Wednesday, September 26, 2018

குறும்பாக் கலாட்டா


        குறும்பாக் கலாட்டா      

(ஆங்கிலத்தில் உள்ள 'Limerick" என்னும் செய்யுள் வகையை ஒட்டி அமைந்த ’குறும்பா’ என்னும் பாடல் வகை பற்றியும் அதன் இலக்கணத்தைப் பற்றியும் உள்ள எனது கட்டுரையைச் ‘சந்தவசந்தம்’ இணையத் தளத்தில் காணலாம்: https://groups.google.com/d/msg/santhavasantham/6FwMI45is0M/-rk3eYoncFcJ 


1. அண்ணனுக்கும் தம்பிக்குமோர் போட்டி -அதில்
ஆனைமுகன் வெற்றிக்கொடி நாட்டி
…. அகிலமெல்லாம் சுற்றுவதை
…. அன்னைதந்தை சுற்றுவதால்
அடைந்திடலாம் என்றான்வழி காட்டி

2. போட்டியிலே தோற்றதனால் வெம்பி - மனம்
போனபின்னர் மாற்றுவழி நம்பி 
…. அண்ணனுக்கு முன்னதாக
…. ஆற்றுமொரு செய்கையென்று
புரிந்துகொண்டான் இருமணத்தைத் தம்பி!

3. கையினிலே ஏந்துவதோ ஓடு - அவன்
காலெடுத்து ஆடுவதோ காடு 
…. அன்னவன்மேல் மையல்கொண்டு 
…. அருகமர்ந்தாள் அம்மைஅவள்
காதலுக்கு வேறெதுதான் ஈடு?

4. அக்கினிக்கும் வருணனுக்கும் சண்டை- அதை
அகற்றவந்தார் நாரதர்அந் தண்டை
அக்கினிக்கு சொன்னதைஅப்
…. பக்கம்வந்த வருணன் கேட்க
…. அவன்பிடித்தான் நாரதரின் சிண்டை!

5. பாற்கடலில் படுத்திருந்த போது-அங்குப்
பருகவொரு சொட்டுங்கிடைக் காது
ஆயர்பாடி வந்துதித்தான்
அள்ளியள்ளிப் பால்குடித்தான்
பார்த்தஅன்னை கையில்அவன் காது!

6. கையினிலே மாடுமேய்க்கும் கம்பு-செய்வான்
காலமெல்லாம் மாதருடன் வம்பு
…. கல்விகற்கும் காலமெல்லாம்
…. கண்டபடி போக்கினாலும்
கீதைசொல்ல அவனுக்குண்டு தெம்பு! (-அது
கடவுளுக்குத் தான்முடியும் நம்பு!!)

7. காட்டினிலே சுற்றிவந்த வள்ளி
காலமெல்லம் மனத்தினிலே உள்ளி
…. வேட்டுவனாய் வந்தவன்மேல்
…. நாட்டமில்லா நங்கையைப் போல்
காட்டியபின் கைப்பிடித்தாள் கள்ளி!

8.. வாசலிலே வந்தவனைப் பார்த்தேன்
வடிவழகன் பட்டியலில் சேர்த்தேன்
…. பாசிமணி விற்கஅன்று
…. பரபரத்த முகத்தைஇன்று
காசையள்ளும் திரைப்படத்தில் பார்த்தேன்! 

9. வானத்திலே பறந்துவந்த சிட்டு - அதன்
மகிழ்ச்சியிலென் மனம்பறக்க விட்டு
…. மேல்நிமிர்ந்து  பார்த்துப்பிறர்
…. மேலிடித்து  நடக்கையிலே
வாயினிலே விழுந்ததொரு சொட்டு!

10. வாசலிலே வந்ததொரு மாடு - அது
வாலெடுத்து ஆட்டக்குஷி யோடு
…. நானதனை ரசித்தபடி
…. நடந்துசெல்ல நல்லவெள்ளைச்
சட்டையிலே கெட்டசாணிக் கோடு!

11. தொட்டிலிலே தூங்குமெந்தன் குட்டி
தொடாமலே இனிக்கும்வெல்லக் கட்டி
…. கட்டவிழ்ந்த  ஆசையோடு
…. கிட்டநின்று  காணவாயில்
விட்டதய்யா நீரையந்தச் சுட்டி!

12. மாடிவீட்டில் இன்றுவாழும் வள்ளி
மாடுமேய்த்து முன்னையநாள் சுள்ளி
... ஓடிச்சேர்த்த அழகினிலே
... ஓர்நடிகர் விழஅவரை
நாடிவந்தாள் திரையுலகில் துள்ளி!

13. முன்பொருநாள் முருகன்என்ற பேரார்
முதியர்அவர் நூல்எதையும் பாரார்
…. தன்அறிவு மங்கிவரும்
…. தருணமதில் இங்கிவர்தான்
இன்றுமுதல் 'ப்ரொபஸர்' என்றார் ஊரார்!

14. பாடகரின் தொண்டைகொஞ்சம் மட்டு - அதைப்
பாராதவர் மேல்ஸ்ருதியைத் தொட்டுப்
…. பாடஅந்த வேதனையைத்
…. தாளாராக தேவதைதான்
போட்டதவர் தலையில்ஒரு குட்டு!

15. உண்டபின்னே திண்ணையில் அமர்ந்தேன்
உடல்அசதி மேவக்கண்ண யர்ந்தேன்
..... அண்டியென்னை ஏதோஒன்று
..... அணைத்ததது யாரோவென்று
கண்திறந்தால் நாய்!நிலைபெ யர்ந்தேன்!

16. ஆருமில்லா நேரமாகப் பார்த்து
ஆறுவருட ஆசையினைத் தீர்த்து
....... பேரனது ஊஞ்சலிலே
....... பெருங்களிப்போ(டு) ஆடையிலே
பார்அடைந்தேன் மாரெலும்பைப் பேர்த்து!

17. கவிஞனைநான் ஏன்மணந்தேன் என்று
கண்கசக்கும் என்மனைவி இன்று
..... அவியலுடன் ரசமும்வைத்து
..... அப்பளம்பா யசம்சமைத்துச்
செவியில்சொன்னாள்: உம்குறும்பா நன்று!

18. மங்களத்தின் மாமனொரு குண்டன்
வசிப்பதற்கு வந்தடைந்தான் லண்டன்
....... இங்கிலாந்துத் தீனிதின்று
....... இவன்பெருத்த மேனிஇன்று
தங்கும்'கின்னஸ் புக்'கில்;எம கண்டன்!

19. வாருமையா அருகினில்வந் துட்காரும்
வந்துமது கேஸ்விவரம் கூறும்
.. யாருமக்குச் சாதகமாய்ச்
.. சேருவரோ நேருவது
நேருமென நம்பிஊர்போய்ச் சேரும்
சேரும்முன்னம் எனதுஃபீஸைத் தாரும்.

20. காலையிலும் மாலையிலும் குறும்பா
கழிந்தமற்ற நேரமெல்லாம் எறும்பாய்
.... வேலைசெய்யும் வேளையிலும்
.... வேண்டுமென்றே மூளையினோர்
மூலையிலே சிரிக்குமது குறும்பாய்!

குறும்பா மகிமை

குறுமுனிவர் தந்ததமிழ்க் கடலில்
.கோடிகோடி அலைகளுக்கு இடையில்
…. குறும்பனெனக் காட்டிக்கொண்டு
…. குதிநடனம் போட்டுக்கொண்டு
குறும்பாவொன்(று) அலையக்கண்டோம் நடுவில்.

ஆங்கிலத்தில் 'லிமெரிக்'கென்று செய்தான்
அழகுமுண்டு பொருளுமுண்டு மெய்தான்
…. ஆங்கிலாத மோனைநலம்
…. ஆக்கிஎங்கள் மொழியின்பலம்
ஓங்குகுறும் பாவையிங்கு நெய்தான்! 

குறும்பாவைக் கொண்டுவந்தான் மூர்த்தி*
கொண்டேன்நான் அதில்மிகவும் ஆர்த்தி
... வெறும்பாவாய் ஆங்கிலத்தில்
…. விளங்கியதை ஓங்குமொரு
நறும்பாவாய் நமக்களித்தான், நேர்த்தி!
(*ஈழக்கவிஞர் மகாகவி உருத்திரமூர்த்தி)









No comments: