Wednesday, December 5, 2012

திருமுருகன் அந்தாதி

உ சிவமயம்

 

பாடலின் பின்னணி:

1999-ஆம் ஆண்டில் நான் Dallas(Texas)-ல் வேலை நிமித்தமாகச் சில மாதங்கள் தங்கியிருந்தபோது அங்குள்ள தமிழ்ப்பெருமக்கள் ஒவ்வொரு சஷ்டியன்றும் விடாது அங்குள்ள கோவிலில் முருகன் சன்னிதிக்கு முன்பாக அமர்ந்து கந்த சஷ்டி கவசத்தையும் மற்ற பல முருகன் பாடல்களையும் பாடிப் பின் அருச்சனை, தூப, தீப, நைவேத்தியத்தோடு பூசையும் செய்துவந்த ஆனந்த நிகழ்ச்சிகளில் பங்குபெற வாய்ப்பு கிட்டியது.  என்னை வசப்படுத்திய அந்த குறும்புக்காரனைப் பற்றிப் பாடவேண்டும் என்ற வெறி உண்டாயிற்று. அதன் விளைவாய் எழுந்த  திருமுருகன் அந்தாதிஎன்ற எனது சிறு பாடல் தொகுப்பை ஒரு சஷ்டியன்று அவன் சந்தியில் வைத்து வணங்கினேன். இப் பாடல்கள் பிரம தத்துவத்தைச் சுப்பிரமணியன் என்ற பெயர் கொண்ட முருகன் எவ்வாறு சகுண  ரூபத்தில் இருந்தவாறே வெளிப்படுத்துகின்றான் என்ற கருத்தைப் பலவாறாகச் சொல்ல முயல்வன.  அவற்றிற்கு அடிப்படை திரு ஞானானந்த சுவாமிகளின் தபோவனத்தின் தற்போதையத் தலைவரான தவத்திரு நித்தியானந்த சுவாமிகள் அருணகிரிநாதரின் 'கந்தர் அந்தாதி'  பற்றிக் கனடாவில் நிகழ்த்திய உரையாகும்.

பொதுவாக, அந்தாதியின் முதல்பாட்டின் முதலில் வரும் சொல்லோ எழுத்தோ கடைசிப் பாட்டின் இறுதியில் ('மண்டலித்து') வருமாறு அமைப்பது வழக்கம். இவ்வந்தாதியை எழுதும்போது இது எனக்குத் தெரிந்திராததால், இந்த அமைப்பு இங்கு இல்லை.  

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

பிரமாதி ஆண்டு, சித்திரைத் திங்கள், முதல் நாள் (ஏப்ரில் 14, 1999)

                                                       

திருமுருகன் அந்தாதி

 
காப்பு:      
 
இன்னல் விலக்கவல்ல விநாயகப் பெருமானை, அவனது இளையோனாகிய முருகனின் அந்தாதியை இயற்றத் துணிந்த தகுதியொன்றுமில்லா எளியேனுக்குத் துணையிருக்குமாறு வேண்டுதல்:

      விக்கினங்க ளெல்லாம் விலக்கும் விநாயகனே!
      முக்கணனின் புத்திரரில் மூத்தவனே! - மிக்கப்
      பணிந்தனன் உன்னிளையோன் அந்தாதி பாடத்
      துணிந்தேற்கு நிற்பாய் துணை

 
குருவணக்கம்: பெருங்கவி திரு. அருணகிரிநாதரின் கந்தர் அனுபூதிப் பாக்கள் அப்பெரியார் தாம் அனுபவித்த பேரின்ப நிலையைப் புகல்வதாக அமைந்தவை. அப்பாக்களில் உட்கருத்தாய் அமைந்துள்ள தத்துவங்களை மிகத் தெளிவாகவும் இனிதாகச் சுவைக்குமாறும் எடுத்து இயம்பவல்ல, பேரறிவின் வடிவாகிய தவத்திரு. ஞானானந்தகிரி சுவாமிகள் அவர்களின் அவதாரமாய்த் திகழ்கின்ற, குருவாம் தவத்திரு. நித்தியானந்தகிரி சுவாமிகளின் அடி பணிதல்:

      கற்போற் கடிய கருத்துகள் கற்போர்க்குக்
      கற்கண்டும் கன்னலுமாப் போதிக்கும்-விற்பனனே!
      சத்திய ஞானமாம் வெற்பமரும் சத்குருவின்
      நித்தியா னந்தவுரு நீ!

 
அந்தாதி:

1. பிரமாதி என்னும் புது வருடம் தோன்றும் நன்னாளில் துவங்கிய இவ்வந்தாதி மாலை, தேவர் வணங்கும் சுப்பிரமணியனின் அடியாரின் புகழை, அவர் பிறவா நிலை அடைவதைக் காட்டுவதன் வழியாக, முதலில் தெரிவிக்கின்றது:

      பிரமாதி தேவரும் போற்றுகின்ற வேல்சுப்
      பிரமணிய! ஆதிப் பிரம! -பிரமாதி
      யாண்டிலே உன்புக ழோதுநல் லன்பருக்கு
      யாண்டும் பிறப்பில்லை யாம்

 2.     அவா, சினம் இவற்றின் விளைவாக வரும் நான், எனது என்னும் (அஹங்கார, மமகார) அறியாமையில் (மாயையில்) நாம் மூழ்காதிருக்க முருகனின் தாளை விரைந்தோடிப் பற்றுமாறு நம்மை இரண்டாவது பாட்டு அழைக்கின்றது:

      யாமென் றெமதென் றறியாமை யால்படு
      காமக் குரோதக் கடலதனில் - நாமென்றும்
      வீழத் தகுமோ விரைந்துவே லன்றாளில்
      தாழத் தருவோஞ் சிரம்
 
3.     திருச்செந்தூர் வாழும் கந்தப்பெருமான் தன் அடியார்களின் பக்தியில் வசப்பட்டு, மேற்கூறிய மாயை (அறியாமை) என்னும் வலையில் அவர்கள் சிக்கி வருந்தாமல், தன் பன்னிரு கரங்களால் அவர்களைக் காப்பான் என்று இப்போது சொல்லப்படுகிறது:

      சிரமங்கள் யாதுமிலை செந்தூர்வாழ்ச் செய்யோன்
      கரமது பன்னிரண்டுங் காக்கும் - மரண
      பயமில்லை மாயா வலையில்லை பத்தர்
      வயப்படும் வேலனரு ளால்
 

4.     ஆலமரத்தடியில் அமர்ந்து மாபெரும் முனிவர்களுக்கெல்லாம் ஞானத்தைப் போதித்த அப் பரமசிவனார்க்கே பிரணவ மந்திரத்தின் உட்பொருளைத் தான் குழந்தையாக இருந்தபோதே உபதேசித்தவன் அந்த முருகப் பெருமான். அவன் மிக்க தவமிருப்பார்க்கும் எளிதில் கிட்டாதிருப்பவன். அத்தகையோனைக் குறமகளான வள்ளி தன் பாதங்களை வருட வைத்தது விந்தையன்றோ? ("மாது குறமகள் பாதம் வருடிய மணவாளா" என்பார் அருணகிரியார்). இதன் உட்கருத்தாவது: அனுபூதி நிலையில், பெரியோர்கள் தம்மைத் தீராத காதலுடன்       (பக்தியுடன்) முருகனை நேசிக்கும் வள்ளியாக உருவகப்படுத்தி அவனுடன் ஒன்றுவர். (இஃது ஒன்பதாம் பாடலிலும் விளக்கப்படுகின்றது). அத்தகைய அடியார்கள் சிவனார்க்கும் முனிவோர்க்கும் எட்டாத முருகனைத் தம் வயப்படுத்துவர் என்பதே கீழ்வரும் பாட்டின் உட்கருத்தாம்:

