Tuesday, October 17, 2017

மோன ஒளி

<> மோன ஒளி <>

செயலில் ஒளிநற் சிந்தைஒளி
.. செப்பும் மொழியில் திகழும்ஒளி
அயலார் நலத்தை நாடுமுளத்(து)
.. அன்பின் ஒளிநல் அறிவினொளி
மயலும் மருளும் நீங்கியபின்
.. மனத்தில் மலரும் தெய்வஒளி
முயலும் ஞான நெறிமுடிவில்
.. மோன எனுமொளி இவையருள்வாய்!

அனைவருக்கும் இனிய தீபாவளி நன்னாள் வாழ்த்துகள்!
அனந்த் 18-10-2017

Saturday, October 7, 2017

சிலேடை: அரியும் அரனும் அவன்

                                                          திருச்சிற்றம்பலம்


<> அரியும் அரனும் அவன்  <>

அரியான் அவனை அறியான் பவத்தை
அரியான் அரியான் அறியான்அறைவேன்
அரியான் அலன்றன் அடியார்க்(கு) அவரைப்
பிரியான் பெரியான் அவன்.

சிவன்:
எளிதில் எட்டிட இயலாதவன்; அவனை அறியாதவனது  பவம்  (பிறப்பு-இறப்பு) என்னும் நோயை அழிக்கமாட்டான் (அறிந்தோரின் பவத்தை அழிப்பான் என்பது வெளிப்படை..)  திருமாலும் அறியாதவன் (சிவனின் அடியைக் காண இயலாததைச் சுட்டும்.) அவன் தன் அடியவர்களுக்கு அரியவன் ஆகாத எளியன் என்றும், அவர் தமைப் பிரியாது காக்கும் பெரியோன் என்றும் நான் கூறுவேன்.

திருமால்:
அரி என்ற பெயரைத் தாங்கியவன்அவனை அறியாதவனது  பவம்  (பிறப்பு-இறப்பு) என்னும் நோயை அழிக்கமாட்டான் (அறிந்தோரின் பவத்தை அழிப்பான் என்பது வெளிப்படை..)   (நர)சிங்க உருக்கொண்டவன் அல்லது வானோரிடை சிங்கம் போன்றவன்அவனுடைய பெருமையைக் கேட்டு அறிந்த நான், அவன் தன் அடியவர்களுக்கு அரியவன் ஆகாத எளியன் என்றும், அவர் தமைப் பிரியாது காக்கும் பெரியோன் என்றும் கூறுவேன்.


இந்நாள் மகிமை

<> 7-10-2017 <>
ஏழுபத்தி ரண்டா யிரத்துப் பதினேழைச்
சூழும் தனிப்பெருமை சொல்கின்றேன் – ஆழ்ந்தஅவ்
எண்ணை இருபுறமாய் வாசித்த போதிலும்
கண்ணில் தெரிவதொன்றே காண்!

(*இருபுறமாய் – இடமிருந்து வலமாக அல்லது வலமிருந்து இடமாக; . Thanks to Raji Iyer who pointed out the palindrom.)

:-)
அனந்த் 7-10-2017

Tuesday, October 3, 2017

சிலேடை: ரங்கநாதன் தெருவும் ஆதிசேஷனும்

<> ரங்கநாதன் தெரு - ஆதிசேஷன் சிலேடை வெண்பா <>




     நீண்டு கிடக்கும், நிதமும் இலக்குமியைப்
     பூண்டோன்பேர் தாங்கிப் பணம்பெருக்கும் – வேண்டும்
     பொருள்தரும், நீள்பயணம் போவோர் வழியாய்
      இருக்கும்  தெருஅனந்த னே.

(பணம் = காசு; பாம்பின் படம்.)

ரங்கநாதன் தெரு: நீளமானது; திருமாலின் பெயர் கொண்டது; விற்பனையாளர்க்குத் தினமும் பணத்தைக் கூட்டும்; எந்தப் பொருளும் அங்குக் கிட்டும்; புகைவண்டி நிலையத்திற்கான வழியாக அமையும்.


ஆதிசேடன்: நீண்ட வடிவம், எப்போதும் திருமாலின் பெயரைத் தன் ஆயிரம் நாவில் தாங்கிப் படத்தை விரித்து நிற்கும்தன்னைப் பணிவோர்க்கு வேண்டும் பொருள் ஈயும்.  அடியாரின் இறுதிப் பயணத்திற்கு ஆன நல்வழியாய் அமையும்.  

Monday, September 18, 2017

ஸஹஸ்ர சண்டி யக்ஞம்

டொராண்டோவில்மாபெரும் ஸஹஸ்ர சண்டி யக்ஞத்தைச்
சிறப்பாக நடத்தியுள்ள பிரம்மஸ்ரீ யக்ஞரத்னம் அவர்களுக்கு
மக்கள் சார்பில் வாசித்து அளித்த நன்றியுரை

அண்டம் அனைத்தும் படைத்தளித்தும்
.. அழித்தும் மறைத்தும் அருளுபவள்
இண்டைச் சடையோன் அரிஅயனுக்(கு)
.. எல்லாம் மேலாள் எனமறைகள்
விண்டு விரிக்கும் பரம்பொருளாள்
.. விண்ணோர் மண்ணோர் துயரகற்றச்
சண்டி என்னும் பெயர் பூண்டு
.. சகத்தைக் காக்கும் தேவிஅவள்

எங்கோ தொலைவில் வாழுகின்ற
.. எங்கட் கிரங்கி யாமுய்ய
மங்காப் புகழ்சேர் ஸ்ரீவித்யா
.. மார்க்கம் தன்னில் மலைவிளக்காய்
மங்கா தொளிரும் யக்ஞரத்ன
.. மணியை எங்கட்(கு) அனுப்பியின்று
இங்கே ஸஹஸ்ர சண்டியக்ஞம்
.. இயற்ற வைத்தாள், கோடிநன்றி!
     
                 ...அனந்த் (அனந்தநாராயணன்) 26-7-2015


அதிருத்ர மஹாயாகம்

                                      
                   
டொராண்டோ நகரில் 2015-ல் நடந்த  அதிருத்ர மஹாயாக விழாவில் உயர்திரு ஸ்ரீ பாலக்ருஷ்ண சாஸ்த்ரிகளுக்கு அளித்த   நன்றியுரை

                        திருச்சிற்றம்பலம்

உலகெலாம் படைத்தளித்து ஊழிதனில் அழித்துயிர்கள்
மலமெலாம் மாயு(ம்)வணம் மறைத்தருளும் சிவபெருமான்
தலமெலாம் எழுந்தருளும் தாயொடுதந் தையுமானோன்
தொலைவெலாம் கடந்திந்த தொராந்தோ நகர்வாழும்

நாமுமவன் மைந்தரென நமக்கருள உளங்கொண்டு
மாமறைகள் ஓதுவதில் மன்னரென ஈங்குள்ள
பாமரரும் போற்றுகின்ற பாலகிருஷ்ண ஸாஸ்த்ரியெனும்
நாமமுடை விற்பனரை நமக்களித்துத் தான்மகிழ்ந்தான்!

ஒருமுறைதன் பேர்மொழிந்தால் உவகையுறும் பெருமானை
அருமறைகள் பலப்பலவாய் அழைத்துள்ள துதிகளுக்குள்
அருத்தங்கள் பலசெறிந்த அஞ்செழுத்தை உள்ளடக்கும்
உருத்திரமும் சமகமுமே உயர்ந்ததென உலகறியும்

அத்தகைய மந்திரத்தை அதிருத்ர ஹோமமெனும்
உத்தமத்தில் உத்தமமாய் உயர்ந்ததொரு வேள்வியினை
எத்தனையோ சன்மத்தில் இயற்றியநம் புண்ணியத்தால்
இத்தலத்தில் நடத்துதற்கு இவர்மனத்துள் சிவன்புகுந்தான்

சென்றபத்துத் தினங்களிங்குத் தேவர்கள் அணிவகுத்தார்!
நன்றுநன்று எனமுனிவர் நம்மிடையே நடமிட்டார்!
குன்றிலுறை குமரனொடு கணபதியும் தோழருடன்
என்றுமிலா வணம்நிகழும் இவ்வேள்வி காணவந்தார்!

இவ்வாறு சிறப்பாக ஏழுமலைப் பெருமாள்முன்
செவ்வனே நிகழ்ந்திட்ட சீரியஇவ் விழாமுடிவில்
ஒவ்வொருவ ரும்உரைப்போம் உளமார்ந்த நன்றியினைப்
பவ்வியமாய்ப் பாலக்ருஷ்ண சாஸ்த்ரியெனும் பெருமகற்கே!

                                    .. வே.ச. அனந்தநாராயணன்
                                    .. ஜூலை 5, 2015

Monday, August 7, 2017

         வைகுண்டக் குடும்பம்
         
                ***************
               
பாற்கடலில் படுத்திருந்த போது-அங்குப்
பருகவொரு சொட்டுங்கிடைக் காது

ஆயர்பாடி வந்துதித்தான்
அள்ளியள்ளிப் பால்குடித்தான்

பார்த்தஅன்னை கையில்அவன் காது!

                ***************

கையினிலே மாடுமேய்க்கும் கம்பு-செய்வான்
காலமெல்லாம் மாதருடன் வம்பு

கல்விகற்கும் காலமெல்லாம்
கண்டபடி போக்கினாலும்

கீதைசொல்ல அவனுக்குண்டு தெம்பு -அது

கடவுளுக்குத் தான்முடியும் நம்பு!

