பயணம்
.. அனந்த்
~~~0~~~
வகையாய்க் குழலூதி வாய்நிறையப் புகைவிட்டு
மிகையாய் மானிடரை மேல்சுமந்து 'மாத'த்தில்
பிரசவத்து மங்கைபடும் பெரும்வலிபோல் பேருடம்பு
குலுங்கச் சிரமப்பட்டுக் குப்குப்பென மூச்சுவிட்டு
எலும்பெல்லாம் ஒடியஉந்தி இரயில்வண்டி கிளம்புகையில்..
மூச்சிறைக்க வேர்வை முதுகெல்லாம் வழிந்தோட
ஆச்சுப்போச் சென்றோடி அவசரமாய் ஒருகாலை
எப்படியோ படியொன்றில் ஏற்றிமறு காலைநான்
உட்புறமாய் ஒருபெரிய 'தம்'பிடித்து நுழைத்துவிட்டேன்.
அப்படியும் இப்படியு மாயந்தப் பெட்டியிலே
செப்படிவித் தைசெய்து புகுந்தபின் (என்அதிர்ஷ்டம்!)
அங்கே அமர்ந்திருந்த பெரியவர் துளிநகர்ந்து,
'இங்கே அமர இடமுளது' என்றுசொன்னார்;
உள்ளே அமர்ந்தென்றன் உடுப்பைச் சரிசெய்து
மெள்ளநான் மேல்சுழன்ற மின்விசிறி தரும்காற்றின்
ஒருபகுதி ஆயினும் உடல்படச் செய்துகொண்டு
அருகில், எதிரில், அடைபட்ட பயணிகளை
நோட்டம் விடலானேன் நொடிப்பொழுதில் இரயிலும்தன்
ஓட்டத்தைச் சீராக்கி ஒருகதியில் செல்லுகையில்
எனக்கென்று இரங்கி இடம்கொடுத்த பெரியவர்பால்
மனம்செல்ல லாயிற்று வழியிலே நான்படிக்கக்
கொண்டுவந்த புத்தகத்தில் குறுக்கும் நெடுக்குமாய்க்
கண்ணோட்டும் சாக்கில் கணித்தேன் அவர்நிலையை:
படங்களில் நாம்பார்க்கும் பண்டைய முனிவரைப்போல்
அடக்கியும் அடங்காத அலைபோல வெண்தாடி;
வெள்ளிச் சுருள்களாய் மேனியெல்லாம் நரைத்தமயிர்;
அள்ளித் தெளித்தவையாய்ச் சுருக்கங்கள் ஆனாலும்
கள்ளங் கபடறியாக் குழந்தைமுகம்; கண்களிலே
தள்ளிப் போனதொன்றைத் தேடுகின்ற தாபஒளி
(என்மனம் கற்பித்த எண்ணமாய் இருக்கலாம்);
மெல்லிய துண்டொன்றை மேலணிந்தும் மார்பையது
துல்லியமாய் மூடாது தெளிவாக வெண்மயிரைக்
கணிசமாய்க் காட்டியது கட்டின வேட்டிவெள்ளைத்
துணியே எனினும்அதில் துளிக்கூட அழுக்கில்லை.
அடுத்தபடி என்மனது அவருடன்பே சென்(று)ஆணை
விடுத்தவண்ணம் இருந்ததால் வேறுவழியின்றி
'உக்கும்' எனஒலியோ(டு)
ஒருதரம் கனைக்க,மறு
பக்கத்தில் இருந்தவர் பட்சமொடு தன்னிடம்தான்
உரையாடப் போவதாய் உணர்ந்தென்னைப் பார்க்கையில்நான்
அவருணர்வை (பாவம்!) அலட்சியம் செய்தபடி,
'ஐயா!' எனவிளித்தேன் அடுத்திருந்த பெரியவரை;
மெய்யாய் அதுவேளை மென்துயிலில் விழவிருந்த
பெரியவர் சற்றே திடுக்கிட்டுப் பின்எனக்குப்
பரிவான பார்வையொன்றைப் பதிலாகத் தானளித்தார்.
என்வகையில் நானும் எனக்குத் தெரிந்தவகைப்
புன்னகை ஒன்றை வீசிவிட்டு 'இங்கெனக்கு
இடம்கொடுத்தீர் இலையென்றால் என்பாடு பெருங்கவலைக்
கிடமாகப் போயிருக்கும்' எனஎன்றன் சொல்திறனைக்
காட்டின வுடன்கேட்டார்: 'கதைஎழுதும் பழக்கமுண்டோ?'
கேட்டவுடன் உடல்சிலிர்த்தேன், கெட்டிக் காரரிவர்!
'ஆம், ஐயா! எப்படிநீர் அதிவிரைவில் கண்டுகொண்டீர்?
நாம்முன்னம் பார்த்தபடி ஞாபகமே இல்லை'என்றேன்
'ஏதோ என்மனத்தில் எழுந்ததைநான் கேட்டுவிட்டேன்,
ஈதோ இங்குள்ள ஈசனன்றோ பேசுகின்றான்'
என்றுதம் மார்பைஅவர் இடக்கையால் சுட்டியதும்
ஒன்றெனக்குத் தோன்றியது 'உலகில்இவர் வெவ்வேறு
அனுபவங்கள் பலபெற்று அவற்றின் விளைவாக
மனிதர்களின் தன்மைகளை மதிப்பிடத் தெரிந்தவர்தாம்'
இப்படித் தொடங்கிஎங்கள் இடைநடந்த உரைநடுவில்
எப்படியோ தம்வாழ்வின் எந்தவொரு செய்தியையும்
தாராம லேஅந்தத் தாடியார் இருந்துவிட்டார்.
வாராத விஷயத்தை வரவழைக்கக் கற்றிருந்தும்
பெரியவர் முன்னமதைப் பெரிதாகக் காட்டமனம்
ஒப்பாமல் நானும் என்கண்ணைப் புத்தககத்தில்
ஒப்புக்கு அவசரமாய் ஓட்டி இருக்கையிலே:
'எங்கே பயணச்சீட்(டு),
எடுங்கள்!' எனவினவி
எங்களது பெட்டிக்கு எழுந்தருளிக் காட்சிதந்தார்
தன்கடமை தவறாத சீட்டுப்பரி சோதகர்;என்
அருகே அவர்வருமுன் எனைக்கவர்ந்த பெரியவர்ஓர்
பெருமூச்சு விடும்ஒலியைப் பிழையின்றிக் கவனித்தேன்.
என்பயணச் சீட்டோடு இன்னும்சிலர் சீட்டும்
மின்னல் வேகத்தில் பார்த்து முடித்தபின்னர்
தம்முகத்தை எங்கோ தாம்திருப்பிப் பார்த்திருந்த
வெண்தாடிப் பெரியவரின் தோளில்தன் விரல்நுனியில்
வைத்திருந்த பென்சிலினால் வேண்டுமென்றே சீண்டுதல்போல்
நைச்சியமாய்த் தட்டஅவர் நிமிர்கையிலே சோதகர்தன்
முகத்திலொரு மாற்றமின்றி முதியவரைப் பார்த்துவிட்டு
மிகையாக வோஇல்லை மெய்யாகவோ குரலில்
மரியாதை தோன்ற'ஐயா! மன்னியுங்கள், உம்சீட்டைச்
சரிபார்த்துத் தருகின்றேன் தாரும்'எனக் கேட்டவுடன்
பெரியவரின் முகத்திலொரு ஈயாடக் காணவில்லை;
தெரிந்துவிட்ட தெல்லோர்க்கும் சீட்டில்லாக் 'கேஸ்'என்று.
பரபரப்பை அவர்உடம்பில் பார்த்தவண்ணம் நான் இருக்கக்
கரகரத்த குரலோடு கைகூப்பித் 'தம்பீ!நான்
பரதேசி, எதுவுமிலாப் பண்டாரம் என்மேலே
இரங்கியொரு உதவியென எண்ணிஇந்த ஒருதடவை
உன்கடமை நடுவந்த உடைசலெனக் கருதாமல்
என்மடமை பொறுத்திடுவாய்' எனக்கல்லும் கரைவதுபோல்
அந்தவய தானவர்தாம் அரற்றினதைக் கேட்டபின்னும்
எந்தவகை உணர்ச்சியையும் எள்ளளவும் தன்முகத்தில்
காட்டாமல் 'பெரியவரே! கடமைபற்றி என்னிடம்நா
நீட்டாதீர்! என்வாழ்வில் நேர்மைபிற ழாதிருக்க
அடிநாள் முதற்கொண்டே அறிந்தவன்நான் அதன்விளைவாய்
அடிகளும்நான் பெற்றதுண்டு, அதுவெல்லாம் கிடக்கட்டும்.
