Saturday, December 21, 2019

கவிதை எனக்கு உறவு


கவிதை எனக்கு உறவு

சந்த வசந்தம் கவியரங்கம்-38
தலைவர்
: கவிஞர் சிவசூரி
தலைப்பு
: கவிதை எனக்கு....”

இறைவணக்கம்
கரத்தில் தவழும் யாழொலியால்
... கவிஞர் நெஞ்சில் தமிழமுதம்
சுரக்கச் செய்யும் வாணியுனைத்
... துதித்தேன் கவிதை புனைகின்ற
வரத்தை எனக்கு வழங்குவையே
... வானோர் தங்கள் மணிமுடிசேர்
சிரத்தைத் தாழ்த்திச் சேவிக்கும்
... செல்வீ கல்விப் பெட்டகமே!
  

தலைவர் வாழ்த்து
காரிகை வெண்பா கலிவிருத்தம்
..கவின்மிகு சந்தம் எதுவெனினும
ஓரிரு நொடியில் உள்ளிலிருந்(து)
... ஓடிக் கரம்வழி வந்தெம்மை
மாரியி தெனவே மகிழ்விக்கும்
... வகையாய்க் கவிதை புனையுமெங்கள்
சூரியின் திறனை அனந்தனின்நா
... சொல்ல முயன்று தோற்றிடுமே!

அவையடக்கம்
பாரிமுனம் பார்புகழும்  பாவலர்கள் அமர்ந்திருக்க
ஓரிரண்டு நூல்களையே உணர்ந்திருந்தோன் நுழைந்ததுபோல்
சூரிமுனம் நற்கவிஞர் சூழ்ந்திருக்கும் அவையினில்நான்
நேரில்வரத் துணிந்துவிட்டேன் நேர்பிழைகள் பொறுத்திடுவீர்!

அரங்கக் கவிதை: கவிதை எனக்கு உறவு
(பதினான்கு சீர் ஆசிரிய விருத்தம். அரையடி: கூவிளம் விளம் விளம் விளம் விளம் மா தேமா)

கூட்டினில் புழுவெனக் கூம்பிய மொட்டெனக் கருப்பையில் குழவி யென்னக்
...கூறொணா அதிசயக் கொள்ளையாய்க் குவிந்திடும் குவலயக் காட்சி தன்னில்
நாட்டமொன் றிலாமலென் நாட்களைக் கழித்துநான் நலிந்திடா வண்ணம் என்னை
... நாடிவந் தென்னுளே நானறி யாததோர் நாதமொன் றுள்ள தென்று
காட்டியோர் யாழினைக் கையிலே தந்ததனின் கம்பியை மீட்ட வைத்துக்
... ககனமாம் வெளியிலே களிநடம் செய்திடும் வித்தையைக் கற்றுத் தந்தோர்
ஏட்டிலே பதித்திடும் எழுத்தினில் என்னைநான் யாரெனக் காண வைத்(து)அவ்
... விறைவனை என்னுளே இருத்திய கவிதையிங் கெனக்கெலா உறவு மாமே.

கவிதை....
உணர்வெனும் நற்சோற்றை உள்ளமெனும் தட்டில்
மணமிகு கற்பனைநெய் வார்த்துக் – கணமும்
பிறழாத சந்தம் பிசைந்தூட்டி என்னோ(டு)     
உறவாடும் ஓர்அன்புத் தாய்.

சொற்களைத் தேர்ந்தெடுத்துச் சீரான கட்டிடத்தின்
கற்க ளெனத்தளைக்குள் கட்டிஎன் - விற்பனத்தைக்
காட்டும் வகையினைக் கற்றுக் கொடுத்துஅறிவு
ஊட்டி உயர்த்தும் பிதா. 

எங்கிருந்தோ வந்தென் இதயம் புகுந்ததனுள்
செங்கரும்புச் சாறோடு தேன்கலந்த – பொங்கலெனும்
செந்தமிழைத் தன்னிதழில் தாங்கி எனக்களிக்க
வந்தடைந்த என்றன் மனை.

நெஞ்சமெனும் பஞ்சில் நெருப்புப் பொறியாகி
வஞ்சமின்றி ஓங்கி வளர்ந்தென்னை – விஞ்சி
எரிமலை யாய்ப்பொங்கி ஏட்டில் தவழும் 
வரிகளுள் வாழும் மகள்.

மின்னலெனத் தோன்றி மறைந்திடும் வாழ்க்கையில்
என்னதெனச் செப்பிநான் எக்களிக்கத் – தன்மனத்தில்
என்கருத்தை ஏற்று நிறைவேற்றும் என்தவச் 
சின்னமெனும் செல்வ மகன்.

பொங்கும் கடலலைபோல் பூவிரியும் மெல்லொலிபோல்
சங்கின் நாதம்போல் சதங்கைச் சதிரொலிபோல்   
எண்ணம் எழுப்பும் இசையை எழுத்தாக
வண்ணம் தடவி வடித்திடவும், பண்ணதனில்
தெள்ளு தமிழ்ப்பாலின் தீஞ்சுவையைச் சேர்த்தென்றன்
உள்ளத் துடிப்பை உலகோர்க்(கு) உரைத்தற்கும்
வித்தை எனக்களித்து விண்ணைநீ எட்டென்ற
அத்தன்நிகர் ஆசானும் ஆம்.     

மேலும்...

(பதினான்குசீர் வண்ண விருத்தம்: சந்தம்- தனத்த தனதன தனத்த தனதன தனத்த தனதன தந்தானா)
கனத்த பெரும்இருள் கணத்தில் விலகிட உதித்த கதிரவன் ஒளிபோல
..
கதித்தென் உளமெழு வருத்த(ம்) முழுவதும் விரட்டுந் திறனுள ஒருதோழன்
கொடுத்த செயல்பல அடுத்த நொடியினில் முடித்து நிதமுமென் நலமேதன்
..
குறித்த கடனென நினைத்திவ் வுலகெனை மதிக்கும் வகைசெயும் பணியாளன்
அடுத்த அடியினை எடுக்கு முனமெதிர் இருக்கும் இடர்களை அறிவாலே
...
அகற்று(ம்) முறைகளை  உணர்த்தி முனஞ்செல எனக்குள் உறுதியை அருளீசன்
எனத்தி னமும்வழி நடத்தி வருபல பிறப்பு களிலுமென் உயிர்ஈதே
... எனத்தி கழுமொரு முழுத்து ணைகவிதை எனக்கிங் கெனமொழிந்  தமர்வேனே.

... அனந்த்
11-10-2013

Sunday, July 14, 2019

 😁 பற்குறள்: பல்லோம்பல் 😁













பல்செல்வம் ஈட்டிப் பயனென் பழுதில்லாப்
பல்செல்வம் பெறாஅர் எனின்? 1

பல்லார் பழிக்கப் பெறுவர்வாய் பேணாத
பல்லார்தாம் பல்நோய்வாய்ப் பட்டு. 2

கற்க கசடறப் பல்நலம் கற்றிடேல்
நிற்க மருத்துவர் முன்.   3

தொட்டால் துடிப்போம் பிறபுண்ணால் பல்லோநீர்
பட்டாலும் நோகும் பழுத்து.  4 

பல்லால் கிடைத்த பயனெல்லாம் சொத்தைவரில்
சொல்லாமல் ஏகும் துறந்து. 5

பல்காத்துப் பல்டாக்டர்” சொல்காத்துப் பின்வரும்
பில்பார்த்துப் போகும் வலி. 6

.மண்ணுலகும் தீநரகாய் மாறுமே பற்களிடைப்
புண்ணுழைந்த போதில் பொரிந்து. 7.

வலிசூழ்ந்த பல்லெனக் காட்டிநம் இன்பம்
பலிகொள்ளும் பாவி உணர்.  8

பல்லால் விளைஇன்னல் வாழ்வில் படும்துன்பம்
எல்லாவற் றுள்ளும் தலை. 9

யாகாவா ராயினும் வாய்காக்க காவாக்கால்
சோகாப்பர் பல்லழுக்குப் பட்டு. 10    
                          
... அனந்த்
 9-7-2019

Saturday, July 13, 2019

என் கதை (கானடா காவடிச் சிந்து)

                                                                                                  காவடிச் சிந்து என்பது சிந்துக் கவி வகையைச் சார்ந்தது. அதில் மிக அழகிய சந்தம் பயிலும்.  முதல் கண்ணியும், இஇறுதிக் கண்ணியும் ஒரு வகைச்சந்தத்தோடும் நடுக் கண்ணி மாறுபட்ட, முடிகிய/விரைந்த சந்தத்தோடும் இருப்பன.  நடு அடிகள் தாம் காவடிச் சிந்திற்கு ஊட்டமளிப்பன. அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் சிந்துகள் புகழ்பெற்றவை. கவிமன்னன் பாரதி மிகச் சிறிய வயதிலே எட்டயபுர சமீந்தார் அவையில் அழகான காவடிச் சிந்து ஒன்றைப் பாடியுள்ளான்.



                                  என் கதை

              (அல்லது கானடா காவடிச் சிந்து)



                    கானடா என்றொரு தேசம்
                    அதில் வாசம்
                    தந்த நேசம் - நல்ல
                    காதலைப் போலொரு பாசம்- வந்த

                    விதமே யொரு கதையே யதன்
                    பதமே வெகு புதுமை சொலக்
               
                    காத்திருந் தேன்பல காலம் - இன்று
                    காட்டிடு வேனதன் கோலம்            (1)


                    நானிங்கு வந்திட்ட வேளை   
                    யிளங் காளை
                    நல்ல மூளை- மணம்
                    நான்முடித் தேன்அழ காளை- உளத்

                    தடியே வெகு துடியோ  டொரு
                    படியாகவே  குடியேறிட
   
                    நான்வந்து சேர்ந்தனிக் கண்டம்-அந்த
                    நாள்முதல் வாழ்வெம கண்டம்        (2)

                   
                    காலையும் மாலையும் வேலை
                    பணி ஆலை
                    ஒரு மூலை- அதைக்
                    கண்டுபி டிக்கவே சாலை- தனில்
           
                    கனவே கமாய்த் தினமே வளி
                    எனவே செல மனம்போ லொரு
   
                    காரெனும் ஊர்தியைக் கொண்டு-அதில்
                    கண்டதுன் பம்பல வுண்டு            (3)
                               

                    சூரிய னென்றொரு பேச்சு   
                    வெறும் ஏச்சு
                    எனப் போச்சு - உடல்
                    சூடுபோய் நாள்பல வாச்சு -பனி
   
                    தலைமீ  திலும்  நிலமீ  திலும்
                    அலையாய் விழக்  குலையா  ததைத்

                    தள்ளித்தள் ளியென்றன் தேகம்-மண்ணில்           
                    சாய்ந்திடு மேஅதி வேகம்                          (4)               

           
                    பேய்ப்பனிக் காலத்தைக் கொன்று
                    வாயில் மென்று
                    தின்ன நன்று  - வரும்
                    பேரிளம் வேனிலு மென்று - மனம்
               
                    ஜதியோ டொரு குதிபோட் டிட
                    அதிலே  ஒரு மிதியாய்ப் புதர்

                    போலவே ஓங்குபுல் வெட்டித்- தினம்
                    பேர்ந்திடு மேஎன்றன் நெட்டி             (5)
           

                   
                    ஓரிரண் டேதிங்கள் நின்ற
                    வெம்மை சென்ற
                    பின்னர் தென்றல் - இனி
                    உள்ளபடி வரு மென்ற-எந்தன்
                                               
                   எதிர்பார்ப் பினில் விதிகூட் டிடும்
                    சதியோ யென அதி வேகமாய்           
   
                    ஓடி யிலையுதிர் வேளை -வரும்
                    ஓவென்று நெஞ்சிடும் ஊளை            (6)


                    சூறாவ ளீயெனக் காற்று           
                    மரம் ஏற்று
                    விழும் தோற்று- அதன்
                    சூரத்திற் கில்லையோர் மாற்று - அது                   

                    சுழலும் விதம் அழகா யினும்
                    பழகா தவர் விழுவா ரதில்

                    சுற்றிச்சுற்றி வந்து பார்க்கும்-அது
                    சும்மாயி ருந்தாலும் தாக்கும்            (7)

               
                    நல்லதும் உண்டிங்கு கேளும்
                    பல நாளும்
                    களி மூளும் - அதை
                    நான்சொல வேகதை நீளும்-அணி

                    அணியாய்  மிகத் துணிவோ டிவர்
                    பணிசெய் திடத் துணியே என

                    நீண்டதோர் சாலையில் ஏகும்- விதம்
                    நித்திய மும்நடந் தாகும்            (8)

           
                    இந்தநன் நாட்டினில் பஞ்சம்
                    இல்லை; கொஞ்சம்
                    உண்டு வஞ்சம்- எனில்
                    இந்தியா போலில்லை லஞ்சம் - இங்(கு)
       
                    அதனால் ஒரு விதமா கவும்
                    நிதவாழ் முறை சிதை யாமலே

                    யாவரும் ஒற்றுமை பேணும்-வகை
                    எல்லாவி தத்திலும் காணும்            (9)


                    ஆனவ ரைக்கு(ம்)நன் றாகக்
                    கதை போக
                    நல மாக- இங்கு
                    ஆண்டுகள் முப்பதும் ஏக- உடல்
                   
                    உதிர்வே ளையை எதிர்பார்த் துளம்
                    அதிரா மலே சதிரா டிடும்

                    ஆனந்தத் தாண்டவன் தாளை- எண்ணிப்
                    போக்கிடுவேன் வரு நாளை            (10)

எங்கும் கணபதி


       எங்கும் கணபதி

நதியரு கேனும் நடுத்தெரு வேனும்
... அதிலொரு கணபதி உண்டு-அவன்
... அழகினை உணும்மன வண்டு              

அதிசய மான ஒலியுடன் ஆனைக்
... கதியுடன் கூடிய சந்தம் - பதம்
... குதிநடம் ஆடர விந்தம்

விதியுடன் விண்ணோர் வழிபடு மேலோன்
... சுதிபுகழ் அதிபல சூரன் - உமை
... மகிழ்வுடன்  அணைசுகு மாரன்


மதியுடன் கொன்றை யணிபர மேசன்
... மகனிவன் மாமதி யாளன்-நெடு
... மலையினும் வலிமிகு தோளன்

ததியுடன் வெண்ணை திருடிடும் மாயன்
...தனக்கிவ  னொருமரு கோனாம் - இவன்
... தனக்கிளை யவன்முரு கோனாம்


எதிர்வரு கின்ற துயர்பல கண்டு
... அதிர்வெதும் அடைந்திட லில்லை-அவன்
... துதிசொலின் விலகிடும் தொல்லை
         

எதிலுளம் சாரு மினியெனக் கேட்பின்
... அதுஅவன் எழிலுரு தானே- அதில்
... அமிழ்ந்தென திடர்களை வேனே


கொதிதரு வாழ்வில் குளிர்தரு போலக்
... கருணையி னுருஅவன் காணீர்-அவன்
... கழலடி சிரமதில் பூணீர்!       


குறிப்பு:
அதிசயமான ஒலி= ஓங்காரம்;
ஆனைக் கதி= யானையின் நடை;
விதி=நான்முகன்;
சுதி=மறை;
ததி=தயிர்   



Monday, June 17, 2019

சந்தவசந்தம் பொன்விழாக் கவியரங்கம்-50
தலைமை: கவிமாமணி திரு. மீ. விசுவநாதன்
தலைப்பு: அகவலில் தகவல் - பேசும் படம்

இறை வணக்கம்

முன்ன மொருநாள் தன்னை யறிதல்
என்ன தென்பதை இருடியர் நால்வர்க்(கு)
ஆசான் ஆகப் பேசா துரைத்த
ஈசன் அருளை இறைஞ்சுவன் இன்றே.

பொன்னம் பலத்தில் பொற்புடன் நடஞ்செய்
என்னை யனவன் இங்கிக் குழுவின்
பொன்விழாக் கவிதை அரங்கம் பொலிவுறத்
தன்னருட் கரத்தால் தருகநல் லாசியே.      

அவை வணக்கம்

குழுவில் மரபு வழுவாக் கவிதைகள்
அழகுற மிளிர அனுதினம் உழைக்கும்
இலந்தை யார்க்கும் ஈங்குள கவிதைப்
புலமை நிறைஅவை யோர்க்குமென் வாழ்த்தே.

கவியரங்கக் கவிதை:  பேசும் படம்

!சிரி யப்பா! எனநமை அழைத்துப்
பேசும் ஓவியம் படைத்தவர் பலரில்
சிறுவய திருந்தென் சிந்தையைக் கவர்ந்த
ஒருவரின் பெருமையை உரைத்திட இங்கே
ஆசிரி யப்பா அகவலைத் தேர்ந்தேன்
அவர்யார் எனநீர் அறிந்திடல் எளிதே
இத்துடன் இணைத்த சித்திர மொன்றே
எத்தகைக் கலைஞர் இவரெனச் சாற்றும்;

பண்டைய நாளின் பரிசாய்த்  திகழ்ந்த
மூன்று தலைமுறைக் கூட்டுக் குடியில்
முறையாய் நிகழ்பல பண்டிகை தம்முள்
இடைவெளி இன்றி இயங்கும் வயிற்றில்
தடைப்படு கழிவைத் தள்ளிட வழங்கும்
பூமணம் வெட்குறும் ஆமணக் கெண்ணையை
அடுத்தடுத்(து) அகத்தில் அத்தனைச் சிறார்க்கும்
கொடுக்கும் விழாக்கண் கொள்ளாக் காட்சியாம்

மேதகு அந்தக் காட்சியின் மாட்சியைச்
சித்திரம் வரைந்து முத்திரை பதித்தனன்
கோபுலு என்னும் ஓவியக் கோமகன்
வாரந் தோறும் விகடன் இதழின்
அட்டைப் படமாய் அவர்தரு விருந்தைப்
புசித்துச் சிரியார் புவியினில் உளரோ? 

 

விளக்கெண் ணையதன் விளைவுகள் யாவையும்
விளக்கிடும் படம்தான் எத்துணை அழகு!
அன்னை அளிக்கும் அருமருந் தருந்த
அடம்பிடி சிறுவனை அவள்பிடி கையில்
குருதியின் ஓட்டம் தடைப்படல் காணீர்!* 

அருகில் நெருங்கும் ஆமணம் பொறாஅது
கரம்கொடு நாசியைப் பொத்திடும் மகற்குப்
பிரம்படி வழங்கக் குனிபவர் ஒருபால்
அன்பொடு சருக்கரை அளித்திடக் குனியும்
அருமைப் பாட்டியும் அதனை இரசிக்க
இடுப்பினில் கையுடன் பாட்டனும் ஒருபால்
சின்னதும் பெரிதுமாய்ச் சிதறிய சிறுவருள்
பின்னிய கையொடு நிற்பவன் ஒருபால்
கண்ணைக் கசக்கிக் கரைபவள் ஒருபால்
இன்னும் என்ன நடந்திடு மோவெனக்
கன்னம் தனில்கை வைத்துப் பாட்டனின்
பின்னால் ஒளியும் பிஞ்சுளம் ஒருபால் 
என்ன நடக்கினும் எனக்கேன் கவலை
என்னும் நோக்குள இளமகள் ஒருபால்
இத்தனை நடப்பிற் கிருக்கும் சாட்சியாய்ப்
பித்தளைக் கலங்களும் புட்டியும் ஒருபால்….     

இச்சித் திரத்துச் சிறார்மெய்ப் பாட்டை
அச்சம் என்கோ? அருவருப் பென்கோ?
பெரியோர் ஆற்றும் பெரும்பிழை ஈதென்(று)
எரியும் உள்ளத்(து) இலச்சினை என்கோ?
சோதனை விளைத்த வேதனை என்கோ?
பாதகம் பொறாஅத பரிதவிப் பென்கோ?
இச்சக வாழ்வின் இன்னல் அறிந்து
துச்ச மெனஅதைத் துறந்துகான் ஏகிய
இருடியர் நிலையின் வருணனை என்கோ?


பானைச் சோற்றின் பதமெனத் தந்த
ஒருபடம் இதுபோல் ஒராயி ரமாய்
ஓவியம் வரைந்து காவியம் படைத்த
கோபுலு என்னும் மாபெரும் கலைஞரைத்
தன்னிகர் இல்லாச் சித்திர மன்னனை
உன்னியான் அளித்தனன் ஒருசிறு காட்டே.

(*பையனின் வலதுகையின் கீழ்ப்பாகம் நீலம் பாரித்திருப்பதைக் கூட விடாமல் சித்தரித்துள்ளதைப் பார்க்கலாம்!.)

கோபுலுவின் திறன் பற்றி அறிய:
1. தமிழ் ஹிந்து:

2. பசுபதிவுகள்:

..அனந்த் 16-4-2019