Monday, February 24, 2025

இன்று மகாசிவராத்திரி சிறப்பு நன்னாள்.  

                                             திருச்சிற்றம்பலம்

                                         <> என் செய்வேன்? <> 

                

                         திருச்சிற்றம்பலம்

                                         <> என் செய்வேன்? <> 

 

                

 

                        ஆற்றா தரற்றும் அடியேனின் முறையீட்டை

ஏற்றாய்நீ ஏலா திருப்பதுமேன் போற்றியுனை

 

விண்ணோரும் மாலயனும் வேண்டிநிற்க ஏழையென்னைக்

கண்ணோக்க நேரமின்மை காரணமோ – தண்சடையில்

 

மேவிக் குளிர்விக்கும் வெண்டிரையா ளோடுன்னைத்

தாவி அணைக்கும் தளிருடலாள் கூட்டினிலே – பாவியெனைப்

 

பற்றி நினைக்கப் பரமனுனக்(குஓர்நொடியும்

சற்றும் கிடைத்திலையோ சங்கரா – பற்றுதலை

 

ஓட்டில் இடும்பலிக்காய் ஊரெல்லாம் சுற்றிவந்த

வாட்டத்தில் என்னை மறந்தனையோஆட்டத்தின்

 

ஓட்டத்தில் இங்குயான் உள்ளேன் எனும்நினைப்பும்

ஓட்டம் பிடித்ததுவோ உத்தமர் – பாட்டமுதை

 

அள்ளிப் பருகிற்கும் அவ்வேளை அடியேனின்

கள்ளம் நிறைமனத்தைக் கண்டோ ஒதுக்கினைநீ

 

இன்னுமுன் நெஞ்சம் இளகிலையேல் யார்க்குரைப்பேன்

என்செய்வேன்  ஈசா இனி. 

 

(நேரிசைக் கலிவெண்பா. ஏற்றாய் = மாட்டை வாகனமாகக் கொண்டவனேவெண்டிரையாள் = வெண்மையான அலையுள்ள கங்கையாறு.) 

                                           

(நேரிசைக் கலிவெண்பா. ஏற்றாய் = மாட்டை வாகனமாகக் கொண்டவனேவெண்டிரையாள் = வெண்மையான அலையுள்ள கங்கையாறு.) 

 

                                                               … அனந்த் 25-2-2025

Tuesday, February 11, 2025

 <>  மன வண்டு  <>


தனதனன தனதான தனதனன தனதான

தனதனன தனதான தனதான



விடியுமொரு தனிநேர மெழுருண நிறமேவு

...விமலமுக மெனுமாறு கதிர்நாடி

 

டியரவர் பலபேரு மணுகியுன துதிபாடி 

...னுதினமும் வரநீயு மவர்காண

 

கடிபுரவி யெனவோடு கனகமயி லதன்மீது

...கையிலமரு மயிலோடு வருவேளை

 

வடிவொழுகு பதமான கமலமலர் தனிலேயென்

..மனமெனுமொ ரறுகால்சென்  றுறையாதோ?


.                        ....அனந்த்


                        11-2-2025

Friday, October 21, 2022

 திருச்சிற்றம்பலம்


                    <> அன்னை அருள் <>


   Chidhambara Natarajar- Sivakami .jpg


மன்றில் நடம்புரியும் மாமணியே நின்னன்பர்

..மன்னி உன்னருளை வேண்டிநிற்கும் வேளையிலே

ஒன்றும் அறியேனை என்னருகே வாவெனநீ  

.. உந்திக் கொணர்ந்தனைவல் லூழின் பிடிசிக்கிக்

கன்றி வாடிநிற்கும் கடையேன்யான் எனக்குன்றன்

.. கருணை மழைபொழியக் காரணந்தான் என்னேயோ

ஒன்றாய் இரண்டின்றி உன்னுடனே உறைந்திந்த

.. உலகைப் புரந்தருளும் உமையாளின் செயலிதுவே.


                                     🌸🌺🌸 

  

                     <> காட்டுத் தீ <>


      Sri Natarajar- அழகுமயம்.jpg


வரம்பில்லாக் காட்டுத்தீ யொத்தஎன தகத்தினிலே

பரந்தெரியும் வல்லகந்தைப் பேரனலை நின்விழியில்

சுரந்திடுமுன் பேரருளாம் தூநீரால் அணைத்திடெனக்

கரங்குவித்து வேண்டிநின்றேன் காத்திடுவாய் எம்மானே


... அனந்த் 21-10-2022   சனிப் பிரதோஷச் சிறப்பு நன்னாள். 


Saturday, February 29, 2020

Blog Index & Links

அண்மையில் இட்டவை: 

அழுக்கு 24-4-2019 


***********************

இறைத் துதிக் கவிதைகள்


எங்கும் கணபதி

அங்கயற்கண்ணி அந்தாதி

என்னுடைய தாய்

என்னுடைய தில்லை இறை

ஆனந்தத் தாண்டவர் அந்தாதி

திருமுருகன் அந்தாதி

அம்பலத்தார் அம்மானை-பாடல்கள்

அம்பலத்தார் அம்மானை- புனைவு 1

அம்பலத்தார் அம்மானை- புனைவு 2

நாட்காட்டித் தெய்வங்கள்http://chandhamanantham.blogspot.com/2017/04/gods-in-thamizh-calendar.html

வழி காட்டி

பேறு

ஸஹஸ்ர சண்டி ஹோமம் - நன்றிக் கவிதை

அதிருத்ர மகாயாகம் - வாழ்த்துரை

சிலேடை: ரங்கநாதன் தெருவும் ஆதிசேஷனும்

இந்நாள் மகிமை

அரியும் அரனும் அவன்

மோன ஒளி

 தற்பர சுகம்

 ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் திருவுலா

***************************

கவிதைக் கதம்பம்



என் கதை  (கனடா காவடிச் சிந்து)

அரசியலார் அம்மானை

பயணம் (கதைக் கவிதை)

கொசுக் கதை 

எங்கே நிம்மதி?

தண்ணீரின் கண்ணீர் 

வெள்ளம் அளித்த விடை

ரமண குரு 


ஆணும் பெண்ணும்

அந்தி மாலைப் போது

தமிழர் கண்ட புதுமை


கண்ணன் பிறந்தான்

மனம் தளராதே

சிலேடை

சிலேடை- அரியும் அரனும்

’அடை’மொழி

’கானா’த் தாலாட்டு

”குப்பைத் தினம்”


இணையக் காவடிச் சிந்து

“தா”ப்பாட்டு

அறுசமயக் கடவுளர் துதி

அவனும் நானும்


இல்லா வாழ்க்கை

கந்தசஷ்டி:  தாமரைத் தாளன்

என் கணக்கு வாத்தியார்

வானில் திரியும்...

என் குரு நீ

உள்ளம் என்னும் ஊடகம்

கானடா-150


குரு பூஜை

உண்மையைச் சுட்டுவிடு

குறும்பாக் கலாட்டா

 வேட்கை

படம்

நான்

பல்லோம்பல் 

Saturday, December 21, 2019

கவிதை எனக்கு உறவு


கவிதை எனக்கு உறவு

சந்த வசந்தம் கவியரங்கம்-38
தலைவர்
: கவிஞர் சிவசூரி
தலைப்பு
: கவிதை எனக்கு....”

இறைவணக்கம்
கரத்தில் தவழும் யாழொலியால்
... கவிஞர் நெஞ்சில் தமிழமுதம்
சுரக்கச் செய்யும் வாணியுனைத்
... துதித்தேன் கவிதை புனைகின்ற
வரத்தை எனக்கு வழங்குவையே
... வானோர் தங்கள் மணிமுடிசேர்
சிரத்தைத் தாழ்த்திச் சேவிக்கும்
... செல்வீ கல்விப் பெட்டகமே!
  

தலைவர் வாழ்த்து
காரிகை வெண்பா கலிவிருத்தம்
..கவின்மிகு சந்தம் எதுவெனினும
ஓரிரு நொடியில் உள்ளிலிருந்(து)
... ஓடிக் கரம்வழி வந்தெம்மை
மாரியி தெனவே மகிழ்விக்கும்
... வகையாய்க் கவிதை புனையுமெங்கள்
சூரியின் திறனை அனந்தனின்நா
... சொல்ல முயன்று தோற்றிடுமே!

அவையடக்கம்
பாரிமுனம் பார்புகழும்  பாவலர்கள் அமர்ந்திருக்க
ஓரிரண்டு நூல்களையே உணர்ந்திருந்தோன் நுழைந்ததுபோல்
சூரிமுனம் நற்கவிஞர் சூழ்ந்திருக்கும் அவையினில்நான்
நேரில்வரத் துணிந்துவிட்டேன் நேர்பிழைகள் பொறுத்திடுவீர்!

அரங்கக் கவிதை: கவிதை எனக்கு உறவு
(பதினான்கு சீர் ஆசிரிய விருத்தம். அரையடி: கூவிளம் விளம் விளம் விளம் விளம் மா தேமா)

கூட்டினில் புழுவெனக் கூம்பிய மொட்டெனக் கருப்பையில் குழவி யென்னக்
...கூறொணா அதிசயக் கொள்ளையாய்க் குவிந்திடும் குவலயக் காட்சி தன்னில்
நாட்டமொன் றிலாமலென் நாட்களைக் கழித்துநான் நலிந்திடா வண்ணம் என்னை
... நாடிவந் தென்னுளே நானறி யாததோர் நாதமொன் றுள்ள தென்று
காட்டியோர் யாழினைக் கையிலே தந்ததனின் கம்பியை மீட்ட வைத்துக்
... ககனமாம் வெளியிலே களிநடம் செய்திடும் வித்தையைக் கற்றுத் தந்தோர்
ஏட்டிலே பதித்திடும் எழுத்தினில் என்னைநான் யாரெனக் காண வைத்(து)அவ்
... விறைவனை என்னுளே இருத்திய கவிதையிங் கெனக்கெலா உறவு மாமே.

