Thursday, March 2, 2000

தண்ணீரின் கண்ணீர்




<> தண்ணீரின் கண்ணீர் <>

நீரே!
காற்றதன் மூலக் கூறுகள் இரண்டு
வேற்றறக் கலந்து விளைந்ததோர் விந்தையே!
மாபெரும் கடலில் மண்டிக் கிடந்த
சோகம் அகலச் சூட்டின் துணையொடு
வானம் தன்னில் வெண்ணிற முகிலாய்க்
கானம் பாடிக் களித்துன் காதலன்
மதியினைத் தழுவி மறைவில் மகிழ்ந்தாய்
குதிநடை போட்டுக் குவலய முழுதும்
உலவித் திரிந்துளம் உவகைப் பேழையாய்
பலப்பல நாட்களாய்ப் பறந்தபின் ஒருநாள்

சூல்தரித் தந்தச் சுமையின் சுகத்தொடு
மேலிருந் துலகை மின்னல் ஒளியில்
பார்த்துப் பரவசப் பட்டஅவ் வேளை
யார்கண் திருட்டியோ யமனென முழங்கும்
இடியொலி கேட்டு இடிந்த வயிறுடன்
வீழ்ந்தனை தரையில், விம்மலும் அழுகையும்
சூழ்ந்ததுன் வாழ்வை; சூறா வளியுடன்
சேர்ந்துல கோரைச் சீறினாய் சினத்தில்;
மலையெனும் மாதுன் மனத்தின் அவல
நிலைதனை உணர்ந்து நெடியதன் மடியில்
கிடத்தியுன் உடலின் கொடும்வலி போக்கினள்;

நடந்ததை எல்லாம் நாள்பட மறந்து
ஊற்றாய்ச் சுனையாய் உறுமிடும் அருவியாய்த்
தோற்றம் காட்டிச் சுதந்திர வாழ்வைச்
சுவைத்தநீ உன்னைச் சூழ்ந்திடும் பொருள்கள்
எவற்றையும் தொடுவதில் இன்பம் கண்டாய்;
ஒருநாள் ஏதோ உந்துதல் பேரில்
அருவியின் வேகம் அதிகப் படுத்திக்
கீழே கீழே இன்னும் கீழே
தாழ்ந்தும் பாய்ந்தும் தடதட வென்று
மாந்தர் வாழும் மண்தரை இதனைச்
சேர்ந்ததில் ஆறாய்ச் சென்று தவழ்ந்தாய்;

வாடிய பயிர்களும் வனமரம் விலங்கும்
நாடின உன்றன் நன்னீர் பருக,
உன்னால் பிறர்க்கோர் உதவியைச் செய்யப்
பொன்னாய்க் கிட்டிய புதியதோர் வாய்ப்பெனக்
களிப்புடன் நீயும் கலகலத் தோடி
அளித்தனை உன்னை அனைத்துயிர் தமக்கும்;
கடலாய் உப்புக் கரித்திட வாழ்ந்த
படலம்உன் நினைவுப் பாதைவிட் டகன்றது

உயிர்களைப் படைத்த ஒருவன் மனிதப்
பெயரரைப் படைத்ததில் பெரும்பிழை செய்தான்
என்னுமோர் உண்மையை இடித்துனக் குரைக்கும்
அன்னாள் வந்தது, ஐயகோ! உன்றன்
அழகுதவழ் மேனியை அவனிவாழ் மாந்தர்
அழுகிய தங்கள் அறிவின் சிறுமையால்
கவலை சிறிதும் கருத்தினில் கொள்ளா(து)
அவலப் படுத்தினர் ஆயிரம் வகையில்:
உடலின் உடையின் அழுக்கெலாம் உன்மேல்
படவைத் ததைநீ பாரா தவரைத்
தூய்மைப் படுத்தினாய் தூற்றும் மகவையும்
தாய்தன் அன்பில் தோய்த்திடும் பாங்கில்;

சீறா தணைக்குமுன் சீர்மைதம் மனத்தில்
ஏறா மாந்தர் இன்னும் உன்றனுக்(கு)
இழைக்க லாயினர் இன்னல் பலப்பல:
பிழைக்கும் வழிகளைப் பெருக்கிப் பெருக்கிக்
காட்டை மேட்டைக் கழனியைத் தகர்த்தவர்
நாட்டிய ஆலைகள் நச்சுப் பொருட்களை
உமிழ்ந்தன உன்னுள் உலகைக் காக்கும்
அமிழ்தம் நீயென அறியா துன்மேல்

எறிந்தஅப் பற்பல இரசா யனங்கள்
குறியது தப்பிய கூர்வேல் போலத்
தம்மையே அழிக்கும் தன்மைய தென்ற
உண்மை அறியா உலகோர் மேலும்
மண்ணில் மக்கி மறுபடி உரமாய்ப்
பண்ண இயலாப் பண்டம் பலவும்
உன்மேல் எறிந்துன் உடலை வருத்த,
உன்னுள் வதியும் உயிர்களும் மாய
ஏதோர் பாவமும் இழையா உனக்குத்
தீதே மாந்தர் செய்வதை இன்றுநீ
எண்ணியுன் இதயம் வெடித்திடக் கொட்டும்
கண்ணீர் துடைக்கக் கரமெதும் உளதோ?

No comments: