Thursday, September 20, 2018

காஞ்சி ஸ்ரீ ஜெயேந்திர ஸரஸ்வதி சுவாமிகள் திருவீதி உலா


  

காஞ்சி ஸ்ரீ ஜெயேந்திர ஸரஸ்வதி சுவாமிகள் திருவீதி உலா
(கலிவெண்பா)

நிலவும் புனலும் உலவும் சடையோன்
அலகில் கருணை அகம்கொண்(டு) – உலகோர்
அறநெறி பற்றித் திறமுடன் வாழ
உறுதுணை யென்று கருதிப்  பிறந்தனன்                       
சங்கர சற்குரு வாகஇப் பாரினில்
எங்கும் சிவநெறி எஞ்ஞான்றும்  மங்காத
வண்ணமவர் நட்ட மடங்களுள் மாண்பினில்
திண்ணிய காஞ்சித் திருமடம்  புண்ணிய
சீலத் தவமுனி சந்திர சேகரர்                                                   
ஞாலம் புகழ்ந்திடும் ஞானவொளிக்  கோலத்தர்                                 10

தெய்வக் குரல்வழிச் செப்பிய நெறிபற்றி
உய்யும் வகையை உணர்த்தியிவ்  வையத்தே
வான்புகழ் எய்திய மாமுனிதம் பீடத்தை
மாணுறப் பேணும் வகைநாடி - நான்மறையும்
ஆறங்கம் சாத்திரவி யாகரணப் பாண்டித்யம்
ஆரப் படைத்தவர் ஆரென்று  தீரவே
ஆராய்ந்து கண்ட அருமணிஜெ யேந்திரரிப்
பாரோர்க்குக் கிட்டிய பாக்கியம்  சீரிளமைக்    
காலத்தே முற்றும் கனிந்த றிவாளர்                                          
மேலோர்கீ ழோர்வேறு பாடில்லார்  கோலத்தில்                                 20

ஆலடி தேர்ந்த முறுவல்முக ஐயனைப்போல்
பால வடிவினர் பார்த்தநொடிக்  காலத்துள்
காந்தம் இரும்பைக் கவர்வதுபோல் சிந்தைதவழ்
சாந்தத்தால் எல்லாச் சனங்களையும் -  ஈர்த்த
செயேந்திரப் பேர்தாங்கும் பெம்மான் கயிலை
மயேந்திரர் மைந்தனொத்த ஏரார்  தயைக்கடலாம்
ஆசானைப் போலஅருள் வீசும் திருமுகத்தார்
பாசமறுத் துப்பசுவை உய்விக்கும்  ஈசன்போல்
தேசுமிக்கார் கஞ்சத் திருவடியால் பாரத                                         
தேசமெலாம் தாமளக்கச் செல்லுமுனம் – பூசுரர்மூ                           30

வாயிரவர் போற்றிவளர் அற்புதச் சேத்திர
மாயிலங்கும் தில்லை மணிநகர  வாய்புகுந்து
அன்னைசிவ காமி அருகிருக்க அன்பர்முன்
பொன்னம் பலத்தாடும் புண்ணியனின் - சன்னிதியில்
காலடிநீர் வைத்தெம்மைக் காத்தருள வேண்டுமெனச்
சீலமிகு அந்தணரும் செம்மைநெறி -மேலொழுகும்
ஊராரும் வேண்டிநிற்க உத்தமச் சீடரும்தம்
பேராசான் ஆசியினைப் பெற்றபின்னர்  சீராரும்
காஞ்சி நகர்நீங்கிக் கால்நடையாய்த் தில்லைக்குப்                       
பூஞ்சிறார் தாதைமடி புக்குமொரு - வாஞ்சைதம்                                 40

