Thursday, September 15, 2016

மனம் தளராதே!

                                <> மனம் தளராதே! <>

                              
                                            ..அனந்த்
           
            என்றும் மனம்தள ராதே – கண்ணா!
            ...என்னால் வரும்தொல்லை எண்ணிஓ யாதே (என்றும்..) 
         
           
            கோடிப் பிறவியாய்ச் செய்த- பிழை
            ... கோபுரம் போலக் குமிந்தென்னை எய்த
            ஆடிநான் சாய்வதில் என்ன - பெரும்
            ...அதிசயம் ஆகையால் கீதையில் சொன்ன

            வார்த்தை நினைவினில் கொண்டு - உன்னை
            ... வந்தடைந் தால்நீயோ வாய்மூடிக் கொண்டு
            சோர்ந்து கிடக்கின்றாய் இன்று - நான்
            ... செய்திட்ட பாவத்தைக் கண்(டு)ஐயோ என்று

            அஞ்சி நடுங்கிட லாமோ? - நீயும்
            ... அற்ப மனிதர்போல் ஆகிடப் போமோ?
            கொஞ்சம் மனத்தினைத் தேற்று - என்றன்
            ... குறைகளை உன்னிரு காதினில் ஏற்று

            ஆனை முதலையும் கூட - முன்னம்
            ... ஆற்றிய பாவத்தைத் தூக்கிநீ போடப்
            போன கதைநெஞ்சில் எண்ணு - ஒரு
            ... போக்கற்ற என்மேல் தயவினைப் பண்ணு

            வாழ்வினில் துன்பத்தைக் கண்டு- உன்றன்
            ... வாசலில் நிற்பவர் கோடியாய் உண்டு
            தாழ்ந்துன்னைச் சார்ந்திடும் போது - அவர்
            ... தாபம்தீர்க் காவிடில் வந்திடும் வாது!

            போட்டி உனக்கெவ ருண்டு? - உன்றன்
            ...புகழை நிலைநாட்ட என்துணை கொண்டு 
            காட்டுஉன் வீரத்தை இன்று - நீ
            ... கடவுள்என் றால்என்னைக் காப்பாற்றல் நன்று! (என்றும்..)

                                                                                                               

    (திண்ணை மின்னிதழில் 2003-ல் வெளியானது)

Wednesday, August 24, 2016

கண்ணன் பிறந்தான்

                 

                   <> கண்ணன் பிறந்தான் <>

நறுமணம் நாறும் பூக்கள் நள்ளிர வலர சாந்தம்

உறுமன முடைய  மேலோர் உவகையில் மகிழப் பூமி

சிறுமழை நனைந்து மேனி சிலிர்த்திடச் சிறையி னுள்ளே

குறுநகை தவழமாயன் குழந்தையாய் அவத ரித்தான்

                                    ****

                      <> குழலோசை <>

மலர்பூத்தது வனம்பூத்தது மதிபூத்தது மகிழ்ந்து

நிலம்பூத்தது நதிபூத்தது நிழல்பூத்தது நாட்டில்

தலம்பூத்தது குடிபூத்தது சனம்பூத்தது வானோர்

குலம்பூத்தது கருமாமணி குழலோசையின் ஒலியில்

                                    ****

                        <> கழல் நிழல் <>

மூங்கிலில் இசையைக் கூட்டும் முகில்வணன் குரலைக் கேட்க

ஏங்கிடும் அன்பர் நெஞ்சில் இனியதோர் கானம் ஆவான்

தாங்கிடும் குன்றால் தன்னைச் சார்ந்தவர் துயரம் தீர்த்தோன்

பூங்கழல் நிழலில் நின்றால் பொங்கிடும் இன்பம் வாழ்வில்!

                                    ****

                         <> மாயனின் சீர் <>

பெருவரை ஏந்தும் கையன் பெற்றமுடை ஆயர்
.. பேசுவதை வேட்கும் பையன்

கருமுகில் வண்ண மெய்யன் கஞ்சனுயிர் நீக்கிக்
.. காசினியைக் காத்த துய்யன்

அருமறை ஏத்தும் ஐயன் அன்புடையர் நெஞ்சை
.. ஆசனமாய்க் கொண்ட மெய்யன்

வருதுயர் தீயில் தூசாய் மங்கவைக்கும் இந்த
.. மாயனிவன் சீராம் ஐயே!

                            ****              

.. அனந்த்

24-8-2016

Thursday, August 18, 2016

தமிழர் கண்ட புதுமை

<> தமிழர் கண்ட புதுமை <>


நாமகள் ஈங்கிவர் நாவினில் ’ராக்-அன்-ரோல்’
.. நர்த்தனம் செய்வதாலே
...... நாடொறும் அகத்திலே, அலுவலில், பள்ளியில்
.......... நடக்கையில், உறங்கிடுங்கால்

மாமியின், டாடியின், அங்கிளின், ஆன்ட்டியின்,
.. மழலையின் வாயில்நித்தம்
...... மருவிடும் ஆங்கில மொழியதன் மேன்மையில்
.......... மனமெலாம் லயித்துநிற்க

ஸ்வாமிஜி நவின்றிடும் ஆங்கில உரையினை
.. ’ஸ்கைப்’வழி பார்த்துநிற்பார்
...... சலிப்பது தருவதைத் தவிர்த்திடக் ’கிடா’ரைத்
.......... தடவிமைக் ஜாக்சனைப்போல்

பூமியில் கைகளை ஊன்றியே சுழலுவார்
.. புதியதோர் பரதமென்று
..... புதுமையை இங்ஙனம் தமிழர்கள் வாழ்வினில்
....... புகுத்தியே பெருமைகொண்டார்!

அனந்த்

(19-7-2010)   

Friday, July 29, 2016

அந்தி மாலைப் போது

<>0O0<> அந்தி மாலைப் போது  <>0O0<>



.... அந்திமாலைப் போதிலே
.... அருகில்வந்து காதிலே

வந்துசொன்னாள் வாலிபத்தின் சேதியை -அதில்
மறந்துவிட்டேன் நான்பிறந்த தேதியை!
 *
... ஆரவளோ வான்மகள்
... அறிந்திலேன்அப் பூநிகர்

நாரிமணம் தொட்டதென்றன் நாசியை - உடன்
நானிழந்தேன் என்னுடைய வாசியை
 *
... ஆங்கிருந்த புல்வெளி
... ஆனதொரு விண்வெளி

ஓங்கிஅங்கே உயர்ந்ததென்றன் ஆவலும் - கூவி
ஓலமிட்ட தென்றன்உள்ளச் சேவலும்
 *
... சலசலக்கும் ஓடையைச்
... சார்ந்தவள்தன் ஆடையை
நனைத்தழகு விழிமலரால் சீண்டினாள் - என்
நினைவின்அடித் தளத்தினையே தோண்டினாள்
 *
... புவிமுழுதும் பூக்களாய்
... புலவனது பாக்களாய்க்

கவிழ்ந்தெனது துயரைஎல்லாம் மூடின- காதல்
கதைகள்பல மனத்திரையில் ஆடின

 *
அந்தஅம்பி காபதி
அழகிஅம ராவதி

தந்தபோதை தன்னில் கண்ட தோற்றமும் - அதைத்
தொடர்ந்தவன்தன் கதையடைந்த மாற்றமும்
 *
... முந்திவந்து மூளையை
... மோதஅந்த வேளையின்

தந்திரத்தை நெஞ்(சு)உ ணர்ந்து போனதால் - மோகத்
தாகம்உலர்ந் தேசருகாய் ஆனதே!
 *
... இன்றிழைக்கும் பிழைகளே
... இன்னல்தரும் மழைகளாய்ப்

பின்னர்ஆகி வாட்டுமென்ற போதனை - நினைவில்
மின்ன,கனவு கலைந்த(து);என்ன வேதனை!

                 ::: <>0O0<> ::: 

Sunday, July 24, 2016

ஆணும் பெண்ணும்

<> ஆணும் பெண்ணும் <>

கண்ணென்றேன் காதலெதன் கண்ணென்றாள்; நங்காய்!நீ
பண்ணென்றேன் வேறுதொழில் பண்ணென்றாள்; என்னிலையை
எண்ணென்றேன் ஆற்றுமணல் எண்ணென்றாள்; என்அன்பை
உண்ணென்றேன் உண்ணாக்கில் புண்ணென்றாள் புண்பட்டேன்- நான்

ஆடென்றேன் ஆங்கதுபுல் மேயுதென்றாள், நன்றுநீ
பாடென்றேன் ஐய!பெரும் பாடென்றாள், என்னைநீ
நாடென்றேன் தான்வேறு நாடென்றாள் விரைவிலெனைக்
கூடென்றேன் நீகிளிஞ்சல் கூடென்றாள், குமைந்தேனே நான் 

அணையென்றேன் அயர்வதற்கோர் அணைதந்தாள் அதன்மேலும்
அணையென்றேன் ஆங்கிருந்த அகலணைத்தாள் அடிபெண்ணே!
அணையென்றேன் அன்பிற்கே(து) அணையென்றாள் ஐயோ!நீ
அணையென்றேன் அவளணைத்தாள் அம்மம்மா! அதன்சுகமே!

(உண்ணாக்கில்  - உள் நாக்கில்)


..அனந்த் 
http://chandhamanantham.blogspot.ca/
சந்தவசந்தம் இணையத் தளத்தில் இட்டது, 1-7-2016

Saturday, July 23, 2016

ரமண குரு

  <>  ரமண குரு <>

(வெண்பா அந்தாதி )

கருத்தனை நம்முள்ளே காண்பதே வாழ்வின்
அருத்தம்எனத் தாம்அறியா மாந்தர் - வருத்தும்
கருச்சுழியில் சிக்காமல் காப்பதற்(கு) அன்று
திருச்சுழியில்* தோன்றியதோர் தீ  1

தீப்பிழம்பாய்த் தோன்றிய தேவின் திருத்தலப்பேர்
நாப்பழக்க மாய்க்கொண்ட நல்லோனைப்  – பாப்புனைந்து
போற்றும் செயலால் புனிதம் பெறநினைத்துச்
சாற்றுவேன் அன்னான் தகை  2

அன்ன(ம்)நிகர்ப் பெண்ணொருத்தி ஆரூரன் நாமத்தை
முன்னம் பிறர்மொழியக் கேட்டதுபோல்** – தன்னுள்ளே
தாரக மாயொலித்த சத்தம் ஒருதலத்தின்
பேரென்று பிள்ளைஅறிந் தான்  3

அறிவில் நிலைத்த அருணையின் வண்ணம்
குறித்துமனம் கொண்ட களிப்பில் – வெறிகொண்டு
பித்தன் எனப்பிறர் பேசும் நிலையடைந்தான்
சித்தனாய்ப் பின்திகழ்ந் தோன்  4

தோன்றும் பொருள்யாவும் சோணா சலமெனஉள்
ஊன்றி அதிலுறைவோன் உள்ளபடி – ஈன்றதன்
தந்தையென ஏற்றுத் தனைப்பெற்றோர் சுற்றம்பால்
பந்தமறுத் தான்பா லகன்  5

அகத்தைக் கவர்ந்ததன் அத்தனைத் தேடிச்
சகமெலாம் சுற்றியபின் சேர்ந்தான் – இகத்திலெங்கும்
காணவொண்ணா அண்ணா மலையானை; கண்டபின்
நாணமிலா நங்கைஒத் தான்.##   6

தான்யார் எனமறந்தான் தன்நாமங் கெட்டான்அக்
கோன்பால் தலைப்பட்டான் குன்றதனில் – மோனத்தில்
ஆழ்ந்தான் அருண அசலம்போல் ஆனந்தம்
சூழ்ந்ததவன் உள்ளில் தொடர்ந்து  7

தொடங்கிய நாள்முதலாய் தோல்போர்த்த தேகம்
விடவந்த வேளைவரை தன்னை – அடைந்தோர்க்குக்
காட்டினான் கல்லாலின் நீழல்கீழ் நால்வர்ஐயம்
ஓட்டியவன் ஒத்தோர் வழி   8   

வழிந்தோடும் எண்ணப் பெருக்கே மனம்அஃ(து)
அழிந்திட”நான் ஆர்”என்னும் கேள்வி – ஒழியாது
நம்முள் எழுப்பின் நசியும்அகங் காரமெனும்
வெம்மைமிகு நோய்நமை விட்டு  9

நமைநாம் உணரின்நம் உண்மைச் சொருபம்
அமைதியே என்றறிய வைத்த – உமைமகிழும்
ஈசன் உருவாம் இரமணப்பே ராசானின்
ஆசிநமக் கென்றும் அரண்  10

அரவணைக்கும் அன்னை அருளொளி வீசும்
இரவி எனரமணர் அந்நாள் - கருணை
அலையாய் நமக்களித்த ஆன்மவி சாரம்
கலையா(து)உள் நிற்கும் கருத்து.  11.

.. அனந்த்

பின்குறிப்பு:

திருச்சுழி - பகவான் ரமண மஹர்ஷி பிறந்த தலம்

**திருவாரூரில் குடிகொண்டுள்ள தியாகேசன்பால் தீராக் காதல் வயப்பட்ட நங்கை ஒருத்திக்கு நிகழ்ந்த மாற்றங்களைத் திருநாவுக்கரசப் பெருமானார்  தமது பாடலொன்றில் அழகுற வருணித்துள்ளார்:

முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள்
    மூர்த்தி யவனிருக்கும் வண்ணங் கேட்டாள்

பின்னை யவனுடைய ஆரூர் கேட்டாள்
    பெயர்த்தும் அவனுக்கே பிச்சி யானாள்

அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
    அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தைத்

தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள்
    தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே.
   – (திருமுறை 6.25.7)

பகவான் ஸ்ரீரமண மகரிஷியின் வாழ்வில் நிகழ்ந்த மாற்றங்கள் ஒவ்வொன்றும் அந்த நங்கைக்கு ஏற்பட்டவைகளோடு ஒத்திருப்பதை, திருமதி. கனகம்மாள் ”ஸ்ரீ ரமண நூற்றிரட்டு உரை” என்னும் நூலில் சுட்டியுள்ளார். மேல்காணும் கவிதை அக்கருத்தை ஒட்டி அந்தாதி வெண்பாக்களால் அமைக்கப்பட்டது.

## இரமணர் இயற்றிய அருணாசல அக்ஷர மணமாலை என்னும் துதியில் அருணாசலத்திறைவன்பால் மையல் வயப்பட்ட தலைவியாகத் தம்மைப் பாவித்து எழுதிய பாடல் வரிகள் சிலவற்றைக் குறிப்பது.