Wednesday, December 5, 2012

திருமுருகன் அந்தாதி

உ சிவமயம்

 

பாடலின் பின்னணி:

1999-ஆம் ஆண்டில் நான் Dallas(Texas)-ல் வேலை நிமித்தமாகச் சில மாதங்கள் தங்கியிருந்தபோது அங்குள்ள தமிழ்ப்பெருமக்கள் ஒவ்வொரு சஷ்டியன்றும் விடாது அங்குள்ள கோவிலில் முருகன் சன்னிதிக்கு முன்பாக அமர்ந்து கந்த சஷ்டி கவசத்தையும் மற்ற பல முருகன் பாடல்களையும் பாடிப் பின் அருச்சனை, தூப, தீப, நைவேத்தியத்தோடு பூசையும் செய்துவந்த ஆனந்த நிகழ்ச்சிகளில் பங்குபெற வாய்ப்பு கிட்டியது.  என்னை வசப்படுத்திய அந்த குறும்புக்காரனைப் பற்றிப் பாடவேண்டும் என்ற வெறி உண்டாயிற்று. அதன் விளைவாய் எழுந்த  “திருமுருகன் அந்தாதி” என்ற எனது சிறு பாடல் தொகுப்பை ஒரு சஷ்டியன்று அவன் சந்தியில் வைத்து வணங்கினேன். இப் பாடல்கள் பிரம தத்துவத்தைச் சுப்பிரமணியன் என்ற பெயர் கொண்ட முருகன் எவ்வாறு சகுண  ரூபத்தில் இருந்தவாறே வெளிப்படுத்துகின்றான் என்ற கருத்தைப் பலவாறாகச் சொல்ல முயல்வன.  அவற்றிற்கு அடிப்படை திரு ஞானானந்த சுவாமிகளின் தபோவனத்தின் தற்போதையத் தலைவரான தவத்திரு நித்தியானந்த சுவாமிகள் அருணகிரிநாதரின் 'கந்தர் அந்தாதி'  பற்றிக் கனடாவில் நிகழ்த்திய உரையாகும்.

பொதுவாக, அந்தாதியின் முதல்பாட்டின் முதலில் வரும் சொல்லோ எழுத்தோ கடைசிப் பாட்டின் இறுதியில் ('மண்டலித்து') வருமாறு அமைப்பது வழக்கம். இவ்வந்தாதியை எழுதும்போது இது எனக்குத் தெரிந்திராததால், இந்த அமைப்பு இங்கு இல்லை.  

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

பிரமாதி ஆண்டு, சித்திரைத் திங்கள், முதல் நாள் (ஏப்ரில் 14, 1999)

                                                       

திருமுருகன் அந்தாதி

 
காப்பு:      
 
இன்னல் விலக்கவல்ல விநாயகப் பெருமானை, அவனது இளையோனாகிய முருகனின் அந்தாதியை இயற்றத் துணிந்த தகுதியொன்றுமில்லா எளியேனுக்குத் துணையிருக்குமாறு வேண்டுதல்:

      விக்கினங்க ளெல்லாம் விலக்கும் விநாயகனே!
      முக்கணனின் புத்திரரில் மூத்தவனே! - மிக்கப்
      பணிந்தனன் உன்னிளையோன் அந்தாதி பாடத்
      துணிந்தேற்கு நிற்பாய் துணை

 
குருவணக்கம்: பெருங்கவி திரு. அருணகிரிநாதரின் கந்தர் அனுபூதிப் பாக்கள் அப்பெரியார் தாம் அனுபவித்த பேரின்ப நிலையைப் புகல்வதாக அமைந்தவை. அப்பாக்களில் உட்கருத்தாய் அமைந்துள்ள தத்துவங்களை மிகத் தெளிவாகவும் இனிதாகச் சுவைக்குமாறும் எடுத்து இயம்பவல்ல, பேரறிவின் வடிவாகிய தவத்திரு. ஞானானந்தகிரி சுவாமிகள் அவர்களின் அவதாரமாய்த் திகழ்கின்ற, குருவாம் தவத்திரு. நித்தியானந்தகிரி சுவாமிகளின் அடி பணிதல்:

      கற்போற் கடிய கருத்துகள் கற்போர்க்குக்
      கற்கண்டும் கன்னலுமாப் போதிக்கும்-விற்பனனே!
      சத்திய ஞானமாம் வெற்பமரும் சத்குருவின்
      நித்தியா னந்தவுரு நீ!