கவிதை....
உணர்வெனும் நற்சோற்றை உள்ளமெனும் தட்டில்
மணமிகு கற்பனைநெய் வார்த்துக் – கணமும்
பிறழாத சந்தம் பிசைந்தூட்டி என்னோ(டு)     
உறவாடும் ஓர்அன்புத் தாய்.

சொற்களைத் தேர்ந்தெடுத்துச் சீரான கட்டிடத்தின்
கற்க ளெனத்தளைக்குள் கட்டிஎன் - விற்பனத்தைக்
காட்டும் வகையினைக் கற்றுக் கொடுத்துஅறிவு
ஊட்டி உயர்த்தும் பிதா. 

எங்கிருந்தோ வந்தென் இதயம் புகுந்ததனுள்
செங்கரும்புச் சாறோடு தேன்கலந்த – பொங்கலெனும்
செந்தமிழைத் தன்னிதழில் தாங்கி எனக்களிக்க
வந்தடைந்த என்றன் மனை.

நெஞ்சமெனும் பஞ்சில் நெருப்புப் பொறியாகி
வஞ்சமின்றி ஓங்கி வளர்ந்தென்னை – விஞ்சி
எரிமலை யாய்ப்பொங்கி ஏட்டில் தவழும் 
வரிகளுள் வாழும் மகள்.

மின்னலெனத் தோன்றி மறைந்திடும் வாழ்க்கையில்
என்னதெனச் செப்பிநான் எக்களிக்கத் – தன்மனத்தில்
என்கருத்தை ஏற்று நிறைவேற்றும் என்தவச் 
சின்னமெனும் செல்வ மகன்.

பொங்கும் கடலலைபோல் பூவிரியும் மெல்லொலிபோல்
சங்கின் நாதம்போல் சதங்கைச் சதிரொலிபோல்   
எண்ணம் எழுப்பும் இசையை எழுத்தாக
வண்ணம் தடவி வடித்திடவும், பண்ணதனில்
தெள்ளு தமிழ்ப்பாலின் தீஞ்சுவையைச் சேர்த்தென்றன்
உள்ளத் துடிப்பை உலகோர்க்(கு) உரைத்தற்கும்
வித்தை எனக்களித்து விண்ணைநீ எட்டென்ற
அத்தன்நிகர் ஆசானும் ஆம்.     

மேலும்...

(பதினான்குசீர் வண்ண விருத்தம்: சந்தம்- தனத்த தனதன தனத்த தனதன தனத்த தனதன தந்தானா)
கனத்த பெரும்இருள் கணத்தில் விலகிட உதித்த கதிரவன் ஒளிபோல
..
கதித்தென் உளமெழு வருத்த(ம்) முழுவதும் விரட்டுந் திறனுள ஒருதோழன்
கொடுத்த செயல்பல அடுத்த நொடியினில் முடித்து நிதமுமென் நலமேதன்
..
குறித்த கடனென நினைத்திவ் வுலகெனை மதிக்கும் வகைசெயும் பணியாளன்
அடுத்த அடியினை எடுக்கு முனமெதிர் இருக்கும் இடர்களை அறிவாலே
...
அகற்று(ம்) முறைகளை  உணர்த்தி முனஞ்செல எனக்குள் உறுதியை அருளீசன்
எனத்தி னமும்வழி நடத்தி வருபல பிறப்பு களிலுமென் உயிர்ஈதே
... எனத்தி கழுமொரு முழுத்து ணைகவிதை எனக்கிங் கெனமொழிந்  தமர்வேனே.

... அனந்த்
11-10-2013

Sunday, July 14, 2019

 😁 பற்குறள்: பல்லோம்பல் 😁













பல்செல்வம் ஈட்டிப் பயனென் பழுதில்லாப்
பல்செல்வம் பெறாஅர் எனின்? 1

பல்லார் பழிக்கப் பெறுவர்வாய் பேணாத
பல்லார்தாம் பல்நோய்வாய்ப் பட்டு. 2

கற்க கசடறப் பல்நலம் கற்றிடேல்
நிற்க மருத்துவர் முன்.   3

தொட்டால் துடிப்போம் பிறபுண்ணால் பல்லோநீர்
பட்டாலும் நோகும் பழுத்து.  4 

பல்லால் கிடைத்த பயனெல்லாம் சொத்தைவரில்
சொல்லாமல் ஏகும் துறந்து. 5

பல்காத்துப் பல்டாக்டர்” சொல்காத்துப் பின்வரும்
பில்பார்த்துப் போகும் வலி. 6

.மண்ணுலகும் தீநரகாய் மாறுமே பற்களிடைப்
புண்ணுழைந்த போதில் பொரிந்து. 7.

வலிசூழ்ந்த பல்லெனக் காட்டிநம் இன்பம்
பலிகொள்ளும் பாவி உணர்.  8

பல்லால் விளைஇன்னல் வாழ்வில் படும்துன்பம்
எல்லாவற் றுள்ளும் தலை. 9

யாகாவா ராயினும் வாய்காக்க காவாக்கால்
சோகாப்பர் பல்லழுக்குப் பட்டு. 10    
                          
... அனந்த்
 9-7-2019