உள்ளில் ததும்பி ஊர்ப்பயணம் தாம்தொடங்க
வெள்ளம் எனத்திரண்ட மாந்தர்தம்  உள்ளமும்தம்
கூடத் தொடரக் குளிர்தென்றல் காற்றுருவில்
ஓடிவந்து வாயு உபசரிக்கச்  சேடனுமோர்
வெண்முகிலாய் ஐயனின் வெப்பொழிக்கத் தேவரும்தம்
கண்மணியாய்க் காட்சிதரும் காஞ்சிப்  புண்ணியனை
வானினின்று சேவிக்க வாத்தியங்கள் பண்ணிசைக்க
மேனியெலாம் வெண்ணீற்று மின்னொளிரச்  சொந்தமென
எங்குமுளோர் தம்மவ ரென்றுரிமை கொள்தகையன்
பொங்கிவரும் ஆதவன்போல் புன்னகையோ(டு)- அங்கிருந்த       50

தொண்டர் உளக்கமலம் தோடவிழ ஞானியர்
கண்டுசிவ ரூபன் எனவுணர -  ஒண்டழல்போற்
செந்துவர் மேலுடையும் செங்கமலக் கைகளிலே                                
மந்திரநீர்க் குண்டிகையும் மாந்தரின்  பந்தமெனும்
சங்கிலியைத் தூளாக்கும் தண்டமும் தாங்கியவா(று)
எங்கும் சயசய ஓசையெழ  இங்கிவர்
சங்கரரே என்று சனங்களெல்லாம்- தங்களுக்குள்
சொல்லி மகிழத் திருவூர் உலாவிற்குச்
செல்வழியில் முந்தையர் சித்திபெற்ற  நல்லூர்
கலவையில் அன்னார் கழல்தொழுது தில்லைத்                                  60

தலவாயில் சேருந் தருணம்  கலச(ம்)நிறை
கங்கை யமுனையொடு காவிரி வைகையென
ங்குமுள ஆற்றுநீ ரேந்திவந்து – மங்கலம்                                      
மங்கலமென் றந்தணர்கள் வாயால் மறையோதக்
கங்குல் அகற்றும் கதிரோன்போல் - தங்களூர்
தேடிவந்த ஞானிக்குத் தேவாரப் பண்பலவும்
பாடிவந்து ஓதுவார் தாம்பணியக் - கூடிநின்ற
பல்லிய வல்லுநர்தம் வாத்தியங்கள் வாசிக்கத்
துல்லியமாய் மத்தளங்கள் தாமொலிக்க  எல்லாரும்
ஆசான் சயேந்திரனெம் ஐயன் அடிபோற்றி                                              70

தேசுடைப் பெம்மான் திருத்தாள் நிழல்போற்றி
ஈசன் மறுவுருவாம் எங்கள் குருபோற்றி
நேசம் பயின்றெம்மை நாடிவந்தோன் தாள்போற்றி                              
பாசம் அகற்றவந்த பாலன் பதம்போற்றி
மாசில்லா மாமணியாய் மண்ணிலுதித் தோன்போற்றி
தூசகற்றி எம்மையெலாந் துலக்கவந் தோன்போற்றி
வீசுமிளங் காற்றாயெம் வெவ்வினைதீர்ப் போன்போற்றி
வாசமிகு பூவாய் மனங்கமழ்நல் லோன்போற்றி
பேசும் மொழிவழியெம் புன்மைகளை வோன்போற்றி
ஓசையிலா மௌன உரைபுகல்வோன் பேர்போற்றி                           80

தேசம் தழைக்கவந்த செம்மலிவன் சீர்போற்றி
போற்றிஎனப் பூச்சொரிந்து நெஞ்சம் புளகிப்பக்
வாஞ்சைமீ தூர வரவேற்கப்  பூஞ்சரணம்                                       
தில்லைப் பதியின் திருவீதி யில்பதித்து
மெல்ல நடந்துவர வீதியெலாம்  மெல்லியற்
பேதை முதலாகப் பேரிளம் பெண்ணீறாய்ப்
பேதமிலாப் பேராளன் பார்வையிலே  ஓதத்தில்
உப்பழிந்த வாறுதம் உண்ணெகிழ்ந்தார்  வேதம்புகல்
மெய்ஞ்ஞான மிங்கே மிருதுநடை தான்பயின்று
அஞ்ஞானந் தீர்க்க அணுகியதோ  எஞ்ஞான்றும்                                   90

முன்செய் வினைக்கடலில் மூழ்கித் தவித்துநிற்கும்
மன்னுயிர்கட் கோர்புணையாய் மாதேவன்  முன்னுதல்போல்
தன்னெஞ்சை ஈர்க்கும் தயைவிழியில் பேதைமகள்
முன்னம் அறியா மகிழ்வினை  மன்னிநிற்கத்
துள்ளும் பருவத்துள் தோய்பெதும்பை அக்கணத்தில்                            
உள்ளத் துவகைப்பே ரூற்றுணரக் -  கள்ளமிலா
மங்கை மனம்விரவி மாமுனியின் சீர்நிலைக்கப்
பங்கே ருகமாம் மடந்தையர்கண்  பொங்கிவரும்
கங்கையெனக் கட்டின்றி நீர்பொழியக் கண்டுதம்
அங்கங் குழைய அரிவையரும்  தங்களைச்சார்                                  100

சீரோன் அருளில் திளைத்திருக்க நற்றெரிவை
யார்மனத்தே தெய்விக ஆனந்தம்  மேவிநிற்கச்
சூரியன் ஒளிகண்ட வாரிசமாய் ஆங்கிருந்த
பேரிளம் பெண்டிருளப் பூமலரப்  பேரருளை
வாரி வழங்கிவந்த வள்ளல்செய்  காரியத்தைக்                                 
கூறுந் தரமோ? குருபரன்  ஊர்வலமாய்ச்
செல்வதைக் காணத் திரண்டுவந்தோர் பெற்றவின்பஞ்
சொல்லுந் திறனிலன்யான் தூயவனும்  எல்லையிலாப்
பேருணர்வாய் ஞானப் பெருவெளியில் கூத்தாடும்
சீரோனைக் காணத் திருவாத  வூரர்முன்னம்                                        110

தாம்புகுந்த கீழை நுழைவாயில் சார்ந்திடலும்
ஓம்நமசி வாயவொலி ஊர்நிரப்ப  மேம்பட்ட
ஒல்லைவந்து மந்திரங்கள் ஓதிநின்று  பல்லாண்டு
கூறியபின் கும்பமுனி ஒத்தமகான் செய்தவத்தில்                               
ஏறனையர் ஆதிலிங்க நாதரொடு  பார்வதியின்
சன்னிதிமுன் கைதொழுது தேவசபை தாண்டியபின்
என்னவனாய் மன்னவனாய் ஏழுலகந் தொழஆடும்
பொன்னம் பலத்தரசன் பொற்பாதம்  முன்னின்று                             120

ஞான நடம்கண்டு நாத்தழுக்க – வானோர்தம்
கோனின் துதிகூறி மேல்நடந்தார் – ஏனையரும்
சங்கரர் பின்தொடர்ந்து தம்முள் மகிழ்ச்சியொடு
இங்ஙன்உலாப் பெற்றி இயம்பினர்காண்:                                        

என்னேயெம் பேறின் றெமதூரில் எம்மாசான்
பொன்னார் அடிவைத்துப் போந்தவுலா  பின்னரித்
தேசமெங்கும் சஞ்சரிக்கத் தேர்ந்தவரின் நெஞ்சுறையும்
நேசம் உரைக்கும் உலா.

குறிப்பு: மகாப்பெரியவாள் அனுமதியுடன் தவத்திரு. ஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் 1970-ஆம் ஆண்டு ஜூன் 4 முதல் ஜூலை 15 வரையான கால அளவில், தமது முதல் விஜய யாத்திரையை மேற்கொண்டார். அச்சமயம் அவர் சிதம்பரத்தில் தமது திருக்காலடி வைத்த நிகழ்ச்சியை ஒட்டி,  இந்தத் திருவுலாச் செய்யுள் அமைக்கப்பட்டது.

.. அனந்த்  30-3-2018
சங்கரர் பின்தொடர்ந்தார் தம்முள் மகிழ்ச்சியொடு
இங்ஙன்உலாப் பெற்றியுரைத் தே.



No comments: