Sunday, October 23, 2016

அறுசமயக் கடவுளர் துதி

’தா’ என்று முடியும் ஈற்றுச் சொல்லோடு) ஆறு சமயத் தெய்வங்கள் பேரிலும் இயற்றிய பாடல்கள்: 

<> அறுசமயக் கடவுளர் துதி <>

 விநாயகன்:
வந்திப்போர் ஆற்றும் வினையாவும் வெற்றிதர
முந்தி அருளும் முதல்வா!தாய் – தந்தையரை
வந்தாய் வலமாகக் கந்தனுக்கு முன்;ஏக
தந்தா! தமிழெனக்குத் தா. 

முருகன்:
வேதா அறியாத மெய்தான் விரித்துரைத்த
நாதா! சிதம்பரத்தோன் நற்புதல்வா! – காதலுடன்
கொந்தார் குழல்வள்ளி பாதம் வருடிமகிழ்
கந்தா! கவித்திறத்தைத் தா!

சிவன்:
தாதாதை தித்தித்தா என்றபல தாளத்தில்
மாதா மனம்மகிழ மன்றாடும்  - பாதா!நீ
காதாலென் பாக்கேட்டுக் கையால்நின் பேரருளைத்
தாதாஓ சொக்கநா தா!

சக்தி:
போதார் மலர்த்தார் புனைந்தோ உனைத்துதித்தோ
ஏதா கிலும்தாயே! ஈனன்யான் செய்திலன்இன்(று) – ஆதாரம்
நீதான் எனவந்தேன் நீசனென நீக்காது
மாதா!என் தாப்போக்கித் தா.
(தா= குறை, துன்பம், வருத்தம்…)

திருமால்:
ஐந்தாம் புலன்தந்தாய் ஆங்கவற்றுள் நான்சிக்கி
நைந்தால் நினக்கிழுக் கென்பதால் – மைந்தா!நீ
உய்க எனக்கூறி உன்நினைவென் உள்ளத்தில் 
வைகவரம் வைகுந்தா! தா!

சூரியன்:
பேதமிலா(து) எவ்வுயிர்க்கும் பேரொளியைத் தந்திடுவோய்!
ஓதுபெரும் மந்திரத்தின்* உட்பொருளே! - தீதகற்றிப்
போதம்அருள் புண்ணியனுன் தாள்பணியும் எற்(கு)எல்லாம்   
ஆதித்தா! சாதித்துத் தா.  
(*காயத்திரி மந்திரம்; எற்கு =எனக்கு)

அனந்த் 22-10-2016

”தா”ப்பாட்டு!

தா என்னும் சொல்லுக்கு அகராதியில் சுமார் 20 பொருள்கள் தரப்பட்டுள்ளன.  அவற்றில் பெரும்பாலானவற்றைப் பயன்படுத்தும் வெண்பா ஒன்று:

<> ”தா”ப்பாட்டு <>

தாவெனத் தாவுள்ள தாவோடு தாவுசெய்

தாவோர்மேல் தாவிமிகத் தாத்தந்தான் - தாவற்ற

தாவினைத் தாச்செய்த தாக்கண்டு தானவர்க்குத்

தாத்தரத் தாப்படைத் தோன்.

 (தானவர்க்கு = தான் அவர்களுக்கு; அசுரர்களுக்கு)

பொருள் விளக்கம்: தா என்று கேட்டவுடன் வலிமையுள்ள படையுடன் கேடுசெய்யும் கொடியோர்மேல் பாய்ந்து அவர்க்குப் பெரும் வலியும் வருத்தமும் தந்தான் - குறைவில்லாத (வளமுள்ள) நிலப்பரப்பை நாசம் செய்த குற்றம் கண்டு தான் அக்கொடியோர்க்கு அழிவு தருவதற்காகப் பிரமன் படைத்த அம் மனிதன் (வீரன்).

அல்லது:

(தேவர்கள் அருள்) தா என்று கேட்டவுடன் பிரமனைப் படைத்த திருமால், குறைவில்லாத உலகை நாசம் செய்த குற்றம் கண்டு அசுரர்களுக்கு அழிவு தருவதற்காக, வலிமையுள்ள படையுடன், கேடு செய்யும் அக்கொடியோர்மேல் பாய்ந்து அவர்க்குப் பெரும் வலியும் வருத்தமும் தந்தான்.


... அனந்த் :-)) 8-9-2009

Friday, October 21, 2016

இணையக் காவடிச் சிந்து <>

<> இணையக் காவடிச் சிந்து <>

எங்களிணை யத்திற்கிலை ஈடு-அது
எம்மனைய னோர்வதியும் வீடு - உளம்
இன்புறஇ னித்திடும்தேன் கூடு

வந்து கூடு(ம்)
அன்பர் நாடும் - அனை
வர்க்கும்பொது வென்றுளபண் பாடு  (1)


இந்தியரும் இங்கிலந்துள் ளோரும் - வேறு
எங்குமுள நாடுபுகுந் தோரும் - ஒரு
சாதியென உவகையுடன் சாரும்

இணையம் பாரும்!
இதற்கு நேரும் - எங்கும்
இல்லைஇ துணர்ந்துபகை தீரும்!  (2)


ஆயிரம்பல் லாயிரமாய்ச் சேர்ந்து - நாம்
அங்குமிங்கும் சேதிகளைத் தேர்ந்து - வெகு
ஆழமுடன் அலசிடுவோம் கூர்ந்து

இணையம் சார்ந்து
எதையும் ஓர்ந்து - செயும்
எவருமிங்கு விழுவதில்லை சோர்ந்து! (3)


கவிதையொடு கட்டுரைச மைப்போம் - பிறர்
காணமன ஓவியம்முன் வைப்போம் -தமிழ்க்
காதல்தரு கனிகளைச்சு வைப்போம்

இன்பம் துய்ப்போம்
துன்பம் பொய்ப்போம் - இந்த
இணையம்வழி எவரையுமி ணைப்போம் (4)

கவிதையறி வென்பதெனக் கில்லை - என்ற
கவலைமுன்பு கொண்டடைந்த தொல்லை - இனிக்
கடுகளவு மென்மனத்தில் இல்லை

இணைய வில்லை
எடுத்து ஒல்லை - இன்றி
இனித்தொடுப்பேன் இனியதமிழ்ச் சொல்லை (5)

...அனந்த் 


Wednesday, October 12, 2016

"குப்பைத் தினம்"

          "குப்பைத் தினம்"*

 

      
குப்பைக்கோர் நாளின்று பாரீர்! - சேர்ந்து 
கூடிஎல் லோருமாய்க் கொட்டுவோம் வாரீர்!   (குப்பைக்கோர்..)

வாரம் ஒரேஒரு நாளில் - வண்டி

வருமென் றறிந்துநாம் தூக்குவோம் தோளில்

சேரும்நம் குப்பைக் குவியல் - தரம்

தேர்ந்து பிரிப்போம் குறித்த வகையில்     (குப்பைக்கோர்..) 

நீல நிறத்தொரு பெட்டி - அதை

நிறைத்திடும் காகிதம் கண்ணாடிப் புட்டி

மேலும்உண் டோர்பச்சைக் கூடை - அதில்

வீசிடும் உண்டபண் டங்களின் வாடை!         (குப்பைக்கோர்..)


புல்லுடன் பூண்டெல்லாம் வெட்டி - பல

பைகளில் யாவையும் நன்றாகக் கொட்டி 
எல்லாமாய் வாசலில் சேர்ப்போம் - அதை

எடுத்திடும் வண்டி வரக்காத் திருப்போம்   (குப்பைக்கோர்..)


பூதக ணங்களைப் போன்று - பல

பேருந்து வண்டிகள் வீதியில் தோன்றும்

யாதொரு பாக்கியம் செய்தோம் - என்று

யாவரும் உள்ளத்தில் ஆனந்தம் எய்வோம்      (குப்பைக்கோர்..) 

ஆனை துதிக்கையால் தூக்கி - வாயில்

ஆகாரம் போடும் விதந்தன்னை நோக்கித்

தான்முன்னம் ஆச்சர்யம் கொண்டோம் - இந்தச்

சாதனங் கள்அதை விஞ்சுதல் கண்டோம்.        (குப்பைக்கோர்..)


கண்ணுக்கோர் நோயெனத் தோன்றும் - குப்பை 
கசங்கி நொறுங்கும் ஒலிஇசை போன்று

பண்பல சேர்த்து முழங்கும் - கேட்டுப்

பல்லோரின் வாய்களும் வாழ்த்தை வழங்கும்!  (குப்பைக்கோர்..)


ஊர்சேர்க்கும் குப்பையைக் கொட்ட - ஊரின்

ஓரத்தில் உண்டொரு மாபெரும் பொட்டல்

பார்சேர்க்கும் பாவமாம் குப்பை - கொட்டப்

பரமன்ஏன் தாரான்ஓர் பாழும்ப ரப்பை?       (குப்பைக்கோர்..)


(* ”குப்பைத் தினம்” - garbage collection day.)
.. அனந்த் (’திண்னை மின்னிதழில் 2002-ல் வெளியானது)


Thursday, October 6, 2016

கானாத் தாலாட்டு

கானாப் பாட்டு என்பது சென்னை போன்ற நகரங்களில்நாட்டுவழக்காகப் பாடும்  ஒருவகைச் சந்தம் கொண்ட பா இனம்.  அவ்வகைப் பாடலொன்றைக் கீழே காணலாம்


<>0<>0<>0<>0<>0<>0<>0<>
கானாத் தாலாட்டு
<>0<>0<>0<>0<>0<>0<>0<>

தாலேலோ! செல்லையா
தூக்கம்இன்னும் வல்லியா
தாயிவந்து பாடு றேம்பார் தாலாட்டு - நீயி
தயவுசெஞ்சு நிறுத்திப் போடு வாலாட்டு!

நாயிவரும் குருவிவரும்
நாலுயானை நடந்துவரும்
கதைகதையாச் சொல்லப் போறேன் கேப்பியா? - இல்லை
கண்ணைமூட மறந்து என்னெப் பாப்பியா?

முன்னெமுன்னே நடந்ததயும்
முடிஞ்சுபோயிக் கடந்ததயும்
சொல்லப் போறேன் சும்மா இருக்கப் போறியா? - இல்லை
தூக்கச் சொல்லி அடம் பி டிக்கப் போறியா?

பத்துமாசம் சொமந்தபின்னே
பட்டுப்போல பொறந்தஉன்னெ
அப்பன் காரன் தூங்கப் பண்ணத் தேவலே- எனக்கு
அந்த நாளு உடம்பு வலி போவலே!

தூளியிலே முத்தெக் கட்டி
தொட்டிலிலே வைரங் கட்டி
ஊருக்கெல்லாம் ராசா நீன்னு சொல்லுவேன் - அதை
ஒருபயலும் எதுத்துச் சொன்னாக் கொல்லுவேன்!

வாசமொழுகிக் கோலம்போட்டு
வக்கணையா வெளக்கு வைக்க
நாளை எனக்கு வந்திடுவா மருமவ - அவ
நடைஅளகைப் பாத்து நீயும் திரியுவே!

வயசுகாலம் வருகயிலே
வைத்தியத்துக்கு அலகயிலே
அம்மா பாடின பாட்டைக் கொஞ்சம் நெனச்சுக்கோ! - அவ
அம்பைப் பாத்துக் கையை நல்லாப் புடிச்சுக்கோ!

பாடிக்கிட்டே நானும் போக
பத்துமணியும் ஆயிப் போக
குஞ்சுக்கண்ணெ நீயும் கொஞ்சம் மூடணும் - உன்
குறும்பையெல்லாம் கட்டி வச்சுப் போடணும்!

ஒண்ணேஒண்ணு கண்ணேகண்ணு
ஒனக்கும் எனக்கும் ஒரே மண்ணு!
ஏனுஎன்னெ அப்படிநீ பாக்குறே? - என்னெ
எடுத்து எங்கோ மானத்திலே தூக்குறே!

தாலேலோ செல்லையா
தூக்கம் இன்னும் வல்லையா?
தாயி வந்து பாடுறேம்பார் தாலாட்டு - நீயி
தயவுசெஞ்சு நிறுத்திப்போடு வாலாட்டு!

..... அனந்த்  (அமுதசுரபி’’ தீபாவளி மலர், 2004)
ஒலிப்பதிவுhttp://raretfm.mayyam.com/ananth/thalelo.mp3