Wednesday, July 19, 2017

நல்லதோர் வழி சொல்வேன்

<> நல்லதோர் வழி சொல்வேன் <>


காலை எழுந்தவுடன் - கணமும்
.. காலந் தவறாமல்
வேலைக்குச் சென்றுவிடு - அங்கேஉன்
.. வீட்டுக் கதைசொதப்பு

கோப்புக்கள் மேசையிலே - மலையாய்க்
.. குவிந்து கிடக்கவிடு
கூப்பிடும் மேலாளாரின் - ஆணையைக்
.. குப்பையில் போட்டுவிடு

வாடிக்கைக் காரரிடம் - வசூலை
.. வாங்கியுன் பையிலிடு
வேடிக்கைக் கேனுமிதை - வெளியில்
.. விட்டு விடாமலிரு

காந்தி படமெதுவும் - கண்ணிலே
.. காணா திருந்துவிடு
சாந்தி பெறுவதற்கு - மேலைச்
.. சரக்கை நாடிவிடு

மூலைக் குடிசையொன்றில் - கிடைத்த
.. மொத்தப் பணத்தினையும்
’ஜாலி மருந்தினுக்கு’ - விலையாய்
.. ஜல்தி கொடுத்துவிடு

பள்ளித் தலத்தினிலே - குழந்தை
.. பாடம் படிப்பதற்கு
அள்ளிப் பணத்தினைநன் - கொடை
.. ஆகக் கொடுத்துவிடு

வியாதி எதுவரினும் - சிகிச்சை
.. வேண்டின் நகரினிலே
கியாதி படைத்த பல- மருத்துவர்
.. கேட்டதை வீசிவிடு

நன்மை அடைவதற்கு - வழியை
.. நான்இங்குக் கூறிவிட்டேன்
உன்னை அதுசுடுமுன் - முந்திநீ
.. உண்மையைச் சுட்டுவிடு!

அனந்த்
12-4-2009 (சந்தவசந்தம் இணையக் குழுவின் கவியரங்கத்தில் இட்டது)

Sunday, July 9, 2017

குரு பூஜை

குரு பௌர்ணமியை அடுத்து வேதவியாஸ பூஜையும் சாதுர்மாஸ்ய விரதமும் கடைப்பிடிக்கப்படும் வேளையை ஒட்டி:

ईश्वरो गुरुरात्मेति मूर्तिभेदविभागिने ।
व्योमवद्व्याप्तदेहाय दक्षिणामूर्तये नमः  (मानसोल्लास -30)
ஈச்வரோ குருராத்மேதி மூர்த்தி பேத விபாகினே
வ்யோமவத் வ்யாப்த தேஹாய ஸ்ரீ தக்ஷிணா மூர்த்தயே 
(- மானஸோல்லாஸம்)

 திருச்சிற்றம்பலம்


இறையும், குருவும், ‘நான்’என்றுள்
.. இயங்கும் ஆன்மா இவைமூன்றும்   
உருவில் வேறாய்த் தோன்றிடினும்
.. உள்ள ஒன்றின் வெளிப்பாடே
தருவின் அடியில் முனிவர்க்(கு)இத்
.. தத்து வத்தைப் போதிக்கும்
குருவே எங்கும் பரந்துநிற்கும்
.. கோவே! உனக்கு நமஸ்காரம்.

..அனந்த் 9-7-2017


Friday, June 30, 2017

கானடா-150

இன்று (1-7-2017) கனடா நாடு தனது நூற்றைம்பதாம் ஆண்டு பிறந்த நாளைக் கொண்டாடுகிறது:
   
<> ஒன்றரை நூற்றாண்டு <>




காற்றும் நிலமும் யாவருக்கும்
.. கடவுள் தந்த உடைமையெனச்
சாற்றி வாழ்ந்த முன்னோரின்*
.. சரிதம் தன்னை இந்நாளும்
போற்றித் தன்னால் இயன்றவரை
.. போக்கில் லாத மாந்தருக்கும்
ஏற்றம் தந்து வாழவைக்கும்**
.. இந்த நாட்டிற் கிணையேது?

உலகில் மக்கள் துயருறுங்கால்
.. உடனே உதவித் தொகையனுப்பிக்
கலகம் விளையும் இடங்களிலே
.. கடிதே உதவிப் படையனுப்பிப்
பலவாய் மனித நேயத்தின்
.. பாங்கைச் செயலில் காட்டுவதில்
தலைமை தாங்கும் இந்நாட்டின்
.. தகைமை மாணப் பெரிதாமே.

சனநா யகத்தின் நோக்கினின்று
.. சற்றும் பிறழாக் கனடாவில்
மனம்போல் மக்கள் யாவருமே
.. வாழும் அழகே அழகாமே
இனவேற் றுமைக்கிங்(கு) எள்ளளவும்
.. இடமே இல்லை, தலைசாய்த்(து)இத்
தினத்தில் இந்தத் திருநாட்டை
.. தெய்வம் காக்க வேண்டுவமே.

*முன்னோர் – கானடா நாட்டின் பூர்விகக் குடியினாகிய (சிவப்புஇந்தியர்கள்இங்கு அவர்களை Indians என்று குறிப்பார்கள்
.** 2016-ல் மட்டும் கனடா 46,700 வெளிநாட்டு அகதிகளுக்கு இடங்கொடுத்து அவர்கள் நன்கு வாழ வழி வகுத்துள்ளது.

அனந்த்
1-7-2017