Saturday, June 30, 2018


கூற்றிருக்கைச் செய்யுள்கள்: யாப்பும் அமைப்பும்

வே.ச. அனந்தநாராயணன் (அனந்த்)

(வளைவுக் குறியில் காணும் எண்கள் துணை நூல்களின் வரிசையைக் குறிக்கும்;  ”கட்டுரை” கிளைத்தளத்திலும் இந்தப் பதிவு இடப்பட்டுள்ளது.))

1. முகப்பு

தமிழில் பயிலும், ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் என்ற நால்வகையான கவிதை வகைகளில் சித்திர கவி அல்லது மிறைக்கவி என்னும் பாவகை தமிழ் யாப்பிலும் இலக்கியத்திலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளது. இப்பாவகையில் இயற்றப்படும் பாடல்கள், வட்டம், சதுரம், முக்கோணம் போன்ற கணித வடிவங்களிலும், பாம்பு, விளக்கு, அன்னம், தேர் போன்ற பல ஓவிய வடிவங்களிலும் பொருந்தும் வகையில் அமைக்கப்படுவன. ’நாற்கவி ராஜன்’ என்று அருணகிநாதரால் போற்றப்படும் திருஞானசம்பந்தரால் அறிமுகப் பட்டதாகச் சொல்லப்படும் சித்திர கவிச் செய்யுள்களை இயற்றுபவர் தாம், தேர்ந்தெடுத்த செய்யுளுக்கான இலக்கண விதிகள் மட்டுமன்றி, சித்திர வடிவத்தை ஒட்டி வகுக்கப்பட்டுள்ள விதிகளையும் மனத்தில் கொண்டு தம் கவிதையை அமைக்க வேண்டும். சித்திரகவி பற்றிய நூல்கள் பல நமக்குக் கிட்டியுள்ளன. இவற்றுள் பழையனவான தண்டியலங்காரம் (1), மாறனலங்காரம் (2), யாப்பருங்கலம் (3), நவநீதப் பாட்டியல் (4) போன்றவைகள் மட்டுமன்றி, எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ள சில புதிய நூல்களும் உள்ளன. இவற்றுள், ‘சித்திரக் கவிகள்’ என்னும் தலைப்பில், வே.இரா. மாதவன் பதிப்பித்துள்ள மிக விரிவான நூல் (435 பக்கங்கள்) குறிப்பிடத்தக்கது (5). இந்நூலின் இறுதியில் சேர்க்கப்பட்டுள்ள பட்டியலில் மிறைக்கவியைப் பற்றிப் பேசும் நூல்களின் விவரங்களையும் சித்திர கவிகள் பாடியுள்ள 63 புலவர்களின் படைப்புகளைப் பற்றிய தகவல்களையும் காணலாம். இவற்றில் பல தனிப்பட்ட கவிஞர்களின் படைப்புகளைத் தொகுத்து இடப்பட்ட நூல்களாகும். இந்த வகையில், 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த, வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள், சதாசிவப் பண்டாரத்தார் ஆகியோரின் சித்திர செய்யுள்களின் தொகுப்பும் (6,7), தற்போது சிங்கப்பூரில் வாழ்ந்துவரும் வெண்பாச்சிற்பி கவிஞர் இக்குவனத்தின் அறுபதுக்கும் மேலான பலவகையான சித்திர கவிகளைக் கொண்ட ‘சித்திரச் செய்யுள்’ என்னும் நூலும் (8), பாவலர் க.பழனிவேலனின் பத்துச் சித்திர கவிகள் அடங்கிய ‘சித்திர கவி’ என்னும் நூலும் (9) குறிப்பிடத்தக்கன. ’சிங்கப்பூர்ச் சித்திர கவிகள்’ என்னும் கட்டுரையில், நாராயணசாமி நாயகர், சதாசிவப் பண்டாரத்தார், சின்னப்பனார், இக்குவனம் ஆகியோர் இயற்றியுள்ள சித்திர கவிகளின் சிறப்பைச் சிங்கப்பூர் பல்கலைக் கழகத்தைச் சார்ந்த முனைவர் சுப. திண்ணப்பன் விரிவாக எடுத்துரைத்துள்ளார் (10).  சென்னையில் வாழ்ந்துவரும் மூத்த கவிஞரான கவிமாமணி தமிழழகன் சித்திர கவி இயற்றுவதற்கான விதிகளின் விளக்கமும், தாம் இயற்றியுள்ள பலவகையான சித்திர கவிகளையும் கொண்ட காமாட்சி அலங்காரம் என்னும் நூலை உருவாக்கியுள்ளார். எனினும், அது இன்னும் அச்சேறவில்லை.

மேலே குறிப்பிட்ட சித்திர கவி வல்லுநர்களில் சிலர் மட்டுமே கூற்றிருக்கைச் செய்யுள்களை இயற்றியுள்ளனர். கூற்றிருக்கைப் பாடலின் இலக்கணத்தையும், அமைப்பையும் அது பற்றிய இலக்கியத்தையும் பற்றித் தெரிந்து கொள்வது இந்தக் கட்டுரையின் நோக்கம். மற்ற மிறைக்கவி வகைகளைப் பற்றிப் பல்வகையான தகவல்களை மேலே சுட்டிய நூல்களில் சில தந்தபோதிலும், கூற்றிருக்கை என்னும் பாவகையைப் பற்றிய செய்திகள் போதிய அளவு நமக்குக் கிடைக்கவில்லை என்ற அடிப்படையில், எனக்குத் தெரிந்தவரையில் இதுவரை வெளியாகியுள்ள கூற்றிருக்கைகளின் யாப்பையும் அப்பாடல்களில் பயன்படுத்தப்படும் அமைப்பையும் பற்றி இங்குத் தருகிறேன்.

2. எழுகூற்றிருக்கை

எழுகூற்றிருக்கை என்பது தொன்னூற்றாறு பிரபந்த வகைகளில் ஒன்று. தண்டியலங்காரம் (1), மாறனலங்காரம் (2), யாப்பருங்கல விருத்தியுரை (3), நவநீதப் பாட்டியல் (4) ஆகிய நூல்கள் தந்திருக்கும் இலக்கணப்படி, ஒன்றுமுதல் ஏழு வரை உள்ள எண்கள் ஏழு கூறுகளை இடங்கள் ஆகக் கொண்டு, படிப்படியாக உயர்ந்தும் பின்னர் குறைந்தும் வரும் எண்ணலங்காரம் அமையப் பெற்ற ஆசிரியப்பா வகைப் பாடலைக் குறிக்கும்.

ஒன்று முதலா ஓரே(ழு) ஈறாச்
சென்றஎண் ஈரேழ் நிலம்தொறுந் திரிதர
எண்ணுவ(து) ஒன்றாம் எழுகூற்றிருக்கை..  (2,3)

ஒரு கூறு என்பதை ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட ‘அறை’களை (cell or box) கொண்ட வரிசை (row) என்று கருதலாம். கூறில் உள்ள ஒவ்வொரு அறையிலும், பொருளாலோ அல்லது ஒலியாலோ எண்ணைக் குறிக்கும் சொல்லொன்று தனியாகவோ அல்லது அதனுடன் இருக்கும் சொற்களின் கூட்டுடனோ அடைக்கப்படும். அறைகளில் குறிக்கப்படும் அதிகபட்ச எண்ணை ஒட்டிக் கூற்றிருக்கையின் பெயர் எழுகூற்றிருக்கை, எண்கூற்றிருக்கை என்ற வகையில் அமையும். இலக்கியத்தில் காணும் பெரும்பாலானவை எழுகூற்றிருக்கை அமைப்பைக் கொண்டவை. எழுகூற்றிருக்கையின் கூறுகளைக் கீழ்க்கண்ட வண்ணம் அமைத்தால் ஒரு தேரின் வடிவம் கிட்டும்.
          
மேலுள்ள எழுகூற்றிருக்கை அமைப்பின் முதல் கூறில் ஒரு அறை, இரண்டாவதில் மூன்று அறைகள் என்ற வகையில் ஏழாவது கூறில் பதின்மூன்று அறைகள் இருப்பதைக் கவனிக்கவும். இந்த அமைப்பில் தேர்த்தட்டுக்கு மேலுள்ள முக்கோண அமைப்பு, கணித இயலில் உள்ள ‘பாஸ்கல் முக்கோணம்’ (11) போலக் காணப்பட்டாலும், இதன் அறைகளுக்குள் உள்ள எண்களுக்கு இடையே உள்ள தொடர்பு மாறுபட்டது. எழுகூற்றிருக்கையின் இந்த அமைப்பில் உள்ள கணித நுண்மையைக் கீழுள்ள படம் விளக்கும்:

1 x 1 = 1
11 x 11 = 121
111 x 111 = 12321
1111 x 1111 = 1234321
11111 x 11111 = 123454321
111111 x 111111 = 12345654321
1111111 x 1111111 = 1234567654321
11111111 x 11111111 = 123456787654321
111111111 x 111111111 = 12345678987654321

படம் 2

அதாவது, தேர் அமைப்பின் ஒவ்வொரு கூறிலிலுள்ள எண்களும் 1 என்னும் எண்ணிலிருந்து விளைகிறது என்று காண்கிறோம். வேறொரு கண்ணோட்டத்தில், இது தன்னையன்றி வேறெதும் இல்லாத பிரமம் என்னும் ஒன்று (மாயை என்னும் ஆற்றலைப் பயன்படுத்தித்) தன்னைத் தானே பெருக்கிக் கொண்டு எண்ணற்ற வகைப் பொருள்கள் கொண்ட பிரபஞ்சத்தை உருவாக்குகிறது என்னும் ஆன்மிக உண்மையையும் விளக்குவதாகக் கொள்ளலாம். இதை, அருணகிரிநாதரின் திருப்புகழிலிலுள்ள திருவெழுகூற்றிருக்கையின் தொடக்கத்தில் உள்ள ‘ஓருருவாகிய தாரகப் பிரமத்து ஒன்றாய் ஒன்றி இருவகைத்தாகி…” என்ற தொடர் குறிப்பதாகக் கருதலாம்.  எழுகூற்றிருக்கை அமைப்பின் ஒவ்வொரு அறையிலுள்ள எண்கள் அனைத்தையும் கூட்டினால், 1, 4, 9, 16, 36, 49 என்றாகும். இதை 1x1, 2x2, 3x3… என்று நோக்குங்கால், எண்தற்பெருக்கின் (square of numbers) அழகு தெரியும். கூற்றிருக்கையின் எண்கள் யாவும் தேரின் வெளிப்புறத்தில் சூழ்ந்து நிற்கும் தொங்கல் மாலைகள் போல அமைந்து தேரை அலங்கரிப்பதாகக் கருதுவதுண்டு (5).

எழுகூற்றிருக்கையும் இரதபந்தம் என்னும் மிறைக்கவிப் பாவகை ஆகிய இரண்டும் தேர் அமைப்பைப் பயன்படுத்தினாலும், இவை யாப்பின் அமைப்பில் முற்றிலும் மாறுபட்டவை. இரதபந்தத்தில் பாடலின் முதல் எழுத்தைச் தேர்ச் சக்கரங்கள் ஒன்றில் பொருத்தி மற்ற எழுத்துக்களைத் தேரின் கீழ்ப்பகுதியில் முதல் வரிசையிலிருந்து மேலே உள்ள அறைகளில் இட்டு, உச்சியில் உள்ள ஒரு அறையில் செய்யுளின் நான்காவது அடியின் முதலெழுத்தை இட்டுப் பின் கீழிறங்கி மற்ற எழுத்துகளை வரிசையாக இடுவர். இந்த அமைப்பை முன் சுட்டியுள்ள நூல்களில் காணலாம்.
திரு என்ற சிறப்பு அடைமொழி கொண்ட திருவெழுகூற்றிருக்கை என்பது இறைவனின் அருட்செயல்களையும் சில தத்துவங்களையும் உள்ளடக்கிய பாடலைக் குறிக்கும். திரு என்பது முத்தி இன்பத்தையும், எழு என்னும் சொல் அந்த இன்பம் நம்முள் எழுவதையும், கூற்று என்பது அதன் இருக்கையையும் குறிக்கும் என்பர் (3). இப்பாடல்களில், எண்களைக் குறிக்கும் சொற்களால் அமைந்த தேர் வடிவின் நடுவிலுள்ள தட்டில் இறையின் உருவத்தை வரைதல் வழக்கம் (பார்க்க: படம் 3).
               
                       
                                                                      படம்-3
இத்தகைய ஓவியங்கள் திருவருள் பெற்றதாகக் கருதப்பட்டு, ஆலயங்களில் வைக்கப்படுவதுண்டு. இறை பற்றி அமைக்கப்பட்ட எழுகூற்றிருக்கைகளில் சில ’திரு’ என்ற அடைமொழியின்றி வருதலும் உண்டு (7).

சிவபெருமான், திருமால், முருகன் ஆகிய கடவுளரைப் பற்றி நக்கீரர் (12), திருஞானசம்பந்தர் (13), திருமங்கையாழ்வார் (14), அருணகிரிநாதர் (15) ஆகியோர் யாத்துள்ள திருவெழுகூற்றிருக்கைகள் நன்கறிப்பட்டவை. (யாப்பருங்கல விருத்தியுரையில்,காணும் நக்கீரரின் திருவெழுகூற்றிருக்கை பதினோராந் திருமுறை அச்சுப்பிரதியில் உள்ளதிலிருந்து மிகவும் வேறுபட்டது என்று குறிக்கப்பட்டுள்ளது (4). நக்கீரர் அருளிய திருவெழுகூற்றிருக்கையை மதுரை மீனாக்ஷி சுந்தரேசுவரர் கோவிலிலும், திருமங்கை ஆழ்வார் அருளியதைக் கும்பகோணம் சாரங்கபாணி கோவிலிலும், திருஞானசம்பந்தர் அருளியதைக் கும்பகோணம் ஆதிகும்பேசுவரர் கோவிலிலும் அருணகிரிநாதர் அருளியதைச் சுவாமிமலை, திருவண்ணாமலை கோவில்களிலும் காணலாம். யாப்பருங்கல விருத்தியுரையில் (3), திருப்பாமாலை என்ற பெயரில், சமணத் தெய்வமான அருக்க பரமனைப் பற்றிய எழுகூற்றிருக்கை ஒன்று காணப்படுகிறது. 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த, வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள் பல கடவுளர்களை முன்னிட்டுப் பன்னிரண்டு கூற்றிருக்கைகளை இயற்றியுள்ளார். இவற்றை, ‘சித்திர கவிகள்’ என்னும் வெளியீட்டில் காணலாம்(6). அண்மையில், இந்தக் கட்டுரை ஆசிரியர் இயற்றிய ’திருவண்ணாமலையான் திருவெழுகூற்றிருக்கை’ என்னும் பாடலும் (16), கவிஞர் ஓகை நடராஜன் என்பார் இயற்றிய ‘படஞ்சுட்டும் கவிதை’ என்ற எழுகூற்றிருக்கைப் பாடலும் (17) இணைய வலைத்தளங்களில் வெளிடப்பட்டுள்ளன.

எழுகூற்றிருக்கைச் செய்யுள்களைத் தேர் அமைப்பில் பொருத்திப் பார்க்கையில், அவற்றில் உள்ள சொற்கள் தேர்த்தட்டின் மேலும் கீழுமுள்ள பகுதிகளை முக்கோண வடிவில் நிரப்புவனவாக இருப்பதைக் காணலாம். தேர் அமைப்பின் மேலுச்சியில் இருக்கும் கூறு, கீழ்ப்பகுதியின் அடித்தளக் கூறாக அமையும். இதுபோல மேற்பகுதியின் உச்சியிலிருந்து இரண்டாவது கூறு கீழ்ப்பகுதியின் அடித்தளத்திலிருந்து இரண்டாவது கூறு என்ற வகையில் தொடர்ந்து தேர் அமைப்பு முழுமையாகும் (படம்-1). பெரும்பாலான கூற்றிருக்கைப் பாடல்களில், மேல் பகுதியில் உள்ள கூறுகளின் அறைகளில் உள்ள சொற்களே கீழ்ப் பகுதியிலும் காணப்படும். ஒரு சில கூற்றிருக்கைப் பாடல்களில் மட்டுமே இவ்விரண்டு பகுதிகளும் வெவ்வேறான சொற்கள் கொண்டனவாக அமையும். இவற்றிற்கான எடுத்துக்காட்டுகளைப் பின்னர் காண்போம்.

3. யாப்பமைதி

இந்நாள் வரை நமக்குக் கிட்டியிருக்கும் கூற்றிருக்கைச் செய்யுள்கள் அனைத்தும் அகவலோசை கொண்ட ஆசிரியப்பா யாப்பு வகையைச் சார்ந்தனவாக உள்ளன. அவற்றுள் பழங்காலத் திருவெழுகூற்றிருக்கைகள் இணைக்குறள் ஆசிரியப்பா வகையிலும், அருணகிநாதரின் திருப்புகழில் திருவேரகம் பற்றிய திருவெழுகூற்றிருக்கை நேரிசை ஆசிரியப்பா வடிவிலும், அண்மைக் காலத்தில் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் கூற்றிருக்கைகளும் இணைய தளத்தில் வெளியாகிய கூற்றிருக்கைகளும் நிலைமண்டில ஆசிரியப்பா வகையிலும் அமைந்துள்ளதை நோக்கலாம். மேலும், சில கூற்றிருக்கைகளில், மற்ற இலக்கியங்களில் நாம் காணும் ஆசிரியப்பாக்களில் பொருந்திய எதுகை மோனை அமைப்பு முழுமையாக இல்லாமலிருப்பதைப் பார்க்கலாம். இதற்குக் காரணம் கூற்றிருக்கைகள் எண்ணலங்காரம் என்னும் அணிக்கு முதன்மை இடம் தந்துள்ளமையே என்று கருதலாம்.

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் கூற்றிருக்கைகளில், திருவரங்கத் திருவெழுகூற்றிருக்கை தவிர, மற்றவை பாட்டில் குறிப்பிடப்படும் கடவுள் பேரில் காப்பு வெண்பாவோடு தொடங்குவது குறிப்பிடத்தக்கது. இவற்றின் அழகு கீழுள்ள சில எடுத்துக் காட்டுகளால் விளங்கும்.

ஏனோர் விதிதொட்(டு) எழுகூற் றிருக்கைசொல்லி
யானோர்ந்த வாறும் இசைக்கின்றேன் - வானோர்நேர்
ஒண்டகைய நெஞ்சம் உடையார் உலகிலுண்டேல்
கண்டறிந்து கொள்ளல் கடன்.  (முருகவேள் எழுகூற்றிருக்கை-II)

”ஏனோர் விதிதொட்டு’ என்னும் தொடரால் தண்டபாணி சுவாமிகள் தம் கூற்றிருக்கைகளை முன்னோர் கூறிய விதிப்படி அமைத்தார் என்றும், ’யான் ஓர்ந்தவாறும்’ என்பதால் அவ்விதியினின்று மாறுபட்ட வகையிலும் அமைத்தார் எனக் கொள்ளலாம். இவ்வமைப்பு வகைகள் பற்றிப் பின்னர் விரிவாகக் காண்போம்.

கூன்வாட்கை மங்கைமன்னன் கூறுமெழு கூற்றிருக்கை
தேன்வார்த்த பைந்துளவத் திண்டோட்காம் - யான்வாயாற்
சொல்வதும்ஆம் சொல்லோ?நீ சொன்னபடி சொல்கின்றேன்
நல்வரம்செய் நாரா யணா. (திருமால் எழுகூற்றிருக்கை)

பத்துத் திசையும் பரந்த பரஞ்சுடர்க்கா
முத்துப்போல் தோன்றும் முழுப்புலவோர் - நத்தும்
இயற்றசாங் கக்கூற் றிருக்கையென்னும் பாடல்
செயற்குமதே காப்பெனத்தேர்ந் தேன்.   (பொதுக்கடவுள் தசாங்கக் கூற்றிருக்கை)

வண்ணச்சரபத்தாரின் திருவரங்கத் திருவெழுகூற்றிருக்கை அவரது ’திருவரங்கத் திருவாயிரம்’ என்னும் படைப்பில் ஒன்று. அதன் முடிவில் கீழ்காணும் ஒருவருக்கப் பா காணப்படுகிறது (6):

தீதுதத்துத் தொத்தத்தே தித்தித்த தேதேது
தாதுதத்தத் தத்தத் ததிதாதா தாத்தாதா
தூதித்த தாதை துதித்துத் திதத்ததித்தா
தோதுதைத்த துத்தத்தத் தாதூத் திதித்தீதே

படிப்பவருக்கு உதவியாக, மேலுள்ள பாட்டின் பொருளையும், மேலும் எல்லா கூற்றிருக்கைகளின் பொருள் விளக்கத்தையும் தந்துள்ளது குறிப்பிடத்தக்கது (6).  

தற்போது நமக்குக் கிட்டியுள்ள கூற்றிருக்கைகளின் பட்டியலைக் கீழே தந்துள்ளேன். அதில் எழுகூற்றிருக்கைகள் தவிர முதன்முறையாக வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளால் அறிமுகப்படுத்தப்பட்ட எட்டு, ஒன்பது, பத்துக் கூற்றிருக்கைகளையும் சேர்த்துள்ளேன்.

          பட்டியல்-1 கூற்றிருக்கை யாப்பு, அமைப்பு வகைகள்


இயற்றியவர்

கூற்றிருக்கை


பாவினம்

அமைப்பு
வகை
  
  திருஞானசம்பந்தர்

  சிவபெருமான் திருவெழுகூற்றிருக்கை


இணைக்குறள்
ஆசிரியப்பா

1


  திருமங்கையாழ்வார்


  திருமால்          திருவெழுகூற்றிருக்கை

இணைக்குறள்
ஆசிரியப்பா

2

யாப்பருங்கல விருத்தியுரை     ஆசிரியர்


அருகபரமன்     எழுகூற்றிருக்கை

இணைக்குறள்
ஆசிரியப்பா

3

   நக்கீரதேவ நாயனார்


 சிவபெருமான்         திருவெழுகூற்றிருக்கை


இணைக்குறள்
ஆசிரியப்பா

4

  அருணகிரிநாதர்

 சுவாமிமலை முருகன்
 திருவெழுகூற்றிருக்கை


நேரிசை
ஆசிரியப்பா

5

வண்ணச்சரபம் தண்டபாணி    சுவாமிகள்






 யானைமுகன் எழுகூற்றிருக்கை

முருகவேள்  எழுகூற்றிருக்கை-2
பராசக்தி எழுகூற்றிருக்கை

திருவரங்கத் திருவெழுகூற்றிருக்கை
திருவல்லிக்கேணித்
திருவெழுகூற்றிருக்கை


நிலைமண்டில
ஆசிரியப்பா



நிலைமண்டில
ஆசிரியப்பா

நிலைமண்டில
ஆசிரியப்பா

நிலைமண்டில
ஆசிரியப்பா

நிலைமண்டில
ஆசிரியப்பா



5


5


5

5

5

வண்ணச்சரபம் தண்டபாணி            சுவாமிகள்


முருகவேள் திருவெழு-  கூற்றிருக்கை-1

நிலைமண்டில
ஆசிரியப்பா
4

வண்ணச்சரபம் தண்டபாணி            சுவாமிகள்


திருமால்
எழுகூற்றிருக்கை

நிலைமண்டில
ஆசிரியப்பா


6

வண்ணச்சரபம் தண்டபாணி            சுவாமிகள்


சூரியன்       எழுகூற்றிருக்கை

நிலைமண்டில
ஆசிரியப்பா


7

அனந்தநாராயணன்

 அண்ணாமலையான்
 திருவெழுகூற்றிருக்கை


இணைக்குறள்
ஆசிரியப்பா
5


ஓகை நடராஜன்


படஞ்சுட்டுங்கதை எழுகூற்றிருக்கை*


நிலைமண்டில
ஆசிரியப்பா


8

வண்ணச்சரபம் தண்டபாணி            சுவாமிகள்

சண்முகன் எண்கூற்றிருக்கை

நிலைமண்டில
ஆசிரியப்பா


5

வண்ணச்சரபம் தண்டபாணி            சுவாமிகள்


சிவபெருமான் ஒன்பது கூற்றிருக்கை


நிலைமண்டில
ஆசிரியப்பா

5

வண்ணச்சரபம் தண்டபாணி            சுவாமிகள்


திருமால் ஒருபது கூற்றிருக்கை

நிலைமண்டில
ஆசிரியப்பா


5

வண்ணச்சரபம் தண்டபாணி            சுவாமிகள்


பொதுக்கடவுள் தசாங்கக் கூற்றிருக்கை

நிலைமண்டில
ஆசிரியப்பா


8
* இச்செய்யுளின் வாழ்த்துப் பகுதி, நான்கு, ஐந்து, ஆறு கூறுகளைக் கொண்ட கூற்றிருக்கைச் செய்யுள்களைக் கொண்டதாகவும் படக்கவிதைப் பகுதி எழுகூற்றிருக்கையாகவும் அமைந்துள்ளன.

வே.இரா. மாதவனின் நூலில் (5),”எழுகூற்றிருக்கையை அடிப்படையாகக் கொண்டு நாற்கூற்றிருக்கை, எண்கூற்றிருக்கை, ஒன்பது கூற்றிருக்கை, ஒருபது கூற்றிருக்கை போன்றவற்றை முறையே, வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் போன்றோர் பாடியிருப்பதை அறியலாம்” என்ற குறிப்பு உள்ளது. எனினும், இக்குறிப்பைத் தவிர இச்செய்யுள்களையோ இவை பற்றிய மற்ற செய்திகளையோ இந்நூலில் காணவில்லை. பாம்பன் சுவாமிகளின், பலவகைச் சித்திர கவிகளைக் கொண்ட பத்துப் பிரபந்தம் என்னும் (இப்போது கிட்டாத) நூலில் இந்த நாற்கூற்றிருக்கை இருக்க வாய்ப்புள்ளது. அண்மையில், சந்தவசந்தம்  வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் அனைத்துக் கூற்றிருக்கைகளும் மற்ற வகை மிறைக்கவிகளும் உரையுடன் வெளியிடப் பட்டிருப்பது போற்றத்தக்கது (6). சைவம், வைணவம், காணாபத்தியம், சாக்தம், கௌமாரம், சௌரம் என்னும் அறுவகைச் சமயக் கடவுளர்களைப் பற்றியும் தனித்தும், கூட்டாகவும் கூற்றிருக்கைகள் அமைத்திருப்பதும், இச்செய்யுள்களின் தேர் வடிவ அமைப்புகளில் சில முந்தைய கூற்றிருக்கைகளில் காண்பதினின்றும் வேறுபட்ட அமைப்புக்களைக் கொண்டனவாகச் செய்திருப்பதும், எழுகூற்றிருக்கை மட்டுமன்றி எட்டு, ஒன்பது, பத்துக்கூறுகள் கொண்ட கூற்றிருக்கைகளை இயற்றியிருப்பதும் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் இவ்வகைச் செய்யுள்களில் புகுத்தியுள்ள புதுமைகளாகும். மேலுள்ள பட்டியலில், இறைவனைப் பற்றிய கூற்றிருக்கைகளில் எண்களைக் குறிக்கும் சொற்கள் உள்ள பகுதிக்குப் பின்னுள்ள இறுதி அடிகள் எண்கள் பற்றிய குறிப்பின்றி, செய்யுளை இயற்றுபவருடைய கருத்துக்களை இயம்புவனவாக அமையும்.

4. தேர்வடிவ அமைப்பு வகைகள்

கூற்றிருக்கைச் செய்யுள்களில் காணும் தேர் அமைப்பில் மேலுள்ள பட்டியலில் உள்ள 19 பாடல்கள் எவ்வாறு வேறுபடுகின்றன என்பதை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம். கீழுள்ள படங்களில், கூற்றிருக்கைச் செய்யுளின் ஒவ்வொரு கூறிலும் இருக்கும் சொற்களின் எண் வரிசையை ஒட்டி, மேற்சொன்ன பத்தொன்பது கவிதைகளிலும் காணப்படும் தேர் வடிவ அமைப்பை ஏழு வகையாகப் பிரித்துள்ளேன்.
   




மேலுள்ள படங்களில் காணும் அமைப்புகளில், காலத்தினால் முந்திய திருஞான சம்பந்தர், திருமங்கைமன்னன் ஆகியோரின் கூற்றிருக்கைச் செய்யுள்கள் 1-2-3 என்ற கூறோடு தொடங்கி  ஆறாவது கூறிலும் ஏழாவது கூறிலும் ஏழு எண்களும் வருமாறு அமைக்கப்பட்டுள்ளதைப் பார்க்கிறோம் (வகை 1, 2). சம்பந்தரின் செய்யுள் இறுதியில் எண் ஒன்று மேலுமொரு முறை வந்துள்ளது. படத்தில் இது எட்டாவது வரிசையாகக் காட்டப்பட்டுள்ளது (வகை-1). (எழுகூற்றிருக்கை என்பது செய்யுளில் அதிக பட்சமாக உள்ள எண்ணான ஏழின் அடிப்படையில் எழுந்த சொல்; இது கீழுள்ள படங்களில் மேலிருந்து கீழாகக் காணப்படும் வரிசைகளின் மொத்த எண்ணைக் குறிக்காது என்பதை நினைவில் கொள்ளல் நலம்.)

சுமார் ஒன்பதாம் நூற்றாண்டுக் காலத்தைச் சேர்ந்த நக்கீரதேவ நாயனாரின் சிவபெருமான் திருவெழுகூற்றிருக்கையின் அமைப்பு திருமங்கைமன்னனின் செய்யுளை ஒத்திருக்கிறது (வகை-2). எனினும், கிட்டத்தட்ட அதே காலத்தைச் சேர்ந்த யாப்பருங்கல விருத்தி உரையாசிரியர் தந்துள்ள எழுகூற்றிருக்கை முந்தைய இரண்டு வகைகளிலிருந்தும் மாறுபட்டிருக்கிறது. தொடக்கத்தில் 12 என்ற இரண்டு அறைகள் கொண்டிருப்பதோடு, குறிப்பாக, ஆறாம் வரிசை தவிர மற்றவற்றின் வலப்புறத்தில் ஈற்று எண் 1-ஆக இல்லாமல் 2- என்று இருப்பதும், ஈற்று வரிசையில் ஏறுவகையில் எண் ஏழு வரை சென்றபின் இறங்குவரிசை இல்லாமல் முடிந்திருப்பதும் (வகை-3) கவனிக்கத்தக்கது. இந்த மாற்றத்திற்கான காரணம் விளங்கவில்லை. கோவில் அமைப்புகளில் காணும் மாறுதல்களைப் போல, கூற்றிருக்கைகளின் சித்திர அமைப்பில் இவ்வாறு காணப்படும் வேறுபடுகளுக்குச் சமய ரீதியான காரணம் ஏதும் உள்ளதா என்று தெரியவில்லை. எண்களுக்கும் சமயங்களில் வழங்கும் தத்துவங்களுக்கும் தொடர்பிருப்பதை ஒட்டிச் சில அமைப்பு வேறுபாடு இருக்கவும் வாய்ப்புள்ளது. இவை போக, தேர் வடிவங்களை அவரவர்க்குப் பிடித்தமான வகையில் அமைத்து அலங்காரம் செய்வது போன்றது இவ்வேறுபாடுகள் என்று கருதவும் இடமிருக்கிறது.   

கூற்றிருக்கையின் முதல் வரிசை 1 என்ற எண்ணுடன் மட்டும் அமைந்து தேரின் கூம்பு வடிவான உச்சியைக் காட்டும் வகையில் இருப்பதை (வகை-4) முதன்முதலாக,  அருணகிரிநாதரின் (15-ஆம் நூற்றாண்டு) திருப்புகழில் உள்ள திருவேரகத்தில் உள்ள முருகனைப் பற்றிய திருவெழுகூற்றிருக்கைப் பாடலில் காண்கிறோம். இந்த அழகிய அமைப்பை வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் தமது எட்டுக் கூற்றிருக்கைகளில் ஐந்தில் பயன்படுத்தியிருக்கிறார். எஞ்சியுள்ள மூன்று செய்யுள்களும் வெவ்வேறு வகையான அமைப்புகளைக் கொண்டுள்ளன (பட்டியல்-1.) அவற்றில், முருகவேள் திருவெழு-  கூற்றிருக்கை, திருமால் எழுகூற்றிருக்கை ஆகிய இரண்டும், முதல் ஆறு வரிசைகளில் நக்கீரர், திருமங்கையாழ்வார் எழுகூற்றிருக்கைகளில் காணும் அமைப்பைக் கொண்டு, இறுதி ஏழாம் வரிசையில் எண் இரண்டிலிருந்து தொடங்குமாறு அமைக்கப்பட்டு ஒரு புது வகையைச் சார்ந்தனவாக (வகை-5) காண்கின்றன. சூரியன் எழுகூற்றிருக்கையில், முதல் மூன்று வரிசைகள் இதுவரை பார்த்த அமைப்புகளிலிருந்து மாறுபட்டும், பின்னர் வருவன இரண்டாம் வகையை ஒத்தும் இருப்பதைப் பார்க்கிறோம். இதற்கு ஏதேனும் விசேஷ காரணம் உண்டா என்பது தெரியவில்லை. (முதல் வரிசை, சூரிய பகவான் பவனிவரும் தேரில் அவர் தனியாக அமர்ந்திருக்கும் தட்டாகவும் 2,3 வரிசைகளை அவரது சாரதியான அருணன் அமரும் இடங்களாகவும் நாம் கற்பனை செய்து கொள்ளலாம்.)

’அகத்தியர்’, ‘சந்தவசந்தம்’ என்னும் இணைய வலைத்தளங்களில், நான் பல ஆண்டுகளுக்கு முன் எழுதிய திருவண்ணாமலையான் எழுகூற்றிருக்கை, நான்காம் வகை அமைப்பைக் கொண்டது (16). இச்செய்யுளின் முன்பகுதியில் பாடுவோனின் அவலநிலை பற்றியும் பின்பகுதியில் இறைவனின் சீர்கள் பற்றியும் எண்களைக் குறிக்கும் சொற்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது மற்ற கூற்றிருக்கைகளின்றும் சற்றே மாறுபட்ட கருத்து அமைப்பாகும். ’சந்தவசந்தம்’ வலைத்தளத்தில் அண்மையில் நடைபெற்ற படமொழிக் கவியரங்கம் ஒன்றில், புதுவகையான எழுகூற்றிருக்கைச் செய்யுள் ஒன்றைக் கவிஞர் ஓகை நடராஜன் இயற்றியுள்ளார் (17). அது வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் பொதுக்கடவுள் தசாங்கக் கூற்றிருக்கையின் தேர் அமைப்பை (வகை-7) கொண்டது. . இதுவரை நாம் கண்ட மற்ற கூற்றிருக்கைகள் ஒரு குறிப்பிட்ட கடவுளைப் பாடுபொருளாகக் கொண்டு அமைந்த விதத்தைப் பார்த்துள்ளோம். இதனின்றும் மாறுபட்டு, ஓகை நடராஜன் தமக்குக் கொடுக்கப்பட்ட படம் ஒன்று தமக்குள் எழுப்பிய பொருளை விளக்குவதற்கு எழுகூற்றிருக்கை யாப்பமைதியைப் பயன்படுத்தியுள்ளார். இலக்குவன் அனுமன் ஆகிய இருவரைச் சுற்றி அமைக்கப்பட்ட இக்கவிதை கற்பனை வளம் நிறைந்த ஒரு பாராட்டத்தக்க, புதுமையான முயற்சியாகும். மற்றோரின் எழுகூற்றிருக்கைச் செய்யுள்களைப் போலன்றி, இவரது செய்யுளில், இறுதிப் பகுதியில் கூற்றிருக்கை அமைப்பு இல்லாத மேலதிகமான அடிகள் இல.        

5. எழுகூற்றிருக்கை அல்லாத கூற்றிருக்கைகள்

கூற்றிருக்கை யாப்பில் எழுகூற்றிருக்கைகள் மட்டுமிருந்த நிலையை மாற்றி, வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், எட்டு, ஒன்பது, பத்து எண்கள் கொண்ட கூற்றிருக்கைகளை ஒரு புது முயற்சியாக இயற்றியுள்ளார். இக்கூற்றிருக்கைச் செய்யுளை எழுதுவதற்கு எழுகூற்றிருக்கையை விட மிகுதியான திறன் தேவைப்படும் என்பதை எளிதில் ஊகிக்கலாம். சண்முகன் எண்கூற்றறிக்கை, சிவபெருமான் ஒன்பதுகூற்றிருக்கை, திருமால் ஒருபது கூற்றிருக்கை, என்ற மூன்றும் அருணகிரியார் வகுத்த தேர் அமைப்பு உடையன (வகை-4.) மாறாக, பொதுக்கடவுள் தசாங்கக் கூற்றிருக்கையில், வண்ணச்சரபம் சுவாமிகள் ஒரு முற்றிலும் புதிய வகையான அமைப்பை அறிமுகப்படுத்தியிருக்கிறார் (வகை-7). இது மிகவும் அருமையானதும், அமைக்கச் சற்றுக் கடினமானதுமான வகை. மற்ற கவிஞர்களின் அமைப்புகளில், ஏழாம் எண்ணைக் குறிப்பிடும் வரிசையை எட்டியதும் செய்யுளில் மேலதிகமாக எண்களைக் குறிக்கும் சொற்கள் தேவைப்படா. தேர் அமைப்பில், தட்டுக்கு மேல் பகுதியில் உள்ள சொற்களே கீழ்ப் பகுதியிலும் பயிலும். ஆனால் இந்தப் புதிய ஏழாம் வகை அமைப்பில், செய்யுள் மேலும் தொடர்ந்து, ஏழு எண்களையும் குறிக்கும் வேறு சொற்கள் கொண்டதாக இருக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. முன்னர் குறித்தபடி, ஓகை நடராஜன் இந்த வகையில் தம் எழுகூற்றிருக்கைக் கவிதையை அமைத்துள்ளார். மேலதிகமாக, இவர் எழுகூற்றிருக்கைப் பகுதியைத் தவிர, தமது செய்யுளின் வாழ்த்துப் பகுதியில் மூன்று, நான்கு, ஆறு கூற்றிருக்கை அமைப்புகளைக் கையாண்டுள்ளார் என்பதும் நோக்கற்பாலது.

6. முடிப்பு

இறைவன் திருவருள் பெற்ற அடியார்களாகிய சம்பந்தர், திருமங்கையாழ்வார், அருணகிரிநாதர், தண்டபாணி சுவாமிகள் ஆகியோரின் திருவெழுகூற்றிருக்கைகள் இறைவனின் சீர்களை எண்வரிசைகளில் அமைத்துச் சித்திர கவிப் பாவகைக்குச் சிறப்புச் சேர்ப்பதுடன், மக்களுக்குத் தன் அருளைவழங்க ஊர்வலம் வரும்போது இறைவன் அமரும் தேரைப் பாமாலைகளால் அலங்கரிப்பது போன்று அமைந்த கூற்றிருக்கைப் பாடல்கள் அவற்றைப் படிக்கும் அடியார்களின் இறையுணர்வை மிகுதியாக்க வல்லவை. சமயம் தொடர்பான இலக்கியத்தில் இக்கூற்றிருக்கைகள் மந்திரங்கள் போன்று மதிக்கப்படுவன என்றும் அறிகிறோம் (12-14). இது தொடர்பான மேலதிகச் செய்திகளை சமய நூல்களில் பார்க்கலாம். இறைவனை முன்னிட்டு அமைக்கப்படாத கூற்றிருக்கைகள் இந்த யாப்பில் புதுமையைப் புகுத்தக் கவிஞர்களுக்கு வாய்ப்புத் தருவனவாக அமையும். எனினும், பக்தி இலக்கிய மரபின்படி கூற்றிருக்கைச் செய்யுள்கள் புனிதமானவை என்று கருதப்படுவதால், வழிவழியாக வந்துள்ள அக்கூற்றை மதிக்கும் வகையில் இந்தப் பாவினத்தில் கவிதைகள் படைத்தல் நன்று.   

7. துணைநூல்கள் பட்டியல்

1. தண்டியலங்காரம், உரையுடன் (1998) கொ. இராமலிங்கத் தம்பிரான் (குறிப்பாசிரியர்), திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.
2. மாறனலங்காரம் - திரு.நாராயணையங்கார், (பதிப்பாசிரியர்), பதிப்பித்த ஆண்டு, பதிப்பக விவரங்கள் கிட்டவில்லை.
3. யாப்பருங்கலம் (பழைய விருத்தியுரையுடன்) (1998) மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை (பதிப்பாசிரியர்), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
4.நவநீதப் பாட்டியல் (1944) எஸ்.கலியாண சுந்தரையர், எஸ்.ஜி.கணபதி ஐயர் (பதிப்பாசிரியர்கள்)    http://www.tamilvu.org/library/l0L00/html/l0L00ind.htm
5. சித்திரக் கவிகள் (1983) வே.இரா. மாதவன் (பதிப்பாசிரியர்), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
6. சித்திர கவிகள் - வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளியது (1987), தி.செ. முருகதாச சுவாமிகள் (உரையாசிரியர்), சால்பகம், தஞ்சாவூர்.
7.. வண்ணையந்தாதி-சித்திர கவிகள் (1887) சி.ந. சதாசிவ பண்டாரத்தார், தீனோதயவேந்திரசாலை அச்சகம், சிங்கப்பூர்
8. சித்திரச் செய்யுள் (2000) ப.வி. இக்குவனம், Stamford Press, சிங்கப்பூர்
9. சித்திர கவி (1996) க.பழனிவேலன், ஏ.ஆர். அச்சகம், சென்னை
10. சிங்கப்பூர்ச் சித்திர கவிகள் (2000) சுப. திண்ணப்பன், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் சங்கம் வெள்ளி விழா மலர், பக். 87-95.
11. Pascal’s Triangle, வலைத்தளச் சுட்டி: http://en.wikipedia.org/wiki/Pascal's_triangle
12. பதினொன்றாந்திருமுறை (1995) ஞானசம்பந்தம் பதிப்பகம், சென்னை; பக். 317-321. http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=11&Song_idField=11012&padhi=040&button=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95
13. தேவாரத் திருப்பதிகங்கள் (2005) அ.ச. ஞானசம்பந்தன் (பதிப்பாசிரியர்), கங்கை புத்தக நிலையம், சென்னை; பக். 197-198: வலைத்தளச் சுட்டி: http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=1&Song_idField=1128&padhi=136+&button=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95
14. ஸ்ரீநாலாயிர திவ்வியப் பிரபந்தம், பாகம் 1. (2000) லிப்கோ, திருச்சி; பக். 935-938. வலைத்தளச் சுட்டி: http://www.tamilkalanjiyam.com/literatures/divya_prabandham/thiruvezhu_koorrirukkai.html)
15. திருப்புகழ் (1987) வ.சு. செங்கல்வராய பிள்ளை (உரையாசிரியர்), பகுதி 6, திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்; வலைத்தளச் சுட்டி: http://www.kaumaram.com/thiru_uni/tpun1326.html
16. திருவண்ணாமலையான் திருவெழுகூற்றிருக்கை (2004) வே.ச. அனந்தநாராயணன், வலைத்தளச் சுட்டி: http://www.treasurehouseofagathiyar.net/29000/29087.htm; https://groups.google.com/forum/?fromgroups#!topic/santhavasantham/1SWeaKH20rM
17. படஞ்சுட்டுங் கதை (2012) ஓகை நடராஜன், வலைத்தளச் சுட்டி: https://groups.google.com/forum/?fromgroups#!topic/santhavasantham/FaYZI_Bo17Y
  

Saturday, May 12, 2018

சித்திரச் செய்யுள் - பகுதி 2


                     "உயிரூட்டும் செய்யுள்கள்" 

                          வே.ச. அனந்தநாராயணன் (அனந்த்)


சித்திரச் செய்யுள் என்று பெயர் கொண்ட கவிதை இனம் பற்றி முந்திய கட்டுரையில் பார்த்தோம். அதன் இறுதிப் பகுதியில் ரமண மஹர்ஷியின் பாடல் ஒன்றில் காணும் சொல் அமைப்பை ஒரு ” சுருள் இணை” (a pair of interacting helices in a zipper arrangement) வடிவச் சித்திர கவியாகத் தந்திருந்தேன்.  இவ்வடிவம் புரதங்கள் (proteins) பலவற்றில் காணப்படுவதையும் சுட்டியிருந்தேன்.  அதையொட்டி, மேலும் சில செய்திகளை இங்குப் பரிமாறிக் கொள்ளலாம் எனத் தோன்றியது. அதற்கு  முன்னுரையாக, ஒரு சிறு மீனின் கற்பனையில் உருவான சித்திரம் ஒன்றைக் கீழே பாருங்கள்:

ஒரு கவிதையை இயற்றுவது போன்ற கவனத்துடனும் திறமையோடும் இந்த மீன் தனது ஓவியத்தைப் படிப்படியாக உருவாக்கும் அழகைக் காட்டும் காணொளி ஒன்றை இந்த இணைய தளத்தில் பாருங்கள்:  https://www.youtube.com/watch?v=B91tozyQs9M
அதைப் பார்த்த பின்னர் (உங்கள் வியப்பு அடங்க நேரம் தந்தபின்) மேலே படியுங்கள். 

இயற்கையில் நிகழும் இத்தகைய அதிசயங்களை உயிரினங்களில் உள்ள மூலக்கூறுகளின் அமைப்புகளின் அடிப்படையில் நோக்கலாம் என்ற எண்ணத்தை இந்தக் கட்டுரையில் தர முயன்றிருக்கிறேன். அதற்கு முன்னுரையாக,  புரதங்கள் பற்றிய அடிப்படைத் தகவல்களை முதலில் கீழே தந்துள்ளேன். அதன் பின்னர், எவ்வாறு புரதங்களின் முப்பரிமாண வடிவங்களை ‘உயிரூட்டும்’ சித்திரச் செய்யுள்களாக நாம் கருதலாம் என்பதை விளக்கியுள்ளேன். நம் உடலில் காணும் அற்புதமான மூலக்கூறுகள் (molecules) பற்றியும் அவற்றின் வடிவங்களைப் பற்றியுமான இந்த அடிப்படையான உயிர்வேதியியல் (biochemistry) அறிவு நமக்கு எப்போதும் பயனுள்ளதாக அமையும், எனவே உற்சாகமாக மேலே படியுங்கள்!

புரதங்களும், மரபணுவின் (gene) பகுதிகளான ஆர்என்ஏ (RNA- Ribo Nucleic Acid), டீஎன்ஏ (DNA- Deoxyribo Nucleic Acid) போன்ற உயிரியல் தொடர்பான மூலக்கூறுகள் (molecules) பல சிறிய மூலக்கூறுகளின் தொகுப்பாக அமைந்தவை. நம் உடலில் காணப்படும் 25-ஆயிரத்திற்கும் மேலான புரதங்கள் யாவும், 21 வகையான ’அமைனோ ஆசிட்’ (Amino acid) எனப்படும் சிறிய மூலக்கூறுகளை வெவ்வேறு வகைகளில் தொடுக்கப்பட்ட சங்கிலிகளாக அமைந்தவை. அதுபோல, டீஎன்ஏ, ஆர்என்ஏ மூலக்கூறுகள் பெரும்பாலும் நான்கே வகையான நியூக்ளிக்ளியோடைட் எனப்படும்  மூலக்கூறுகளைப் பல்வேறு வகையில் தொடுத்து அமைந்த சங்கிலிகளாக அமையும். இந்தச் சங்கிலி போன்ற அமைப்பை முதல்நிலை வடிவம் (ஆங்கிலத்தில் primary structure) என்பார்கள். இவ்வடிவம் படிப்படியாக இரண்டு, மூன்று, நான்காவது நிலை அமைப்புகளில் பல அற்புத முப்பரிமாண அமைப்புகளாகப் பரிமாணம் அடைவதை அறிவியல் வல்லுநர்கள் நமக்குக் காட்டியுள்ளார்கள். அவ்வகை அமைப்புகளுக்கும் சித்திரகவிச் செய்யுள்களுக்கும் ஆழமான தொடர்பு இருப்பதாக எனக்குப் படுகிறது. அதை விளக்க எழுந்ததே இந்தக் கட்டுரை. 

