தா என்னும் சொல்லுக்கு அகராதியில் சுமார் 20 பொருள்கள் தரப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலானவற்றைப் பயன்படுத்தும் வெண்பா
ஒன்று:
<> ”தா”ப்பாட்டு <>
தாவெனத் தாவுள்ள தாவோடு தாவுசெய்
தாவோர்மேல் தாவிமிகத் தாத்தந்தான் - தாவற்ற
தாவினைத் தாச்செய்த தாக்கண்டு தானவர்க்குத்
தாத்தரத் தாப்படைத் தோன்.
(தானவர்க்கு = தான் அவர்களுக்கு; அசுரர்களுக்கு)
பொருள் விளக்கம்: தா என்று கேட்டவுடன் வலிமையுள்ள படையுடன் கேடுசெய்யும் கொடியோர்மேல் பாய்ந்து அவர்க்குப் பெரும் வலியும் வருத்தமும் தந்தான் - குறைவில்லாத (வளமுள்ள) நிலப்பரப்பை நாசம் செய்த குற்றம் கண்டு தான் அக்கொடியோர்க்கு அழிவு தருவதற்காகப் பிரமன் படைத்த அம் மனிதன் (வீரன்).
அல்லது:
(தேவர்கள் அருள்) தா என்று கேட்டவுடன் பிரமனைப் படைத்த திருமால், குறைவில்லாத
உலகை நாசம் செய்த குற்றம் கண்டு அசுரர்களுக்கு அழிவு தருவதற்காக, வலிமையுள்ள படையுடன், கேடு செய்யும் அக்கொடியோர்மேல் பாய்ந்து அவர்க்குப் பெரும் வலியும் வருத்தமும் தந்தான்.
... அனந்த் :-)) 8-9-2009
No comments:
Post a Comment