http://chandhamanantham.blogspot.ca/2016/09/blog-post_25.html
அரியும் அரனும்
தேரில்நல் ஆசான் திருவோடு
காப்பார்தம்
பேரிலே கண்ணர் பெரும்பசியர்
வான்புரக்க
ஆழி யுறைவிடம் கொண்டிடுவார்
அன்புடையோர்
வாழத்தாம் தூதாய் வழிநடப்பார்
மாட்டார்
அரிவைஉடல் வைத்திடுவார்
ஆடவல்லார் ஆமிங்(கு)
அரியும் அரனென்று அறி.
அரி: அருச்சுனனுக்குத் தேரில் ஆசானாய்ப் போதித்தவர்; இலக்குமியோடு உலகைக் காப்பவர்; கண்ணன் என்பதைத் தமது பேர்களில் ஒன்றாய்க் கொண்டவர்; நல்ல பச்சைநிற (பசிய) மேனி உடையவர்; விண்ணுலகை ஆளப் பாற்கடலை உறைவிடமாகக் கொண்டவர்; பாண்டவர்களுக்காகத் தூது சென்றவர்; மாடு உடையவர் (இடையர்); சீதேவியை மார்பில் வைப்பவர்; (கோபியருடன்/ அல்லது, பாம்புத்தலைமேல்) ஆட வல்லவர்
அரன்: ஆராய்ந்தோமேயானால் (=தேரில்), சனகாதி முனிவர்களுக்குத் தட்சிணாமூர்த்தி குருவாய்ப் போதித்தவர்; பிச்சையெடுக்க ஓடேந்துபவர்; முக்கண்ணன் என்பதைத் தமது பேர்களில் ஒன்றாய்க் கொண்டவர்; (இரந்துண்டு வாழ்வதால்) பெரிய பசியோடு இருப்பவர்; தேவர்களைக் காப்பதற்காகப் பாற்கடலிலிருந்து எழுந்த நஞ்சை உட்கொண்டவர்; தம் அன்பனான சுந்தரமூர்த்தி நாயனாருக்காகப் பரவையிடம் தூது சென்றவர்; நந்தியை வாகனமாகக் கொண்டவர்; உமையை இடப்பாகத்தில் வைப்பவர்; அம்பலத்தில் நடம்ஆட வல்லவர்.
..அனந்த்