Thursday, October 6, 2016

கானாத் தாலாட்டு

கானாப் பாட்டு என்பது சென்னை போன்ற நகரங்களில், நாட்டுவழக்காகப் பாடும்  ஒருவகைச் சந்தம் கொண்ட பா இனம்.  அவ்வகைப் பாடலொன்றைக் கீழே காணலாம். 


<>0<>0<>0<>0<>0<>0<>0<>
கானாத் தாலாட்டு
<>0<>0<>0<>0<>0<>0<>0<>

தாலேலோ! செல்லையா
தூக்கம்இன்னும் வல்லியா
தாயிவந்து பாடு றேம்பார் தாலாட்டு - நீயி
தயவுசெஞ்சு நிறுத்திப் போடு வாலாட்டு!

நாயிவரும் குருவிவரும்
நாலுயானை நடந்துவரும்
கதைகதையாச் சொல்லப் போறேன் கேப்பியா? - இல்லை
கண்ணைமூட மறந்து என்னெப் பாப்பியா?

முன்னெமுன்னே நடந்ததயும்
முடிஞ்சுபோயிக் கடந்ததயும்
சொல்லப் போறேன் சும்மா இருக்கப் போறியா? - இல்லை
தூக்கச் சொல்லி அடம் பி டிக்கப் போறியா?

பத்துமாசம் சொமந்தபின்னே
பட்டுப்போல பொறந்தஉன்னெ
அப்பன் காரன் தூங்கப் பண்ணத் தேவலே- எனக்கு
அந்த நாளு உடம்பு வலி போவலே!

தூளியிலே முத்தெக் கட்டி
தொட்டிலிலே வைரங் கட்டி
ஊருக்கெல்லாம் ராசா நீன்னு சொல்லுவேன் - அதை
ஒருபயலும் எதுத்துச் சொன்னாக் கொல்லுவேன்!

வாசமொழுகிக் கோலம்போட்டு
வக்கணையா வெளக்கு வைக்க
நாளை எனக்கு வந்திடுவா மருமவ - அவ
நடைஅளகைப் பாத்து நீயும் திரியுவே!

வயசுகாலம் வருகயிலே
வைத்தியத்துக்கு அலகயிலே
அம்மா பாடின பாட்டைக் கொஞ்சம் நெனச்சுக்கோ! - அவ
அம்பைப் பாத்துக் கையை நல்லாப் புடிச்சுக்கோ!

பாடிக்கிட்டே நானும் போக
பத்துமணியும் ஆயிப் போக
குஞ்சுக்கண்ணெ நீயும் கொஞ்சம் மூடணும் - உன்
குறும்பையெல்லாம் கட்டி வச்சுப் போடணும்!

ஒண்ணேஒண்ணு கண்ணேகண்ணு
ஒனக்கும் எனக்கும் ஒரே மண்ணு!
ஏனுஎன்னெ அப்படிநீ பாக்குறே? - என்னெ
எடுத்து எங்கோ மானத்திலே தூக்குறே!

தாலேலோ செல்லையா
தூக்கம் இன்னும் வல்லையா?
தாயி வந்து பாடுறேம்பார் தாலாட்டு - நீயி
தயவுசெஞ்சு நிறுத்திப்போடு வாலாட்டு!

..... அனந்த்  (’அமுதசுரபி’’ தீபாவளி மலர், 2004)
ஒலிப்பதிவு: http://raretfm.mayyam.com/ananth/thalelo.mp3


Saturday, October 1, 2016

'அடை'மொழி


                                                   <>       'அடை'மொழி    <>















வேண்டும் வேண்டும் அடைவேண்டும்! -நன்கு

.. வெந்து முறுகிய அடைவேண்டும்!

மாண்டு போன நாக்கினுக்கு - அது

.. மறுபடி உயிரைத் தரவேண்டும்!



துவரை உளுந்து கடலையெனப் - பல

.. சுவையுள தானியம் அரிசியுடன்

அவரவர் தேவைக் கேற்றபடி - கலந்(து)

.. அரைத்துச் சுடுங்கால் அடைபிறக்கும்!



கார அடையுடன் தவலைஅடை - இன்னும்

.. காரடை யார்நோன் படையுண்டு

வாரம் மும்முறை அடையுண்டால்

.. வாரா தெந்த வலிநோயும்!



அடையும் அவியலும் ஆகாகா! - அதற்(கு)

.. ஆகா(து) இணைமிள காய்ப்பொடியும்

அடைந்தால் அடையே அதைத்தவிர - பிற

.. அற்பத் தனஉண் டிகள்அடையோம்!



வேண்டும் வேளை அடைவேண்டும் - பசி

.. வெறியை விரட்ட அடைவேண்டும்!



காண்டீன் ‘மெனு'வில் அடையின்றேல் - அக்

.. கடையை மூட வழிசெய்வோம்!



யாண்டும் தமிழர் இனம்காக்கும் - பணி

.. யாரம் அடையே எனஉணர்வோம்!

மீண்டும் அடையின் மேன்மையினை - நாம்

.. மீட்டிட மேலும் அடைஉண்போம்!



... 'அடையானந்தன்'
படம், நன்றியுடன்: padhuskitchen

Sunday, September 25, 2016

சிலேடை- அரியும் அரனும்

http://chandhamanantham.blogspot.ca/2016/09/blog-post_25.html
                                                                 அரியும் அரனும்


                                         

           

                                தேரில்நல் ஆசான் திருவோடு காப்பார்தம்
                                
                                பேரிலே கண்ணர் பெரும்பசியர் வான்புரக்க

                                ஆழி யுறைவிடம் கொண்டிடுவார் அன்புடையோர்

                                வாழத்தாம் தூதாய் வழிநடப்பார் மாட்டார்

                                அரிவைஉடல் வைத்திடுவார் ஆடவல்லார் ஆமிங்(கு)  

                                அரியும் அரனென்று அறி.

