Wednesday, May 15, 2019


கவிஞர் கண்ணதாசனின் ஒலிப்பதிவு செய்யப்பட்ட உரையொன்றின் ( https://www.youtube.com/watch?v=n9O_t0uBdpg ) தொடக்கத்தில் கவிஞர் கூறிய நகைச்சுவைத் துணுக்கை (வெண்டளை பயிலும்) இயற்கும்மி வடிவில் யாக்க முயன்றதன் விளைவு:
   
சொர்க்கம் நரகம் இவற்றிடை யேஉள்ள
.. சுவரொன்(று) இடிந்ததைக் கண்டவுடன்
சொர்க்கத்துக் காரார் நரகின ரைப்பார்த்துச்
.. சுவரை மறுபடி கட்டச்சொல்ல,

மிக்க அநியாயம்! நீங்களே தாம்கட்ட
.. வேண்டு மெனநர கோருரைக்கச்
சொர்க்கத்துக் காரர்கள் கோர்ட்டினில் உம்மேல்
… தொடுப்போம் வழக்கெனச் சொல்ல,வக்கீல்

வர்க்கத் தினர்யாரும் கிட்டவில் லைஅவர்
… வாழுவ தந்த நரகிலன்றோ?
தர்க்கம் புரிந்து நமைக்காக்க ஆளில்லாச்
.. சொர்க்கத்தி னால்நமக் கேதுபயன்? 

அனந்த் 15-5-2019
  

Friday, May 3, 2019

விடுதலை


        <> விடுதலை <>

கேட்டுக் கேட்டுச் சலித்துப் போயும்
.. கேட்ப(து) ஓய்வதில்லை

ஓட்டுக் குடிலில் ஓட்டை கண்ணை
.. உறுத்தல் தெரிந்தபின்னும்

வீட்டை விட்டு வெளியே வரவோர்
.. வழியும் தெரிவதில்லை.

மீட்டும் மீட்டும் வலையில் சிக்கும்
.. மீனாய் இருப்பதிலே

நாட்டம் இருக்கும் வரையில் எந்த
.. நாளும் போராட்டம்

பாட்டுள் பொருளாம் பொருளுள் பயனாம்
.. பரமன் நம்முள்ளக்

கூட்டில் சிக்க வைத்தால் போதும்
.. கிடைக்கும் விடுதலையே!

..அனந்த் 3-5-2019