Thursday, April 5, 2018

தற்பர சுகம்

     

                                                    <>  தற்பர சுகம் <>
சந்தக் குழிப்பு: தத்ததன தத்ததன தத்ததன தத்ததன தத்ததன தத்தத் தனதான
சுற்றுமுல கிற்றிரியு மற்பரது சுற்றமிழி வுற்றதது பற்றித் திரியாதோர்
.... சொப்பனமெ னத்தெரியு மிப்புவியி  லிச்சையொரு துச்சமென விட்டுப் பிணிபோலே

தொற்றிடும லத்தினையொ றுத்தவுன பத்தரது துப்புடைய நட்புத் துணையோடே
... சொற்கடொறு மற்புதநி றைத்திடுதி ருப்புகழில் முற்றுமனஞ் சொக்கிச் சுதியோடு

கற்றதையி ருத்தியுன பொற்பதமெ னக்கினிய கற்பகமெ னப்பற் றிடுவேனாய்க்
.... கற்பனைபு கற்கரிய தற்பரசு கத்துநிலை கிட்டிடுதி னத்தைக் கருதேனோ

வெற்புருவெ டுக்குமவு ணர்க்கெமனெ னப்படையை விட்டெறியும் வெற்றிக் கதிர்வேலா
.... வெட்குறுகு றத்தியொரு பக்கலிலி ருத்திசுர வித்தகியு மொற்றும் பெருமாளே


பொருள்:  உன் பேரில் காதலும் அதே சமயம் உன்னைக் காணும்போது வெட்கி நாணவும் செய்யும் குற மகள் வள்ளி ஒருபுறமும்தேவலோகத்து மங்கையான அறிவுமிக்க தேவானையுடனும் ஒருபுறமுமாகக் காட்சிதரும் முருகாகிரவுஞ்ச மலையுருவில் வந்த தாரகாசுரன் போன்றோர்க்கு எமனாய் விளங்கும்படியான உனது வடிவேலை இட்டு வெற்றி பெற்ற பெருமானே!
உன்னுடைய அன்பர்கள் இவ்வுலகில் திரியும் கடையர்களின் சேர்க்கை இழிவெனக் கண்டு அதன் தொடர்பை விட்டு, ஒரு கனவுபோலத் தோன்றி மறையும் உலக இன்பத்தைத் துச்சமெனக் கருதி அதைத் துறந்து, அதன் விளைவாய், நோய்போலப் பீடிக்கும் மும்மலங்களை நீக்கும் செயலில் ஈடுபடுவார்கள். அத்தகைய அன்பர்களின் சேர்க்கை எனக்குக் கிட்டிஒவ்வொரு சொல்லிலும் அற்புதம் பொதிந்து விளங்கும் ‘திருப்புகழ்ப் பாடல்களில் நான் மயங்கி அவற்றைச் சுருதியோடு/இசையோடு  கற்றுஉனது பொன்னான திருவடிகளே எனக்கு யாவையும் கொடுக்கும் கற்பக மரம் போன்றது என உணர்ந்துகற்பனைக் கெட்டாத வீட்டுப் பேறு என்னும் பேரின்பத்தை என்று நான் அடைவேன்?

அனந்த்
​ 25-10-2017