திருச்சிற்றம்பலம்
அம்பலத்தார்
அம்மானை
அனந்த்
தொண்டுகிழ
மாடதன்மேல் தொற்றியுல கோரெல்லாம்
கண்டிடவோர் அம்பலத்தில்
கால்நொண்டும் அம்மானை;
கண்டிடவோர் அம்பலத்தில்
கால்நொண்டு வாராயின்
தொண்டர்தமைக் கண்டால்
துரத்துவரோ அம்மானை?
.... கண்டவிடம்
தாம்நிறுத்திக் காத்திடுவார் அம்மானை (1)
பிஞ்சுகளாய் ஆனைமுகன்
ஆறுமுகன் பெற்றுத்தான்
அஞ்சுமுகம் பூணுகின்ற
ஐயன்காண் அம்மானை;
அஞ்சுமுகம் பூணுகின்ற ஐயனே
ஆமாயின்
அஞ்சாமல் அண்டிடுவோர் யாரோசொல்
அம்மானை?
.... அம்புலியும்
வெம்புலியும் அண்டிடுவார் அம்மானை! (2)
பெண்ணெடுத்த வீட்டினின்றும்
பேர்ந்திடஓர் போக்கின்றித்
தண்பனிசூழ் மாமலையில் தாமமர்ந்தார் அம்மானை;
தண்பனிசூழ் மாமலையில் தாமமரு மேயாயின்
அண்ணலுடல் தான்குளிரில்
ஆடாதோ அம்மானை?
.... ஆடல் அவர்தொழிலாய்
ஆனதுவே அம்மானை! (3)
காட்டானைத் தோலுடுத்துக்
காட்டுவெண் சாந்தணிந்து
ஓட்டைக்கை ஏந்தி உணவிரக்கும்
அம்மானை;
ஓட்டைக்கை ஏந்தி உணவிரக்கு
மேயாயின்
நீட்டியகை அன்பருக்கென்
நேரிடுமோ அம்மானை?
.... நீட்டுவர்கால் அன்பர் நெருங்கிவரின்
அம்மானை! (4)
சேர்ந்திருந்தோர் தாம்காணத்
தென்மதுரை வீதியிலே
தேர்ந்தவிளை யாட்டுகள்
செய்திடுவார் அம்மானை;
தேர்ந்தவிளை யாட்டுகள்
செய்திடுவார் ஆமாயின்
சார்ந்தவர்தம் பாடும்
சரியாமோ அம்மானை?
.... சார்ந்தவ ரின்பாட்டைத் தாம்ரசிப்பார் அம்மானை! (5)
பித்தனென்றும் பேயனென்றும்
பேசிடினும் ஆங்கதுகேட்(டு)
அத்தனவன் சீறா(து)
அகமகிழ்வான் அம்மானை;
அத்தனவன் சீறா(து)
அகமகிழ்வான் ஆமாயின்
அத்தனையும் உண்மையென ஆகிடுமோ
அம்மானை?
.... அன்பர்சொலில் உன்மத்த
னாவான்காண் அம்மானை! (6)
முன்னொருநாள் மண்ணிழிந்து
வீழுமொரு மாதினைத்தம்
பொன்முடியில் தாங்கிப் பொதிந்தனர்காண் அம்மானை;
பொன்முடியில் தாங்கிப் பொதிந்தனர்காண் யாமாயின்
இன்னொருவள் தன்னைஇடம்
ஏற்றதுமேன் அம்மானை?
.... இடமொருகால் ஏற்றும்
இயல்புடையார் அம்மானை! (7)
நல்லமரர் வாழத்தாம் நஞ்சுண்ட
காரணத்தால்
பொல்லாக் கறைமிடறு
பூண்டனர்காண் அம்மானை;
பொல்லாக் கறைமிடறு பூண்டவரே
யாமாயின்
அல்லல் பொறுக்கா தரற்றினரோ
அம்மானை?
.... அம்மைஉமை அக்கறை ஆற்றியதாம் அம்மானை! (8)
ஆலினிழல் கீழே
அருந்தவர்க்குச் செய்கையினால்
சீலநெறி தான்விளக்கும்
செம்மல்காண் அம்மானை;
சீலநெறி தான்விளக்கும்
செம்மலவர் ஆமாயின்
ஓலமெதும் செய்யாத ஊமையரோ
அம்மானை?
