Monday, March 11, 2019

நான்

சந்தவசந்தம் இணையத் தமிழ்க் குழுவில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் கவியரங்கத்தில் நான் நேற்று (10-3-2019) இட்ட கவிதையை இங்குத் தரலாமெனத் தோன்றியது:

இறைவணக்கம்:
மலையான் பெண்ணொடு மாண்புடன் காணண்ணா
மலையா னின்பதம் மன்னிடும் மானிடன்
மலையான் துன்புகண் டாதலின் யானச்செம்
மலையான் என்னிறை என்றிவண் போற்றுமே. 

அரங்கக் கவிதை:  “நான்”

உண்ணும் போதுமு றங்கிடும் போதுமிவ்
… வுலகில் வாழ்ந்திடும் மாந்தர்தம் நெஞ்சுளே
கண்ணி மைத்திடும் காலமும் தப்பிடா
… எண்ணம் ’நான்உளேன்’ என்னுமோர் ஓட்டமே;
உண்ணின் றோங்கிடும் அவ்வுணர்(வு) யாதென
.. உன்னிப் பார்ப்பவர் ஓர்சில ரேஇந்த
மண்ணில் அவ்விதம் ஆய்வினைச் செய்பவர்
.. தம்மைத் தாமே அறிந்திட லாகுமே. (1)

தன்னைத் தானறி யாமலிப் பாரினில்
.. அன்னி யப்பொருள் பற்றிய றிந்திட
முன்னி நிற்பதே மானிடர் வாழு(ம்)நாள்
.. முற்றும் மேற்கொளும் வேலையாய்க் காண்கிறோம்
பொன்னைக் கையிலே வைத்தவா றேஅதைப்
.. புறத்தே தேடலுக் கொப்புமிச் செய்கையே;
முன்னர் மாமறை ’தத்வம சி’யெனச்
.. சொன்ன வாக்கிய நோக்கமீ தல்லவோ? (2)     

தினமும் யாவரும் துய்த்திடும் ஓர்சுகம்
.. மனமும் தேகமும் மாய்ந்தவோர் *தூக்கமே;
இனம்கா ணாதநல் லின்பம் அளிக்குமஃ(து)
.. அனைத்துச் சீவருக் கும்பொது வானதே
கனவைத் தாண்டிய அந்நிலை* தன்னிலும்
... அனைத்துப் பேருளும் நீங்கா உணர்வு”நான்”
எனநாம் ஓர்வதால் அல்லவோ தூக்கம்விட்(டு)
.. எழுந்த பின்னர்”நான்” தூங்கினேன் என்பது? (3)    
(*ஆழ்நிலை உறக்கம் (deep sleep; non-REM sleep); சுழுத்தி நிலை, வடமொழியில் ஸுஷுப்தி அவஸ்தை)

எண்ணம் யாவு(ம்) அடங்கிய பின்னரும்
.. என்றும் நம்முள் இயங்கு(ம்) உணர்வதன்
வண்ணம் யாதென ஆய்ந்தமுன் னோரதே
..வேராம் பின்னெழும் எண்ணக் குவியலுக்(கு)
என்னக் கண்(டு)அஃ(து) அகந்தை யெனநம்முள்
.. என்றும் நின்று பிறரினும் வேறுநாம்
என்னும் ஓருணர் வூட்டும்’நான்’ ஆகஉள்
…மன்னும் என்னுமோர் உண்மையைச் சாற்றினர். (4)  

அகந்தை நீங்கிடின் காணும் பிரபஞ்சம்
.. அனைத்தி லும்தன்னைக் கண்டு பிரமத்தின்
மகத்து வம்அறி ஞானம் மலர்ந்திடும்
.. மண்ணும் விண்ணுமங்(கு) அன்பால் பிணைந்திடும்
அகத்தில் அந்நிலை உற்றவர் சூழலில்
.. அனைத்து மக்களும் எய்துவர் மேனிலை;
சகத்தில் அந்தமெய்ஞ் ஞான மடைவதே
.. சனித்த தன்பய னாய்க்கொளல் வேண்டுமே. (5)

அனந்த் 
பின் குறிப்பு: ஸ்ரீ ரமணமஹர்ஷியின் ’நான் யார்’ என்னும் கேள்வியையும் அதற்கான விடையைப் பெறும் வழியான ஆத்ம விசாரத்தையும்  என் பாடலில்  ஓரளவு சுட்ட முயன்றுள்ளேன். மேலதிகமான விளக்கம் கீழே:
நான் என்னும் உணர்வையொட்டி எழும் அகந்தையை (தன்னைப் பிறரினின்றும் தனிப்படுத்தல்) அழிக்க வேண்டும் என்பது பலரும் அறிந்த ஒன்றே. அதை எவ்வாறு நடைமுறையில் சாதிப்பது என்பதை ரமணர்  தம் வாழ்முறையாலும் வாய்மொழியாலும் தெளிவாக்கினார். அதன் அடிப்படை இதுவே: மனமும் உடலும் இயங்காத ஆழ்நிலை உறக்கத்தில் இருக்கும் அமைதியான நிலை, உறக்கத்தினின்று எழுந்த உடன், பின்வரும் எண்ணங்களுக்கு எல்லாம் வேராக அமையும் ‘நான்’ என்னும் எண்ணத்தால் கலக்கமுறுகிறது. எனவே, தியானம் போன்ற உள்நோக்கு முயற்சிகளில் ஈடுபடுகையில், நம் எண்ணங்களில் கவனம் செலுத்தாமல் அவை எங்கிருந்து எழுகின்றன என்பதைக் கண்டுபிடிப்பதிலேயே இருப்பின், அம்முயற்சி நான் என்னும் முதல் எண்ணத்தின் இருப்பிடத்தில் (இதய ஸ்தானம்) நம்மைக் கொண்டு சேர்க்கும். அந்நிலையில் நாம் தொடர்ந்து இருப்போமாயின், ‘நான்’ மறைந்து பிரமம் என்னும் பேருணர்வில் ஆழ்ந்து மெய்ஞ்ஞானம் எய்துவோம். இவ்வழியை இன, மத வேறுபாடின்றி அனைவரும் நடைமுறையில் பயின்று பயன்படக் கூடும். 
மேற்கூறிய கருத்தை என் பாடலில் ஓரளவே கொணர இயன்றது.       

Monday, January 28, 2019

படம் - (கதைக் கவிதை)

 படம் - (கதைக் கவிதை)


.. அனந்த்


1896-ஆம் ஆண்டில் ஒரு இத்தாலியப் பத்திரிகை நடத்திய போட்டியில், பேர்பெற்ற எழுத்தாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு 500 லீராக்கள் பரிசுபெற்ற கதையொன்றை ((Lock and Key Library- Classical Mystery and Detective Stories, Edited by Julian Hawthorne, Year 1909, New York). நான் படிக்க நேர்ந்தது.  உடனே அதைக் கவிதை வடிவில் மொழிபெயர்க்க முயன்றேன். அக்கவிதையைக் கீழே காணலாம். இது 2004-ல் ‘மரத்தடி’ இணையக்குழுவின் இரண்டாம் ஆண்டு நிறைவின் போது வெளியானது. 

[இலக்கணக் குறிப்பு: இந்தக் கவிதை 'குறள் வெண்செந்துறைஎன்னும் மரபுப்பாடல் வகையைச் சேர்ந்தது. இதுஇரண்டு-இரண்டு அடிகளுக்கிடையே எதுகையும்முதல் சீரிலும் மூன்றாம் சீரிலும் மோனையும் (பெரும்பாலும்) வருமாறு அமைக்கப்படும். தளையைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. என் கவிதையில் மூன்று அசைகள் உள்ள சீர்கள் மிகுந்து இருப்பதால்அது ஏந்திசை (சற்றுத் தூக்கலான ஓசை) கொண்டு ஒலிக்கும்.] 