       ஆலடியில் அன்றமர்ந் தண்டமெல்லாம் போதித்த
      சீலனுக் கேபிரமஞ் செப்பிய - மேலோனைக்
      கிள்ளை மொழிபேசிக் கால்வருடச் செய்தனளே
      கள்ளக் குறத்தி யவள்

 
5.     முருகனின் ஆறுமுகங்களில் மூன்று முகங்கள் வள்ளியையும் மூன்று தேவானையையும் நோக்கித் திரும்பிய நிலையில் உள்ளவாறு வடித்த சித்திரத்தையும் சிலையொன்றையும் யான் கண்டதுண்டு. அதை மனதில் வைத்துச்,  "சண்முகப்பெருமானே! நீ உன்னைச் சமமாக விரும்பும் வள்ளித்தாயார்க்கும், தேவானைத் தாயார்க்கும், ஆளுக்கு மூன்றாகத் தன் ஆறுமுகங்களைக் கொடுத்து விடுகின்றாய். அப்படி நீ செய்ததனால் தான் உன் மகவாகிய என்னிடம் பராமுகமாக இருக்கிறாய், அத்தகைய செயல் பாரபட்சமானதன்றோ?" என்று ஒரு அடியார் முருகனை (நையாண்டியாகக்) குறைசொல்வதாக ஐந்தாவது பாட்டில் சொல்லப்படுகிறது:

      வள்ளிக்கு மூன்றுந்தே வானைக்கு மூன்றும்போய்
      அள்ளிக் கொடுக்க அறுமுக!இப்- பிள்ளைக்கு
      மிஞ்சும் பராமுகந் தானோஎன் வேலவனே
      வஞ்சமே னென்றன் வசம்


6.     "அழகிய குமரக் கடவுளே! நீ முன்பு திருஞானசம்பந்தராய் அவதாரமெடுத்துச் சைவ சமயத்தைக் காத்ததொடு தமிழையும் தழைக்கச்  செய்தனையன்றோ? உன் அடியனாகிய என்னுடைய பிறப்பு-இறப்பு என்னும் தளையை (பந்தத்தை) அறுத்து எறிவது நீ செய்த அந்த அருஞ்செயல்களை விட உனக்குக் கடினமானதாக அமையக்கூடும்" என்று கூறும் வாயிலாக, இந்தப்பாட்டில் நம்முடைய பிறவிப் பிணியின் வலிமை (கொடுமை) விளக்கப்படுகிறது:

      சம்பந்த ராய்வந்து சைவத்தை யுந்தமிழ்ச்
      சம்பத்தை யுங்காத்த சுந்தரனே! - என்பந்தம்
      தீர்த்தென்னைக் காப்ப தெளிதல்ல வேயெங்கே
      பார்க்கலா முன்திறத் தை

 
7.     தன் பெருந்தாண்டவக் கூத்தினால் அண்டமெல்லாம் அதிர்ந்து நடுங்க வைக்கும் அப் பரமசிவன் பிரணவப் பொருளின் கருத்து பற்றித் தனக்கிருந்த ஐயத்தை உன்னிடம் கேட்டபோழ்து அதைத் தீயிலிட்ட தூசென ஒருநொடியில் தீர்த்துவைக்கும் ஆற்றலுடைய முருகா! என்றன் பிறவித் துயரை என்றுதான் போக்கிடுவாய்? என இப்பாட்டில் முறையிடப்படுகிறது:

      தையத்தை தாமென்று தாளத்தோ டாடியிவ்
      வையத்தை வேர்நடுங்க வைத்தோனின்- ஐயத்தைத்
      தீயினில் தூசாகத் தீர்த்தவனே! என்பவ
      நோயினைநீ என்றுதீர்ப் பாய்?
 