எனது கண்ணோட்டத்தின்படி, புரதங்கள்,  டீஎன்ஏ, ஆர்என்ஏ போன்றவற்றில் உள்ள அமைனோ ஆசிட் அல்லது நியூக்ளிக் ஆசிட் மூலக்கூறுகளை, கவிஞன் இயற்றும் செய்யுள்களின் அடிப்படையான எழுத்துக்களோடு ஒப்பிடலாம்.  எப்படிச் செய்யுள் எழுத்துக்களைக் குறிப்பிட்ட விதங்களில் அமைத்தால் பல்வேறு வகையான சித்திரச் செய்யுள் அமைப்புகள் எழுகின்றனவோ அதுபோலவே, உயிரினங்களில் காணப்படும் சங்கிலி போன்ற நீண்ட  புரதம் அல்லது நியூக்ளிக் ஆசிட் மூலக்கூறுகள் இயற்கையாகவே, இயற்கையின் இலக்கண  விதிகளின்படி, பல்வேறு முப்பரிமாண வடிவங்களை மேற்கொள்வதைக் காணலாம்.  அவற்றில் ஒன்றான ‘லூசீன் ஜிப்பர்’ வடிவை, ”சித்திரச் செய்யுள்- பகுதி 1-ல் சுட்டியுள்ளேன். அவ்வடிவைப் போன்ற மேலும் நூற்றுக்கணக்கான வகை வடிவங்களைப் புரதங்கள், நியூக்ளிக் ஆசிட்  'சங்கிலிகள்’ மேற்கொள்வதைக் கடந்த 60,70 ஆண்டுகளில் உயிரியல், உயிர்வேதியியல் ஆராய்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்தக் கண்டுபிடிப்புகள் மருத்துவத் துறை மிகப் பெரும் அளவில் முன்னேற வழிவகுத்து, புற்றுநோய் உட்படப் பல நோய்களுக்கான மருந்துகளைத் தந்துள்ளன.  

புத்தம் புதிதாக நமது உடலிலுள்ள செல்களில் உண்டாக்கப்பட்ட ஒரு புரதச் சங்கிலி ( primary structure), தொடக்கத்தில் ஒரு ஒழுங்கான வடிவ அமைப்பை மேற்கொள்ளாமல், எண்ணற்கரிய வடிவங்களின் கூட்டாகக் காணப்படும்; இது ஒரு செய்யுளை ஒரு விதியையும் பின்பற்றாமலும், நூற்றுக் கணக்கான வகைகளில் அமைப்பது போலாகும்.  அடுத்த சில நிமிடங்களுக்குள், இந்த ஒழுங்கில்லா வடிவம் (random structure) பட்டை (corrugated strip or sheet), சுருள் (helix) போன்ற இரண்டாவது நிலை (secondary structure) வடிவங்களை உருவாக்கத் தொடங்கும். இதையடுத்து, இந்த இரண்டாவது நிலை வடிவங்கள் ஒன்றோ பலவோ கூட்டாகச் சேர்ந்து மூன்றாவது நிலை வடிவத்தை (tertiary structure) உருவாக்கும். சில புரதங்களில் இதுவே அவற்றின் கடைசி வடிவமாக அமையும். மற்றும் சிலவற்றில், இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட மூன்றாவது நிலை வடிவங்களின் கூட்டாக அமைந்த நான்காவது நிலை வடிவம் (quaternary structure) உருவாகும். புரதம் நம் உடலில் தத்தமக்கான பணியைப் புரிய இத்தகைய ஒழுங்கான வடிவங்களை மேற்கொள்ளுதல் மிக அவசியம். இவ்வடிவங்களில் ஒரு சிறிய குறையிருந்தாலும் புரதத்தின் பணியாற்றலில் பழுது ஏற்பட்டு நோய்கள் வரச் சாத்தியமாக்கும்- சரியாக அமையாத செய்யுள் நமக்குத் தலை, மனவலி உண்டாக்குவதைப் போல!.       

சித்திரச் செய்யுள் ஒன்றின் எழுத்து வடிவத்தை புரதத்தின் முதல்நிலை வடிவத்தோடு ஒப்பிடலாம். அச்செய்யுள் கவிஞன் தேர்ந்தெடுத்த சித்திர வடிவத்திற்குள் அமைக்கப்பட்ட நிலையைப் புரதத்தின் இரண்டாவது நிலை வடிவத்தோடு ஒப்பிடலாம். எனினும், சித்திரச் செய்யுள்களில் காணும் இரண்டே பரிமாணம் கொண்ட (திரைச்சீலையில் வரையப்பட்ட) சித்திரங்கள் போலன்றி, புரதங்களின் இரண்டாவது நிலை வடிவங்கள் முப்பரிமாண ஓவியங்கள் மற்றும் சிற்பங்களைப் போல முப்பரிமாணம் கொண்டு திகழ்வதை நினைவிலிருத்த வேண்டும்.  சித்திரச் செய்யுளை  முப்பரிமாணம் கொண்ட சித்திர வடிவங்களில் உள்ளடக்கி அமைப்பது மிகவும் சிரமமான, இதுவரை முயலாத ஆனால் முடியக்கூடிய சாதனையே.   

இனிப் புரதங்களில் காணும் சித்திர வடிவங்களுக்கான ஓரிரு எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போம்:

1. இரத்தத்தில்ஆக்ஸிஜனைச் சுமக்கும் ஹீமோக்ளோபின் என்னும் புரதத்தின் அமைப்பு: 

மேலிருந்து கீழாக, முதல் நிலை (primary structure); பட்டை, சுருள் போன்ற அமைப்புகளைக் கொண்ட இரண்டாவது நிலை வடிவம் (secondary structure); முதல் நிலை வடிவங்களின் கூட்டாக அமைந்த மூன்றாவது நிலை வடிவம் (tertiary structure); நான்கு ஹீமோக்ளோபின் மூலக்கூறுகளின்  மூன்றாவது நிலை வடிவங்களின் கூட்டாக அமைந்த நான்காவது நிலை வடிவம் (quaternary structure) என்ற முப்பரிமாண அமைப்புக்கள் காட்டப்பட்டுள்ளன.      



                                  
2. மற்றொரு புரதத்தின் நான்காவது நிலை அமைப்பு:

3. புரதங்களைப் போல, டீ.என்.ஏ. போன்ற நியூக்ளிக் ஆசிட் மூலக்கூறுகளும் தமக்கே உரித்தான வடிவங்களை தமது 4,5 வகையாக நியூக்ளிக் அமில மூலக்கூறுகளின் தொடுப்பிற்கேற்ற வண்ணம் மேற்கொள்ளும். 
டீ.என்.ஏ. அமைப்பு. இடமிருந்து வலம்: முதல், இரண்டாவது, மூன்றாவது நிலை வடிவங்கள்.  




4. சில ’வைரஸ்’களின் வடிவங்கள்: இவை, ந்யூக்ளிக் ஆசிட் ஒன்றை மையமாகக் கொண்டு அதைச் சுற்றி அமைந்துள்ள பல புரதங்களின் மூன்றாவது நிலை வடிவங்களின் கூட்டாக அமைந்த மாபெரும் ‘சித்திரச் செய்யுள்களாகக்’ காட்சியளிப்பதைக் கண்டு வியக்கலாம். 


           


5. மரபணுவில் (gene) காணப்படும் ’க்ரோமோஸோம்’ (chromosome) என்னும் பகுதியில் விதவிதமான டீஎன்ஏ அமைப்புகளைக் காணலாம்:



இப்போது கூறுங்கள், நம் உடலில் இருக்கும் மூலக்கூறுகளை உயிரூட்டும் சித்திரச் செய்யுள்களாகக் கருதலாம் தானே?


இப்போது இடைச்செருகலாகச் சில செய்திகள்: 
நான் உயிர்வேதியியல் பேராசிரியராகப் பணி புரிகையில், புரதங்களின் வெவ்வேறு வகையான அற்புத முப்பரிமாண அமைப்புகள் ( 3-dimensional structure (or 'conformation' of proteins)  பற்றியும் அவை எவ்வாறு அம்மூலக்கூறுகள் தத்தம் தொழில்களை ஆற்றத் துணை செய்கின்றன என்பது பற்றியும்  மாணவர்களுக்கு வகுப்பில் விவரிப்பது எனக்குப் பிடித்தமான வேலை. அத்துடன், அவ்வடிவங்களின்  கலையழகு பற்றியும் பேசுவதுண்டு.  அவ்வகையில் நான் புரதங்களைப் பாம்புகளோடு ஒப்பிட்டு அவற்றின் விதம் விதமான அமைப்புகளை விவரிப்பதுண்டு.  முன்பு கூறியது போல, நம் உடலில், அமைனோ அமிலங்களின் (amino acids) தொகுப்பான ஒரு சங்கிலியைப் போல உருவாகும் புரதங்கள் தங்கள் பிறப்பிடமான ரைபோஸோம் (ribosome) கூட்டிலிருந்து வெளிவருகையில் பாம்புகள் போலப் பல்வகையில் நெளிந்து, நீண்டும் சுருண்டும் பலவகையான உருவங்களோடு வெளிவரும் (எவ்வாறு ஒரு பாம்புகள் நிறைந்த பள்ளத்தில் (snake pit) ஒவ்வொரு பாம்பும் ஒவ்வொரு கணத்திலும் வெவ்வேறு வடிவங்கள் பூண்டு நெளியுமோ அதுபோல.) இதைக் கவிதைக்கான எழுத்துகளை, ஒருவகைத்தான குறிப்பிட்ட வடிவத்திலன்றிக் கோடிக்கணக்கான உரைநடை அல்லது பாவடிவங்களிலோ அமைப்பது போல எண்ணலாம். பௌதிகக் கணக்குப் படி ஒரு சராசரிப் பரிமாணம் கொண்ட புரதத்திற்கு (சுமார் 100 அமைனோ ஆசிட்களின் சங்கிலித் தொகுப்பு) இந்தப் பிரபஞ்சம் யாவிலும் உள்ள அணுக்களின் எண்ணிக்கையை விட அதிகமான (ஒன்று என்ற எண்ணை அடுத்து 89 பூஜ்யங்கள் கொண்ட தொகையுள்ள) முப்பரிமாண வடிவங்களை மேற்கொள்ள வாய்ப்பிருக்கிறது! ஆனால், என்னே அதிசயம்! மிக விரைவில் (1-20 நிமிடங்களுக்குள்) ஒவ்வொரு புரதமும் எக்காலத்தும், எல்லா உயிரினங்களிலும் தனக்கே உரித்தான ஒரே ஒரு தனிவடிவை மேற்கொண்டு விடுவதைப் பார்க்கிறோம். (இது, ஒவ்வொரு பாடலும் ஒரு தனிப்பட்ட சித்திரகவி அமைப்பைத் தேர்ந்துகொள்வது போன்றது.) இது அறிவியலாளர்களைப் பிரமிக்க வைக்கும் செயல். 


​
இப்படித் தேர்ந்தெடுப்பதற்கு எந்த பௌதிக-இரசாயன விதிகளைப் பின்பற்றுகின்றன என்ற ஆய்வு பல நோபல் பரிசுகளை வாங்கித் தந்திருக்கிறது, ஆனால் முடிவான விளக்கம் இன்னும் கிட்டியபாடில்லை!

புரதங்கள் போலப் பாம்புகளும் சுருள் போன்ற வடிவங்களை மேற்கொள்வதாகச் சித்தரிக்கும் கார்ட்டூன் படங்களைக் கேரி லார்ஸன் (Gary Larson) என்னும் கார்ட்டூன் கலைஞரின் படைப்புகள் பலவற்றில் நான் கண்டதுண்டு. தனது இறுதி முப்பரிமாண வடிவத்தை மேற்கொள்வதற்கான விதிகளைப் புரிந்து கொள்ள இயலாமல் தலையைச் சொரிந்து கொள்ளும் ஒரு பாம்பின் கேலிச் சித்திரம் கீழே:  



​மற்றொரு
 பாம்புப் ‘படம்’- சுழல் நடனம் (twist dance) ஆடும் பாம்புகளின் உடலில் உள்ள சுருள் (helical) அமைப்பு எப்படி அவற்றிற்குத் துணைபுரிகின்றன என்று பாருங்கள்! 


​

என் உயிர்வேதியியல் வகுப்புகளின் தொடக்கத்தில் கேரி லார்ஸன் படங்களில் ஒன்றை முதலில் திரையில் காட்டிய பின்னரே எனது உரையைத் தொடங்குவது எனது வழக்கம். இதன் வழியாக, மாணவர்களின் கவனத்தை முழுமையாக இழுத்து வைப்பதும் சாத்தியமாகும்! 

இனி, நாம் முந்தைய பகுதிகளில் பார்த்த சித்திரச் செய்யுள்-புரத வடிவம் தொடர்பைப் பற்றித் தொடர்வோம். 

நம் உடலிலுள்ள புரதங்கள், ந்யூக்லிக் ஆசிட் போன்ற மூலக்கூறுகள் பல்வகையான சித்திர கவி அமைப்புகளைப் போலவும் அவற்றிற்கும் அதிகமானதுமான வடிவங்களைக் கொண்டு தமது பணிகளைச் செய்வதைப் பார்க்கையில், நாம் நம்முடைய சொந்தக் கற்பனையிலிருந்து உண்டாக்கும் அழகழகான வடிவங்களை (சித்திர கவி வடிவங்கள் உட்பட!), கண்ணுக்குத் தெரியாமல் நம் உடலுள் வாழும் மூலக்கூறுகள்தாம் தீர்மானிக்கின்றனவோ என்ற ஐயம் எனக்குள் எழுகிறது. 

இக்கட்டுரையின் முதல் பாகத்தில் நாம் கண்ட ஹீமோக்ளோபின், டிஎன் ஏ., வைரஸ்கள் ஆகியவற்றின் முப்பரிமாண வடிவங்களை மீண்டும் பாருங்கள். அத்தோடு, கீழே தந்துள்ள எடுத்துக்காட்டுகளுமாகச் சேர்ந்து மேலே கூறிய என் கருத்தை உறுதிப் படுத்துகின்றன. 

1. கீழே காணும் படத்தில் உள்ள கோப்பை, ஜாடி போன்றவைகளில் வரையப்பட்ட சித்திர வேலைப்பாடுகள் புரதங்கள் மேற்கொள்ளும் அடிப்படை அமைப்புகளை (protein motifs like Greek Key motif) ஒத்திருப்பதைக் காட்டுகின்றன. (இடப்பக்கம் உள்ளவை  நடைமுறையில் நாம் காணும் கலைப்படைப்புகள்,  வலதுபக்கம் உள்ளவை புரதங்களிலும், வைரஸ் என்னும் உயிரிகளிலும் காணப்படும் வடிவங்களில் காணும் ஓவிய வடிவங்கள்.) 

  
’
இதுபோல, கூடைகளிலும் கோலங்களிலும் காணும் சித்திர அமைப்புகளும் உடலுள் வாழும் மூலக்கூறுகளில் இருப்பதை உயிர்வேதியியல் ஆய்வுகளின் கண்டுபிடிப்புகளில் (?) காண்கிறோம். 


கூடையின் அடிப்பாகப் பின்னல் வடிவமைப்பு                                      Zika-வைரஸ்ஸின் புரதங்களின் அமைப்பு.


ஆக, . நம் பெருமையாகக் கூறிக்கொள்ளும் நமது கற்பனை ஆற்றல் இவ்வளவு தானா?? மேலும் பார்க்கப் போனால், ஒரு அணுவிலிருந்து இந்தப் பிரபஞ்சம் வரை எங்கும் சித்திரகவி போன்ற அமைப்பு பரந்து காணப்படுவது,  இயற்கையின் சித்திரக் கலைத் திறனை நம் மனத்தில் ஆணியறைந்தாற் போல உணர வைக்கிறது:


அணுவின் அமைப்பு


    
அகிலத்தின் அமைப்பு

சிலந்தியின் வலை, தூக்கணாங் குருவிக் கூடு, இலைகள், பூக்கள், காய் கனிகள் போன்ற இயற்கையான ஒழுங்கு வடிவங்களுக்கும்,  நாம் படைக்கும் ஓவிய, சிற்ப வடிவங்களுக்கும் நமது உடலினுள்ளே உலவும் புரதங்கள், நியூக்ளிக் ஆசிட் போன்றவற்றால் உருவாக்கப்பட்ட ’உயிரூட்டும் செய்யுள்களே’ காரணமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.  இத்தோடு, இக்கட்டுரையின் தொடக்கத்தில் நாம் கண்ட சிறு மீனின் “கற்பனை”யில் உருவாகும் ”சித்திரச் செய்யுளையும்”  சேர்த்துப் பார்த்தால் நாம் நமது கற்பனை என்று பெருமைப் பட்டுக்கொள்ளும் கலை வடிவங்களுக்கு அடிப்படைக் காரணமாய் இருப்பவை உயிரினங்களின் உடலுள் இருக்கும்  மூலக்கூறுகள் தாமோ என்ற கேள்வி  வலுப்பெறுகிறது. இதை உணர்ந்ததால் தானோ பிகாஸோ போன்ற கலைஞர்கள் ஒழுங்கற்ற (asymmetric) வடிவங்களைப் படைத்துத் திருப்தி கொள்கிறார்கள்?   நமது கற்பனை ஆற்றல் இவ்வளவு தானா? சிந்தியுங்கள் (சுயமாக!).