அரி: அருச்சுனனுக்குத் தேரில் ஆசானாய்ப் போதித்தவர்; இலக்குமியோடு உலகைக் காப்பவர்; கண்ணன் என்பதைத் தமது பேர்களில் ஒன்றாய்க் கொண்டவர்; நல்ல பச்சைநிற (பசிய) மேனி உடையவர்; விண்ணுலகை ஆளப் பாற்கடலை உறைவிடமாகக் கொண்டவர்; பாண்டவர்களுக்காகத் தூது சென்றவர்; மாடு உடையவர் (இடையர்); சீதேவியை மார்பில் வைப்பவர்; (கோபியருடன்/ அல்லது, பாம்புத்தலைமேல்) ஆட வல்லவர்

அரன்: ஆராய்ந்தோமேயானால் (=தேரில்), சனகாதி முனிவர்களுக்குத் தட்சிணாமூர்த்தி குருவாய்ப் போதித்தவர்; பிச்சையெடுக்க ஓடேந்துபவர்; முக்கண்ணன் என்பதைத் தமது பேர்களில் ஒன்றாய்க் கொண்டவர்; (இரந்துண்டு வாழ்வதால்) பெரிய பசியோடு இருப்பவர்; தேவர்களைக் காப்பதற்காகப் பாற்கடலிலிருந்து எழுந்த நஞ்சை உட்கொண்டவர்; தம் அன்பனான சுந்தரமூர்த்தி நாயனாருக்காகப் பரவையிடம் தூது சென்றவர்; நந்தியை வாகனமாகக் கொண்டவர்; உமையை இடப்பாகத்தில் வைப்பவர்; அம்பலத்தில் நடம்ஆட வல்லவர்.

..அனந்த்


Thursday, September 22, 2016

சிலேடை

<> ரங்கநாதன் தெரு - ஆதிசேஷன் சிலேடை <>


     நீண்டு கிடக்கும் நிதமும் இலக்குமியைப்

     பூண்டோன்பேர் தாங்கிப் பணம்பெருக்கும் – வேண்டும்

     பொருள்தரும் நீள்பயணம் போவோர் வழியாய்

      இருக்கும்  தெருஅனந்த னே.

(பணம் = காசு; பாம்பின் படம்.)

ரங்கநாதன் தெரு: நீளமானது; திருமாலின் பெயர் கொண்டது; விற்பனையாளர்க்குத் தினமும் பணத்தைக் கூட்டும்; எந்தப் பொருளும் அங்குக் கிட்டும்; புகைவண்டி நிலையத்திற்கான வழியாக அமையும்.

ஆதிசேடன்: நீண்ட வடிவம், எப்போதும் திருமாலின் பெயரைத் தன் ஆயிரம் நாவில் தாங்கிப் படத்தை விரித்து நிற்கும்;  தன்னைப் பணிவோர்க்கு வேண்டும் பொருள் ஈயும்.  அடியாரின் இறுதிப் பயணத்திற்கு ஆன நல்வழியாய் அமையும்.  
                                                                                                                                                                                             

Thursday, September 15, 2016

மனம் தளராதே!

                                <> மனம் தளராதே! <>

                              
                                            ..அனந்த்
           
            என்றும் மனம்தள ராதே – கண்ணா!
            ...என்னால் வரும்தொல்லை எண்ணிஓ யாதே (என்றும்..) 
         
           
            கோடிப் பிறவியாய்ச் செய்த- பிழை
            ... கோபுரம் போலக் குமிந்தென்னை எய்த
            ஆடிநான் சாய்வதில் என்ன - பெரும்
            ...அதிசயம் ஆகையால் கீதையில் சொன்ன

            வார்த்தை நினைவினில் கொண்டு - உன்னை
            ... வந்தடைந் தால்நீயோ வாய்மூடிக் கொண்டு
            சோர்ந்து கிடக்கின்றாய் இன்று - நான்
            ... செய்திட்ட பாவத்தைக் கண்(டு)ஐயோ என்று

            அஞ்சி நடுங்கிட லாமோ? - நீயும்
            ... அற்ப மனிதர்போல் ஆகிடப் போமோ?
            கொஞ்சம் மனத்தினைத் தேற்று - என்றன்
            ... குறைகளை உன்னிரு காதினில் ஏற்று

            ஆனை முதலையும் கூட - முன்னம்
            ... ஆற்றிய பாவத்தைத் தூக்கிநீ போடப்
            போன கதைநெஞ்சில் எண்ணு - ஒரு
            ... போக்கற்ற என்மேல் தயவினைப் பண்ணு

            வாழ்வினில் துன்பத்தைக் கண்டு- உன்றன்
            ... வாசலில் நிற்பவர் கோடியாய் உண்டு
            தாழ்ந்துன்னைச் சார்ந்திடும் போது - அவர்
            ... தாபம்தீர்க் காவிடில் வந்திடும் வாது!

            போட்டி உனக்கெவ ருண்டு? - உன்றன்
            ...புகழை நிலைநாட்ட என்துணை கொண்டு 
            காட்டுஉன் வீரத்தை இன்று - நீ
            ... கடவுள்என் றால்என்னைக் காப்பாற்றல் நன்று! (என்றும்..)

                                                                                                               

    (திண்ணை மின்னிதழில் 2003-ல் வெளியானது)