சந்த வசந்தம் கவியரங்கம்-32 “அந்தி
ஓவியம்”
ஜூன் 2010
பாடல்கள்
பற்றிய பொருள், இலக்கணக் குறிப்புகளை இறுதியில் காணவும்
<> இறை வணக்கம் <>
ஒருபா லுமைசேர் உருவுடை நாத! உயர்தமிழில்
ஒருபா புலவன் ஒருவற் களித்தன்
றுதவிசெய்தாய்
ஒருபா வகையில் ஒருபத் துவந்திங்
குரைக்கவந்தேன்
ஒருபா டிலாமல் உருப்பெறச் செய்வதும் உன்கடனே
கடத்தற் கியலாக் கடலாம் தமிழில் கவிதைசொலும்
திடத்தைத் தரயான் தலைவநின் தாளினைச் சேர்வன்கொடும்
விடத்தை மிடறணி வேதிய! அந்திநல் வேளையிலே
நடத்தைப் புரிபவ நாடினன் நின்துணை நானொருங்கே
<> தலைமை வணக்கம் <>
சாரும் அரங்கத் தலைமைப் பணியைத்
தனிச்சிறப்போ(டு)
ஏரும் எழிலும் இலங்கும் வகையில்
இயக்குவதில்
யாரும் நிகரென ஆகார் இவர்க்கென யாம்களிப்புக்
கூரும் வணம்திறன் கொண்டவர்க்
கென்கரம் கூப்புவனே
கரத்தில் தவழும் கணினி வழியே கவின்தமிழ்ப்பூஞ்
சரத்தைத் தொடுத்துத் தருகின்ற ஆற்றல்
தனையடையும்
வரத்தை இறையிடம் வாங்கிய சௌந்தர் வடிகவிதைத்
தரத்தைப் புகலத் தமிழக ராதியைச் சாருவனே
<> அவை வணக்கம் <>
காற்றுக் இருப்பிடம் காண்வான் வெளிநெற் கதிரினிளம்
நாற்றுக் கிருப்பிடம் நன்னீர்
பெருகிடும் நன்செய்நிலம்
சோற்றுக் கிருப்பிடம் சூடு
கலம்செந் தமிழ்க்கவிதை
ஊற்றுக் கிருப்பிடம் உள்ளத்தி
லூறும் உணர்வுகளே
உணவாய்த் தமிழ்ச்செயு(ள்) உண்டிடும்
பாவலர் உங்கள்முனம்
நுணலாய்க் கவிதை நுவல விழைந்து நுழைந்தனன்யான்
குணமே குறித்துக் குறைகள் தவிர்த்திடும்
கொள்கையர்நீர்
கணமே படித்துக் களிக்கின் மிதப்பன்மென்
காற்றினிலே.
<> அந்தி ஓவியம்
<>
செவ்வண்ணப் போ(து)உன்றன் செவ்விகண்
டென்மெய் சிலிர்த்துநிற்பேன்
மெய்வண்ணம் பொன்னும் மிளிர்வண்ணம் வைரமும் மேவிநிற்க
எவ்வண்ண மும்கொள் எழிலொடு
மாந்தரை ஈர்க்கின்றனை
அவ்வண்ணம் யாவும் அகன்றிடா தென்னுள் அலைந்திடுமே 1
அலையாழி மேனி அழகுகண் டாங்கே அணுகிவந்து
தலைசாய முத்தம் தரும்ஆ தவனின் தகதகப்பால்
குலையாத வண்ணக் குழம்பாய் ஒளிரும் குவலயம்நின்
கலையாத இன்பக் களியாட்டம்
தன்னில் கவினுறுமே 2
உறுகாதல்
நோயால் உலையும் உளங்கொண்ட ஒண்தொடியார்
பெறுதாப(ம்)
மேலும் பெருகிட வைக்குமுன் பெற்றியினைச்
செறுமாறு தோற்றும் செயுளால் சிறப்பிக்கும் தீந்தமிழின்
நறுவாசம் வீசும் நடையோ(டு) அகத்துப்பா நானூறுமே 3
நூறா
யிரமாய் நொடியில் பரவும்உன் நூதனத்தைக்
கூறா
தொழிதலும் கூடா தெனினும்நான் கூறுதற்குத்
தேறேன்
விழிமுன் தெரியும் விதவிதச் சீர்படைத்த
வேறே
தெழிலுமுன் வீச்சுக் கிணையாய் விரிந்திலதே
4
விரிசடை
ஈசனார் விண்ணவர் வாழ விடமுண்டபின்
அரியய
னோடவ் வமரரும் வேண்ட அதற்கிணங்கி
எரிதழல்
ஏந்தி இனியசெம் மேனி எழில்திகழப்
புரிநடம்
அந்தியாம் போதெனக் கொண்டாய் புகழுனக்கே 5
புகலும் மறையின் பொருளும் பயனும் முழுதுணரும்
வகையை விளக்கிடும் மந்திரம் தன்னை வரித்திறையின்
தகைமை அறிவோர் தமக்கென வாய்த்த தருணமெனத்
திகழும் பொழுதே! தினமு முனதுரு தெய்விகமே! 6
உருவம் எடுத்திவ் வுலகில் பிறந்தொரு ஊனமின்றிக்
கருவம் கொழித்திடக் காளை வயதில் களித்தபின்னர்
மருவும் மனையொடு வாழ்ந்தபின் எம்மை வந்தடையும்
பருவம் நின(து)உடல் பொன்னிறம் போலப் பொலிந்திடுமே 7
பொலியும் பொழுதாய்ப் புவியோர்க்(கு) உதவி புரிந்(து)அவருள்
நலியும் கவலையை நீக்க நிலவொடு நீதிகழ்வாய்
மலியும் புனலும் பணியும் அணியும் வளர்அழலும்
ஒலியும் பரமன் உடலின் நிறத்தினை ஒப்புவையே 8
ஒப்பும் உவமையும் ஒவ்வா நினதெழில் ஓவியம்வான்
கப்பும் வகையைக் கவிதையில் எங்ஙனம் கட்டுரைப்பேன்?