.... ஊமையராய் உண்மை உரைத்திடுவார் அம்மானை! (9)
ஊரெல்லாம்
தூங்குகையில் உன்மத்தர் தாம்ஆடச்
சீராய்ச் சுடுகாட்டைச்
சேர்ந்திடுவார் அம்மானை;
சீராய்ச் சுடுகாட்டைச் சேர்வாரே ஆமாகில்
யார்காண்பார் ஆங்கவர்தம்
ஆட்டத்தை அம்மானை?
.... ஊரெல்லாம் காணும்
உடல்விடும்போ(து) அம்மானை! (10)
இடமாகப் பெண்ணுக்
கிடங்கொடுத்துத் தம்தலையில்
படநாகம் ஆடும் படிசெய்வார்
அம்மானை;
படநாகம் ஆடும் படிசெய்வார்
ஆமாகில்
தடமின்றி ஓடாரோ
சார்ந்தவர்தாம் அம்மானை?
.... விடத்தைத்தாம் உண்டவரை
மீட்டிடுவார் அம்மானை! (11)
மையல் வசப்பட்டு வாடியதம்
அன்பருக்காய்த்
தையலிடம் தூதுசென்ற
சேவகர்காண் அம்மானை;
தையலிடம் தூதுசென்ற சேவகரே
ஆமாயின்
மெய்யடியார் ஏவலெலாம் மேற்கொளுமோ
அம்மானை?
.... மெய்யடிதம் மேற்கொள்ளும் மேன்மையர்காண்
அம்மானை! (12)
பித்தனென்றும் பேயனென்றும்
பேசுபவர் உண்(டு)எனினும்
அத்தனவன் சினங்கொள்ளா(து)
அகமகிழ்வான் அம்மானை;
அத்தனவன் சினங்கொள்ளா(து)
அகமகிழ்வான் ஆமாயின்
எத்தனையும் தான்பொறுத்தல்
இயன்றிடுமோ அம்மானை?
.... பத்தியிலே எத்தனையும்
தாம்பொறுப்பார் அம்மானை! (13)
பிட்டுக்கு மண்சுமந்த பொன்மேனி கொண்டஅடி
எட்டுத்திக் குள்ளோர்க்கும்
ஈந்தார்காண் அம்மானை
எட்டுத்திக் குள்ளோர்க்கும்
ஈந்தாரே ஆமாயின்
பிட்டையவர்க்
கீயாமல் போனதுமேன் அம்மானை?
....பிட்டளித்தாள்
புண்ணியமாய்ப் போனதனால் அம்மானை! (14)
ஒருபொருளும் இல்லாமல் ஊரார்
நகையஞ்சி
அருஉருவாய்த் தோன்றிடுமெம்
ஐயன்காண் அம்மானை!
அருஉருவாய்த் தோன்றிடுமெம்
ஐயனே ஆமாகில்
வருபவர்க்கு எங்ஙன் வரமருளும்
அம்மானை?
.... தருவடியில் உள்ளபொருள்
காட்டிடுங்காண் அம்மானை! (15)
பேயொடும் பூதமொடும்
பித்தனைப்போல் எம்மையன்
தீயெரியும் காட்டில்
திரியுங்காண் அம்மானை
தீயெரியும் காட்டில் திரியுமே
ஆமாகில்
காயமெதும் இல்லாமல்
காத்திடுமோ அம்மானை?
.... தாயெனப்பெண் ணுண்டு
தனைநோக்க அம்மானை! (16)
இடத்தில்ஒரு பெண்இருத்தி என்றுமவள் காணப்
படர்சடையில்
மற்றுமொரு பாவைகொள்வார் அம்மானை
படர்சடையில் மற்றுமொரு பாவைகொள்வார் ஆமாகில்
நடத்தைகண் டேசாரோ நானிலத்தார் அம்மானை?
.... நடத்தைகண் டேசார்வார் நாதன்பால்
அம்மானை! (17)
வரைபெயர்க்க எண்ணிவந்த வல்லரக்கன் தன்னைத்தாள்
விரலொன்றை ஊன்றி விறலழித்தார் அம்மானை
விரலொன்றை ஊன்றி விறலழித்தார் ஆமாகில்
மறையாது அவன்வாழ்ந்த மாயமென்ன அம்மானை?
.... மறையாதோ செப்பியபின் வாழ்த்தியதால் அம்மானை! (18)
அடிமுடியைக் காணா அரிஅயன்முன் அன்றொருநாள்
நெடியதொரு
தீப்பிழம்பாய் நின்றனர்காண் அம்மானை
நெடியதொரு தீப்பிழம்பாய்
நின்றனரே ஆமாகில்
அடியார்கள்
அண்ணவும் அஞ்சுவரோ அம்மானை
....
அடியாருக்(கு) அண்ணா மலையாவார்
அம்மானை! (19)
இரந்துண்பார் இண்டைச் சடையிலே பெண்ணைக்
கரந்துறைவார் காட்டில் நடம்புரிவார் அம்மானை
கரந்துறைவார் காட்டில் நடம்புரிவார் ஆமாகில்
வரம்பில்லா வாழ்க்கையிதை யார்மதிப்பார் அம்மானை?
.... வரம்பில்லான் என்றுலகோர் வாழ்த்துவர்காண் அம்மானை! (20)
முன்னாளோர் போட்டியிலே மோதிநின்ற பெண்ணிற்குத்
தன்னாகம் தன்னிலிடம் தந்தார்காண் அம்மானை
தன்னாகம் தன்னிலிடம் தந்தாரே ஆமாகில்
பின்னும் அவர்க்கிடையில் பூசலுமேன் அம்மானை?
... அன்னையிடைப் பூசலவர்க்(கு) ஆகாதாம் அம்மானை! (21)
நாட்டிலொரு கால்மதுரை நாயகராய் வேறொருகால்
காட்டில் திரிபவராய்க் காணுவராம் அம்மானை
காட்டில் திரிபவராய்க் காணுவரே ஆமாகில்
வாட்ட மடைந்துவழி மாறுவரோ அம்மானை?
காட்டில்நட மாடுவதில் கைதேர்ந்தார் அம்மானை! (22)
விளக்கம்:
பாடல் 1: மாடு (நந்தி) கிழம் (தொன்மை) என்றால் அதில் ஏறுபவர் அதனினும் 'கிழம்' ஆதலின் 'தொற்றி
ஏறவேண்டியிருக்கும் நிலையில் உள்ளார். முதுமையினாலும் மாடேறிக் களைத்ததாலும்
நொண்டவும் (கால்தூக்கி ஆடவும்) செய்வார். போதாததென்று இதை எல்லோரும் காணப்
பொது இடத்தில் (அம்பலத்தில்) செய்வார். அத்தகையர் அடியார் அது கண்டு நகைப்பரோ
என்றெண்ணி அவரைத் துரத்திடுவாரோ? மாட்டார், அடியாரைக் கண்ட மாத்திரத்தில் அவரை நிறுத்தி/அல்லதுதம் ஆட்டத்தை நிறுத்தி,
அவர்களுக்கு அருள்புரிவார்; அல்லது, கண்டத்தில் (கழுத்தில்) விடத்தைத் தங்கவைத்து தேவர்களைக் காப்பாற்றியவர்
மற்றோரையும் காப்பார் என்றும் கொள்ளலாம்.
பாடல் 2: குடும்பத்தில் பிள்ளைகள் தகப்பன் யாவரும் விசித்திரமான பிறவிகள் என்ற
வஞ்சப்புகழ்ச்சியொடு அஞ்சுமுகம் என்பதனைச் சிலேடையாக்கிக் கேள்வி கேட்பது. இரண்டு
புலிகள் இந்த அஞ்சுமுகருக்கு அஞ்சாவாம் (வெம்புலி= புலிப்பாத முனிவர்; வியாக்கிரபாதர்).
பாடல் 3: பெண்ணெடுத்த வீடு: இமயமலை; ஆண்டியாதலால் தனக்கென்று
வேறிடமில்லாதவர். ஆடல் தொழில்- தில்லை, மதுரை, நெல்லையில் நடமாடுதல்.
பாடல் 4: ஓட்டைக்கை: பிச்சையெடுக்கும் ஓட்டை உடைய கை அல்லது ஏந்தும்போது விரல்களை
விரித்தால் உணவு தங்காமலாவது போன்ற கைஏந்தல். எந்தவகை ஆயினும், தனக்கே உணவுக்கு வழியில்லாதவர் தன்னிடம் கைநீட்டும் அன்பருக்கு என்ன
கொடுக்கலாகும் என்பது. அழகிய நகைபூண்ட (செல்வம் மிகுந்த) உமையவளை அரன் உதவி
வேண்டி நாடுவார்; அல்லது, அன்பர்கள்
அரனைவிட்டு அம்மையின்பால் அடைவர்.
பாடல்
5:
ஊரார் காணக் கூடல் மாநகரில் சிவபெருமான் நிகழ்த்திய அறுபத்துநான்கு
திருவிளையாடல்களைக் குறிப்பது. சார்ந்தவர் பாட்டு: திருவாசகம் அளித்த
மாணிக்கவாசகர், திருவிளையாடற்புராணம் எழுதிய பரஞ்சோதி
முனிவர் முதலானோரையும் அவர்கள் 'பாட்டினை'யும் குறிப்பது. தழைத்திடுவார்: பாடியவரும் பாடல்பெற்றவரும் மகிழ்வார் எனக்
கொள்ளலாம்.
பாடல் 6: அன்பர்சொலில் உன்மத்த னாவான்= பக்தர்கள் துதியில் தன்னை மறந்து மகிழ்வான்;
அல்லது, அடியவர்களின் துதிச்சொல்லில்
உன்மத்தன் என்பதும் அவன் பெயரில்/பெருமையில் ஒன்றாக அமையும்.
பாடல் 7: கங்கையைத் தலையில் தாங்கி ஏற்றம் கொடுத்தாராயினும் இடப்பாகமுள்ள
உமைக்கும் ஏற்றம் கொடுப்பவரே; இதை இடது காலைத்
தூக்கிவைத்தாடுவதால் உணரலாம். அல்லது, ஓரோர் சமயம்
(ஒருகால்) இடப்பக்கத்திற்கும் உயர்வு கொடுக்கும் வழக்கமுடையவர் என்றும்
கொள்ளலாம்.
பாடல் 8: பொல்லாக் கறை: கொடிய நஞ்சினால் விளைந்த துன்பந்தரும் கறை. அத்துயரை
உமையவளின் கனிவு (அக்கறை) போக்கியது என்றவாறு.
பாடல் 9,10: பொருள் தெளிவு.
பாடல் 11: விடத்தைத்தாம் உண்டவரை = விடத்தால் பாதிக்கப்பட்ட பக்தர்களை; விடத்தைத் தாமே உண்டு அவரை.
பாடல் 12: சிவபெருமான் சுந்தரருக்காகப் பரத்தையாரிடம் தூது சென்றதையும், புட்டுக்கு மண்சுமந்து மேனியில் அடி வாங்கியதும் குறிக்கப்பட்டுள்ளன.
பாடல் 13: பத்தியில் எத்தனையும் = பக்தியின் மேலீட்டால் அன்பர் செய்யும் அனைத்தையும்;
அல்லது, பக்தியுள்ளவன் போல் நடிப்பவன்/ ஏமாற்றுபவனையும்.
பாடல் 14: பட்டஇடம் நோகாமல் பார்த்திட்டாள் = தானிருக்கும் இடது பக்கம் வலிக்காமல்
பார்த்துக்கொண்டாள், அல்லது இறைவன்மேல் அடிபட்ட இடத்தைத்
தன் கருணையால் வலிஉணராமல் செய்தாள்.
பாடல் 15: தருவடியில் உள்ளபொருள்
காட்டிடுங்காண்:
இது கல்லால மரநிழலில் தக்ஷிணாமூர்த்தி என்னும் குரு வடிவில், என்றும் எங்கும் உள்ள
பரம்பொருளின் தன்மையைச் சீடர்களான முனிவர்களுக்குக் காட்டியதைக் குறிப்பது.
பாடல் 16: : தாயெனப்பெண் ணுண்டு தனைநோக்க -
தான் ‘அம்மையே’ என்று அழைத்த காரைக்கால் அம்மையார் தன்னை (தனது ஆட்டத்தை) கவனமாகப்
பார்க்க/பார்த்துக்கொள்ள.
பாடல்
17:
நடத்தைகண் டேசார்வார் நாதன்பால் அம்மானை- அவர் நடத்தைக்குத் தீர்ப்பளிக்கும்
அடியார் அவர் செய்தது சரியென்னுமாறு அவர்பக்கமே சார்வார்.
பாடல்
18: வரை= (இமய)மலை; விறல் = வலிமை,
வீரம், பெருமை.
மறையாதோ செப்பியவன் வாழ்த்தியதால்: மலைக்கடியில்
நசுங்கிக் கிடக்கையில் இராவணன் தன் தவற்றை உணர்ந்து வருந்திச் சிவபெருமானை
சாமவேதம் ஓதித் துதித்ததால் அவர் உளம்மகிழ்ந்து அவனுக்கு நல்வாழ்வளித்த
காரணத்தால்.
பாடல்
19: அண்ணுதல் = நெருங்குதல்
பாடல் 20: வரம்பில்லான் – ஆதியந்தமெனும் கால வரம்பும்,
ஓரிடத்திலன்றி எங்கும் நிறைந்துளதால் இடவரம்பும் இல்லாப் பரம்பொருளாக இருப்பவன்.
பாடல் 21:
பொருள் தெளிவு.
பாடல் 22: நடமாடுதல் = உலவுதல், நடனம் ஆடுதல்.
No comments:
Post a Comment