<> ரமண குரு <>
(வெண்பா அந்தாதி )
கருத்தனை நம்முள்ளே காண்பதே வாழ்வின்
அருத்தம்எனத் தாம்அறியா மாந்தர் - வருத்தும்
கருச்சுழியில் சிக்காமல் காப்பதற்(கு) அன்று
திருச்சுழியில்* தோன்றியதோர் தீ 1
தீப்பிழம்பாய்த் தோன்றிய தேவின் திருத்தலப்பேர்
நாப்பழக்க மாய்க்கொண்ட நல்லோனைப் – பாப்புனைந்து
போற்றும் செயலால் புனிதம் பெறநினைத்துச்
சாற்றுவேன் அன்னான் தகை 2
அன்ன(ம்)நிகர்ப் பெண்ணொருத்தி ஆரூரன் நாமத்தை
முன்னம் பிறர்மொழியக் கேட்டதுபோல்** – தன்னுள்ளே
தாரக மாயொலித்த சத்தம் ஒருதலத்தின்
பேரென்று பிள்ளைஅறிந் தான் 3
அறிவில் நிலைத்த அருணையின் வண்ணம்
குறித்துமனம் கொண்ட களிப்பில் – வெறிகொண்டு
பித்தன் எனப்பிறர் பேசும் நிலையடைந்தான்
சித்தனாய்ப் பின்திகழ்ந் தோன் 4
தோன்றும் பொருள்யாவும் சோணா சலமெனஉள்
ஊன்றி அதிலுறைவோன் உள்ளபடி – ஈன்றதன்
தந்தையென ஏற்றுத் தனைப்பெற்றோர் சுற்றம்பால்
பந்தமறுத் தான்பா லகன் 5
அகத்தைக் கவர்ந்ததன் அத்தனைத் தேடிச்
சகமெலாம் சுற்றியபின் சேர்ந்தான் – இகத்திலெங்கும்
காணவொண்ணா அண்ணா மலையானை; கண்டபின்
நாணமிலா நங்கைஒத் தான்.## 6
தான்யார் எனமறந்தான் தன்நாமங் கெட்டான்அக்
கோன்பால் தலைப்பட்டான் குன்றதனில் – மோனத்தில்
ஆழ்ந்தான் அருண அசலம்போல் ஆனந்தம்
சூழ்ந்ததவன் உள்ளில் தொடர்ந்து 7
தொடங்கிய நாள்முதலாய் தோல்போர்த்த தேகம்
விடவந்த வேளைவரை தன்னை – அடைந்தோர்க்குக்
காட்டினான் கல்லாலின் நீழல்கீழ் நால்வர்ஐயம்
ஓட்டியவன் ஒத்தோர் வழி 8
வழிந்தோடும் எண்ணப் பெருக்கே மனம்அஃ(து)
அழிந்திட”நான் ஆர்”என்னும் கேள்வி – ஒழியாது
நம்முள் எழுப்பின் நசியும்அகங் காரமெனும்
வெம்மைமிகு நோய்நமை விட்டு 9
நமைநாம் உணரின்நம் உண்மைச் சொருபம்
அமைதியே என்றறிய வைத்த – உமைமகிழும்
ஈசன் உருவாம் இரமணப்பே ராசானின்
ஆசிநமக் கென்றும் அரண் 10
அரவணைக்கும் அன்னை அருளொளி வீசும்
இரவி எனரமணர் அந்நாள் - கருணை
அலையாய் நமக்களித்த ஆன்மவி சாரம்
கலையா(து)உள் நிற்கும் கருத்து. 11.
.. அனந்த்
பின்குறிப்பு:
திருச்சுழி - பகவான் ரமண மஹர்ஷி பிறந்த தலம்
**திருவாரூரில் குடிகொண்டுள்ள தியாகேசன்பால் தீராக் காதல் வயப்பட்ட நங்கை ஒருத்திக்கு நிகழ்ந்த மாற்றங்களைத் திருநாவுக்கரசப் பெருமானார் தமது பாடலொன்றில் அழகுற வருணித்துள்ளார்:
முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள்
மூர்த்தி யவனிருக்கும் வண்ணங் கேட்டாள்
மூர்த்தி யவனிருக்கும் வண்ணங் கேட்டாள்
பின்னை யவனுடைய ஆரூர் கேட்டாள்
பெயர்த்தும் அவனுக்கே பிச்சி யானாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தைத்
தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே. – (திருமுறை 6.25.7)
பகவான் ஸ்ரீரமண மகரிஷியின் வாழ்வில் நிகழ்ந்த மாற்றங்கள் ஒவ்வொன்றும் அந்த நங்கைக்கு ஏற்பட்டவைகளோடு ஒத்திருப்பதை, திருமதி. கனகம்மாள் ”ஸ்ரீ ரமண நூற்றிரட்டு உரை” என்னும் நூலில் சுட்டியுள்ளார். மேல்காணும் கவிதை அக்கருத்தை ஒட்டி அந்தாதி வெண்பாக்களால் அமைக்கப்பட்டது.
## இரமணர் இயற்றிய அருணாசல அக்ஷர மணமாலை என்னும் துதியில் அருணாசலத்திறைவன்பால் மையல் வயப்பட்ட தலைவியாகத் தம்மைப் பாவித்து எழுதிய பாடல் வரிகள் சிலவற்றைக் குறிப்பது.
No comments:
Post a Comment