உ சிவமயம்
திருச்சிற்றம்பலம்
தில்லை இறை
பொன்னும் பொருளும் புவியுள்ள போகமெல்லாம்
இன்னுமிக வேண்டும் எனவிழைந்தேன் - இன்றெதுவும்என்னுடைய தில்லை எனநான் உணரவைத்தான்
என்னுடைய தில்லை இறை… … … 1
வாழ்வும் அதன்பின்னே வந்தென்னை வாட்டுகின்ற
தாழ்வும் எனச்சுழலும் சக்கரத்தில் - வீழ்ந்துலகில்மன்றாடும் என்நிலையை மாற்றினான் தாள்தூக்கி
மன்றாடும் தில்லை மருந்து… … … 2
பொய்யான தேகத்தை மெய்யென்று போற்றிநான்
ஒய்யார மாக உலவிவந்தேன் - கைவிட்டின்(று)அத்தனையும் போன நிலையில் அறிந்தேன்என்
அத்தனைத் தில்லையில் யான்… … … 3
யாரேது கூறினும் ஆங்கவர்தம் சொற்கேளா(து)
ஊர்ப்பகை தேடி உழன்றேன்நான் - சீர்திருத்தத்தாதையென வந்து தயைபுரிந்து காணவைத்தான்
தாதையெனத் தில்லைநடச் சால்பு… … … 4
கற்றுணர்ந்தோம் என்ற களிப்பில் மிகச்செருக்(கு)
உற்றலைந்த என்னை உறவாகப் - பற்றிநடத்தை திருத்திஎன்னுள் நாட்டிவிட் டான்தன்
நடத்தையத் தில்லைநா தன்… … … 5
நோயால் உடல்தொய்ந்து நொந்திருந்த வேளையிலும்
வாயால் ஒருதரமும் வாழ்த்தேனைக் - காயா(து)உடுக்கை இழந்தோன்கை போல்உதவிக் காத்தான்
உடுக்கை ஒலிதில்லை யோன்… … … 6
சென்றவனைக் கோவிலிலே சற்றேனும் சிந்திக்க
இன்றெனக்கு நேரமில்லை இன்னொருநாள், - இன்னொருநாள்என்றேனைத் தான்வலிய ஏற்றதால் நான்சுவைத்தேன்
என்றேனைத் தில்லையில் இன்று… … … 7
இவ்வுலக இன்பமெல்லாம் என்றும் சதமென்று
வெவ்வகைப் போகத்தில் வீழ்ந்திருந்தேன் - கவ்வித்தனக்கிடம் பற்றிஉளம் தங்கிவிட்டான் பெண்ணைத்
தனக்கிடம் கொள்தில்லைச் சம்பு… … … 8
இரந்தோருக்(கு) இல்லையெனக் கூறிஎன் செல்வம்
கரந்தேனின் நெஞ்சமெனும் கல்லில் - சுரந்ததோர்வாரி எனவந்தான் மாற்றார்க்கும் தன்னருளை
வாரி வழங்குதில்லை வாழ்வு… … … 9
பல்வகையில் பாவியெனைப் பாலித் தருள்செய்து
நல்லவனாய் ஆக்கிஎந் நாளிலுமென் - அல்நீக்கிஉள்ளக் குகையில் ஒளிர்கின்றான் தானென்றும்
உள்ள னெனத்தில்லை யோன்… … … 10
-------------------------------------------------------------------
.. அனந்த் 20-2-2005
http://groups.yahoo.com/group/santhavasantham/message/10624
No comments:
Post a Comment