<> ரங்கநாதன் தெரு - ஆதிசேஷன் சிலேடை <>
நீண்டு கிடக்கும் நிதமும் இலக்குமியைப்
பூண்டோன்பேர் தாங்கிப் பணம்பெருக்கும் – வேண்டும்
பொருள்தரும் நீள்பயணம் போவோர் வழியாய்
இருக்கும் தெருஅனந்த னே.
(பணம் = காசு; பாம்பின் படம்.)
ரங்கநாதன் தெரு: நீளமானது; திருமாலின் பெயர் கொண்டது; விற்பனையாளர்க்குத் தினமும் பணத்தைக் கூட்டும்; எந்தப் பொருளும் அங்குக் கிட்டும்; புகைவண்டி நிலையத்திற்கான வழியாக அமையும்.
ஆதிசேடன்: நீண்ட வடிவம், எப்போதும் திருமாலின் பெயரைத் தன்
ஆயிரம் நாவில் தாங்கிப் படத்தை விரித்து நிற்கும்; தன்னைப் பணிவோர்க்கு வேண்டும் பொருள் ஈயும். அடியாரின் இறுதிப் பயணத்திற்கு ஆன நல்வழியாய் அமையும்.
2 comments:
அருமை,திறமை,தமிழுக்குப் பெருமை
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.
அனந்த்
Post a Comment