Friday, February 26, 2016

வெள்ளம் அளித்த விடை



சந்தவசந்தம் கவியரங்கம் - 42
தலைவர்: கவிமாமணி இலந்தை சு. இராமசாமி
தலைப்பு: வெள்ளம் அளித்த விடை
கவிதை: : அனந்த் (அனந்தநாராயணன்)
   
இறைவணக்கம்:

வெள்ளமுண்டு விடையுமுண்டு மெய்யடியார் கள்ளமில்லா
உள்ளமுடன் ஆற்றுபணி விடையுமுண்டு உன்றனுக்கே
எள்ளனைத்தும் தகுதியிலா எளியனெனக் குன்னருளை
வெள்ளமெனப் பொழிந்துகவி வித்தகமுண் டாக்குவையே.
தலைமை வணக்கம்:

கவிமா மணியென்பார் கவிஞருக்குள் வேழமென்பார்
புவியே இவர்கரத்துள் புகுமென்பார் தமிழார்வம்
அவியா(து) எரிகின்ற அகலென்பார் அவர்க்குக்கை
குவியார் இலையென்பார் கவிப்பேன்என் தலைஅவர்க்கே.

அரங்கக் கவிதை:

<> வெள்ளம் அளித்த விடை <>

ஊனைத் தின்னும் வனவிலங்கோ
.. உயிரைத் தின்னும் ஒருபேயோ
ஈனம் மிகுந்த உயிரினமோ
..எமனார் விடுத்த பெருங்கயிறோ
வானைப் பிளந்து வந்தெங்கள்
.. வாழ்வைப் பறித்த பேய்மழையே!
ஏனிக் கொடுமை? எளியோங்கள்
.. என்ன பிழைதான் ஆற்றிவிட்டோம்?

****

சென்னைவாழ் மக்களின் வேதனையை - நன்கு
.. சித்தரிக் கும்இந்த கேள்விக்குநீ
என்ன விடையை அளித்திடுவாய்- என்று  
.. இன்றந்த மாரியை நான்வினவ

அன்னை யவளும்தன் வாய்திறந்து - மிக்க
.. அன்பு ததும்ப நவிலலுற்றாள் 
முன்னமவ் வள்ளுவன் வான்மழையின் - தன்மை
.. மொழிந்த அறிவுரை கேட்டிலையோ?**

இன்னும் விளக்கிட ஓர்கதையை
.. இங்கே உரைக்கின்றேன் ஆங்கதன்பின்
என்னைப் பழித்திடும் மாந்தர்கள்தம்
.. எண்ணம் தெளிந்துண்மை தோன்றிடுமே.

                 *** 
துள்ளி விளையாடும் மீன்களுண்டு  - கரை
.. தள்ள முயலும் அலைகளுண்டு
கொள்ளை அழகுடன் பூர்ணைநதி – ஓடும்
… கோலத்தைக் காண்பவர் கூட்டமுண்டு

காலடி என்னும்சிற் றூரிடையே – பல
.. காலமாய் ஓடும்அவ் வாற்றினிலே
சீலம் மிகுந்தவோர் மாதரசி – நித்தம்
.. சென்று குளித்து மகிழ்வதுண்டு

ஆரியை என்னும்நற் பேருடைய – அந்த
.. அன்னை வயிற்றினைத் தேர்ந்தெடுத்துத்
தூரிய ஞானச் சுடரொளியாய் – வந்து
.. தோன்றினன் சங்கர தேசிகனே.

தாயின் மனத்தைக் குளிரவைக்கும் – எழில்
.. தண்மதி யாகத் திகழ்ந்துவந்த
தூயவன் சேவையில் தோய்ந்தவளும் – ஒரு
.. துன்பமு மில்லா திருந்துவரத்

தேகம் தளரும் முதுமையிலே – முன்போல்
.. தினமும் நதிக்கு நடந்துசெல்லும்
வேகம் குறைந்திடக் கண்டுமனம் – கொள்ளும்
.. வேதனை தன்னை மகன்உணர்ந்தான்

நன்மனம் கொண்டவோர் நங்கையிடம் – பிக்ஷை
.. நாடிச்சென் றாங்கவள் ஏழ்மைகண்டு
பொன்மழை பெய்திடச் செய்தவனாம்# – அந்தப்
.. புண்ணியன் மேலுமோர் விந்தைசெய்தான்:

பூர்ணை நதிக்கரை சார்ந்தவளின் – புகழ்
.. போற்றிப் பரவித்தன் தாய்விரதம்
பூர்ண மடைந்திட வேண்டுமெனில் – ஆறு
.. போகும் தடத்தினை மாற்றிமனை

அண்மையில் செல்லென வேண்டிநின்றான் – அந்த
… ஆறும் அதற்குடன் சம்மதித்தாள்
கண்முனம் ஓடும் பெருநதியை – ஆர்யை
.. கண்டுசேய் தெய்வ மெனஉணர்ந்தாள்  



அன்னைக்கு ஆற்றும் கடமையிலே – ஓர்
.. அணுவும் பிறழாத சங்கரனின் 
தன்னல மில்லாத செய்கையினால்  - வெள்ளம்
.. தடம்மாறிச் சென்றதில் சேதமில்லை

முன்னம் பகீரதன் கங்கையளைத் - தன் 
.. முன்னோர் கதிபெறச் செய்வதற்கு
மண்ணில் வரச்செய்த சாதனைக்கும்- அவன்
.. வாக்கு மனம்செயல் யாவினிலும் 

தெள்ளத் துலங்கிய தூய்மைகண்டு - அந்தத்
.. தெய்வம் துணைநிற்ற(து) எண்ணிடுவாய் 
கள்ளத் தனத்துடன் நீர்த்தடத்தைப்- பல
.. கட்டுமா னங்களால் மாற்றிடுவோர்

வெள்ளத்தின் சீற்றத்தைத் தூண்டிமக்கள் - பெரும்
.. வேதனைக் குள்ளாக வைத்திடுவார்
உள்ளத்தில் நல்லோர் துணையிலினி - மீண்டும்
.. உன்னதம் எய்த வழிவகுப்பீர்!

****
இன்ன வகையிலே மாரியன்னை – என்றும்
.. இயற்கை செயல்படும் போக்குரைக்க
என்னுள் தெளிவு பிறந்ததுவே – இனி
.. என்றும் அவளருள் வேண்டிநிற்பேன்.

…அனந்த் 
 
குறியீடு விளக்கம்:
1)
** கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
    எடுப்பதூஉம் எல்லாம் மழை - குறள் 2.15
2)
#  பிக்ஷை கேட்டுத் தன் மனைக்கு வந்த சிறுவன் சங்கரனுக்கு, ஏழ்மையின் விளைவால், ஒரு நெல்லிக்கனியை மட்டும் அளித்த ஓர் இல்லாளின் அகத்தில் பொன்மழை பொழியச் செய்யவைத்த நிகழ்ச்சியைச் சுட்டுவது.