Sunday, September 25, 2016

சிலேடை- அரியும் அரனும்

http://chandhamanantham.blogspot.ca/2016/09/blog-post_25.html
                                                                 அரியும் அரனும்


                                         

           

                                தேரில்நல் ஆசான் திருவோடு காப்பார்தம்
                                
                                பேரிலே கண்ணர் பெரும்பசியர் வான்புரக்க

                                ஆழி யுறைவிடம் கொண்டிடுவார் அன்புடையோர்

                                வாழத்தாம் தூதாய் வழிநடப்பார் மாட்டார்

                                அரிவைஉடல் வைத்திடுவார் ஆடவல்லார் ஆமிங்(கு)  

                                அரியும் அரனென்று அறி.

அரி: அருச்சுனனுக்குத் தேரில் ஆசானாய்ப் போதித்தவர்இலக்குமியோடு உலகைக் காப்பவர்கண்ணன் என்பதைத் தமது பேர்களில் ஒன்றாய்க் கொண்டவர்நல்ல பச்சைநிற (பசிய) மேனி உடையவர்விண்ணுலகை ஆளப் பாற்கடலை உறைவிடமாகக் கொண்டவர்பாண்டவர்களுக்காகத் தூது சென்றவர்மாடு உடையவர் (இடையர்)சீதேவியை மார்பில் வைப்பவர்; (கோபியருடன்/ அல்லதுபாம்புத்தலைமேல்) ஆட வல்லவர்

அரன்: ஆராய்ந்தோமேயானால் (=தேரில்)சனகாதி முனிவர்களுக்குத் தட்சிணாமூர்த்தி குருவாய்ப் போதித்தவர்பிச்சையெடுக்க ஓடேந்துபவர்முக்கண்ணன் என்பதைத் தமது பேர்களில் ஒன்றாய்க் கொண்டவர்; (இரந்துண்டு வாழ்வதால்) பெரிய பசியோடு இருப்பவர்தேவர்களைக் காப்பதற்காகப் பாற்கடலிலிருந்து எழுந்த நஞ்சை உட்கொண்டவர்தம் அன்பனான சுந்தரமூர்த்தி நாயனாருக்காகப் பரவையிடம் தூது சென்றவர்நந்தியை வாகனமாகக் கொண்டவர்உமையை இடப்பாகத்தில் வைப்பவர்அம்பலத்தில் நடம்ஆட வல்லவர்.

..அனந்த்


Thursday, September 22, 2016

சிலேடை

<> ரங்கநாதன் தெரு - ஆதிசேஷன் சிலேடை <>


     நீண்டு கிடக்கும் நிதமும் இலக்குமியைப்

     பூண்டோன்பேர் தாங்கிப் பணம்பெருக்கும் – வேண்டும்

     பொருள்தரும் நீள்பயணம் போவோர் வழியாய்

      இருக்கும்  தெருஅனந்த னே.

(பணம் = காசு; பாம்பின் படம்.)

ரங்கநாதன் தெரு: நீளமானது; திருமாலின் பெயர் கொண்டது; விற்பனையாளர்க்குத் தினமும் பணத்தைக் கூட்டும்; எந்தப் பொருளும் அங்குக் கிட்டும்; புகைவண்டி நிலையத்திற்கான வழியாக அமையும்.

ஆதிசேடன்: நீண்ட வடிவம், எப்போதும் திருமாலின் பெயரைத் தன் ஆயிரம் நாவில் தாங்கிப் படத்தை விரித்து நிற்கும்;  தன்னைப் பணிவோர்க்கு வேண்டும் பொருள் ஈயும்.  அடியாரின் இறுதிப் பயணத்திற்கு ஆன நல்வழியாய் அமையும்.  
                                                                                                                                                                                             

Thursday, September 15, 2016

மனம் தளராதே!

                                <> மனம் தளராதே! <>

                              
                                            ..அனந்த்
           
            என்றும் மனம்தள ராதேகண்ணா!
            ...என்னால் வரும்தொல்லை எண்ணிஓ யாதே (என்றும்..) 
         
           
            கோடிப் பிறவியாய்ச் செய்த- பிழை
            ... கோபுரம் போலக் குமிந்தென்னை எய்த
            ஆடிநான் சாய்வதில் என்ன - பெரும்
            ...அதிசயம் ஆகையால் கீதையில் சொன்ன

            வார்த்தை நினைவினில் கொண்டு - உன்னை
            ... வந்தடைந் தால்நீயோ வாய்மூடிக் கொண்டு
            சோர்ந்து கிடக்கின்றாய் இன்று - நான்
            ... செய்திட்ட பாவத்தைக் கண்(டு)ஐயோ என்று

            அஞ்சி நடுங்கிட லாமோ? - நீயும்
            ... அற்ப மனிதர்போல் ஆகிடப் போமோ?
            கொஞ்சம் மனத்தினைத் தேற்று - என்றன்
            ... குறைகளை உன்னிரு காதினில் ஏற்று

            ஆனை முதலையும் கூட - முன்னம்
            ... ஆற்றிய பாவத்தைத் தூக்கிநீ போடப்
            போன கதைநெஞ்சில் எண்ணு - ஒரு
            ... போக்கற்ற என்மேல் தயவினைப் பண்ணு

            வாழ்வினில் துன்பத்தைக் கண்டு- உன்றன்
            ... வாசலில் நிற்பவர் கோடியாய் உண்டு
            தாழ்ந்துன்னைச் சார்ந்திடும் போது - அவர்
            ... தாபம்தீர்க் காவிடில் வந்திடும் வாது!

            போட்டி உனக்கெவ ருண்டு? - உன்றன்
            ...புகழை நிலைநாட்ட என்துணை கொண்டு 
            காட்டுஉன் வீரத்தை இன்று - நீ
            ... கடவுள்என் றால்என்னைக் காப்பாற்றல் நன்று! (என்றும்..)

                                                                                                               

    (திண்ணை மின்னிதழில் 2003-ல் வெளியானது)