                                 

தொலைவில் இடி,மின்னல் தோன்றிடினும் தான்பெரிதாய்
அலைகள் எழுப்பிமிக ஆர்ப்பரிக்கா(து) அமைதியுடன்
அப்போதைக்(கு) இருந்த ஆழ்கடலின் பின்னணியில்,
கப்பல்போல் நீண்ட கலமொன்றின் மேல்தளத்தில்
கைகள்மேல் கன்னத்தைக் கவித்துக் கவலையினால்
நைந்தருகே அமர்ந்திருந்த நடராசன் முகத்தைத்தன்
மையார்ந்த கண்கள் காதலால் மினுமினுக்கத்
தையலாள் மேனகை தான்நோக்கி, 'என்பேரில்
நீவைத்த அன்பு நிஜம்தானா?' எனக்கேட்டாள்.
தீமிதித் தாற்போலத் திகைத்தெழுந்த நடராசன்
'வேண்டுமென்றே என்னைஇந்தக் கேள்வியினால் வெட்டிஉயிர்
நோண்டி எடுத்தென்னை நோகடிக்க வேண்டாம்நீ!'

என்றவுடன் 'ஆமாம்,போ! இந்தவகைப் பேச்செல்லாம்
உன்றன் உடன்பிறப்பாய் ஓடிவரும் உன்துணைக்கு!
உண்மையிலே என்னிடம் காதல் உனக்கிருந்தால்
அண்மையிலே நம்கையில் அகப்பட்ட வாய்ப்பிதனை
நழுவத்தான் விடுவாயோநன்றாக நினைத்துப்பார்:
அழுகையே என்வாழ்வாய் அமைத்துவிட்ட என்விதியால்,
பிணத்திற்கு மாலையிட்ட பெண்கதையாய் என்பெற்றோர்
பணத்திற்கு வேண்டிஎன்னைப் பாய்தேடும் கிழவனுக்குப்
பலிகொடுத்த பின்வாழ்வு பாலைவன மானபின்னே
குலுங்கி அழுதவண்ணம் குற்றுயிராய்ப் போனவளுக்(கு)
ஆண்டவன் கொடுத்த அருட்பிச்சை எனவந்து
மீண்டும்என் வாழ்வில் விளக்கொளியை நீதந்தாய்!

செத்தபின் உயிர்த்தெழும் 'பீனிக்ஸாய்'ச் சிலிர்ப்புடன்உன்
முத்தத்தில் நானெழுந்தேன்மோகத்தின் எல்லையிலே
அர்த்தமொன்றைக் காட்டினாய் அலுத்தஎன் வாழ்வுக்கு;
இத்தனையும் ஆனபின்னே இதயங்கள் கலந்தபின்னே
நன்றாகச் சிந்தித்து நாமெடுத்த முடிவாக
இன்றிந்தக் காரிருளில் இவ்வூரை விட்டோடிச்
சென்றெங்கோ கண்காணாச் சீமையிலே தேவரைப்போல்
இன்பமாய் எந்நாளும் இருப்பதென்று திட்டமிட்டோம்;
இணையத்தில் தன்எழுத்தை இடப்போகும் வேளையிலே
கணினியே உடைந்ததென்ற கதைபோல ஆயிற்றே!
கடைசி நிமிடத்தில் கலக்கமுற்று ஆண்பிள்ளைபோல்
உடையிலே மட்டுமே உருக்கொண்ட கோழையென
முனமேநான் அறியாத முட்டாளாய் ஆனானே!..."

எனமேலும் சொல்வதற்கு இருந்தவளின் வாய்பொத்தித்
தன்பால் இழுத்தவளைத் தன்னுடன் சேர்த்தணைத்தான்
அன்பின் நெகிழ்ச்சியிலே ஆணழகன் நடராசன்.
"என்அன்பின் ஆழத்தை இளக்காரம் செய்யாதே!
இன்றென் மனநிலையை என்னவளே! நீஅறியாய்;
என்னதான் ஆனாலும் இன்னொருவன் மனைவியொடு
சென்றோடிப் போனவனைச் செகத்துள்ளோர் இகழ்ந்திடுவார்
இன்னும் சிலநாள் எனக்காகப் பொறுத்திடுவாய்
உன்றன் மனம்போல ஓடிடுவோம்" எனக்கூற

இடிமின்னல் துணையோடு இறங்கியது பேய்மழையும்;
துடியோடு ஆயிரமாய்த் *துரகக் கூட்டங்கள்
ஒன்றன்மேல் ஒன்(று)உரசி ஓடிச்செல் வதுபோலக்
குன்றனைய பேரலைகள் குதிபோடப் பெருங்கடலும்
தன்வகையில் குறைவின்றித் தானும்அந்தக் கொந்தளிப்பில்
சேர்ந்திடஅவ் விரவும்ஓர் சீரழிந்த சித்திரமாய்ப்
பார்ப்போர் உளத்திலொரு பயப்புயலைத் தூண்டியது.

காதலிமேல் தான்கொண்ட கட்டில்லா அன்பைஅவள்
சோதிக்கும் நினைப்பளித்த சோகத்தில் உளம்காய்ந்து
தன்தொழிலாம் ஓவியத்தில் சாதனைகள் செய்துபிறர்
நன்மதிப்பைப் பெற்றிருந்தும் நாட்டமதில் இல்லாமல்,
அல்லும் பகலுமாய் அன்னஆ காரமின்றிச்
சொல்லொணாச் சோகவெறி துரத்திடநம் நடராசன்,
மேனகையின் கைப்பிடிக்க வேண்டுமென்றால் அவள்கணவன்
போனபின்பே இயலுமென்ற புழுக்கத்தில் வாடிநின்றான்.
(*துரகம்=குதிரை)

ஒருவாரம் சென்றபின்னர் ஒருநாள்தன் படுக்கைவிட்டுக்
கருக்கலிலே எழுந்தஅவன் கையிரண்டும் தானாக
நடுங்குவதும் மேனியெல்லாம் நன்றாக வியர்த்துத்தன்
உடுப்பெல்லாம் நனைந்ததையும் உணர்ந்ததனால் வாய்விட்டு,
'ஐயோ!நான் என்னதொரு அக்கிரமம் செய்துவிட்டேன்!
மையிருள் வேளையிலே மேனகையின் துணைவனைஎன்
கையாலே கொன்றுவிட்டுக் களைப்போடு திரும்பியது
பொய்யான கனவென்று புகலாரோ யாருமிங்கு?
மெய்யாக என்வாழ்வில் மிகச்சிறிய ஜீவனுக்கும்
செய்யேனே நான்கொடுமை! திட்டமிட்டு நேற்றிரவு
அரண்மனைபோல் காட்சிதரும் அவ்வீட்டின் உட்புகுந்து
இரண்டாம் மாடியிலே என்னினிய காதலியின்
கிழக்கணவன் தனைமறந்து கட்டிலிலே கிடக்கையிலே
பழக்கமே இல்லாத பணியைநான் செய்துவிட்டேன்!

சற்றுத் திறந்திருந்த தாழில்லாக் கதவுவழி
உற்றுப் பார்த்தபின்பு ஊணுண்ட குழந்தையைப்போல்
துயிலில் சொகுசாகத் தோய்ந்திருந்த மனிதனைஎன்
பயிலாத கைகளினால் பலங்கொண்ட மட்டுமவன்
கழுத்தை நெறுக்கிக் கண்ணிரண்டும் பிதுங்கநன்கு
அழுத்திக் கொலைசெய்து அடுத்தகணம் படியிறங்கி
வீடுவந்து படுத்ததைஎன் விழிமுன்னே காண்கின்றேன்;
கேடுவந்த பின்னர்நான் கிடந்திங்கே புலம்புவதில்
என்னபயன்?" என்றிங்ஙன் பலவாறாய் நடராசன்
அரற்றியபின் அவன்வாழ்வே அர்த்தமின்றித் தோன்றஅவன்
சுரத்தின்றித் துன்பத்தீச் சூழலிலே வெந்துநின்றான்.

முன்னிரவில் தனித்திருந்த மேனகைதன் துயில்நீத்த
பின்னரே கண்டிட்டாள் பிணமாய்க் கிடந்திட்ட
நாயகனின் கோலத்தைநடுக்கமெதும் இல்லாமல்
போய்அவளே 'போலீசுக்(கு)அறிவித்துப் பிறர்தயவில்
ஈமச் சடங்குகளை இயற்றத் தொடங்கித்தன்
சேமத்தை நாடிச் செயலாற்றும் காதலனை
நண்பன் எனும்முறையில் நாட்டார்க்குக் காட்டித்தன்
பண்பில் பழுதவர்கள் பாராமல் செய்துகொண்டாள்.
"நெருஞ்சியின் முள்ளாக நெஞ்சுறுத்தும் நினைப்பையிந்த
அரும்புமல ராய்என்னை அணைப்போள்தான் அறிவாளோ?
நேர்மையுள்ள ஓவியனாய் நேற்றுவரை இருந்தநான்
சீர்கெட்ட கொலைஞனென்ற சேதியிவள் அறிந்துகொண்டால்
காலமெல்லாம் காத்துவந்த காதலுக்குக் கல்லறைதான்!
அடடா!நான் என்செய்வேன் ஆண்டவனே" என்றெல்லாம்
நடராசன் தன்னுள்ளம் நசுங்கிப் புலம்புகையில்

காதலியாய் அவன்நெஞ்சம் தன்பால் கவர்ந்துகொண்ட
சாதனையின் விளைவாகச் சடுதியிலே மேனகையும்
கரையில்லாக் கவலைதன் காதலனைப் படுத்துவதை
விரைவில் புரிந்துகொண்டு வினவினாள்: "என்அன்பே!
புண்ணாக இருந்தஎன் புருஷனின் மரணத்தால்
மண்ணில் நமக்கிருந்த மாபெரும் தடையொன்று
தானாக நீங்கியதால் சந்தோஷம் அடையாமல்
ஏனோநீ பெருந்தனத்தை இழந்ததுபோல் வாட்டமுடன்
தோன்றுகிறாய்என்னிடமே சொல்வதற்குக் கூடாத
வானோர்தம் ரகசியமும் வந்திடுமோ நமக்குள்ளே?"
மேனகையின் கேள்விகளும் மென்சொல்லும் அவளன்பைப்
பூரணமாய்க் காட்டியதைப் புரிந்துகொண்டு தன்நிலைக்குக்
காரணத்தை அவளிடம்தான் கழன்றிடநம் நடராசன்
முடிவெடுத்துத் தன்கதையை முதலிருந்து கடைசிவரை
படிப்படியாய் அவளிடம் பயம்தொடர விவரித்தான்;

தன்செயலின் ஈனமான தன்மையினைக் கேட்டதுமே
மின்சாரம் பாய்ந்தாற்போல் மேனகை திடுக்கிடுவாள்,
மன்றாடி மன்னிப்புக் கேட்டும்மனம் இரங்காது
'என்வாழ்வில் உனக்கினிமேல் இடமில்லைஎனச்சொல்வாள்
என்றெல்லாம் எதிர்பார்த்த ஏழைநட ராசனுக்கு
ஒன்றுமே காதலுக்கு ஒப்பில்லை என்பதுபோல்
பேரழகி மேனகைதன் பெருங்கண்ணில் நீர்தளும்ப,
"ஓராயிரம் கோடி உலகத்து மனிதரிடை
உன்னைப்போல் காதலுக்காய் ஓர்கொலையை யார்புரிவார்?
கண்ணே!என் காதலனே! கவலையெதும் கொளவேண்டாம்
திண்ணமாய் ஒருவருக்கும் தெரியாத விசயமிதை
மண்ணில் புதைத்திடுவோம் வருகின்ற ஞாயிறன்று
நாமிந்த நாகைவிட்டுச் சென்னை நகர்சென்று
சேமமாய் வாழ்ந்திடுவோம் சிரிப்பும் களிப்புடனே"

இவ்வாறு தேற்றியவள் இறுகத் தழுவித்தன்
செவ்விதழை அவன்வாயில் சேர்த்துச் சுவைதந்தாள்.
செய்திட்ட தீவினைக்குத் தகுந்ததோர் தண்டனையைக்
கைதிஎதிர் பார்ப்பதுபோல் காத்திருந்த நடராசன்
'கண்ணே!உன் களங்கமில்லாக் காதலினால் கூறியதை
உண்மையெனக் கொள்ளஎன் உளம்மறுப்ப(து) உணராயோ?

நான்செய்த பாவத்தீ நாளுமென்னை எரிக்கிறது!
ஊன்உறக்க மேதுமின்றி உன்மத்த னாயென்றன்
உள்ளத்தில் அன்றுகண்ட உருவமொன்றே நிற்கிறது!
எள்ளளவும் வேறெதுவும் என்நெஞ்சில் தோன்றாமல்,
காதகனாய் மாறியஎன் கைகளின் பேய்ப்பிடியில்,
வேதனையால் துடித்தஉடல் விழிகள் வெடித்துவிழப்
படுக்கையில் ஒருபாதி பாரில்ஒரு பாதியெனக்
கிடக்கின்ற காட்சிஎனைக் கீறிவதை செய்கிறது;
ஓவியத்தில் மனம்செலுத்த உன்னிநான் அமர்கையிலே
பாவியென்றன் கைஅன்று பார்த்திட்ட காட்சியையே
வரைவதைநான் காண்கின்றேன் வையகத்தில் இனியெனக்கு
அரைநிமிட மேனும்மன அமைதியினிக் கிட்டாது"

இதுகேட்ட மேனகையின் எண்ணத்தில் தோன்றியது
புதுவகை வழியொன்று: "புரிகிறதுஉன் நிலையெனக்கு;
குளவியாய் உனைக்கொட்டும் கோலத்தை யேஉனது
அளவிலாத் திறமையுடன் ஆக்கிவிடு ஓவியமாய்!"
கண்ணிலே நீர்வழிய இதைக்கேட்ட காதலன்தன்
புண்ணுக்கோர் அஞ்சனமாய்ப் புலப்பட்ட(து) அவள்மொழிகள்:
"நீசொன்ன படியேநாம் நேராகச் சென்னைசென்று
வீடொன்று கிடைக்கும்வரை விடுதியிலே தங்கிடுவோம்
எனைவாட்டும் காட்சியினை என்முயற்சி யாவுமிட்டு
வனைவேன்ஓர் ஓவியத்தை வனிதைஉன்றன் வழிப்படிநான்"

சென்னை விடுதியிலே சித்திரம் வரைவதிலே
தன்னை இழந்தோர் தனிஉலகில் சஞ்சரித்தான்.
நேரிலே காணுமொரு நிகழ்ச்சியை வரைவதுபோல்
தூரிகையின் இழைகளிலே தோன்றியது சித்திரமும்.
அவலத்தை உமிழ்கின்ற அக்காட்சி அவன்பட்ட
கவலையெலாம் போக்கிக் கலைஞனின் வெறியூட்டி
உணவுண்டு நன்குஉறங்கி உற்சாகம் கொளச்செய்து
முனமிருந்த சோகத்தை முற்றிலும் விரட்டியது.
சித்திரத்தை முடிப்பதெனச் சிந்தித்த நடராசன்
பத்திரமாய்த் திரைபோர்த்திப் படுக்கையறை தனில்வைக்க
விடுதியுள்ள பணியாளை விளித்திட்டான் துணைசெய்ய;

சடுதியிலே ஓடிவந்த 'சர்வர்'அங்கு வந்தவுடன்
நடராசன் முகம்கண்டு சற்றே நடுங்குவதை
உடனே உணர்ந்தஅவன் 'உன்னைநான் நாகையிலே
பணக்காரர் வீடொன்றில் பார்த்ததுண்டு நிசம்தானே?'
எனவினவப் பணியாள் இன்னும்மிகப் பதட்டமுற்றான்.
கனவிலே நடந்த காட்சியொன்று மெள்ளத்தன்
நனவிற்கு வருதல்போல் நடராசன் உணர்ந்திட்டான்.
மனத்திலே அவன்உடனே வனைந்தான்ஓர் திட்டத்தை:
முன்னிருந்த ஓவியத்தை மூடியஅச் சீலையைஓர்
மின்னல்வே கத்தில்அவன் விலக்கினான்! வெலவெலத்(து)அக்
கோலத்தைக் கண்டவுடன் குலைநடுங்கி நடராசன்
காலில் விழுந்தான்அப் பணியாள்;தன் கைகூப்பி
"ஐயா!நான் அந்த இழிச்செயலை ஆற்றியதை
மெய்யாக வேறெவரும் பார்த்ததில்லை என்றிருந்தேன்;
கொலைசெய்யும் எண்ணமெதும் கொள்ளாதோன் என்வறுமை
நிலைதந்த நினைப்பினிலே நீசனாய் மாறிவிட்டேன்:

பணக்காரர் படுப்பதற்கு முன்அவர்க்குப் பால்கொடுக்கக்
கணக்காக அவர்அறையில் சென்றநான் கண்டதெல்லாம்
தன்னை மறந்தவர்தாம் தூங்குவதைஅவர்அருகில்
'என்னை எடுத்துக்கொள்!எனுமாறு பணக்கற்றை
அழைப்பதுபோல் காணஅதை அள்ளுகின்ற வேளையிலே
கண்விழித்த கனவானின் கழுத்தைஎன் கைகளினால்
வெண்ணையாய்ப் பிசைந்திட்டு வெளியேநான் ஓடிவிட்டேன்;
ஐந்து குழந்தைகளோ(டு) அவதியுறும் ஏழைநான்!
எந்த வகையாலும் எனைக்காக்க வேண்டுமையா!"
என்றந்த ஏழைப் பணியாளன் தான்துடித்துச்
சென்றவனைத் தேற்றிச் சேர்த்தணைத்த நடராசன்
குன்றின்மேல் ஏறிக் கூவுவான் போல்உரைத்தான்:
"அன்றுநான் செயஇருந்த அச்செயலை என்முன்இவனே
சென்று முடித்ததைநான் சேர்ந்தபின் கண்டதன்றோ
உள்மனத்தில் புகைப்படமாய் உருவெடுத்து நானேஅக்
கள்ளக் கொலைசெய்த கயவன்போல் காட்டியது?
கற்பனையில் புதைந்திட்ட காட்சியினால் வெந்திட்ட
அற்பனுக்கு இன்றுமுதல் ஆனந்தம்ஆனந்தம்!"
மேற்கொண்டு நடராசன் விட்டஒலி ஒன்றேனும்
கால்தெறிக்க ஓடினவன் காதிலே விழவில்லை! 

                          

Tuesday, November 13, 2018

கந்த சஷ்டி - வேட்கை

முருகன் துணை
<> வேட்கை <>













கைகள் பரந்து கமல மலர்விரி காட்சிதரும்
செய்ய நிறத்துடை சேவடி யோசெந் தாமரையாம்
வெய்ய பகைகொலும் வேலும் சிவந்தே விளங்குமிங்ஙன்
ஐயன் உனையன்(று) அருண கிரியனு பூதியிலே
மெய்யும் உளமும் மெழுகாய் உருகும் விதமுரைத்தும்
உய்யும் வகையை  உணரா திருப்பதென் ஊழ்வலியே.
(கையோ அயிலோ கழலோ முழுதும்செய்யோய் சிவசங் கரதே சிகனே - கந்தர் அனுபூதி)


                valli-murugan-ganapathy.jpg

வேட்டுக் குறத்தியை வேட்டித் தருவென வேடமிட்டுச்
சேட்டன் துணையினைத் தேடி அவளுடன் சேர்ந்ததெல்லாம்
நாட்டில் நகைச்சுவை நாடக மானதை நானறிந்தும்
நாட்டம் மனத்தினில் நாட்டித் தினமுமுன் நாமமதைப்  
பாட்டில் இசைத்துப் பணிவதன் காரணம் பந்தமில்லா
வீட்டை அடைந்திட வேண்டும் எனும்பெரு வேட்கையொன்றே.
(வேட்டி = விரும்பி; சேட்டன் (வடமொழியில் ஜ்யேஷ்டன்) = தமையன்.)
(பாவினம்: பஃறொடைக் கட்டளைக் கலித்துறை (அல்லது, ஒரு விகற்ப ஆறடித் தரவுக் கொச்சகக் கலிப்பா)
... அனந்த் 13-11-2018

Wednesday, September 26, 2018

குறும்பாக் கலாட்டா


        குறும்பாக் கலாட்டா      

(ஆங்கிலத்தில் உள்ள 'Limerick" என்னும் செய்யுள் வகையை ஒட்டி அமைந்த ’குறும்பா’ என்னும் பாடல் வகை பற்றியும் அதன் இலக்கணத்தைப் பற்றியும் உள்ள எனது கட்டுரையைச் ‘சந்தவசந்தம்’ இணையத் தளத்தில் காணலாம்: https://groups.google.com/d/msg/santhavasantham/6FwMI45is0M/-rk3eYoncFcJ 


1. அண்ணனுக்கும் தம்பிக்குமோர் போட்டி -அதில்
ஆனைமுகன் வெற்றிக்கொடி நாட்டி
…. அகிலமெல்லாம் சுற்றுவதை
…. அன்னைதந்தை சுற்றுவதால்
அடைந்திடலாம் என்றான்வழி காட்டி

2. போட்டியிலே தோற்றதனால் வெம்பி - மனம்
போனபின்னர் மாற்றுவழி நம்பி 
…. அண்ணனுக்கு முன்னதாக
…. ஆற்றுமொரு செய்கையென்று
புரிந்துகொண்டான் இருமணத்தைத் தம்பி!

3. கையினிலே ஏந்துவதோ ஓடு - அவன்
காலெடுத்து ஆடுவதோ காடு 
…. அன்னவன்மேல் மையல்கொண்டு 
…. அருகமர்ந்தாள் அம்மைஅவள்
காதலுக்கு வேறெதுதான் ஈடு?

4. அக்கினிக்கும் வருணனுக்கும் சண்டை- அதை
அகற்றவந்தார் நாரதர்அந் தண்டை
அக்கினிக்கு சொன்னதைஅப்
…. பக்கம்வந்த வருணன் கேட்க
…. அவன்பிடித்தான் நாரதரின் சிண்டை!

5. பாற்கடலில் படுத்திருந்த போது-அங்குப்
பருகவொரு சொட்டுங்கிடைக் காது
ஆயர்பாடி வந்துதித்தான்
அள்ளியள்ளிப் பால்குடித்தான்
பார்த்தஅன்னை கையில்அவன் காது!

6. கையினிலே மாடுமேய்க்கும் கம்பு-செய்வான்
காலமெல்லாம் மாதருடன் வம்பு
…. கல்விகற்கும் காலமெல்லாம்
…. கண்டபடி போக்கினாலும்
கீதைசொல்ல அவனுக்குண்டு தெம்பு! (-அது
கடவுளுக்குத் தான்முடியும் நம்பு!!)

7. காட்டினிலே சுற்றிவந்த வள்ளி
காலமெல்லம் மனத்தினிலே உள்ளி
…. வேட்டுவனாய் வந்தவன்மேல்
…. நாட்டமில்லா நங்கையைப் போல்
காட்டியபின் கைப்பிடித்தாள் கள்ளி!

8.. வாசலிலே வந்தவனைப் பார்த்தேன்
வடிவழகன் பட்டியலில் சேர்த்தேன்
…. பாசிமணி விற்கஅன்று
…. பரபரத்த முகத்தைஇன்று
காசையள்ளும் திரைப்படத்தில் பார்த்தேன்! 

9. வானத்திலே பறந்துவந்த சிட்டு - அதன்
மகிழ்ச்சியிலென் மனம்பறக்க விட்டு
…. மேல்நிமிர்ந்து  பார்த்துப்பிறர்
…. மேலிடித்து  நடக்கையிலே
வாயினிலே விழுந்ததொரு சொட்டு!

10. வாசலிலே வந்ததொரு மாடு - அது
வாலெடுத்து ஆட்டக்குஷி யோடு
…. நானதனை ரசித்தபடி
…. நடந்துசெல்ல நல்லவெள்ளைச்
சட்டையிலே கெட்டசாணிக் கோடு!

11. தொட்டிலிலே தூங்குமெந்தன் குட்டி
தொடாமலே இனிக்கும்வெல்லக் கட்டி
…. கட்டவிழ்ந்த  ஆசையோடு
…. கிட்டநின்று  காணவாயில்
விட்டதய்யா நீரையந்தச் சுட்டி!

12. மாடிவீட்டில் இன்றுவாழும் வள்ளி
மாடுமேய்த்து முன்னையநாள் சுள்ளி
... ஓடிச்சேர்த்த அழகினிலே
... ஓர்நடிகர் விழஅவரை
நாடிவந்தாள் திரையுலகில் துள்ளி!

13. முன்பொருநாள் முருகன்என்ற பேரார்
முதியர்அவர் நூல்எதையும் பாரார்
…. தன்அறிவு மங்கிவரும்
…. தருணமதில் இங்கிவர்தான்
இன்றுமுதல் 'ப்ரொபஸர்' என்றார் ஊரார்!

14. பாடகரின் தொண்டைகொஞ்சம் மட்டு - அதைப்
பாராதவர் மேல்ஸ்ருதியைத் தொட்டுப்
…. பாடஅந்த வேதனையைத்
…. தாளாராக தேவதைதான்
போட்டதவர் தலையில்ஒரு குட்டு!

15. உண்டபின்னே திண்ணையில் அமர்ந்தேன்
உடல்அசதி மேவக்கண்ண யர்ந்தேன்
..... அண்டியென்னை ஏதோஒன்று
..... அணைத்ததது யாரோவென்று
கண்திறந்தால் நாய்!நிலைபெ யர்ந்தேன்!

16. ஆருமில்லா நேரமாகப் பார்த்து
ஆறுவருட ஆசையினைத் தீர்த்து
....... பேரனது ஊஞ்சலிலே
....... பெருங்களிப்போ(டு) ஆடையிலே
பார்அடைந்தேன் மாரெலும்பைப் பேர்த்து!

17. கவிஞனைநான் ஏன்மணந்தேன் என்று
கண்கசக்கும் என்மனைவி இன்று
..... அவியலுடன் ரசமும்வைத்து
..... அப்பளம்பா யசம்சமைத்துச்
செவியில்சொன்னாள்: உம்குறும்பா நன்று!

18. மங்களத்தின் மாமனொரு குண்டன்
வசிப்பதற்கு வந்தடைந்தான் லண்டன்
....... இங்கிலாந்துத் தீனிதின்று
....... இவன்பெருத்த மேனிஇன்று
தங்கும்'கின்னஸ் புக்'கில்;எம கண்டன்!

19. வாருமையா அருகினில்வந் துட்காரும்
வந்துமது கேஸ்விவரம் கூறும்
.. யாருமக்குச் சாதகமாய்ச்
.. சேருவரோ நேருவது
நேருமென நம்பிஊர்போய்ச் சேரும்
சேரும்முன்னம் எனதுஃபீஸைத் தாரும்.

20. காலையிலும் மாலையிலும் குறும்பா
கழிந்தமற்ற நேரமெல்லாம் எறும்பாய்
.... வேலைசெய்யும் வேளையிலும்
.... வேண்டுமென்றே மூளையினோர்
மூலையிலே சிரிக்குமது குறும்பாய்!

குறும்பா மகிமை

குறுமுனிவர் தந்ததமிழ்க் கடலில்
.கோடிகோடி அலைகளுக்கு இடையில்
…. குறும்பனெனக் காட்டிக்கொண்டு
…. குதிநடனம் போட்டுக்கொண்டு
குறும்பாவொன்(று) அலையக்கண்டோம் நடுவில்.

ஆங்கிலத்தில் 'லிமெரிக்'கென்று செய்தான்
அழகுமுண்டு பொருளுமுண்டு மெய்தான்
…. ஆங்கிலாத மோனைநலம்
…. ஆக்கிஎங்கள் மொழியின்பலம்
ஓங்குகுறும் பாவையிங்கு நெய்தான்! 

குறும்பாவைக் கொண்டுவந்தான் மூர்த்தி*
கொண்டேன்நான் அதில்மிகவும் ஆர்த்தி
... வெறும்பாவாய் ஆங்கிலத்தில்
…. விளங்கியதை ஓங்குமொரு
நறும்பாவாய் நமக்களித்தான், நேர்த்தி!
(*ஈழக்கவிஞர் மகாகவி உருத்திரமூர்த்தி)









பாட்டுக்கு மெட்டு

பாட்டுக்கு மெட்டு
அனந்தநாராயணன் (கானடா)

 

(இது, ‘கட்டுரைகள் ‘ தளத்தில் காண்பதன் மறு பதிவு.)
  சென்னை நகரில் அமர்க்களமாக இசை விழா நடந்து கொண்டிருக்கும் இந்த டிசம்பர் மாதத்தில்பல்வேறுவகையான இசை நிகழ்ச்சிகளில்சாகித்ய கர்த்தாக்கள் என அழைக்கப்படும் பாடல் புனைபவர்களின்பாடல்களைப் பற்பல பாடகர்கள் பாடிக் காட்டுவதையும்நாட்டியக் கலைஞர்கள் ஆடிக் காட்டுவதையும்மக்கள் திரள்திரளாகச் சென்று கேட்கும் காட்சி என் கண்முன் விரிகிறதுபல ஆண்டுகளாகநானும்உலகில் வேறெங்கும் இத்தனை பெரிய அளவில் நடைபெறாத இந்த இசைவிழாவைக் கண்டுகேட்டுமகிழச் சென்றுள்ளேன் (இடையில்பல காண்டீன்களில் நாவார உண்டு மகிழ்வதும் உண்டு!)அப்பொழுதெல்லாம் என் மனத்தில்அழகழகாகச் சொற்களைக் கோத்துப் பாடல் வடிவில் உருவாக்கும்பாடலாசிரியர்கள்இசையமைப்பாளர்கள்பாடகர்கள் இவர்களுக்கிடையே உள்ள உறவை எண்ணிப்பார்ப்பதுண்டுநல்ல மொழியறிவும்மொழிப் புலமையும் கொண்டவராய் இருத்தல்ஓசைபண்(இராகம்), தாளம் போன்ற இசை நுணுக்கங்களைப் பற்றிய அறிவுநல்ல கருத்து வளம்அக்கருத்துகளைக்கேட்போர் உள்ளம் மகிழ இனிய ஓசையோடு பொருந்துமாறு எழுத்தில் பாடலாக வடிக்கும் திறன் ஆகியஅனைத்தும் பாடலாசிரியருக்கான இலக்கணம் ஆகும்இவ்வாறு அமைக்கப்பட்ட பாடலை,பாடலாசிரியரின் உள்ளக் கருத்தும்பாடலில் தெரிவிக்கப்படும் உணர்வும் நன்கு வெளிப்படுமாறுஅப்பாடலுக்கு ஏற்ற மெட்டையும் தாளத்தையும் தேர்ந்துபாட்டின் இசையை மக்கள் விரும்பத்தக்கவகையில் அமைக்கும் வல்லமை உடையவராக இருக்க வேண்டும்இறுதியில்இவர்கள் இருவருடையஉள்ளக் கிடக்கைகளையும் புரிந்துகொண்டுபாடலை இனிய குரலில் உச்சரிப்புச் சுத்தமாகப் பாடும்திறன் பாடுபவருக்கு இருக்க வேண்டும்இப்படி மூவகைப் பொருத்தமும் அமைந்த பாடல்களைப்பண்டிதர் முதல் பாமரர் வரை விரும்பிக் கேட்பதைப் பார்க்கலாம்பண்டைய நாளில், ‘கான கலாதரஎன்ற பட்டம் பெற்ற சங்கீத வித்வான் மதுரை மணி ஐயரின் தமிழ் இசையை ரிக்ஷா இழுப்பவர்கள் கூடரசித்துக் கேட்டு மகிழ்வார்கள் எனச் சொல்வார்கள்.

பாட்டுக்கு மெட்டமைப்பது என்றவுடன் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது தமிழ்த் திரைப்படப்பாடலாசிரியர்கள்இசையமைப்பாளர்கள் ஆகியோர் பற்றிய எண்ணம் தான்முந்தைய காலப்பாடலாசிரியர்களான உடுமலைப்பேட்டை நாராயண கவிமருதகாசிபட்டுக்கோட்டைகல்யாணசுந்தரம் போன்றவர்களிலிருந்துபின்னர் வந்த கண்ணதாசன்வாலிவைரமுத்துமு.மேத்தா,பா.விஜய் போன்ற பலரும் சிறந்த பாடல்களைப் படைத்து நம்மை மகிழ்விக்கிறார்கள்.இசையமைப்பாளர்கள் என்று எடுத்துக் கொண்டால்இளையராஜாரஹ்மான்கிப்ரான்வித்யாசாகர்,இம்மான்யுவான்பிரகாஷ் போன்ற பலர் நம் நினைவுக்கு வருகின்றனர்இவர்களைப் போலநம் தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரும் ஏராளமான பாடலாசிரியர்களும்இசையமைப்பாளர்களும் இருந்திருக்கிறார்கள் என்பதைப் பலர் அறிந்திருக்க மாட்டார்கள். இந்தக்கட்டுரையில்பண்டைய காலத்துத் தமிழ் மரபில் பாடலாசிரியருக்கும் இசையமைப்பாளருக்கும்எவ்வகையான தகுதியும் உறவும் இருந்தன என்று பார்க்கப் போகிறோம்அதற்கு அடித்தளமாகதமிழிசைபற்றிய சில செய்திகளை முதலில் தெரிந்து கொள்வது நல்லது.

