கானாப் பாட்டு என்பது சென்னை போன்ற நகரங்களில், நாட்டுவழக்காகப்
பாடும் ஒருவகைச் சந்தம்
கொண்ட பா இனம். அவ்வகைப் பாடலொன்றைக் கீழே காணலாம்.
<>0<>0<>0<>0<>0<>0<>0<>
கானாத் தாலாட்டு
<>0<>0<>0<>0<>0<>0<>0<>
தாலேலோ! செல்லையா
தூக்கம்இன்னும் வல்லியா
தாயிவந்து பாடு றேம்பார்
தாலாட்டு - நீயி
தயவுசெஞ்சு நிறுத்திப் போடு வாலாட்டு!
நாயிவரும் குருவிவரும்
நாலுயானை நடந்துவரும்
கதைகதையாச் சொல்லப் போறேன் கேப்பியா? - இல்லை
கண்ணைமூட மறந்து என்னெப்
பாப்பியா?
முன்னெமுன்னே நடந்ததயும்
முடிஞ்சுபோயிக் கடந்ததயும்
சொல்லப் போறேன் சும்மா
இருக்கப் போறியா? - இல்லை
தூக்கச் சொல்லி அடம் பி டிக்கப் போறியா?
பத்துமாசம் சொமந்தபின்னே
பட்டுப்போல பொறந்தஉன்னெ
அப்பன் காரன் தூங்கப்
பண்ணத் தேவலே- எனக்கு
அந்த நாளு உடம்பு வலி போவலே!
தூளியிலே முத்தெக் கட்டி
தொட்டிலிலே வைரங் கட்டி
ஊருக்கெல்லாம் ராசா நீன்னு சொல்லுவேன் - அதை
ஒருபயலும் எதுத்துச் சொன்னாக் கொல்லுவேன்!
வாசமொழுகிக் கோலம்போட்டு
வக்கணையா வெளக்கு வைக்க
நாளை எனக்கு வந்திடுவா மருமவ - அவ
நடைஅளகைப் பாத்து நீயும் திரியுவே!
வயசுகாலம் வருகயிலே
வைத்தியத்துக்கு அலகயிலே
அம்மா பாடின பாட்டைக் கொஞ்சம் நெனச்சுக்கோ! - அவ
அம்பைப் பாத்துக் கையை நல்லாப் புடிச்சுக்கோ!
பாடிக்கிட்டே நானும் போக
பத்துமணியும் ஆயிப் போக
குஞ்சுக்கண்ணெ நீயும் கொஞ்சம் மூடணும் - உன்
குறும்பையெல்லாம் கட்டி வச்சுப் போடணும்!
ஒண்ணேஒண்ணு கண்ணேகண்ணு
ஒனக்கும் எனக்கும் ஒரே மண்ணு!
ஏனுஎன்னெ அப்படிநீ பாக்குறே? - என்னெ
எடுத்து எங்கோ மானத்திலே தூக்குறே!
தாலேலோ செல்லையா
தூக்கம் இன்னும் வல்லையா?
தாயி வந்து பாடுறேம்பார் தாலாட்டு - நீயி
தயவுசெஞ்சு நிறுத்திப்போடு வாலாட்டு!
..... அனந்த் (’அமுதசுரபி’’ தீபாவளி மலர், 2004)
ஒலிப்பதிவு: http://raretfm.mayyam.com/ananth/thalelo.mp3
No comments:
Post a Comment