Tuesday, June 13, 2017

வழி காட்டி

<> வழி காட்டி <>
















ஊனார் உடலை
நானென் றெண்ணி
நானா வழியிற் சென்றேனைத்
தானாய் என்றன்
கோன்முன் தோன்றி
வாநீ இங்கென் றழைத்தானே

ஏனோ அவன்சொல்
தேனாய் இனிக்க
நானும் அவன்பால் நாடுங்கால்
தேனார் மொழியாள்
தானோர் பங்கன்
கானை நோக்கி நடந்தாங்கே

எரியில் வெந்து
கரியும் உடல்கள்
நரிகள் பேய்கள் நடுவேதன்
விரிசெஞ் சடையில்
சொரிநீர் தெறிக்க
ஒருகூத் ததனைக் காண்பித்தான்

தன்னை மறந்தென்
முன்னர்க் காணும்
அன்னான் நடத்தில் திளைத்தேனை
இன்னும் உளதென்
பின்னர் வாவென்(று)
என்னை அழைத்துப்  போய்த்தில்லைப்

பதியை அடைந்து
மதிசேர் சடையன்
அதிஅற் புதமாம் மன்றில்தன்
சதிரா டிடுமோர்
பதம்முன் காட்டி
இதுவுன் வழியென் றேமீண்டான்!

(இப்பாடல் கன்னடச் செய்யுள் வகைகளில் ஒன்றான 'ஷட்பதி' என்னும்  ஆறடிச் செய்யுளை ஒட்டி அமைக்கப்பட்டது.)

அனந்த் 13-6-2017

No comments: