Saturday, December 24, 2016

உள்ளம் என்னும் ஊடகம்

”சந்தவசந்தம்” என்னும் மரபுக் கவிதைத் தளத்தில் தற்போது 
நடைபெற்றுவரும்  ’மாதமொரு கவியரங்கம்’ நிகழ்ச்சியில் இட்ட கவிதை:


<> உள்ளம் என்னும் ஊடகம் <> 

(அறுசீர் விருத்தம்; அரையடி: மா மா காய்)      
                                                                                                                                                                                                                          
எங்கும் நிறைந்த இறைவன்எனை  இந்தப் புவியில் படைக்கையிலே
பொங்கும் கருணை நினைப்போடு புவியில் வாழ்க்கை நடத்துவதற்(கு)
அங்கம் பலவும் தந்தபின்னர் அவற்றின் மேலாய் எனக்குள்ளே
தங்கும் அருமை ஊடகமாய்த் தந்தான் உள்ளம் எனும்பரிசை.

உலகில் பற்பல ஊடகங்கள் உலவும் ஆயின் அவைவெளியே
நிலவும் செயற்கைச் சாதனங்கள், நேர்மா றாக என்பிறவிப்
பலனாய்ப் பெற்ற ஊடகமோ பரிவோ டென்னுள் உறைந்தவணம்
சிலபோ தேனும் ஓய்வின்றிச் செயலைப் புரியும் திறனுடன்,நான்

உறங்கும் போதும் தன்பணியை ஒழுங்காய் நிதமும் செய்கையில்நான்
கிறங்கிப் போவேன் ஒருசமயம் கிலியில் சிலிர்ப்பேன் மறுசமயம்
உறங்கி விழித்த மறுகணமே ஓடிப் போகும் சேதிகளும்
திறங்கள் இங்ஙன் பலகொண்ட  தனிஊ டகமாம் என்னுள்ளம்.

பறந்தும் திரிந்தும் வெளியுலகில் பலவாய்ச் செய்தி கொண்டுவரும் 
பிறஊ டகங்கள் தருவதைத்தான் பெற்றுப் பின்னர் தரம்பிரித்துப்
’பெறுவாய் இவற்றை’ எனஎனக்குள் பேசி என்னைச் செயல்படுத்தும் 
உறவாம் இந்த ஊடகம்போல் உள்ளோர் உலகில்  எவருளரே? 

பிறந்த நேரம் முதலாகப் பிரியா தென்னுள் இயங்குமிதைச்
சிறந்த நண்பன் எனமகிழ்ந்து சிந்தித் திருக்கும் வேளையிலே
பரந்த உலகில் நான்வாழப் படைத்தான் தன்னை எனுமுண்மை
மறந்தென் உள்ள ஊடகமே மாற்றான் எனமா றுவதுண்டு.

வெளியில் நடக்கும் நிகழ்வுகளை விருப்பம் போலத் தான்மாற்றி
ஒளியை இருளாய்க் காட்டியென்றன் உணர்வில் அச்சம் விளைத்துமுனம்
தெளிவாய் இருந்த சிந்தையிலே தீயை மூட்டி எரியவிட்(டு)என் 
களியை மாற்றிக் கவலையெனும் காட்டில் திரிய வைத்துவிடும். 

மரத்தை விட்டு மரம்தாவும் மந்தி யென்றும் கணந்தோறும்
நிறத்தை மாற்றும் ஓந்தியென்றும் நிலையில் லாமல் அலையுமொரு
வரத்தைப் பெற்ற  ஊடகமாய் வாய்த்தென் வாழ்வை ஆளுமொரு
தரத்தை உள்ளம் அடைந்ததனைத் தனியே அமர்ந்து சிந்தித்தேன்:

யாதுஇவ் உள்ளம்? அதன்செயலை அறியும் திறன்வே றொன்றாமோ?
பேதம் உண்டோ இவற்றிடையே? பிறந்த நாள்தொட் டிதுவரையில்
ஏதும் மாற்ற மில்லாமல் என்னுள் இயங்கி ’நான்’’நான்’என்(று)
ஓதும் உணர்வின் தன்மையென்ன? உயர்ந்தோர் உரைக்கும் விடையிதுவே:
  
”உள்ளம் என்ப(து) எண்ணங்கள் உருவாக் கியதோர் பிம்பம்*,அது
கள்ளத் தனமாய் நமைமயக்கிக் காட்டும் தானே ‘நான்’என்றே
உள்ளத் திற்கே ஒளிவழங்கும் உணர்வே ’நான்’ஆம் எனுமுண்மை
தெள்ளத் தெளிந்த ஞானியரைச் சிறிதும் உள்ளம் சீண்டாது.”

இந்த அறிவைப் பெறவேண்டி என்றன் உள்ளத் தெழுகின்ற
எந்த எண்ணச் சேர்க்கையிலும்  என்னை இழக்கா வகையினிலென்
சிந்தை தன்னைத் தனிப்படுத்தும் செயலை இனிநான் மேற்கொள்ள
அந்தம் இல்லா ஆண்டவனின்  அருளை வேண்டிக் காத்திருப்பேன்.



 (* ஒரு நாள் பொழுதில், ஆயிரக்கணக்கான எண்ணங்கள் நம் உள்ளத்தில் உலவிச் செல்கின்றன- சராசரி எண்: 70,000 -http://www.loni.usc.edu/about_loni/education/brain_trivia.php இந்த எண்ணங்களின்  (’செய்திகளின்’)கோவையையே உள்ளம்/மனது என்கிறோம்.)  


அனந்த் 18-12-2016

Sunday, December 11, 2016

என்குரு பாரதி

<> என்குரு நீ <>



வியனுல கனைத்தும் அமுதென நுகர வேட்கையைக் கொண்டவன் நீ
பயனுற வாழ்ந்து பறவையில் விலங்கில் பரமனைப் பார்த்தவன்நீ
கயமையைக் களையக் கைகொடுத் துதவக் காளியை நாடினைநீ
பயமெனும் சொல்லைப் பயப்பட வைத்த பாரதி! என்குருநீ

நிலவினில் காற்றில் நிலவிடும் அமுத நீரினில் நீந்தினைநீ
பலவகை வண்ணப் பாடலில் புதுமை  புகுத்திய பாவலன்நீ
அலகிட இயலாக் களிப்புடன் உலகை அனுபவித் துணர்ந்தவன்நீ
உலகினர் துயரை உளத்தினில் தாங்கி ஒற்றுமை வளர்த்தவன்நீ 

சொல்லெலாம் உன்றன் கவிதையில் தோன்றத் தவம்பல செய்தனவே
புல்லுமுன் நிழலில் புத்துயிர் பெற்றுப் புன்னகை புரிந்ததுவே
கல்லனை நெஞ்(சு)உன் கவிதையின் கனலில் காய்ந்தபின் கனிந்ததுவே
வல்லவன் உன்கவித் திறனிலோர் திவலை வாய்த்திட  எனக்கருள்வாய்!



.. அனந்த் 11-12-2016

Wednesday, November 30, 2016

வானில் திரியும்....

                                                   <> வானில் திரியும்.... <>

சன்னல் வழியே நோக்கிய போது அழகாகப் பறந்து சென்ற கனேடிய வாத்துகள்
(Canada geese) என்னைக் கணினித் திரைக்குத் துரத்தின. அதன் விளைவு...



     வானில் திரியும் பறவைகாள் - உங்கள்
     வாழ்க்கையை எண்ணி வருந்துகிறேன்!

     தீனியை ஒன்றே தினந்தினமும் - நீர்
     தேடி அலைந்துதிண் டாடுகின்றீர்!

     மானிட ராகிய எங்களைப்போல் - இன்றி
     வீணே கழிக்கிறீர் உம்பொழுதை

     ஏனிந்தத் தீங்கினை ஈசனுமக் -கென்று(ம்)
     இப்புவி தன்னில் இழைத்திட்டான்?

     மானிட ரெங்கள் குழந்தையது -வந்த
     நாள்முதல் நாங்கள் அதனிடத்தில்

     தானினி வாழ்ந்திடத் தேவைபலப் - பல
     தாமுண் டெனமிகத் தாகமுடன்

     வானினும் நீண்டதோர் பட்டியலை -அது
     வாயினாற் பேசுமுன் தந்திடுவோம்

     தேனினும் மேலாங் குரலெடுத்து - அது
     தா,தா தையெனச் சொல்லுமுன்னே

     மேனிலப் பள்ளிக்(கு) அதையனுப்பி -அங்கு
     வேகமாய்க் கல்வி விழுங்கவைப்போம்

     மூனென வெண்மதி காட்டிதினம் - அது
     முற்றிலும் தமிழை மறக்கவைப்போம்

     நானினி யாவரில் மேலெனவே - அதன்
     நெஞ்சினில் எண்ண விதைவிதைப்போம்

     நானில மீதினில் மென்மேலே - பணம்
     நாலெண் விதத்தினில் சேகரிக்கக்

     கூனியுந் தோற்கக் குறுக்குவழி - பல
     கொடுத்தது கூவக் குதுகலிப்போம்

     ஏனினி உம்முடன் வாதாடி - நான்
     என்பொழு திங்ஙனம் வீண்செய்வேன்

     மேனி அழிந்திடு முன்னர்நீர் - எம்     வாழ்முறை பற்றி வளமுறுவீர்


     .. அனந்த் 30-11-2016 (’திண்ணை’ மின்னிதழில் வெளியானது)

Monday, November 28, 2016

என் கணக்கு வாத்தியார்

<> என் கணக்கு வாத்தியார் <>

உருட்டு விழியும் உலர்ந்த சிகையில்
சுருட்டிச் செருகிய துணித்தலைப் பாகையும்
விரட்டு நெடிப்பொடி வீங்கிடு நாசியும்
இருட்டு வேளையில் இடிந்த மதிலுறை
வெருட்டும் அய்யனார் மீசையும் வயிற்றைப்
புரட்டும் பெருங்குரல் ஓசையும் ஒருங்கே
திரட்டிப் படைத்ததோர் திருவுரு கொண்டஅக்
கொரட்டூர்ப் பள்ளியின் கணிதஆ சிரியர்,
அரட்டை அடித்தலும் அருகிலே அமரும்
பரட்டைத் தலையுடை பிறமா ணவரை
மிரட்டி அவரது பண்டம் பறித்தலும்
குருட்டாம் போக்கில் வரும்விடை யெனப்பெருங்
குறட்டை யொலியுடன் துஞ்சலும் கொண்ட
இரட்டைத் தலையோன் எனுமிவ் விருவருள்
முரட்டுத் தனத்தில் முதல்வர்
கொரட்டூர்ப் பள்ளியின் கணிதஆ சானே!

… அனந்த் 27-11-2016 

(2001-ல் ’திண்ணை’ மின்னிதழில் வெளியான பாடலின் இறுதியடிகளைச் சற்றே மாற்றியமைத்த வடிவம்.)

Friday, November 4, 2016

கந்தசஷ்டி: தாமரைத் தாளன்

   <> தாமரைத் தாளன் <>



(சந்தக்குழிப்புதனதனன தனதான னதனன தனதான
                            தனதனன தனதான தனதான")


விடியுமொரு தனிநேர மெழு(ம்)அருண நிறமேவு
...விமலமுக மெனு(ம்)ஆறு கதிர்நாடி

அடியரவர் பலபேரு மணுகியுன துதிபாடி 
...அனுதினமு வரநீயு மவர்காண

கடிபுரவி எனவோடுங் கனகமயி லதன்மேலே
...கையிலமரு(ம்அயிலோடு வருவேளை

வடிவொழுகு பதமான கமலமலர் தனிலேஎன்
...மனமெனுமொ(ர்அறுகாலி படியாதோ?

(வடிவு-அழகு; அறுகாலிவண்டு)

அனந்த் 5-11-2016

இல்லா வாழ்க்கை

முன்குறிப்பு: தானோ பிறரோ தேர்ந்தெடுத்த துணையோடு இல்லற வாழ்க்கை நடத்துவோரின் பெருமையை வள்ளுவர் பெருமான் அறத்துப் பாலில், இல்லறவியல் என்னும் தலைப்பில், இல்வாழ்க்கை என்னும் அதிகாரத்தில் (--அதிகாரம் யாருக்கு என்று அன்னார் குறித்திலர்-), அழகுபடப் பத்துக் குறட்பாக்களில் கூறியுள்ளார். அந்தப் பாக்களை ஒட்டி, எமக்குத் தெரிந்த இல்வாழ்க்கைச் சிறப்பை யாம் எடுத்துரைக்க விழைந்தனம். அதன் விளைவாக எழுந்த ்குறட்பாக்களை உங்களோடு பகிர்ந்து மகிழவும் அவாக் கொண்டனம். கீழே காணும் குறட்பாக்கள் வள்ளுவனார் தந்த அதே வரிசையில் (-பத்தாவது பாட்டைத் தவிர-), அவற்றின் சொல்லழகும் சுவையும் குன்றாவண்ணம் அமைக்கப்பட்டவை, (என யாம் நம்புகின்றனம்). ஐயமுறுவோர் திருக்குறளைக் கையிலேந்தி ஒப்பிடுவாராக.


        <>   இல்லா வாழ்க்கை   <> 

இல்வாழ்வான் என்பான் மணம்புரியா நண்பர்கள்
எல்லோர்க்கும் சோறளித்தல் ஏற்பு (1)

துறந்தாரும் தூரத்து உறவான பேரும்
கறந்திடுவார் இல்வாழ்வான் காசு (2)

தன்புலனில் தாரத் துடன்பகைத்த நண்பனுக்கு
உன்புலமே வீடென் றுணர் (3)

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
அழியாமற் காத்தல் அரிது (4)

துன்பும் துயரும் உடைத்தாய இல்வாழ்க்கை
முன்பிருந்த ஜாலிக்(கு) எதிர் (5)

கடனெனக் காண்பதே இல்வாழ்க்கை அஃதை
உடன்தீர்க்க இல்லை வழி (6)

வறுத்தாட்டி இல்வாழ்க்கை வாட்டிடின் வாயில்
புறத்தேபோய்க் கூவென் றழு (7)

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்வோன் களிப்பிற்கு
அயலாகி நிற்கும் அசடு (8)

ஆற்றொழுக்கு நாசிக் குழவிசேர் இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து (9)
(நோன்மை = தவம், பெருமை, பொறுமை, வலி; இங்கு இறுதிப் பொருளில் பயிலும்!)

'கடி'ஜோக்குக் கேற்றதோர் கேலிப் பொருளாய்
அடிபடும்இல் வாழ்வான் தலை (10)

 .. அனந்த் 
(’’ஹப் மாகசீன்’, 2009: )

******