Monday, June 17, 2019

சந்தவசந்தம் பொன்விழாக் கவியரங்கம்-50
தலைமை: கவிமாமணி திரு. மீ. விசுவநாதன்
தலைப்பு: அகவலில் தகவல் - பேசும் படம்

இறை வணக்கம்

முன்ன மொருநாள் தன்னை யறிதல்
என்ன தென்பதை இருடியர் நால்வர்க்(கு)
ஆசான் ஆகப் பேசா துரைத்த
ஈசன் அருளை இறைஞ்சுவன் இன்றே.

பொன்னம் பலத்தில் பொற்புடன் நடஞ்செய்
என்னை யனவன் இங்கிக் குழுவின்
பொன்விழாக் கவிதை அரங்கம் பொலிவுறத்
தன்னருட் கரத்தால் தருகநல் லாசியே.      

அவை வணக்கம்

குழுவில் மரபு வழுவாக் கவிதைகள்
அழகுற மிளிர அனுதினம் உழைக்கும்
இலந்தை யார்க்கும் ஈங்குள கவிதைப்
புலமை நிறைஅவை யோர்க்குமென் வாழ்த்தே.

கவியரங்கக் கவிதை:  பேசும் படம்

!சிரி யப்பா! எனநமை அழைத்துப்
பேசும் ஓவியம் படைத்தவர் பலரில்
சிறுவய திருந்தென் சிந்தையைக் கவர்ந்த
ஒருவரின் பெருமையை உரைத்திட இங்கே
ஆசிரி யப்பா அகவலைத் தேர்ந்தேன்
அவர்யார் எனநீர் அறிந்திடல் எளிதே
இத்துடன் இணைத்த சித்திர மொன்றே
எத்தகைக் கலைஞர் இவரெனச் சாற்றும்;

பண்டைய நாளின் பரிசாய்த்  திகழ்ந்த
மூன்று தலைமுறைக் கூட்டுக் குடியில்
முறையாய் நிகழ்பல பண்டிகை தம்முள்
இடைவெளி இன்றி இயங்கும் வயிற்றில்
தடைப்படு கழிவைத் தள்ளிட வழங்கும்
பூமணம் வெட்குறும் ஆமணக் கெண்ணையை
அடுத்தடுத்(து) அகத்தில் அத்தனைச் சிறார்க்கும்
கொடுக்கும் விழாக்கண் கொள்ளாக் காட்சியாம்

மேதகு அந்தக் காட்சியின் மாட்சியைச்
சித்திரம் வரைந்து முத்திரை பதித்தனன்
கோபுலு என்னும் ஓவியக் கோமகன்
வாரந் தோறும் விகடன் இதழின்
அட்டைப் படமாய் அவர்தரு விருந்தைப்
புசித்துச் சிரியார் புவியினில் உளரோ? 

 

விளக்கெண் ணையதன் விளைவுகள் யாவையும்
விளக்கிடும் படம்தான் எத்துணை அழகு!
அன்னை அளிக்கும் அருமருந் தருந்த
அடம்பிடி சிறுவனை அவள்பிடி கையில்
குருதியின் ஓட்டம் தடைப்படல் காணீர்!* 

அருகில் நெருங்கும் ஆமணம் பொறாஅது
கரம்கொடு நாசியைப் பொத்திடும் மகற்குப்
பிரம்படி வழங்கக் குனிபவர் ஒருபால்
அன்பொடு சருக்கரை அளித்திடக் குனியும்
அருமைப் பாட்டியும் அதனை இரசிக்க
இடுப்பினில் கையுடன் பாட்டனும் ஒருபால்
சின்னதும் பெரிதுமாய்ச் சிதறிய சிறுவருள்
பின்னிய கையொடு நிற்பவன் ஒருபால்
கண்ணைக் கசக்கிக் கரைபவள் ஒருபால்
இன்னும் என்ன நடந்திடு மோவெனக்
கன்னம் தனில்கை வைத்துப் பாட்டனின்
பின்னால் ஒளியும் பிஞ்சுளம் ஒருபால் 
என்ன நடக்கினும் எனக்கேன் கவலை
என்னும் நோக்குள இளமகள் ஒருபால்
இத்தனை நடப்பிற் கிருக்கும் சாட்சியாய்ப்
பித்தளைக் கலங்களும் புட்டியும் ஒருபால்….     

இச்சித் திரத்துச் சிறார்மெய்ப் பாட்டை
அச்சம் என்கோ? அருவருப் பென்கோ?
பெரியோர் ஆற்றும் பெரும்பிழை ஈதென்(று)
எரியும் உள்ளத்(து) இலச்சினை என்கோ?
சோதனை விளைத்த வேதனை என்கோ?
பாதகம் பொறாஅத பரிதவிப் பென்கோ?
இச்சக வாழ்வின் இன்னல் அறிந்து
துச்ச மெனஅதைத் துறந்துகான் ஏகிய
இருடியர் நிலையின் வருணனை என்கோ?


பானைச் சோற்றின் பதமெனத் தந்த
ஒருபடம் இதுபோல் ஒராயி ரமாய்
ஓவியம் வரைந்து காவியம் படைத்த
கோபுலு என்னும் மாபெரும் கலைஞரைத்
தன்னிகர் இல்லாச் சித்திர மன்னனை
உன்னியான் அளித்தனன் ஒருசிறு காட்டே.

(*பையனின் வலதுகையின் கீழ்ப்பாகம் நீலம் பாரித்திருப்பதைக் கூட விடாமல் சித்தரித்துள்ளதைப் பார்க்கலாம்!.)

கோபுலுவின் திறன் பற்றி அறிய:
1. தமிழ் ஹிந்து:

2. பசுபதிவுகள்:

..அனந்த் 16-4-2019