’தா’ என்று முடியும் ஈற்றுச் சொல்லோடு) ஆறு சமயத் தெய்வங்கள் பேரிலும் இயற்றிய பாடல்கள்:
<> அறுசமயக் கடவுளர் துதி <>
விநாயகன்:
வந்திப்போர் ஆற்றும் வினையாவும் வெற்றிதர
முந்தி அருளும் முதல்வா!தாய் – தந்தையரை
வந்தாய் வலமாகக் கந்தனுக்கு முன்;ஏக
தந்தா! தமிழெனக்குத் தா.
முருகன்:
வேதா அறியாத மெய்தான் விரித்துரைத்த
நாதா! சிதம்பரத்தோன் நற்புதல்வா! – காதலுடன்
கொந்தார் குழல்வள்ளி பாதம் வருடிமகிழ்
கந்தா! கவித்திறத்தைத் தா!
சிவன்:
தாதாதை தித்தித்தா என்றபல தாளத்தில்
மாதா மனம்மகிழ மன்றாடும் - பாதா!நீ
காதாலென் பாக்கேட்டுக் கையால்நின் பேரருளைத்
தாதாஓ சொக்கநா தா!
சக்தி:
போதார் மலர்த்தார் புனைந்தோ உனைத்துதித்தோ
ஏதா கிலும்தாயே! ஈனன்யான் செய்திலன்இன்(று) – ஆதாரம்
நீதான் எனவந்தேன் நீசனென நீக்காது
மாதா!என் தாப்போக்கித் தா.
(தா= குறை, துன்பம், வருத்தம்…)
திருமால்:
ஐந்தாம் புலன்தந்தாய் ஆங்கவற்றுள் நான்சிக்கி
நைந்தால் நினக்கிழுக் கென்பதால் – மைந்தா!நீ
உய்க எனக்கூறி உன்நினைவென் உள்ளத்தில்
வைகவரம் வைகுந்தா! தா!
சூரியன்:
பேதமிலா(து) எவ்வுயிர்க்கும் பேரொளியைத் தந்திடுவோய்!
ஓதுபெரும் மந்திரத்தின்* உட்பொருளே! - தீதகற்றிப்
போதம்அருள் புண்ணியனுன் தாள்பணியும் எற்(கு)எல்லாம்
ஆதித்தா! சாதித்துத் தா.
(*காயத்திரி மந்திரம்; எற்கு =எனக்கு)
அனந்த் 22-10-2016
No comments:
Post a Comment