Tuesday, October 3, 2017

சிலேடை: ரங்கநாதன் தெருவும் ஆதிசேஷனும்

<> ரங்கநாதன் தெரு - ஆதிசேஷன் சிலேடை வெண்பா <>




     நீண்டு கிடக்கும், நிதமும் இலக்குமியைப்
     பூண்டோன்பேர் தாங்கிப் பணம்பெருக்கும் – வேண்டும்
     பொருள்தரும், நீள்பயணம் போவோர் வழியாய்
      இருக்கும்  தெருஅனந்த னே.

(பணம் = காசு; பாம்பின் படம்.)

ரங்கநாதன் தெரு: நீளமானது; திருமாலின் பெயர் கொண்டது; விற்பனையாளர்க்குத் தினமும் பணத்தைக் கூட்டும்; எந்தப் பொருளும் அங்குக் கிட்டும்; புகைவண்டி நிலையத்திற்கான வழியாக அமையும்.


ஆதிசேடன்: நீண்ட வடிவம், எப்போதும் திருமாலின் பெயரைத் தன் ஆயிரம் நாவில் தாங்கிப் படத்தை விரித்து நிற்கும்;  தன்னைப் பணிவோர்க்கு வேண்டும் பொருள் ஈயும்.  அடியாரின் இறுதிப் பயணத்திற்கு ஆன நல்வழியாய் அமையும்.  

Monday, September 18, 2017

ஸஹஸ்ர சண்டி யக்ஞம்

உ
டொராண்டோவில்மாபெரும் ஸஹஸ்ர சண்டி யக்ஞத்தைச்
சிறப்பாக நடத்தியுள்ள பிரம்மஸ்ரீ யக்ஞரத்னம் அவர்களுக்கு
மக்கள் சார்பில் வாசித்து அளித்த நன்றியுரை

அண்டம் அனைத்தும் படைத்தளித்தும்
.. அழித்தும் மறைத்தும் அருளுபவள்
இண்டைச் சடையோன் அரிஅயனுக்(கு)
.. எல்லாம் மேலாள் எனமறைகள்
விண்டு விரிக்கும் பரம்பொருளாள்
.. விண்ணோர் மண்ணோர் துயரகற்றச்
சண்டி என்னும் பெயர் பூண்டு
.. சகத்தைக் காக்கும் தேவிஅவள்

எங்கோ தொலைவில் வாழுகின்ற
.. எங்கட் கிரங்கி யாமுய்ய
மங்காப் புகழ்சேர் ஸ்ரீவித்யா
.. மார்க்கம் தன்னில் மலைவிளக்காய்
மங்கா தொளிரும் யக்ஞரத்ன
.. மணியை எங்கட்(கு) அனுப்பியின்று
இங்கே ஸஹஸ்ர சண்டியக்ஞம்
.. இயற்ற வைத்தாள், கோடிநன்றி!
     
                 ...அனந்த் (அனந்தநாராயணன்) 26-7-2015


அதிருத்ர மஹாயாகம்

                                      உ
                   
டொராண்டோ நகரில் 2015-ல் நடந்த  அதிருத்ர மஹாயாக விழாவில் உயர்திரு ஸ்ரீ பாலக்ருஷ்ண சாஸ்த்ரிகளுக்கு அளித்த   நன்றியுரை

                        திருச்சிற்றம்பலம்

உலகெலாம் படைத்தளித்து ஊழிதனில் அழித்துயிர்கள்
மலமெலாம் மாயு(ம்)வணம் மறைத்தருளும் சிவபெருமான்
தலமெலாம் எழுந்தருளும் தாயொடுதந் தையுமானோன்
தொலைவெலாம் கடந்திந்த தொராந்தோ நகர்வாழும்

நாமுமவன் மைந்தரென நமக்கருள உளங்கொண்டு
மாமறைகள் ஓதுவதில் மன்னரென ஈங்குள்ள
பாமரரும் போற்றுகின்ற பாலகிருஷ்ண ஸாஸ்த்ரியெனும்
நாமமுடை விற்பனரை நமக்களித்துத் தான்மகிழ்ந்தான்!

ஒருமுறைதன் பேர்மொழிந்தால் உவகையுறும் பெருமானை
அருமறைகள் பலப்பலவாய் அழைத்துள்ள துதிகளுக்குள்
அருத்தங்கள் பலசெறிந்த அஞ்செழுத்தை உள்ளடக்கும்
உருத்திரமும் சமகமுமே உயர்ந்ததென உலகறியும்

அத்தகைய மந்திரத்தை அதிருத்ர ஹோமமெனும்
உத்தமத்தில் உத்தமமாய் உயர்ந்ததொரு வேள்வியினை
எத்தனையோ சன்மத்தில் இயற்றியநம் புண்ணியத்தால்
இத்தலத்தில் நடத்துதற்கு இவர்மனத்துள் சிவன்புகுந்தான்

சென்றபத்துத் தினங்களிங்குத் தேவர்கள் அணிவகுத்தார்!
நன்றுநன்று எனமுனிவர் நம்மிடையே நடமிட்டார்!
குன்றிலுறை குமரனொடு கணபதியும் தோழருடன்
என்றுமிலா வணம்நிகழும் இவ்வேள்வி காணவந்தார்!

இவ்வாறு சிறப்பாக ஏழுமலைப் பெருமாள்முன்
செவ்வனே நிகழ்ந்திட்ட சீரியஇவ் விழாமுடிவில்
ஒவ்வொருவ ரும்உரைப்போம் உளமார்ந்த நன்றியினைப்
பவ்வியமாய்ப் பாலக்ருஷ்ண சாஸ்த்ரியெனும் பெருமகற்கே!

                                    .. வே.ச. அனந்தநாராயணன்
                                    .. ஜூலை 5, 2015

Monday, August 7, 2017

         வைகுண்டக் குடும்பம்
         
                ***************
               
பாற்கடலில் படுத்திருந்த போது-அங்குப்
பருகவொரு சொட்டுங்கிடைக் காது

ஆயர்பாடி வந்துதித்தான்
அள்ளியள்ளிப் பால்குடித்தான்

பார்த்தஅன்னை கையில்அவன் காது!

                ***************

கையினிலே மாடுமேய்க்கும் கம்பு-செய்வான்
காலமெல்லாம் மாதருடன் வம்பு

கல்விகற்கும் காலமெல்லாம்
கண்டபடி போக்கினாலும்

கீதைசொல்ல அவனுக்குண்டு தெம்பு -அது

கடவுளுக்குத் தான்முடியும் நம்பு!

Wednesday, July 19, 2017

நல்லதோர் வழி சொல்வேன்

<> நல்லதோர் வழி சொல்வேன் <>


காலை எழுந்தவுடன் - கணமும்
.. காலந் தவறாமல்
வேலைக்குச் சென்றுவிடு - அங்கேஉன்
.. வீட்டுக் கதைசொதப்பு

கோப்புக்கள் மேசையிலே - மலையாய்க்
.. குவிந்து கிடக்கவிடு
கூப்பிடும் மேலாளாரின் - ஆணையைக்
.. குப்பையில் போட்டுவிடு

வாடிக்கைக் காரரிடம் - வசூலை
.. வாங்கியுன் பையிலிடு
வேடிக்கைக் கேனுமிதை - வெளியில்
.. விட்டு விடாமலிரு

காந்தி படமெதுவும் - கண்ணிலே
.. காணா திருந்துவிடு
சாந்தி பெறுவதற்கு - மேலைச்
.. சரக்கை நாடிவிடு

மூலைக் குடிசையொன்றில் - கிடைத்த
.. மொத்தப் பணத்தினையும்
’ஜாலி மருந்தினுக்கு’ - விலையாய்
.. ஜல்தி கொடுத்துவிடு

பள்ளித் தலத்தினிலே - குழந்தை
.. பாடம் படிப்பதற்கு
அள்ளிப் பணத்தினைநன் - கொடை
.. ஆகக் கொடுத்துவிடு

வியாதி எதுவரினும் - சிகிச்சை
.. வேண்டின் நகரினிலே
கியாதி படைத்த பல- மருத்துவர்
.. கேட்டதை வீசிவிடு

நன்மை அடைவதற்கு - வழியை
.. நான்இங்குக் கூறிவிட்டேன்
உன்னை அதுசுடுமுன் - முந்திநீ
.. உண்மையைச் சுட்டுவிடு!

அனந்த்
12-4-2009 (சந்தவசந்தம் இணையக் குழுவின் கவியரங்கத்தில் இட்டது)

Sunday, July 9, 2017

குரு பூஜை

குரு பௌர்ணமியை அடுத்து வேதவியாஸ பூஜையும் சாதுர்மாஸ்ய விரதமும் கடைப்பிடிக்கப்படும் வேளையை ஒட்டி:

ईश्वरो गुरुरात्मेति मूर्तिभेदविभागिने ।
व्योमवद्व्याप्तदेहाय दक्षिणामूर्तये नमः  (मानसोल्लास -30)
ஈச்வரோ குருராத்மேதி மூர்த்தி பேத விபாகினே
வ்யோமவத் வ்யாப்த தேஹாய ஸ்ரீ தக்ஷிணா மூர்த்தயே 
(- மானஸோல்லாஸம்)

 திருச்சிற்றம்பலம்


​
இறையும், குருவும், ‘நான்’என்றுள்
.. இயங்கும் ஆன்மா இவைமூன்றும்   
உருவில் வேறாய்த் தோன்றிடினும்
.. உள்ள ஒன்றின் வெளிப்பாடே
தருவின் அடியில் முனிவர்க்(கு)இத்
.. தத்து வத்தைப் போதிக்கும்
குருவே எங்கும் பரந்துநிற்கும்
.. கோவே! உனக்கு நமஸ்காரம்.

..அனந்த் 9-7-2017


Friday, June 30, 2017

கானடா-150

இன்று (1-7-2017) கனடா நாடு தனது நூற்றைம்பதாம் ஆண்டு பிறந்த நாளைக் கொண்டாடுகிறது:
   
<> ஒன்றரை நூற்றாண்டு <>



​

காற்றும் நிலமும் யாவருக்கும்
.. கடவுள் தந்த உடைமையெனச்
சாற்றி வாழ்ந்த முன்னோரின்*
.. சரிதம் தன்னை இந்நாளும்
போற்றித் தன்னால் இயன்றவரை
.. போக்கில் லாத மாந்தருக்கும்
ஏற்றம் தந்து வாழவைக்கும்**
.. இந்த நாட்டிற் கிணையேது?

உலகில் மக்கள் துயருறுங்கால்
.. உடனே உதவித் தொகையனுப்பிக்
கலகம் விளையும் இடங்களிலே
.. கடிதே உதவிப் படையனுப்பிப்
பலவாய் மனித நேயத்தின்
.. பாங்கைச் செயலில் காட்டுவதில்
தலைமை தாங்கும் இந்நாட்டின்
.. தகைமை மாணப் பெரிதாமே.

சனநா யகத்தின் நோக்கினின்று
.. சற்றும் பிறழாக் கனடாவில்
மனம்போல் மக்கள் யாவருமே
.. வாழும் அழகே அழகாமே
இனவேற் றுமைக்கிங்(கு) எள்ளளவும்
.. இடமே இல்லை, தலைசாய்த்(து)இத்
தினத்தில் இந்தத் திருநாட்டை
.. தெய்வம் காக்க வேண்டுவமே.

*முன்னோர் – கானடா நாட்டின் பூர்விகக் குடியினாகிய (சிவப்பு) இந்தியர்கள்- இங்கு அவர்களை Indians என்று குறிப்பார்கள்
.** 2016-ல் மட்டும் கனடா 46,700 வெளிநாட்டு அகதிகளுக்கு இடங்கொடுத்து அவர்கள் நன்கு வாழ வழி வகுத்துள்ளது.

அனந்த்
1-7-2017    

Monday, June 19, 2017

பேறு

<> பேறு <>



செய்பல வேள்வியால்
எய்திடும் சீரெலாம்
மெய்யுணர் வைத்தர லாகிடுமோ?
உய்வதற் கோர்வழி
ஐயனின் முன்னிரு
கைகுவித் தேத்திடல் என்றுணர்வாய்

வாயினால் ”அத்தனும்
தாயும்நீ உன்முனம்
நாயினும் தாழ்ந்தவன் நானெனினும்
சேய்பிழை நீபொறுப்
பாயென வந்துளேன்
நீயலா தார்துணை?” என்றிறைஞ்சிச்

சிற்சபை நாதனின்
பொற்பதந் தூக்கிடும்
அற்புதக் காட்சியில் மெய்ம்மறந்தால்
முற்றிலும் உன்வினை
இற்றிடும் நற்றவர்
பெற்றிடும் பேறுனைச் சார்ந்(து)அதனால்

நானவன் தானெனும்
ஞானமுள் ஓங்கிடும்
மோனமும் கைவரும் காண்பதெல்லாம்
கோனவன் பேருரு
தானெனும் உண்மையாம்
தேனினைத் துய்த்தலும் வாய்த்திடுமே

மேலுல காள்பவர்
பாலுமில் லாதவோர்
சீலமி தைத்தரும் நாதனவன்
மேலவன் கீர்த்தியே
மேலவன் பேரருள்
மேலவற் கேபணி செய்தலுமே !

(ஷட்பதி அந்தாதிப் பஞ்சகம்)
..அனந்த் 14-6-2017

Tuesday, June 13, 2017

வழி காட்டி

<> வழி காட்டி <>
















ஊனார் உடலை
நானென் றெண்ணி
நானா வழியிற் சென்றேனைத்
தானாய் என்றன்
கோன்முன் தோன்றி
வாநீ இங்கென் றழைத்தானே

ஏனோ அவன்சொல்
தேனாய் இனிக்க
நானும் அவன்பால் நாடுங்கால்
தேனார் மொழியாள்
தானோர் பங்கன்
கானை நோக்கி நடந்தாங்கே

எரியில் வெந்து
கரியும் உடல்கள்
நரிகள் பேய்கள் நடுவேதன்
விரிசெஞ் சடையில்
சொரிநீர் தெறிக்க
ஒருகூத் ததனைக் காண்பித்தான்

தன்னை மறந்தென்
முன்னர்க் காணும்
அன்னான் நடத்தில் திளைத்தேனை
இன்னும் உளதென்
பின்னர் வாவென்(று)
என்னை அழைத்துப்  போய்த்தில்லைப்

பதியை அடைந்து
மதிசேர் சடையன்
அதிஅற் புதமாம் மன்றில்தன்
சதிரா டிடுமோர்
பதம்முன் காட்டி
இதுவுன் வழியென் றேமீண்டான்!

(இப்பாடல் கன்னடச் செய்யுள் வகைகளில் ஒன்றான 'ஷட்பதி' என்னும்  ஆறடிச் செய்யுளை ஒட்டி அமைக்கப்பட்டது.)

அனந்த் 13-6-2017

Friday, June 9, 2017

கவியரங்கக் கவிதை: “அந்தி ஓவியம்”

சந்த வசந்தம் கவியரங்கம்-32 “அந்தி ஓவியம்”
ஜூன் 2010 

பாடல்கள் பற்றிய பொருள், இலக்கணக் குறிப்புகளை இறுதியில் காணவும்

<>  இறை வணக்கம் <>
ஒருபா லுமைசேர் உருவுடை நாத! உயர்தமிழில்
ஒருபா புலவன் ஒருவற் களித்தன் றுதவிசெய்தாய்
ஒருபா வகையில் ஒருபத் துவந்திங் குரைக்கவந்தேன்
ஒருபா டிலாமல் உருப்பெறச் செய்வதும் உன்கடனே

கடத்தற் கியலாக் கடலாம் தமிழில் கவிதைசொலும்
திடத்தைத் தரயான் தலைவநின் தாளினைச் சேர்வன்கொடும்
விடத்தை மிடறணி வேதிய! அந்திநல் வேளையிலே
நடத்தைப் புரிபவ நாடினன் நின்துணை நானொருங்கே

<> தலைமை வணக்கம் <>
சாரும் அரங்கத் தலைமைப் பணியைத் தனிச்சிறப்போ(டு)
ஏரும் எழிலும் இலங்கும் வகையில் இயக்குவதில்
யாரும் நிகரென ஆகார் இவர்க்கென யாம்களிப்புக்
கூரும் வணம்திறன் கொண்டவர்க் கென்கரம் கூப்புவனே

கரத்தில் தவழும் கணினி வழியே கவின்தமிழ்ப்பூஞ்
சரத்தைத் தொடுத்துத் தருகின்ற ஆற்றல் தனையடையும்
வரத்தை இறையிடம் வாங்கிய சௌந்தர் வடிகவிதைத்
தரத்தைப் புகலத் தமிழக ராதியைச் சாருவனே 

<>  அவை வணக்கம் <>
காற்றுக் இருப்பிடம் காண்வான் வெளிநெற் கதிரினிளம்
நாற்றுக் கிருப்பிடம் நன்னீர் பெருகிடும் நன்செய்நிலம்
சோற்றுக் கிருப்பிடம் சூடு கலம்செந் தமிழ்க்கவிதை
ஊற்றுக் கிருப்பிடம் உள்ளத்தி லூறும் உணர்வுகளே

உணவாய்த் தமிழ்ச்செயு(ள்) உண்டிடும் பாவலர் உங்கள்முனம்
நுணலாய்க் கவிதை நுவல விழைந்து நுழைந்தனன்யான்
குணமே குறித்துக் குறைகள் தவிர்த்திடும் கொள்கையர்நீர்
கணமே படித்துக் களிக்கின் மிதப்பன்மென் காற்றினிலே.

<> அந்தி ஓவியம் <>

செவ்வண்ணப் போ(து)உன்றன் செவ்விகண் டென்மெய் சிலிர்த்துநிற்பேன்
மெய்வண்ணம் பொன்னும் மிளிர்வண்ணம் வைரமும் மேவிநிற்க
எவ்வண்ண மும்கொள் எழிலொடு மாந்தரை ஈர்க்கின்றனை
அவ்வண்ணம் யாவும் அகன்றிடா தென்னுள் அலைந்திடுமே    1

அலையாழி மேனி அழகுகண் டாங்கே அணுகிவந்து
தலைசாய முத்தம் தரும்ஆ தவனின் தகதகப்பால்
குலையாத வண்ணக் குழம்பாய் ஒளிரும் குவலயம்நின்
கலையாத இன்பக் களியாட்டம் தன்னில் கவினுறுமே              2

உறுகாதல் நோயால் உலையும் உளங்கொண்ட ஒண்தொடியார்
பெறுதாப(ம்) மேலும் பெருகிட வைக்குமுன் பெற்றியினைச்
செறுமாறு தோற்றும் செயுளால் சிறப்பிக்கும் தீந்தமிழின்
நறுவாசம் வீசும் நடையோ(டு) அகத்துப்பா நானூறுமே                         3

நூறா யிரமாய் நொடியில் பரவும்உன் நூதனத்தைக்
கூறா தொழிதலும் கூடா தெனினும்நான் கூறுதற்குத்
தேறேன் விழிமுன் தெரியும் விதவிதச் சீர்படைத்த
வேறே தெழிலுமுன் வீச்சுக் கிணையாய் விரிந்திலதே              4

விரிசடை ஈசனார் விண்ணவர் வாழ விடமுண்டபின்
அரியய னோடவ் வமரரும் வேண்ட அதற்கிணங்கி
எரிதழல் ஏந்தி இனியசெம் மேனி எழில்திகழப்
புரிநடம் அந்தியாம் போதெனக் கொண்டாய் புகழுனக்கே      5

புகலும் மறையின் பொருளும் பயனும் முழுதுணரும்
வகையை விளக்கிடும் மந்திரம் தன்னை வரித்திறையின்
தகைமை அறிவோர் தமக்கென வாய்த்த தருணமெனத்
திகழும் பொழுதே! தினமு முனதுரு தெய்விகமே!                       6

உருவம் எடுத்திவ் வுலகில் பிறந்தொரு ஊனமின்றிக்
கருவம் கொழித்திடக் காளை வயதில் களித்தபின்னர்
மருவும் மனையொடு வாழ்ந்தபின் எம்மை வந்தடையும் 
பருவம் நின(து)உடல் பொன்னிறம் போலப் பொலிந்திடுமே    7 

பொலியும் பொழுதாய்ப் புவியோர்க்(கு) உதவி புரிந்(து)அவருள்
நலியும் கவலையை நீக்க நிலவொடு நீதிகழ்வாய்
மலியும் புனலும் பணியும் அணியும் வளர்அழலும்
ஒலியும் பரமன் உடலின் நிறத்தினை ஒப்புவையே                    8

ஒப்பும் உவமையும் ஒவ்வா நினதெழில் ஓவியம்வான்
கப்பும் வகையைக் கவிதையில் எங்ஙனம் கட்டுரைப்பேன்?
அப்பும் அனலும் அருகே நெருங்கி அணைப்பதையார்
செப்பும் திறம்படைத் தோரெனச் சொல்வேன் செகத்தினிலே             9

செகசெக என்னச் சிவந்துள வானிலொர் தீப்பிழம்பு
தகதக என்னச் சொலிக்க நிலவொடு தாரகைகள்
மிகமிகக் கூடி மிளிர முகிலுள் வெடித்துமின்னல்
வகைவகை யாக வரையோ வியமே! வளர்செவ்வியே!              10

*பொருட்குறிப்பு*
இறைவணக்கம்: ஒருபா புலவன் ஒருவற் களித்தன் றுதவிசெய்தாய்: பாணபத்திரருக்கு ஆலவாய் இறைவன் அளித்த திருமுகப் பாசுரம்; தருமிக்கு அளித்த ‘கொங்குதேர் வாழ்க்கை’ பாடல் போன்ற ஒன்று; ஒருங்கே = முழுதும், ஒருசேர


1. செவ்வி = அழகு, புதுமை, காட்சி, பருவம், சமயம்; மெய்வண்ணம் – இடையின எதுகை; அலைதல் = ஆடுதல், திரிதல், அசைதல்
2. கவினுறுதல்  = அழகுபெறுதல்.
3. பெற்றி= குணம் தன்மை; செறுதல் = சினத்தல்; மகளிர் பிரிவுத் துயரை (தாபத்தை) மிகுதியாக்கும் அந்திப் பொழுதைக் கடிவது போலப் புகழும் அகநானூறு செய்யுள்களைக் குறிப்பது.
4. நூதனம் = புதுமை; தேறுதல் = துணிதல், தெளிதல்; வீச்சு = பரப்பு, தாக்கம்
6. வரித்தல் = தேர்ந்துகொள்ளல்
7. பொன்னிறம் = ஆங்கிலத்தில் பயன்படுத்தும் the golden age-ஐக் குறிப்பது
8. பணி = பாம்பு; மலிதல் = பெருகல்; ஒலிதல் = தழைத்தல்
9. கப்புதல் = மூடிக்கொள்ளல், உண்ணுதல்; கட்டுரைத்தல் = உறுதிபடச் சொல்லுதல்; அப்பு=நீர் (கடல்); அனல்=தீ (கதிரவன்).

கட்டளைக் கலித்துறை இலக்கணக் குறிப்பு:
ஒரே எதுகை கொண்ட நான்கு அடிகள்; அடிதோறும் வெண்டளை பயிலும் ஐந்து சீர்கள்; அடி இறுதிச்சீர் விளம்காயாக அமையவேண்டும். செய்யுள் இறுதிச்சீர் ஏகாரத்தில் முடிய வேண்டும். அடிகளுக்கிடையே வெண்டளை தேவையில்லை.  அடிதோறும் முதல், இறுதிச்சீர்களிடையே மோனை அமைய வேண்டும் (1,3,5 சீர் மோனை சிறப்பு). நேரசையில் தொடங்கும் அடி (ஒற்று நீங்கலாக) 16 எழுத்துக் கொண்டதாயும் நிரையசையில் தொடங்கும் அடி 17 எழுத்துக் கொண்டதாயும் உள்ள கட்டளை இருக்க வேண்டும்.  
அடியின் நடுவே உள்ள சீர்களில்: 1) விளங்காய் வருதலாகாது. 2) நெடில் ஈற்றாய் முடியும் ஈரசைச்சீர் வருதல் சிறப்பன்று (இவற்றிற்கு விதிவிலக்குகளை இலக்கியத்தில் காணலாம்) 3) நெடில் நேரசைச்சீரை நடுவேயுடைய மாங்காய்ச் சீர் சிறப்பின்றி அருகிவரும். அப்படி வரும்போது அதைத் தொடர்ந்தோ பின்னரோ அத்தகைய சீர் வரலாகாது.