இயல்இசைகூத்து அல்லது நாடகம் என்ற மூன்று பிரிவுகளைக் கொண்ட தமிழ் மொழியில்,இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இசை ஒரு மேலான இடத்தை எட்டியிருந்ததென நாம்அறிவோம்இயற்றமிழுக்கான சொல்பொருள்செய்யுள் ஆகியவற்றிற்கான இலக்கணங்களைவரையறுத்த மிகப்பழைய நூலாகிய தொல்காப்பியத்தில்இசை பற்றிய குறிப்புகள் பல உள்ளன (1).இசை எழுத்துக்களின் மாத்திரை அளவுகள்நால்வகை நிலங்களுக்கான பண்கள்தெய்வங்களுக்குரியஇசைபாடல் அமைப்புக்குத் தேவையான எதுகைமோனை வகைகள் போன்ற பல இசைத் தொடர்பானசெய்திகளைத் தொல்காப்பியத்தில் காண்கிறோம்அடுத்தபடியாககடைச்சங்க காலத்தைச் சேர்ந்தபரிபாடலில்புலவர் ஒருவர் இயற்றிய பாடலுக்கு மற்றொருவர் அதற்கேற்ற பண்ணோடு சேர்த்துஇசையமைக்கும் முறை இருந்ததென நாம் காண்கையில்தமிழிசை மிகத் தொன்மையானகாலத்திலேயே பெருமளவில் வளர்ச்சி பெற்றிருந்தது என்பதை அறிந்து நாம் களிப்பெய்துகிறோம்.பரிபாடல் காலத்தில்கடுவன் இளம்வெயினனார்நல்லந்துவனார்மையோடக் கோவனார்குன்றம்பூதனார்இளம்பெருவழுதியார் என இயற்றமிழில் வல்லமை பெற்ற புலவர்களாக இருந்த பலபாடலாசிரியர்களின் பட்டியலைக் கர்நாடக இசைதிரைப்பட இசை ஆகியவற்றில் இயல் தமிழில்தேர்ச்சியுள்ள அண்மைக் காலத்திய பாடலாசிரியர்களின் வரிசையோடு ஒப்பிடலாம்அதுபோலப்பரிபாடலில் கலிப்பா என்னும் பாவகையைச் சார்ந்த கவிதைகளுக்குபித்தாமத்தர்மருத்துவன்நல்லச்சுதனார்கண்ணனாகனார் பெட்டனாகனார்கேசவனார் போன்ற பல இசையமைப்பாளர்களின்பட்டியலும் உள்ளதுகேசவனார் போன்ற சிலர் தாமே கவிஞராகவும் இசையமைப்பாளராகவும்இருந்தனர் என்றும் பார்க்கிறோம்இத்தகைய திறம் படைத்தவர்களைகர்நாடக இசை மரபில்வாக்கேயகாரர்கள் என்று அழைப்பார்கள்இத்துறையில் மூத்தவர்களான தமிழ் மூவர் என்றுஅழைக்கப்படுவோரில்முத்துத் தாண்டவர்மாரிமுத்தா பிள்ளை இருவரும் வாக்கேயகாரர்கள்.அருணாசலக் கவிராயர் பாடல்களுக்கு அவருடைய ஆசான்கள் மெட்டமைத்ததாகத் தெரிகிறதுசங்கீதமும்மூர்த்திகள் என்றழைக்கப்படும் தியாகராஜர்முத்துஸ்வாமி தீக்ஷிதர்சியாமா சாஸ்திரி ஆகியோர்சிறந்த கீர்த்தனங்களை இயற்றுபவர்களாகவும் அவற்றைப் பற்பல இராகங்களிலும் தாளங்களிலும்அமைக்கும் வல்லமை பெற்றவராகவும் இருந்தனர்.   
அடுத்துசிலப்பதிகாரக் காலத்தில் பாட்டுக்கு மெட்டமைத்தல் எவ்வாறு இருந்ததெனப் பார்ப்போம்.அந்தக் காலகட்டத்தில்தமிழிசை ஓங்கி வளர்ந்து முழுமை பெற்றிருந்தது என்பது அடியார்க்கு நல்லாரின்உரையிலுள்ள குறிப்புகளிலிருந்தும்ஆபிரகாம் பண்டிதர் (2), விபுலானந்தர் (3), எஸ்ராமநாதன் (4),விபுலானந்தரின் மாணவரான வெள்ளைவாரணர் (5) போன்ற அறிஞர்களின் ஆய்விலிருந்தும்தெளிவாகிறதுஅடியார்க்கு நல்லார் தமது உரையில் பாட்டுக்கு மெட்டமைப்பதற்கான வழிமுறைகளைக்கூறும் இசையிலக்கண நூல்கள் பற்றிக் குறிப்பிட்டுள்ளதைப் பார்க்கையில்பாட்டுக்கு மெட்டமைத்தல்என்பது அக்காலத்தில் யாப்பிலக்கண விதிப்படி இயற்றப்பட்ட பாடலுக்கு இசையிலக்கண விதிப்படி ஆற்றப்பட்ட செயலென்று தெரிகிறதுதுரதிஷ்டவசமாகஅத்தகைய விதிகள் கொண்ட இலக்கண நூலாகநமக்குத் தெரிய வருவது அடியார்க்கு நல்லார் உரையில் குறிப்பிடப்பட்ட பஞ்சமரபு என்னும் நூல் ஒன்றே.இந்நூல் மேலே சுட்டிய ஆய்வாளர்களுக்கு அவர்கள் எழுதிய காலத்தில் கிட்டாமல் இருந்ததுஇந்தநிலைமை 1970-ஆம் ஆண்டளவில்தெய்வசிகாமணிக் கவுண்டர் என்னும் பெரியாரின் அரிய உழைப்பால்மாறியதுமுன்னம் தமிழ்க் கடல் .வே.சாமிநாதையர் செய்தது போல இவரும் பஞ்சமரபு நூலைப் பலஇடங்களில் தேடித் தமக்குக் கிடைத்த பழைய ஓலைச் சுவடிகளிலிருந்த செய்திகளைத் தொகுத்துஅருட்செல்வர்சேலம் நாமகாலிங்கம் அவர்களின் துணையோடு 1973-ல் அதை அச்சேற்றினார்.இந்நூலுக்கு மிக விரிவான உரையை இசைக்கலைச் செல்வர் வீ..காசுந்தரம் அவர்கள் 1973-ல்வெளியிட்டுள்ளார் (6). அதன்படிஅடியார்க்கு நல்லார் முப்பதுக்கும் மேலான பஞ்சமரபு நூற்பாக்களைத்தமது சிலப்பதிகார உரையில்குறிப்பாக அரங்கேற்று காதைஆய்ச்சியர் குரவைப் பகுதிகளில்கையாண்டுள்ளார் என்று அறிகிறோம்சேறை அறிவனார் என்பவர் இயற்றிய இந்நூலில் காணும் இசைபற்றிய தகவல்கள் நம்மைப் பிரமிக்க வைக்கின்றனகுரலிசை மரபுவாத்திய (யாழ்துளைக்கருவி,தோல்கருவி போன்றவைமரபுதாள மரபுநாட்டிய மரபுஅவிநய மரபு என்ற ஐந்து பகுதிகளைக்கொண்ட இந்நூல் இவை ஒவ்வொன்றிற்குமான விதி முறைகளைஉரையோடு கூடிய 241 வெண்பாக்கள்வழியே விவரிக்கிறதுஇசைமரபுப் பகுதியில்குரலொலி எழும்பும் எட்டு இடங்கள்நாடிகள்என்பவைபற்றிய விவரங்களில் தொடங்கிஇசைப்பாடல்களை இயற்றும் முறைஇழைபு என்னும் சொற்சேர்க்கை முறை, சுர அமைப்புஆளத்தி என்னும் ஆலாபனை பாடும் முறைநாட்டியத்திற்குப் பாடும் முறை,ஒவ்வொரு பாடல் வகைக்கும் இசையமைப்பதற்கான விதிகள் என்று பல்வேறு செய்திகள் கொண்டஇசைக் கருவூலமாக உள்ளது பஞ்சமரபு. (பாடுபவர் தம் குரலைப் பாதுகாப்பதற்கான பத்திய முறை,பதப்படுத்தற்கான மருந்து போன்ற செய்திகளைக் கூட இந்நூலில் காணலாம்!). மேலும்ஒவ்வொருஇசைக் கருவியையும் உண்டாக்க எந்த  வகையான மரம் உகந்ததுஎவ்வாறு கருவியை உருவாக்குவதுஎன்ற செய்திகளும், பாடலுக்கேற்பக் கருவியை இசைக்கும் முறையும் கூறப்பட்டுள்ளதுஇதுபோல,நாட்டியம் (கூத்துபற்றிய விவரங்களும் ஏராளமாக உள்ளன. (’இலக்கிய வேலைப் படித்துவரும்அன்பர்கள் இந்நூலையும்சிலப்பதிகாரத்தையும் ஒரு முறையேனும் படிக்க வேண்டும் என்பது எனதுஅவா.)
பாட்டுக்கு மெட்டமைப்பது பற்றிப் பஞ்சமரபு கூறுவதைச் சுருக்கமாகப் பார்ப்போம்இந்நூல் சிந்து,திரிபாதம்சவலை, சமபாதம்செந்துறைவெண்டுறைதேவபாணிவண்ணம் ஆகிய இயற்றமிழ்ப்பாவகைகளின் ஓசையை ஒட்டி இசையமைப்பதற்கான இலக்கணத்தை இசைபுணர்த்தல் என்னும் பெயரில் விரிவாகக் கூறுகிறது. சிலப்பதிகாரத்தில் காணப்படும் வரிப்பாடல்குரவை, வள்ளை,தேவபாணி போன்ற பாடல் வகைகள் பஞ்சமரபின் இலக்கணப்படி அமைந்தவை என அடியார்க்குநல்லார் உரையிலிருந்து நாம் அறிகிறோம். பரிபாடல் காலத்தில் கலிப்பா என்னும் பாவகையைஇசையமைக்கத் தகுந்ததாகத் தேர்ந்தெடுத்ததாகத் தெரிகிறதுஇப்பாவினம் தரவுதாழிசைசிற்றெண்,பேரெண்சுரிதகம்அராகம்கொச்சகம்முடுகு என்ற பல செய்யுள் பகுதிகளைக் கொண்டதுஇதற்கும்கர்நாடக இசையமைப்புக்கும் இருக்கக் கூடிய சாத்தியம் பற்றிப் பின்பு காண்போம்.சிலப்பதிகாரத்திற்குப் பின், தமிழ்ப் பாடல் அமைப்பிலும் இசையிலும் ஒரு புரட்சியைக்காரைக்காலம்மையார் (3-ஆம் நூற்றாண்டுசெய்துள்ளார்இவர் முதன்முறையாகத் தரவு கொச்சகக்கலிப்பா வகையில் அமைந்த பத்துப் பாடல்களின் தொகுப்பான பதிகம் என்ற பாடல் வகையை அறிமுகப்படுத்தினார்மேலும்அப்பாடல்களுக்கு நட்டபாடைஇந்தளம் போன்ற பண்களை அமைத்துப்பண்சுமந்த பாடல்கள் என்னும் மரபை உருவாக்கினார்இதுவே பின்னர் (5-8ஆம் நூற்றாண்டுஎழுந்ததேவாரப் பாடல்களின் அமைப்பிற்கும் இசைக்கும் அடிகோலியதுஆழ்வார்கள் இயற்றிய நாலாயிரதிவ்வியப் பிரபந்தமும் இவ்வகையில் அமைந்ததுஅடுத்து, 15-ஆம் நூற்றாண்டில்திருஞானசம்பந்தர்கையாண்ட வண்ணச்சந்தம் என்னும் விருத்தவகையைப் பெருமளவில் விரிவு படுத்தி அருணகிரிநாதர்ஆயிரக்கணக்கான வண்ணச் சந்தப் பாடல்களை இயற்றித் தமிழிசையில் புதுமை செய்தார் (7)தான,தன்னதத்த என்பன போன்ற பல்வகைச் சந்தங்களின் வரிசையில் (சந்தக் குழிப்பில்அமைந்ததிருப்புகழ்ப் பாடல்களுக்கு வள்ளிமலை சுவாமிகள்சாமி அய்யர்கிருபானந்த வாரியார்,கிருஷ்ணசுவாமி அய்யர்சாதுராம் சுவாமிகள் முன்னரும்.எஸ்.ராகவன் அவர்கள் அண்மையிலும் (8)சந்தக் குழிப்பை ஒட்டி இராகதாளங்கள் அமைத்துள்ளனர். (இங்ஙனம் சந்தக் குழிப்பை முன்வைத்துஇசையமைப்பதைதிரைப்பட இசையில்சிலவேளைகளில் தேவைப்படும் மெட்டுக்கேற்பப் பாட்டுஎழுதும் முறையின் முன்னோடியாகச் சொல்லலாம்.)        

இவ்வாறு படிப்படியாக வளர்ந்த தமிழிசையின் பாடல் அமைப்பும் இசையமைப்பும் 16-ஆம் நூற்றாண்டுக்காலகட்டத்தில்கீர்த்தனம் என்ற புதுவகைப் பாடல் அமைப்பால் வேறொரு திசைநோக்கிச் செல்லத்தொடங்கினஇந்தப் பாடல் அமைப்பிற்குவடமொழியில் சாரங்க தேவர் இயற்றிய சங்கீத ரத்னாகரம்என்னும் தமிழ்ப் பண்களின் அடிப்படையில் எழுந்த இசை நூலும்வேங்கடமகியின் மேளகர்த்தா ராக அமைப்பும் அடிப்படையானவை எனக் கருதுவர்இதன் விளைவே தற்போதைய கர்நாடக சங்கீதம் எனநம்பப்படுகிறதுதிருஞானசம்பந்தரின் யாழ்முரிப் பதிகமே கமக அமைப்பிற்கும்வீணையின் பயன்பாட்டிற்கும்இவற்றின் விளைவாகக் கர்நாடக இசையின் ராகங்களின் தோற்றத்திற்கும் வித்திட்டதுஎன்ற கருத்தும் எழுப்பப்பட்டுள்ளது (8)   முத்துத்தாண்டவர் (1525 – 1600) முதன் முறையாகத் தமிழில்பல்லவிஅநுபல்லவிசரணம் என்ற அமைப்புக் கொண்ட கீர்த்தனங்களை இயற்றி ராகதாளங்களோடுசேர்த்துப் பாடும் வகையில் வழங்கினார்இவருக்குச் சற்றே முந்திய காலத்தில்தெலுங்கில்அன்னமாச்சாரியா (1408-1503), கன்னடத்தில் புரந்தரதாசர் [1484–1564] ஆகியோர் கீர்த்தன வடிவில்பாடல்கள் அமைத்துப் பாடியிருந்தனர்தொடர்ந்து தமிழில்மாரிமுத்தா பிள்ளை (1712-1787), அருணாசலக்கவிராயர் (1712-1779), ஊத்துக்காடு வெங்கடசுப்பையர் (1700, 1765) ஆகியோரும் கீர்த்தன வடிவில் பாடல்கள்அமைத்துப் பாடினர்பின்னர்சங்கீத மும்மூர்த்திகள் தெலுங்குசம்ஸ்கிருத மொழிகளிலும்பாபநாசம்சிவன்பெ.தூரன்அம்புஜம் கிருஷ்ணா ஆகியோரும் இன்னும் பலரும் தமிழ்க் கீர்த்தனப் பட்டியலைவிரிவுபடுத்தினர்இப்போது நடைபெறும் கச்சேரிகளில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ள கீர்த்தனம் என்றபாடல் அமைப்பின் அஸ்திவாரம் எது என்பது பற்றிய ஆய்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது (9,10).ஒத்தாழிசைக் கலிப்பாவின் தாழிசைஅராகம் முடுகு போன்ற உறுப்புகள் கர்நாடக இசையின் பல்லவி,அநுபல்லவிசரணம்மத்தியம காலப் பகுதி ஆகியவற்றின் மூலங்களாக இருக்க வாய்ப்புள்ளது என்றகருத்து முன்வைக்கப்பட்டுள்ளது (9); இது இசையறிஞர்களால் மேலும் ஆராயத்தக்கதுகீர்த்தனம் தவிர,தான வர்ணம்பதவர்ணம்தில்லானா போன்ற வடிவங்களும் சுரம்தாளத்துடன் மெட்டமைத்துஇயற்றப்பட்டுள்ளன (9).
தற்கால இசைக் கலைஞர்கள் தமிழிசையின் பெருமையை உணர்ந்து அதைப் பரப்பி வருவது நமக்குமகிழ்ச்சியைத் தருகிறதுமறைந்த பத்மபூஷண் எம்.எஸ்சுப்புலக்ஷ்மி அவர்கள்கலிப்பாவின் தாழிசைஅமைப்புக் கொண்ட சிலப்பதிகாரத்தின் ஆய்ச்சியர் குரவைப் பாடலை இராகமாலிகையாகஇசையமைத்துப் பாடியது போல (11), பரிபாடல் போன்ற மற்ற சங்க காலப் பாடல்களுக்கும் இசை,நாட்டிய அமைப்புகளை இசைவல்லுநர்கள்தமிழிசை இலக்கண விதிகளை ஒட்டி அமைப்பார்கள் என்றுஎதிர்பார்ப்போம்.    

மேற்கோள் நூல்கள்:
1. வீ..காசுந்தரம் (1994) தொல்காப்பியத்தில் இசைக் குறிப்புகள்உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,சென்னை.
2. ஆபிரகாம் பண்டிதர் (1917, ’கருணாமிர்த சாகரம்’, மறுபதிப்பு:http://www.tamilvu.org/library/l9800/html/l9800bod.htm
3, விபுலானந்தர் (1974), ‘யாழ் நூல்’ கரந்தைத் தமிழ்ச் சங்கம்தஞ்சாவூர்(http://noolaham.net/project/181/18040/18040.pdf)
4. எஸ்ராமநாதன் (1981), ‘சிலப்பதிகாரத்து இசைத் தமிழ்’  தமிழ் எழுத்தாளர் கூட்டுறவுச் சங்கம்,சென்னை.  
5. வெள்ளைவாரணர்(1979) ’இசைத் தமிழ் ராமகிருஷ்ண வித்யாசாலைசிதம்பரம்.
6. வீ..காசுந்தரம் (1991) ‘சேறை அறிவனார் இயற்றிய பஞ்சமரபு” கழக வெளியீடுசென்னை.
7. வே.அனந்தநாராயணன் (, ‘புரட்சிக் கவிஞர் அருணகிரிநாதர்http://www.kaumaram.com/arasu/anantha_narayanan_01_u.html
8. தியாகராஜன், (1997) ’இசைத் தமிழின் உண்மை வரலாறு’ விவேகானந்தா அச்சகம்மதுரை.
9. கௌசுப்பிரமணியன் (2017) ) ‘தமிழில் இசைப்பாடல் வகைகள்) ’இசைத்தமிழ்ச் சிந்தனைகள்’,குமரன் புத்தக இல்லம்கொழும்பு-சென்னை.
10. ஜெயமோகன் (2014) ’கர்நாடக இசை – சுருக்கமான வரலாறு’ http://www.jeyamohan.in/55397#.WgpAh2hSy70
11. எம்.எஸ்சுப்புலக்ஷ்மிhttps://www.youtube.com/watch?v=ogm5odfetE4