Monday, June 19, 2017

பேறு

<> பேறு <>



செய்பல வேள்வியால்
எய்திடும் சீரெலாம்
மெய்யுணர் வைத்தர லாகிடுமோ?
உய்வதற் கோர்வழி
ஐயனின் முன்னிரு
கைகுவித் தேத்திடல் என்றுணர்வாய்

வாயினால் ”அத்தனும்
தாயும்நீ உன்முனம்
நாயினும் தாழ்ந்தவன் நானெனினும்
சேய்பிழை நீபொறுப்
பாயென வந்துளேன்
நீயலா தார்துணை?” என்றிறைஞ்சிச்

சிற்சபை நாதனின்
பொற்பதந் தூக்கிடும்
அற்புதக் காட்சியில் மெய்ம்மறந்தால்
முற்றிலும் உன்வினை
இற்றிடும் நற்றவர்
பெற்றிடும் பேறுனைச் சார்ந்(து)அதனால்

நானவன் தானெனும்
ஞானமுள் ஓங்கிடும்
மோனமும் கைவரும் காண்பதெல்லாம்
கோனவன் பேருரு
தானெனும் உண்மையாம்
தேனினைத் துய்த்தலும் வாய்த்திடுமே

மேலுல காள்பவர்
பாலுமில் லாதவோர்
சீலமி தைத்தரும் நாதனவன்
மேலவன் கீர்த்தியே
மேலவன் பேரருள்
மேலவற் கேபணி செய்தலுமே !

(ஷட்பதி அந்தாதிப் பஞ்சகம்)
..அனந்த் 14-6-2017

No comments: