<> கண்ணன் பிறந்தான் <>
நறுமணம் நாறும் பூக்கள் நள்ளிர வலர சாந்தம்
உறுமன முடைய மேலோர் உவகையில் மகிழப் பூமி
சிறுமழை நனைந்து மேனி சிலிர்த்திடச் சிறையி னுள்ளே
குறுநகை தவழமாயன் குழந்தையாய் அவத ரித்தான்
****
<> குழலோசை <>
மலர்பூத்தது வனம்பூத்தது மதிபூத்தது
மகிழ்ந்து
நிலம்பூத்தது நதிபூத்தது நிழல்பூத்தது
நாட்டில்
தலம்பூத்தது குடிபூத்தது சனம்பூத்தது
வானோர்
குலம்பூத்தது கருமாமணி குழலோசையின்
ஒலியில்
****
<> கழல் நிழல் <>
மூங்கிலில் இசையைக் கூட்டும் முகில்வணன் குரலைக் கேட்க
ஏங்கிடும் அன்பர் நெஞ்சில் இனியதோர் கானம் ஆவான்
தாங்கிடும் குன்றால் தன்னைச் சார்ந்தவர் துயரம் தீர்த்தோன்
பூங்கழல் நிழலில் நின்றால் பொங்கிடும் இன்பம் வாழ்வில்!
****
<> மாயனின் சீர் <>
பெருவரை ஏந்தும் கையன் பெற்றமுடை
ஆயர்
.. பேசுவதை வேட்கும் பையன்
கருமுகில் வண்ண மெய்யன் கஞ்சனுயிர்
நீக்கிக்
.. காசினியைக் காத்த துய்யன்
அருமறை ஏத்தும் ஐயன் அன்புடையர்
நெஞ்சை
.. ஆசனமாய்க் கொண்ட மெய்யன்
வருதுயர் தீயில் தூசாய்
மங்கவைக்கும் இந்த
.. மாயனிவன் சீராம் ஐயே!
****
.. அனந்த்
24-8-2016