 
அந்தாதி:

1. பிரமாதி என்னும் புது வருடம் தோன்றும் நன்னாளில் துவங்கிய இவ்வந்தாதி மாலை, தேவர் வணங்கும் சுப்பிரமணியனின் அடியாரின் புகழை, அவர் பிறவா நிலை அடைவதைக் காட்டுவதன் வழியாக, முதலில் தெரிவிக்கின்றது:

      பிரமாதி தேவரும் போற்றுகின்ற வேல்சுப்
      பிரமணிய! ஆதிப் பிரம! -பிரமாதி
      யாண்டிலே உன்புக ழோதுநல் லன்பருக்கு
      யாண்டும் பிறப்பில்லை யாம்

 2.     அவா, சினம் இவற்றின் விளைவாக வரும் நான், எனது என்னும் (அஹங்கார, மமகார) அறியாமையில் (மாயையில்) நாம் மூழ்காதிருக்க முருகனின் தாளை விரைந்தோடிப் பற்றுமாறு நம்மை இரண்டாவது பாட்டு அழைக்கின்றது:

      யாமென் றெமதென் றறியாமை யால்படு
      காமக் குரோதக் கடலதனில் - நாமென்றும்
      வீழத் தகுமோ விரைந்துவே லன்றாளில்
      தாழத் தருவோஞ் சிரம்
 
3.     திருச்செந்தூர் வாழும் கந்தப்பெருமான் தன் அடியார்களின் பக்தியில் வசப்பட்டு, மேற்கூறிய மாயை (அறியாமை) என்னும் வலையில் அவர்கள் சிக்கி வருந்தாமல், தன் பன்னிரு கரங்களால் அவர்களைக் காப்பான் என்று இப்போது சொல்லப்படுகிறது:

      சிரமங்கள் யாதுமிலை செந்தூர்வாழ்ச் செய்யோன்
      கரமது பன்னிரண்டுங் காக்கும் - மரண
      பயமில்லை மாயா வலையில்லை பத்தர்
      வயப்படும் வேலனரு ளால்
 

4.     ஆலமரத்தடியில் அமர்ந்து மாபெரும் முனிவர்களுக்கெல்லாம் ஞானத்தைப் போதித்த அப் பரமசிவனார்க்கே பிரணவ மந்திரத்தின் உட்பொருளைத் தான் குழந்தையாக இருந்தபோதே உபதேசித்தவன் அந்த முருகப் பெருமான். அவன் மிக்க தவமிருப்பார்க்கும் எளிதில் கிட்டாதிருப்பவன். அத்தகையோனைக் குறமகளான வள்ளி தன் பாதங்களை வருட வைத்தது விந்தையன்றோ? ("மாது குறமகள் பாதம் வருடிய மணவாளா" என்பார் அருணகிரியார்). இதன் உட்கருத்தாவது: அனுபூதி நிலையில், பெரியோர்கள் தம்மைத் தீராத காதலுடன்       (பக்தியுடன்) முருகனை நேசிக்கும் வள்ளியாக உருவகப்படுத்தி அவனுடன் ஒன்றுவர். (இஃது ஒன்பதாம் பாடலிலும் விளக்கப்படுகின்றது). அத்தகைய அடியார்கள் சிவனார்க்கும் முனிவோர்க்கும் எட்டாத முருகனைத் தம் வயப்படுத்துவர் என்பதே கீழ்வரும் பாட்டின் உட்கருத்தாம்:

       ஆலடியில் அன்றமர்ந் தண்டமெல்லாம் போதித்த
      சீலனுக் கேபிரமஞ் செப்பிய - மேலோனைக்
      கிள்ளை மொழிபேசிக் கால்வருடச் செய்தனளே
      கள்ளக் குறத்தி யவள்

 
5.     முருகனின் ஆறுமுகங்களில் மூன்று முகங்கள் வள்ளியையும் மூன்று தேவானையையும் நோக்கித் திரும்பிய நிலையில் உள்ளவாறு வடித்த சித்திரத்தையும் சிலையொன்றையும் யான் கண்டதுண்டு. அதை மனதில் வைத்துச்,  "சண்முகப்பெருமானே! நீ உன்னைச் சமமாக விரும்பும் வள்ளித்தாயார்க்கும், தேவானைத் தாயார்க்கும், ஆளுக்கு மூன்றாகத் தன் ஆறுமுகங்களைக் கொடுத்து விடுகின்றாய். அப்படி நீ செய்ததனால் தான் உன் மகவாகிய என்னிடம் பராமுகமாக இருக்கிறாய், அத்தகைய செயல் பாரபட்சமானதன்றோ?" என்று ஒரு அடியார் முருகனை (நையாண்டியாகக்) குறைசொல்வதாக ஐந்தாவது பாட்டில் சொல்லப்படுகிறது:

      வள்ளிக்கு மூன்றுந்தே வானைக்கு மூன்றும்போய்
      அள்ளிக் கொடுக்க அறுமுக!இப்- பிள்ளைக்கு
      மிஞ்சும் பராமுகந் தானோஎன் வேலவனே
      வஞ்சமே னென்றன் வசம்


6.     "அழகிய குமரக் கடவுளே! நீ முன்பு திருஞானசம்பந்தராய் அவதாரமெடுத்துச் சைவ சமயத்தைக் காத்ததொடு தமிழையும் தழைக்கச்  செய்தனையன்றோ? உன் அடியனாகிய என்னுடைய பிறப்பு-இறப்பு என்னும் தளையை (பந்தத்தை) அறுத்து எறிவது நீ செய்த அந்த அருஞ்செயல்களை விட உனக்குக் கடினமானதாக அமையக்கூடும்" என்று கூறும் வாயிலாக, இந்தப்பாட்டில் நம்முடைய பிறவிப் பிணியின் வலிமை (கொடுமை) விளக்கப்படுகிறது:

      சம்பந்த ராய்வந்து சைவத்தை யுந்தமிழ்ச்
      சம்பத்தை யுங்காத்த சுந்தரனே! - என்பந்தம்
      தீர்த்தென்னைக் காப்ப தெளிதல்ல வேயெங்கே
      பார்க்கலா முன்திறத் தை

 
7.     தன் பெருந்தாண்டவக் கூத்தினால் அண்டமெல்லாம் அதிர்ந்து நடுங்க வைக்கும் அப் பரமசிவன் பிரணவப் பொருளின் கருத்து பற்றித் தனக்கிருந்த ஐயத்தை உன்னிடம் கேட்டபோழ்து அதைத் தீயிலிட்ட தூசென ஒருநொடியில் தீர்த்துவைக்கும் ஆற்றலுடைய முருகா! என்றன் பிறவித் துயரை என்றுதான் போக்கிடுவாய்? என இப்பாட்டில் முறையிடப்படுகிறது:

      தையத்தை தாமென்று தாளத்தோ டாடியிவ்
      வையத்தை வேர்நடுங்க வைத்தோனின்- ஐயத்தைத்
      தீயினில் தூசாகத் தீர்த்தவனே! என்பவ
      நோயினைநீ என்றுதீர்ப் பாய்?
 

8.     "பாற்கடலிலே ஆதிசேடனெனும் பாம்பைப் பாயாகக் கொண்ட திருமாலின் மருகனாகிய முருகப்பெருமானே! நீ என்னை உன் குழந்தையாகப் பாவித்துக் காத்திடுவாய், உன் சரவணபவ என்னும் ஆறெழுத்து மந்திரமே என்னை மிகவும் அச்சுறுத்தும் மரணம் எனும் பயத்திலிருந்து விடுவிக்கும் துணையாகும்" என்று கூறுவதன் மூலம் முருகனின் திருநாமத்தின் உயர்வைப் பின்வரும் பாட்டு வெளிப்படுத்துகிறது:

      பாயாகப் பாம்பதனைக் கொண்டோன் மருக!நின்
      சேயாகச் சேர்த்தென்னைக் காத்திடுவாய்- நோயாக
      வந்திருந்து வாட்டும் மரண பயம்நீக்கும்
      மந்திரஞ்ச டாட்சரம தே

 
9.     இப்பாட்டில், முருகப் பெருமானைச் சார்ந்த உருவமெடுத்து நிற்கும் வள்ளியுடையதும், சேவல், மயில் இவற்றினுடையவும் அருவமான தன்மைகள் சொல்லப்படுகின்றன. வள்ளியானவள் (நான்காம் பாடலிற் கூறியவாறு) நம் சீவனைக் குறிப்பாள்; மயிலானது ஞானத்தைக்       குறிக்கும். (அது நமது உண்மைத் தன்மையை உணர்த்துவதாகும்); சேவல் நமது அகம் என்னும் நினைப்பைக் குறிக்கும்: அதாவது, எல்லையில்லாத ஆனந்த வடிவமான நம் உண்மை நிலையை அறியாது இந்த உடலை நாமாகக் கருதும் தன்மையே அகம் அல்லது அகம்பாவம் என்று கூறப்படும். அந்தத் தன்மையை நமக்கு நினைவு படுத்துவது முருகனின் சேவற்கொடியாம். சூரன் என்னும் அசுரத் தன்மை மாய்ந்தபோது அது மயிலாகவும் சேவலாகவும் மாறி முருகனை அடைந்தது எனக் கூறுவர்:

      தேனார் மொழிவள்ளி சேவல் மயிலெல்லாம்
      நானா ரெனவுணர நல்வழியாம் - கானாடும்
      வள்ளிசீ வன்மயில் ஞானஞ்சே வல்லகமென்
      றுள்ளியே யுன்னை யுணர்
 

10.    மேற்கூறியவாறு நாம் நம் உண்மை நிலையை (ஆத்ம சொரூபத்தை) உணர்ந்து முருகனெனும் அறிவுவடிவாக ஆகிவிடுவது தான் சுப்பிரமணியம் என்ற (அருவப் பொருளைக் குறிக்கும்) பெயரைப் பூண்டு அழகு உருவத்துடன் விளங்கும் முருகனை வழிபடுதலின் தத்துவமாகும். இக்கருத்து இறுதிப் பாட்டில் சுட்டப்படுகிறது: 

      உணர்ந்தியா னுன்னையுள் ளாக்கிடு முண்மை
      கொணர்ந்தவென் ஞான குருவே!  - புணர்ந்தியான்
      அப்பிரமத் தோடமையும் ஐக்கியவா னந்தமருள்
      சுப்பிரம ணீ!யெனக்கு நீ

 
முடிப்பு:    
 
அளவற்ற அருளை அள்ளி அளிக்கும் அம்முருகனுக்கு எளியேனான என்னால் என்ன தரவியலும் என வினவி இந்த எளிய அந்தாதிப் பாடல் தொகுப்பை அவன் ஏற்குமாறு வேண்டல்:

      நீண்டவென் முன்வினையை நீதா னகற்றினா
      யாண்டவா யாதுனக்கி யான்றருவேன் - பூண்டவுன்
      அந்தப்பல் லாயிர மாலையோ டேழையென்
      குந்து மணியையுங் கொள்.

Thursday, March 1, 2012

அம்பலத்தார் அம்மானை



திருச்சிற்றம்பலம்

அம்பலத்தார் அம்மானை


அனந்த்



               
       தொண்டுகிழ மாடதன்மேல் தொற்றியுல கோரெல்லாம்

      கண்டிடவோர் அம்பலத்தில் கால்நொண்டும் அம்மானை;

      கண்டிடவோர் அம்பலத்தில் கால்நொண்டு வாராயின்

      தொண்டர்தமைக் கண்டால் துரத்துவரோ அம்மானை?

      .... கண்டவிடம் தாம்நிறுத்திக் காத்திடுவார் அம்மானை (1)



      பிஞ்சுகளாய் ஆனைமுகன் ஆறுமுகன் பெற்றுத்தான்

      அஞ்சுமுகம் பூணுகின்ற ஐயன்காண் அம்மானை;

      அஞ்சுமுகம் பூணுகின்ற ஐயனே ஆமாயின்

      அஞ்சாமல் அண்டிடுவோர் யாரோசொல் அம்மானை?

      .... அம்புலியும் வெம்புலியும் அண்டிடுவார் அம்மானை! (2)



      பெண்ணெடுத்த வீட்டினின்றும் பேர்ந்திடஓர் போக்கின்றித்

      தண்பனிசூழ் மாமலையில் தாமமர்ந்தார் அம்மானை;

      தண்பனிசூழ் மாமலையில் தாமமரு மேயாயின்

      அண்ணலுடல் தான்குளிரில் ஆடாதோ அம்மானை?

      .... ஆடல் அவர்தொழிலாய் ஆனதுவே அம்மானை!   (3)



      காட்டானைத் தோலுடுத்துக் காட்டுவெண் சாந்தணிந்து

      ஓட்டைக்கை ஏந்தி உணவிரக்கும் அம்மானை;

      ஓட்டைக்கை ஏந்தி உணவிரக்கு மேயாயின்

      நீட்டியகை அன்பருக்கென் நேரிடுமோ அம்மானை?

      .... நீட்டுவர்கால் அன்பர் நெருங்கிவரின் அம்மானை!  (4)



      சேர்ந்திருந்தோர் தாம்காணத் தென்மதுரை வீதியிலே

      தேர்ந்தவிளை யாட்டுகள் செய்திடுவார் அம்மானை;

      தேர்ந்தவிளை யாட்டுகள் செய்திடுவார் ஆமாயின்

      சார்ந்தவர்தம் பாடும் சரியாமோ அம்மானை?

      .... சார்ந்தவ ரின்பாட்டைத் தாம்ரசிப்பார் அம்மானை! (5)



      பித்தனென்றும் பேயனென்றும் பேசிடினும் ஆங்கதுகேட்(டு) 

      அத்தனவன் சீறா(து) அகமகிழ்வான் அம்மானை;

      அத்தனவன் சீறா(து) அகமகிழ்வான் ஆமாயின்

      அத்தனையும் உண்மையென ஆகிடுமோ அம்மானை?

      .... அன்பர்சொலில் உன்மத்த னாவான்காண் அம்மானை! (6)



      முன்னொருநாள் மண்ணிழிந்து வீழுமொரு மாதினைத்தம்

      பொன்முடியில் தாங்கிப் பொதிந்தனர்காண் அம்மானை;

      பொன்முடியில் தாங்கிப் பொதிந்தனர்காண் யாமாயின்

      இன்னொருவள் தன்னைஇடம் ஏற்றதுமேன் அம்மானை?

      .... இடமொருகால் ஏற்றும் இயல்புடையார் அம்மானை! (7)



      நல்லமரர் வாழத்தாம் நஞ்சுண்ட காரணத்தால்

      பொல்லாக் கறைமிடறு பூண்டனர்காண் அம்மானை;

      பொல்லாக் கறைமிடறு பூண்டவரே யாமாயின்

      அல்லல் பொறுக்கா தரற்றினரோ அம்மானை?

      .... அம்மைஉமை அக்கறை ஆற்றியதாம் அம்மானை! (8)



      ஆலினிழல் கீழே அருந்தவர்க்குச் செய்கையினால்

      சீலநெறி தான்விளக்கும் செம்மல்காண் அம்மானை;

      சீலநெறி தான்விளக்கும் செம்மலவர் ஆமாயின்

      ஓலமெதும் செய்யாத ஊமையரோ அம்மானை?

      .... ஊமையராய் உண்மை உரைத்திடுவார் அம்மானை! (9)



      ஊரெல்லாம் தூங்குகையில் உன்மத்தர் தாம்ஆடச்

      சீராய்ச் சுடுகாட்டைச் சேர்ந்திடுவார் அம்மானை;

      சீராய்ச் சுடுகாட்டைச் சேர்வாரே ஆமாகில்

      யார்காண்பார் ஆங்கவர்தம் ஆட்டத்தை அம்மானை?

      .... ஊரெல்லாம் காணும் உடல்விடும்போ(து) அம்மானை! (10)

     

      இடமாகப் பெண்ணுக் கிடங்கொடுத்துத் தம்தலையில்

      படநாகம் ஆடும் படிசெய்வார் அம்மானை;

      படநாகம் ஆடும் படிசெய்வார் ஆமாகில்

      தடமின்றி ஓடாரோ சார்ந்தவர்தாம் அம்மானை?

      .... விடத்தைத்தாம் உண்டவரை மீட்டிடுவார் அம்மானை! (11)



      மையல் வசப்பட்டு வாடியதம் அன்பருக்காய்த்

      தையலிடம் தூதுசென்ற சேவகர்காண் அம்மானை;

      தையலிடம் தூதுசென்ற சேவகரே ஆமாயின்

      மெய்யடியார் ஏவலெலாம் மேற்கொளுமோ அம்மானை?

      .... மெய்யடிதம் மேற்கொள்ளும் மேன்மையர்காண் அம்மானை! (12)



      பித்தனென்றும் பேயனென்றும் பேசுபவர் உண்(டு)எனினும் 

      அத்தனவன் சினங்கொள்ளா(து) அகமகிழ்வான் அம்மானை;

      அத்தனவன் சினங்கொள்ளா(து) அகமகிழ்வான் ஆமாயின்

      எத்தனையும் தான்பொறுத்தல் இயன்றிடுமோ அம்மானை?

      .... பத்தியிலே எத்தனையும் தாம்பொறுப்பார் அம்மானை! (13)



      பிட்டுக்கு மண்சுமந்த பொன்மேனி கொண்டஅடி

      எட்டுத்திக் குள்ளோர்க்கும் ஈந்தார்காண் அம்மானை

      எட்டுத்திக் குள்ளோர்க்கும் ஈந்தாரே ஆமாயின்

      பிட்டையவர்க் கீயாமல் போனதுமேன் அம்மானை?

      ....பிட்டளித்தாள் புண்ணியமாய்ப் போனதனால் அம்மானை! (14)



      ஒருபொருளும் இல்லாமல் ஊரார் நகையஞ்சி

      அருஉருவாய்த் தோன்றிடுமெம் ஐயன்காண் அம்மானை!

      அருஉருவாய்த் தோன்றிடுமெம் ஐயனே ஆமாகில்

      வருபவர்க்கு எங்ஙன் வரமருளும் அம்மானை?

      .... தருவடியில் உள்ளபொருள் காட்டிடுங்காண் அம்மானை! (15)



      பேயொடும் பூதமொடும் பித்தனைப்போல் எம்மையன்

      தீயெரியும் காட்டில் திரியுங்காண் அம்மானை

      தீயெரியும் காட்டில் திரியுமே ஆமாகில்

      காயமெதும் இல்லாமல் காத்திடுமோ அம்மானை?

      .... தாயெனப்பெண் ணுண்டு தனைநோக்க அம்மானை!  (16)



     

      இடத்தில்ஒரு பெண்இருத்தி என்றுமவள் காணப்

      படர்சடையில் மற்றுமொரு பாவைகொள்வார் அம்மானை

      படர்சடையில் மற்றுமொரு பாவைகொள்வார் ஆமாகில்

      நடத்தைகண் டேசாரோ நானிலத்தார் அம்மானை?

      .... நடத்தைகண் டேசார்வார் நாதன்பால் அம்மானை! (17)



வரைபெயர்க்க எண்ணிவந்த வல்லரக்கன் தன்னைத்தாள்

விரலொன்றை ஊன்றி விறலழித்தார் அம்மானை

விரலொன்றை ஊன்றி விறலழித்தார் ஆமாகில்

மறையாது அவன்வாழ்ந்த மாயமென்ன அம்மானை?

.... மறையாதோ செப்பியபின் வாழ்த்தியதால் அம்மானை! (18)



      அடிமுடியைக் காணா அரிஅயன்முன் அன்றொருநாள்

      நெடியதொரு தீப்பிழம்பாய் நின்றனர்காண் அம்மானை

      நெடியதொரு தீப்பிழம்பாய் நின்றனரே ஆமாகில்

      அடியார்கள் அண்ணவும் அஞ்சுவரோ அம்மானை

      .... அடியாருக்(கு) அண்ணா மலையாவார் அம்மானை!  (19)



இரந்துண்பார் இண்டைச் சடையிலே பெண்ணைக்

கரந்துறைவார் காட்டில் நடம்புரிவார் அம்மானை

கரந்துறைவார் காட்டில் நடம்புரிவார் ஆமாகில்

வரம்பில்லா வாழ்க்கையிதை யார்மதிப்பார் அம்மானை?

.... வரம்பில்லான் என்றுலகோர் வாழ்த்துவர்காண் அம்மானை! (20)



முன்னாளோர் போட்டியிலே மோதிநின்ற பெண்ணிற்குத்

தன்னாகம் தன்னிலிடம் தந்தார்காண் அம்மானை

தன்னாகம் தன்னிலிடம் தந்தாரே ஆமாகில்

பின்னும் அவர்க்கிடையில் பூசலுமேன் அம்மானை?

... அன்னையிடைப் பூசலவர்க்(கு) ஆகாதாம் அம்மானை! (21)



நாட்டிலொரு கால்மதுரை நாயகராய் வேறொருகால்

காட்டில் திரிபவராய்க் காணுவராம் அம்மானை

காட்டில் திரிபவராய்க் காணுவரே ஆமாகில்

வாட்ட மடைந்துவழி மாறுவரோ அம்மானை?

காட்டில்நட மாடுவதில் கைதேர்ந்தார் அம்மானை! (22)





விளக்கம்:

      பாடல் 1: மாடு (நந்தி) கிழம் (தொன்மை) என்றால் அதில் ஏறுபவர் அதனினும் 'கிழம்' ஆதலின் 'தொற்றி ஏறவேண்டியிருக்கும் நிலையில் உள்ளார். முதுமையினாலும் மாடேறிக் களைத்ததாலும் நொண்டவும் (கால்தூக்கி ஆடவும்) செய்வார். போதாததென்று இதை எல்லோரும் காணப் பொது இடத்தில் (அம்பலத்தில்) செய்வார். அத்தகையர் அடியார் அது கண்டு நகைப்பரோ என்றெண்ணி அவரைத் துரத்திடுவாரோ? மாட்டார், அடியாரைக் கண்ட மாத்திரத்தில் அவரை நிறுத்தி/அல்லதுதம் ஆட்டத்தை நிறுத்தி, அவர்களுக்கு அருள்புரிவார்; அல்லது, கண்டத்தில் (கழுத்தில்) விடத்தைத் தங்கவைத்து தேவர்களைக் காப்பாற்றியவர் மற்றோரையும் காப்பார் என்றும் கொள்ளலாம்.   


      பாடல் 2: குடும்பத்தில் பிள்ளைகள் தகப்பன் யாவரும் விசித்திரமான பிறவிகள் என்ற வஞ்சப்புகழ்ச்சியொடு அஞ்சுமுகம் என்பதனைச் சிலேடையாக்கிக் கேள்வி கேட்பது. இரண்டு புலிகள் இந்த அஞ்சுமுகருக்கு அஞ்சாவாம் (வெம்புலி= புலிப்பாத முனிவர்; வியாக்கிரபாதர்). 



      பாடல் 3: பெண்ணெடுத்த வீடு: இமயமலை; ஆண்டியாதலால் தனக்கென்று வேறிடமில்லாதவர். ஆடல் தொழில்- தில்லை, மதுரை, நெல்லையில்  நடமாடுதல்.



      பாடல் 4: ஓட்டைக்கை: பிச்சையெடுக்கும் ஓட்டை உடைய கை அல்லது ஏந்தும்போது விரல்களை விரித்தால் உணவு தங்காமலாவது போன்ற கைஏந்தல். எந்தவகை ஆயினும், தனக்கே உணவுக்கு வழியில்லாதவர் தன்னிடம் கைநீட்டும் அன்பருக்கு என்ன கொடுக்கலாகும் என்பது. அழகிய நகைபூண்ட (செல்வம் மிகுந்த) உமையவளை அரன் உதவி வேண்டி நாடுவார்; அல்லது, அன்பர்கள் அரனைவிட்டு அம்மையின்பால் அடைவர்.



                பாடல் 5: ஊரார் காணக் கூடல் மாநகரில் சிவபெருமான் நிகழ்த்திய அறுபத்துநான்கு திருவிளையாடல்களைக் குறிப்பது. சார்ந்தவர் பாட்டு: திருவாசகம் அளித்த மாணிக்கவாசகர், திருவிளையாடற்புராணம் எழுதிய பரஞ்சோதி முனிவர் முதலானோரையும் அவர்கள் 'பாட்டினை'யும் குறிப்பது. தழைத்திடுவார்: பாடியவரும் பாடல்பெற்றவரும் மகிழ்வார் எனக் கொள்ளலாம்.



      பாடல் 6: அன்பர்சொலில் உன்மத்த னாவான்= பக்தர்கள் துதியில் தன்னை மறந்து மகிழ்வான்; அல்லது, அடியவர்களின் துதிச்சொல்லில் உன்மத்தன் என்பதும் அவன் பெயரில்/பெருமையில் ஒன்றாக அமையும். 



      பாடல் 7: கங்கையைத் தலையில் தாங்கி ஏற்றம் கொடுத்தாராயினும் இடப்பாகமுள்ள உமைக்கும் ஏற்றம் கொடுப்பவரே; இதை இடது காலைத் தூக்கிவைத்தாடுவதால் உணரலாம். அல்லது, ஓரோர் சமயம் (ஒருகால்) இடப்பக்கத்திற்கும் உயர்வு கொடுக்கும் வழக்கமுடையவர் என்றும் கொள்ளலாம்.



      பாடல் 8: பொல்லாக் கறை: கொடிய நஞ்சினால் விளைந்த துன்பந்தரும் கறை. அத்துயரை உமையவளின் கனிவு (அக்கறை) போக்கியது என்றவாறு.  



      பாடல் 9,10: பொருள் தெளிவு.



      பாடல் 11: விடத்தைத்தாம் உண்டவரை = விடத்தால் பாதிக்கப்பட்ட பக்தர்களை; விடத்தைத் தாமே உண்டு அவரை.



      பாடல் 12: சிவபெருமான் சுந்தரருக்காகப் பரத்தையாரிடம் தூது சென்றதையும், புட்டுக்கு மண்சுமந்து மேனியில் அடி வாங்கியதும் குறிக்கப்பட்டுள்ளன.



      பாடல் 13: பத்தியில் எத்தனையும் = பக்தியின் மேலீட்டால் அன்பர் செய்யும் அனைத்தையும்; அல்லது, பக்தியுள்ளவன் போல் நடிப்பவன்/ ஏமாற்றுபவனையும்.



      பாடல் 14: பட்டஇடம் நோகாமல் பார்த்திட்டாள் = தானிருக்கும் இடது பக்கம் வலிக்காமல் பார்த்துக்கொண்டாள், அல்லது இறைவன்மேல் அடிபட்ட இடத்தைத் தன் கருணையால் வலிஉணராமல் செய்தாள்.



பாடல் 15: தருவடியில் உள்ளபொருள் காட்டிடுங்காண்: இது கல்லால மரநிழலில் தக்ஷிணாமூர்த்தி என்னும் குரு வடிவில், என்றும் எங்கும் உள்ள பரம்பொருளின் தன்மையைச் சீடர்களான முனிவர்களுக்குக் காட்டியதைக் குறிப்பது.  



      பாடல் 16: : தாயெனப்பெண் ணுண்டு தனைநோக்க - தான் ‘அம்மையே’ என்று அழைத்த காரைக்கால் அம்மையார் தன்னை (தனது ஆட்டத்தை) கவனமாகப் பார்க்க/பார்த்துக்கொள்ள.

     

      பாடல் 17: நடத்தைகண் டேசார்வார் நாதன்பால் அம்மானை- அவர் நடத்தைக்குத் தீர்ப்பளிக்கும் அடியார் அவர் செய்தது சரியென்னுமாறு அவர்பக்கமே சார்வார்.



      பாடல் 18: வரை= (இமய)மலை; விறல் = வலிமை, வீரம், பெருமை.

மறையாதோ செப்பியவன் வாழ்த்தியதால்: மலைக்கடியில் நசுங்கிக் கிடக்கையில் இராவணன் தன் தவற்றை உணர்ந்து வருந்திச் சிவபெருமானை சாமவேதம் ஓதித் துதித்ததால் அவர் உளம்மகிழ்ந்து அவனுக்கு நல்வாழ்வளித்த காரணத்தால்.



      பாடல் 19: அண்ணுதல் = நெருங்குதல்



      பாடல் 20: வரம்பில்லான் – ஆதியந்தமெனும் கால வரம்பும், ஓரிடத்திலன்றி எங்கும் நிறைந்துளதால் இடவரம்பும் இல்லாப் பரம்பொருளாக இருப்பவன்.



      பாடல் 21: பொருள் தெளிவு.

      பாடல் 22: நடமாடுதல் = உலவுதல், நடனம் ஆடுதல்.