Monday, March 11, 2019

நான்

சந்தவசந்தம் இணையத் தமிழ்க் குழுவில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் கவியரங்கத்தில் நான் நேற்று (10-3-2019) இட்ட கவிதையை இங்குத் தரலாமெனத் தோன்றியது:

இறைவணக்கம்:
மலையான் பெண்ணொடு மாண்புடன் காணண்ணா
மலையா னின்பதம் மன்னிடும் மானிடன்
மலையான் துன்புகண் டாதலின் யானச்செம்
மலையான் என்னிறை என்றிவண் போற்றுமே. 

அரங்கக் கவிதை:  “நான்”

உண்ணும் போதுமு றங்கிடும் போதுமிவ்
… வுலகில் வாழ்ந்திடும் மாந்தர்தம் நெஞ்சுளே
கண்ணி மைத்திடும் காலமும் தப்பிடா
… எண்ணம் ’நான்உளேன்’ என்னுமோர் ஓட்டமே;
உண்ணின் றோங்கிடும் அவ்வுணர்(வு) யாதென
.. உன்னிப் பார்ப்பவர் ஓர்சில ரேஇந்த
மண்ணில் அவ்விதம் ஆய்வினைச் செய்பவர்
.. தம்மைத் தாமே அறிந்திட லாகுமே. (1)

தன்னைத் தானறி யாமலிப் பாரினில்
.. அன்னி யப்பொருள் பற்றிய றிந்திட
முன்னி நிற்பதே மானிடர் வாழு(ம்)நாள்
.. முற்றும் மேற்கொளும் வேலையாய்க் காண்கிறோம்
பொன்னைக் கையிலே வைத்தவா றேஅதைப்
.. புறத்தே தேடலுக் கொப்புமிச் செய்கையே;
முன்னர் மாமறை ’தத்வம சி’யெனச்
.. சொன்ன வாக்கிய நோக்கமீ தல்லவோ? (2)     

தினமும் யாவரும் துய்த்திடும் ஓர்சுகம்
.. மனமும் தேகமும் மாய்ந்தவோர் *தூக்கமே;
இனம்கா ணாதநல் லின்பம் அளிக்குமஃ(து)
.. அனைத்துச் சீவருக் கும்பொது வானதே
கனவைத் தாண்டிய அந்நிலை* தன்னிலும்
... அனைத்துப் பேருளும் நீங்கா உணர்வு”நான்”
எனநாம் ஓர்வதால் அல்லவோ தூக்கம்விட்(டு)
.. எழுந்த பின்னர்”நான்” தூங்கினேன் என்பது? (3)    
(*ஆழ்நிலை உறக்கம் (deep sleep; non-REM sleep); சுழுத்தி நிலை, வடமொழியில் ஸுஷுப்தி அவஸ்தை)

எண்ணம் யாவு(ம்) அடங்கிய பின்னரும்
.. என்றும் நம்முள் இயங்கு(ம்) உணர்வதன்
வண்ணம் யாதென ஆய்ந்தமுன் னோரதே
..வேராம் பின்னெழும் எண்ணக் குவியலுக்(கு)
என்னக் கண்(டு)அஃ(து) அகந்தை யெனநம்முள்
.. என்றும் நின்று பிறரினும் வேறுநாம்
என்னும் ஓருணர் வூட்டும்’நான்’ ஆகஉள்
…மன்னும் என்னுமோர் உண்மையைச் சாற்றினர். (4)  

அகந்தை நீங்கிடின் காணும் பிரபஞ்சம்
.. அனைத்தி லும்தன்னைக் கண்டு பிரமத்தின்
மகத்து வம்அறி ஞானம் மலர்ந்திடும்
.. மண்ணும் விண்ணுமங்(கு) அன்பால் பிணைந்திடும்
அகத்தில் அந்நிலை உற்றவர் சூழலில்
.. அனைத்து மக்களும் எய்துவர் மேனிலை;
சகத்தில் அந்தமெய்ஞ் ஞான மடைவதே
.. சனித்த தன்பய னாய்க்கொளல் வேண்டுமே. (5)

அனந்த் 
பின் குறிப்பு: ஸ்ரீ ரமணமஹர்ஷியின் ’நான் யார்’ என்னும் கேள்வியையும் அதற்கான விடையைப் பெறும் வழியான ஆத்ம விசாரத்தையும்  என் பாடலில்  ஓரளவு சுட்ட முயன்றுள்ளேன். மேலதிகமான விளக்கம் கீழே:
நான் என்னும் உணர்வையொட்டி எழும் அகந்தையை (தன்னைப் பிறரினின்றும் தனிப்படுத்தல்) அழிக்க வேண்டும் என்பது பலரும் அறிந்த ஒன்றே. அதை எவ்வாறு நடைமுறையில் சாதிப்பது என்பதை ரமணர்  தம் வாழ்முறையாலும் வாய்மொழியாலும் தெளிவாக்கினார். அதன் அடிப்படை இதுவே: மனமும் உடலும் இயங்காத ஆழ்நிலை உறக்கத்தில் இருக்கும் அமைதியான நிலை, உறக்கத்தினின்று எழுந்த உடன், பின்வரும் எண்ணங்களுக்கு எல்லாம் வேராக அமையும் ‘நான்’ என்னும் எண்ணத்தால் கலக்கமுறுகிறது. எனவே, தியானம் போன்ற உள்நோக்கு முயற்சிகளில் ஈடுபடுகையில், நம் எண்ணங்களில் கவனம் செலுத்தாமல் அவை எங்கிருந்து எழுகின்றன என்பதைக் கண்டுபிடிப்பதிலேயே இருப்பின், அம்முயற்சி நான் என்னும் முதல் எண்ணத்தின் இருப்பிடத்தில் (இதய ஸ்தானம்) நம்மைக் கொண்டு சேர்க்கும். அந்நிலையில் நாம் தொடர்ந்து இருப்போமாயின், ‘நான்’ மறைந்து பிரமம் என்னும் பேருணர்வில் ஆழ்ந்து மெய்ஞ்ஞானம் எய்துவோம். இவ்வழியை இன, மத வேறுபாடின்றி அனைவரும் நடைமுறையில் பயின்று பயன்படக் கூடும். 
மேற்கூறிய கருத்தை என் பாடலில் ஓரளவே கொணர இயன்றது.