8.     "பாற்கடலிலே ஆதிசேடனெனும் பாம்பைப் பாயாகக் கொண்ட திருமாலின் மருகனாகிய முருகப்பெருமானே! நீ என்னை உன் குழந்தையாகப் பாவித்துக் காத்திடுவாய், உன் சரவணபவ என்னும் ஆறெழுத்து மந்திரமே என்னை மிகவும் அச்சுறுத்தும் மரணம் எனும் பயத்திலிருந்து விடுவிக்கும் துணையாகும்" என்று கூறுவதன் மூலம் முருகனின் திருநாமத்தின் உயர்வைப் பின்வரும் பாட்டு வெளிப்படுத்துகிறது:

      பாயாகப் பாம்பதனைக் கொண்டோன் மருக!நின்
      சேயாகச் சேர்த்தென்னைக் காத்திடுவாய்- நோயாக
      வந்திருந்து வாட்டும் மரண பயம்நீக்கும்
      மந்திரஞ்ச டாட்சரம தே

 
9.     இப்பாட்டில், முருகப் பெருமானைச் சார்ந்த உருவமெடுத்து நிற்கும் வள்ளியுடையதும், சேவல், மயில் இவற்றினுடையவும் அருவமான தன்மைகள் சொல்லப்படுகின்றன. வள்ளியானவள் (நான்காம் பாடலிற் கூறியவாறு) நம் சீவனைக் குறிப்பாள்; மயிலானது ஞானத்தைக்       குறிக்கும். (அது நமது உண்மைத் தன்மையை உணர்த்துவதாகும்); சேவல் நமது அகம் என்னும் நினைப்பைக் குறிக்கும்: அதாவது, எல்லையில்லாத ஆனந்த வடிவமான நம் உண்மை நிலையை அறியாது இந்த உடலை நாமாகக் கருதும் தன்மையே அகம் அல்லது அகம்பாவம் என்று கூறப்படும். அந்தத் தன்மையை நமக்கு நினைவு படுத்துவது முருகனின் சேவற்கொடியாம். சூரன் என்னும் அசுரத் தன்மை மாய்ந்தபோது அது மயிலாகவும் சேவலாகவும் மாறி முருகனை அடைந்தது எனக் கூறுவர்:

      தேனார் மொழிவள்ளி சேவல் மயிலெல்லாம்
      நானா ரெனவுணர நல்வழியாம் - கானாடும்
      வள்ளிசீ வன்மயில் ஞானஞ்சே வல்லகமென்
      றுள்ளியே யுன்னை யுணர்
 

10.    மேற்கூறியவாறு நாம் நம் உண்மை நிலையை (ஆத்ம சொரூபத்தை) உணர்ந்து முருகனெனும் அறிவுவடிவாக ஆகிவிடுவது தான் சுப்பிரமணியம் என்ற (அருவப் பொருளைக் குறிக்கும்) பெயரைப் பூண்டு அழகு உருவத்துடன் விளங்கும் முருகனை வழிபடுதலின் தத்துவமாகும். இக்கருத்து இறுதிப் பாட்டில் சுட்டப்படுகிறது: 

      உணர்ந்தியா னுன்னையுள் ளாக்கிடு முண்மை
      கொணர்ந்தவென் ஞான குருவே!  - புணர்ந்தியான்
      அப்பிரமத் தோடமையும் ஐக்கியவா னந்தமருள்
      சுப்பிரம ணீ!யெனக்கு நீ

 
முடிப்பு:    
 
அளவற்ற அருளை அள்ளி அளிக்கும் அம்முருகனுக்கு எளியேனான என்னால் என்ன தரவியலும் என வினவி இந்த எளிய அந்தாதிப் பாடல் தொகுப்பை அவன் ஏற்குமாறு வேண்டல்:

      நீண்டவென் முன்வினையை நீதா னகற்றினா
      யாண்டவா யாதுனக்கி யான்றருவேன் - பூண்டவுன்
      அந்தப்பல் லாயிர மாலையோ டேழையென்
      குந்து மணியையுங் கொள்.

No comments: