யோர்க்குமென் வாழ்த்தே.
கவியரங்கக் கவிதை: பேசும் படம்
ஆ!சிரி யப்பா! எனநமை அழைத்துப்
பேசும் ஓவியம் படைத்தவர் பலரில்
சிறுவய திருந்தென் சிந்தையைக் கவர்ந்த
ஒருவரின் பெருமையை உரைத்திட இங்கே
ஆசிரி யப்பா அகவலைத் தேர்ந்தேன்
அவர்யார் எனநீர் அறிந்திடல் எளிதே
இத்துடன் இணைத்த சித்திர மொன்றே
எத்தகைக் கலைஞர் இவரெனச் சாற்றும்;
பண்டைய நாளின் பரிசாய்த் திகழ்ந்த
மூன்று தலைமுறைக் கூட்டுக் குடியில்
முறையாய் நிகழ்பல ’பண்டிகை’ தம்முள்
இடைவெளி இன்றி இயங்கும் வயிற்றில்
தடைப்படு கழிவைத் தள்ளிட வழங்கும்
பூமணம் வெட்குறும் ஆமணக் கெண்ணையை
அடுத்தடுத்(து) அகத்தில் அத்தனைச் சிறார்க்கும்
கொடுக்கும் விழாக்கண் கொள்ளாக் காட்சியாம்
மேதகு அந்தக் காட்சியின் மாட்சியைச்
சித்திரம் வரைந்து முத்திரை பதித்தனன்
கோபுலு என்னும் ஓவியக் கோமகன்
வாரந் தோறும் ’விகடன்’ இதழின்
அட்டைப் படமாய் அவர்தரு விருந்தைப்
புசித்துச் சிரியார் புவியினில் உளரோ?
விளக்கெண் ணையதன் விளைவுகள் யாவையும்
விளக்கிடும் படம்தான் எத்துணை அழகு!
அன்னை அளிக்கும் அருமருந் தருந்த
அடம்பிடி சிறுவனை அவள்பிடி கையில்
குருதியின் ஓட்டம் தடைப்படல் காணீர்!*
அருகில் நெருங்கும் ஆமணம் பொறாஅது
கரம்கொடு நாசியைப் பொத்திடும் மகற்குப்
பிரம்படி வழங்கக் குனிபவர் ஒருபால்
அன்பொடு சருக்கரை அளித்திடக் குனியும்
அருமைப் பாட்டியும் அதனை இரசிக்க
இடுப்பினில் கையுடன் பாட்டனும் ஒருபால்
சின்னதும் பெரிதுமாய்ச் சிதறிய சிறுவருள்
பின்னிய கையொடு நிற்பவன் ஒருபால்
கண்ணைக் கசக்கிக் கரைபவள் ஒருபால்
இன்னும் என்ன நடந்திடு மோவெனக்
கன்னம் தனில்கை வைத்துப் பாட்டனின்
பின்னால் ஒளியும் பிஞ்சுளம் ஒருபால்
என்ன நடக்கினும் எனக்கேன் கவலை
என்னும் நோக்குள இளமகள் ஒருபால்
இத்தனை நடப்பிற் கிருக்கும் சாட்சியாய்ப்
பித்தளைக் கலங்களும் புட்டியும் ஒருபால்….
இச்சித் திரத்துச் சிறார்மெய்ப் பாட்டை
அச்சம் என்கோ? அருவருப் பென்கோ?
பெரியோர் ஆற்றும் பெரும்பிழை ஈதென்(று)
எரியும் உள்ளத்(து) இலச்சினை என்கோ?
சோதனை விளைத்த வேதனை என்கோ?
பாதகம் பொறாஅத பரிதவிப் பென்கோ?
இச்சக வாழ்வின் இன்னல் அறிந்து
துச்ச மெனஅதைத் துறந்துகான் ஏகிய
இருடியர் நிலையின் வருணனை என்கோ?
பானைச் சோற்றின் பதமெனத் தந்த
ஒருபடம் இதுபோல் ஒராயி ரமாய்
ஓவியம் வரைந்து காவியம் படைத்த
கோபுலு என்னும் மாபெரும் கலைஞரைத்
தன்னிகர் இல்லாச் சித்திர மன்னனை
உன்னியான் அளித்தனன் ஒருசிறு காட்டே.
(*பையனின் வலதுகையின் கீழ்ப்பாகம் நீலம் பாரித்திருப்பதைக் கூட விடாமல் சித்தரித்துள்ளதைப் பார்க்கலாம்!.)
கோபுலுவின் திறன் பற்றி அறிய:
1. தமிழ் ஹிந்து:
2. பசுபதிவுகள்:
http://s-pasupathy.blogspot.com/search/label/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%81 (7 பாகங்கள்)
..அனந்த் 16-4-2019
Wednesday, May 15, 2019
கவிஞர் கண்ணதாசனின் ஒலிப்பதிவு செய்யப்பட்ட உரையொன்றின் ( https://www.youtube.com/watch?v=n9O_t0uBdpg ) தொடக்கத்தில்
கவிஞர் கூறிய நகைச்சுவைத் துணுக்கை (வெண்டளை பயிலும்) இயற்கும்மி வடிவில் யாக்க
முயன்றதன் விளைவு:
சொர்க்கம் நரகம் இவற்றிடை யேஉள்ள
.. சுவரொன்(று) இடிந்ததைக் கண்டவுடன்
சொர்க்கத்துக் காரார் நரகின ரைப்பார்த்துச்
.. சுவரை மறுபடி கட்டச்சொல்ல,
மிக்க அநியாயம்! நீங்களே தாம்கட்ட
.. வேண்டு மெனநர கோருரைக்கச்
சொர்க்கத்துக் காரர்கள் கோர்ட்டினில் உம்மேல்
… தொடுப்போம் வழக்கெனச் சொல்ல,வக்கீல்
வர்க்கத் தினர்யாரும் கிட்டவில் லைஅவர்
… வாழுவ தந்த நரகிலன்றோ?
தர்க்கம் புரிந்து நமைக்காக்க ஆளில்லாச்
.. சொர்க்கத்தி னால்நமக் கேதுபயன்?
அனந்த் 15-5-2019
Subscribe to:
Posts (Atom)