இதுவரை சீட்டின்றி இருந்ததே பெருங்குற்றம்
அதைப்பெரிதாய் ஆக்காமல் சொல்கின்றேன் உம்பேரில்
பகையேதும் எனக்கில்லை, பேசாமல் அடுத்துவரும்
புகைவண்டி நிலையத்தில் இறங்கிமேல் போவதற்கு
எப்படியோ எவர்தயவை யாசித்தோ வழிபண்ணும்!'
என்றுசொல்லி நகர்ந்துவிட்ட இரக்கமிலா மாபாவி
சென்றபின்பு நான்சற்றுச் சீர்குலைந்து போனவனாய்,
முதியவர் முகம்நோக்கி முடிந்தமட்டும் என்அன்பு
பொதிந்திட்ட குரலோடு 'போகட்டும், பெரியவரே!
கடமை கடமையென்று காந்திபோல் பேசுமந்த
மடையன் கிடக்கின்றான், மனவிரக்கம் இல்லாமல்
நடுவழியில் உமைஇறக்கி நாதியற்றுப் போகவைத்த
கொடுமைபற்றி மனக்கவலை கொள்ளாதீர்! நீர்இறங்கும்
அடுத்துவரும் ஊரில்தான் அலுவல்நான் புரிகின்றேன்;
தடுக்காமல் நான்வாங்கித் தரும்சீட்டைப் பெற்(று)உங்கள்
பாக்கிப் பயணத்தை மேற்கொள்ளும்' என்றுசொன்னேன்.
நோக்கினார் அவரென்னை நோட்டம் விடுவதுபோல்:
'யார்க்கென்ன விதித்துளதோ அவர்அதனை அனுபவித்தல்
ஆண்டவனின் கட்டளையே! யாரையும்நான் குறைசொல்லேன்.
நீண்டநாள் தெரிந்தவர்போல் நீர்என்மேல் அன்புவைத்துக்
கூறுகின்றீர் இதுவும்அவன் கூத்து'என்று சொன்னஅவர்
வேறெதுவும் பேச விரும்பா தவர்போல
இருந்துவிட்டார். இதற்குள்ளே இரவுவரும் அறிகுறியாய்த்
தெருவிளக்கின் வெளிச்சம் தூரத்தே தெரிந்தது.என்னோ(டு)
இருந்தவர்கள் எல்லோரும் இதுவரை நடந்தவற்றைப்
பொருட்படுத் தாதவர்போல் பொய்வேஷம் போட்டுத்தம்
படுக்கைகளை ஆங்காங்கு பரத்துவதில் முனைந்துவிட்டார்.
அடுத்துஓர் அரைமணியும் ஆனபின்னர் ரயில்வண்டி
விடுத்ததுதன் வேதனையை வெளிப்படுத்த 'விசில்'ஒன்றை.
அதைத்தொடர்ந்து சிலநிமிடம் ஆனபின்பு தன்வேகம்
சிதைத்(து)அடுத்த ஊர்வந்து சேர்ந்த(து)அந்தப் புகைஊர்தி.
என்பெட்டி கீழ்இறக்கி எடுத்துமுன் நான்நடக்கப்
பின்தொடர்ந்தார் பெரியவர்தம் பழையதுணி மூட்டையுடன்.
முண்டி யடித்துப் பலமனிதர் மேல்மோதி
வண்டி தனைவிட்டு வந்திறங்கி நின்றவுடன்
கூலியாள் பலப்பலரின் கூச்சலெல்லாம் ஓய்ந்தபின்பு
காலியாய் இருந்தநாற் காலியொன்றில் உட்கார்ந்தோம்.
பெரியவ ரிடம்அவர்தாம் போகுமிடம் சொன்னால்நான்
வரிசையில் நின்றுஅவர்க்கு வாங்குவேன் சீட்டென்றேன்.
இதுவரை ஒருவார்த்தை இயம்பாமல் உடன்வந்த
முதியவர் என்முகத்தை முதன்முறையாய்ப் பார்ப்பதுபோல்
கூர்ந்து கவனித்துக் கூறவந்த செய்திக்(கு)ஆள்
தேர்ந்தெடுக்கும் பாவனையைத் தெரிவித்தார் தம்முகத்தில்.
கதையெழுதிப் பழகியநான் காத்திருந்த பழமரத்தின்
விதையொன்று விழவிருக்கும் வேளையிது எனஅறிந்தேன்.
மெல்லத்தம் தொண்டையைச் செருமியதைப் பார்க்கையிலே
சொல்லவரும் செய்திஒரு சுமைஇறக்கும் வகைஎன்று
என்மூளை அறிவிக்க, நான்அவரை எதிர்நோக்கி
என்னையவர் நம்புவதில் ஏதுமில்லை தவறென்று
கண்வழியே காட்டியதைக் கண்டவர்போல் பெரியவரும்
'ஐயா! உம்மைநான் அறிந்ததெல்லாம் வண்டியிலே
மெய்யாக ஆறேழு மணிநேர மேஎனினும்
உண்மை நண்பரிடை உண்டாகும் உணர்வைஉங்கள்
கண்களைநான் பார்க்கையிலே என்னுள்ளே காண்பதனால்,
இதுநாள் வரையிலும்நான் என்னிடமே ஒளித்துவைத்து
முதுமைநிலை வந்தபின்பும் மூடி மறைத்திருக்கும்
உண்மையொன்றை உங்களிடம் உரைப்பதென்ற முடிவுக்கு
அண்மையில்அவ் வண்டியிலே அடைந்தஎன் அனுபவம்தான்
முற்றிலும் காரணமாய் முடிந்ததுஎன் கதைகேட்கச்
சற்றே தயைசெய்து செவிசாய்த்தல் சாத்தியமா?'
என்றவர் கேட்டவிதம் என்னைமிக உருக்கியது.
'நன்றாக இருக்கிறது, நானென்ன அன்னியனா?
ஒன்றாக நாம்எல்லாம் உலகத்தில் பயணித்து
வருவதைநாம் நினைத்தாலே வாராதோ நட்பு?'என்று
ஒருவித மாகஎன் உபநிடத ஞானத்தை
நான்எடுத்துச் சொன்னவிதம் நன்றாக அமைந்ததனால்
'ஏன்மனிதர் எல்லோரும் இப்படியே கருதாமல்
தமக்குள்ளே சச்சரவைத் தாம்வளர்ப்பார்?' எனக்கேட்டு
அமுக்கிவைத்த தம்சுமையை அவிழ்த்துவிடத் தொடங்கிஅவர்:
'இருபத்தைந் தாண்டுகள் இன்றோடு கழித்துவிட்டேன்,
ஒருமுறை யேனும்என் ஊர்சென்று மனைவி மகன்
இருவரையும் பாராமல் இருந்துவிட்டேன் காரணம்என்
கருத்தினில் வித்திட்ட கற்பனை அச்சம்தான்;
ஒன்றன்பின் ஒன்றாக நான்செய்த வேலைகளை,
என்பேரில் குற்றமொன்றும் இல்லாத போதிலும்,நான்
இழந்துஇழந்(து) எய்திய இன்னலென்னைத் தரித்திரனாய்
உழலவைத்த வேளையிலும் உண்மையைநான் கடைப்பிடித்து
வந்ததை நான்வளர்த்த மகனுமென்றன் மனைவியன்றி
எந்தவொரு சீவனுமே இவ்வுலகில் அறியவில்லை.
என்மனத்தில் என்குடும்ப வேதனைக்கு என்திறமை
இன்மையே காரணம்என்(று) எழுந்தவொரு எண்ணத்தின்
தாக்கத்தைத் தாங்காமல் துடித்தநான் இல்வாழ்வைத்
தூக்கி எறிந்துவிட்டுத் தொலைதூரம் சென்றலைந்தேன்.'
'பூரணமாய்த் துறவறமும் பூண்பதற்கு மனமின்றி
ஊரூராய்ச் சென்றபடி ஓட்டுகிறேன் என்வாழ்வை.
கணவனாய்த் தகப்பனாய்க் காப்பதென்றன் கடமையென்ற
உணர்வுக்கு ஓர்கணமும் ஒதுக்காமல் ஓடிவந்த
மடமைசொல்லி என்தலையில் 'மடேர்'என்(று) அறைவதற்குக்
கடவுளே வந்ததுபோல் கண்டேன் அவ்வண்டியிலே
பயணத்துச் சீட்டுப் பரிசோ தனையிலென்
கயமையைக் கடிந்துரைத்த கண்ணியனின் சீருடையில்
'காந்தியப்பன்' பேர்கண்டேன், கடமைதவ றாதஅவன்
ஏந்திநான் என்கையில் ஏழாண்டு வரைவளர்த்த
என்மகன்' எனக்கூறி என்முன்னே அழுதவரின்
கண்ணீரில் கண்டேன்ஓர் புதுவாழ்வின் தொடக்கத்தை.
<>0<>0<>0<>0<>0<>0<>0<>0<>0<>0<>0<>0<>0<>0<>0<>
31-08-2003