அப்பும் அனலும் அருகே நெருங்கி அணைப்பதையார்
செப்பும் திறம்படைத் தோரெனச் சொல்வேன் செகத்தினிலே 9
செகசெக
என்னச் சிவந்துள வானிலொர் தீப்பிழம்பு
தகதக
என்னச் சொலிக்க நிலவொடு தாரகைகள்
மிகமிகக்
கூடி மிளிர முகிலுள் வெடித்துமின்னல்
வகைவகை
யாக வரையோ வியமே! வளர்செவ்வியே! 10
*பொருட்குறிப்பு*
இறைவணக்கம்: ஒருபா புலவன் ஒருவற் களித்தன் றுதவிசெய்தாய்: பாணபத்திரருக்கு ஆலவாய் இறைவன் அளித்த திருமுகப் பாசுரம்;
தருமிக்கு அளித்த ‘கொங்குதேர் வாழ்க்கை’ பாடல் போன்ற ஒன்று; ஒருங்கே = முழுதும், ஒருசேர
1. செவ்வி = அழகு, புதுமை, காட்சி, பருவம், சமயம்;
மெய்வண்ணம் – இடையின எதுகை; அலைதல் = ஆடுதல், திரிதல், அசைதல்
2. கவினுறுதல் = அழகுபெறுதல்.
3. பெற்றி= குணம் தன்மை; செறுதல் = சினத்தல்;
மகளிர் பிரிவுத் துயரை (தாபத்தை)
மிகுதியாக்கும் அந்திப் பொழுதைக் கடிவது போலப் புகழும் அகநானூறு செய்யுள்களைக் குறிப்பது.
4. நூதனம் = புதுமை; தேறுதல் = துணிதல், தெளிதல்;
வீச்சு = பரப்பு, தாக்கம்
6. வரித்தல் = தேர்ந்துகொள்ளல்
7. பொன்னிறம் = ஆங்கிலத்தில் பயன்படுத்தும் the golden
age-ஐக் குறிப்பது
8. பணி = பாம்பு; மலிதல் = பெருகல்; ஒலிதல் = தழைத்தல்
9. கப்புதல் = மூடிக்கொள்ளல், உண்ணுதல்; கட்டுரைத்தல் = உறுதிபடச்
சொல்லுதல்; அப்பு=நீர் (கடல்); அனல்=தீ (கதிரவன்).
கட்டளைக் கலித்துறை இலக்கணக் குறிப்பு:
ஒரே எதுகை கொண்ட நான்கு அடிகள்;
அடிதோறும் வெண்டளை பயிலும் ஐந்து சீர்கள்; அடி இறுதிச்சீர் விளம்காயாக அமையவேண்டும்.
செய்யுள் இறுதிச்சீர் ஏகாரத்தில் முடிய வேண்டும். அடிகளுக்கிடையே வெண்டளை தேவையில்லை. அடிதோறும் முதல், இறுதிச்சீர்களிடையே மோனை அமைய
வேண்டும் (1,3,5 சீர் மோனை சிறப்பு). நேரசையில் தொடங்கும் அடி (ஒற்று நீங்கலாக) 16 எழுத்துக் கொண்டதாயும் நிரையசையில்
தொடங்கும் அடி 17 எழுத்துக் கொண்டதாயும் உள்ள கட்டளை இருக்க வேண்டும்.
அடியின் நடுவே உள்ள சீர்களில்: 1) விளங்காய் வருதலாகாது.
2) நெடில் ஈற்றாய் முடியும் ஈரசைச்சீர் வருதல் சிறப்பன்று (இவற்றிற்கு விதிவிலக்குகளை
இலக்கியத்தில் காணலாம்) 3) நெடில் நேரசைச்சீரை நடுவேயுடைய மாங்காய்ச் சீர் சிறப்பின்றி
அருகிவரும். அப்படி வரும்போது அதைத்
தொடர்ந்தோ பின்னரோ அத்தகைய சீர் வரலாகாது.
No comments:
Post a Comment