Thursday, August 2, 2018

நாட்காட்டித் தெய்வங்கள் (Gods in Thamizh Calendar)


நாட்காட்டித் தெய்வங்கள் (Temple Visits via Thamizh Calendar)

தமிழ் நாட்காட்டியில் அன்றாடம் காணும் பல்வேறு ஆலயங்களில் நடக்கும் நிகழ்ச்சிகள்/விழாக்கள் பற்றிய செய்தியை ஒட்டி, அந்தந்தத் தெய்வங்களின் பேரில், 2003 ஆண்டில் 30 நாட்களில் இயற்றிய பாடல்களைக் கீழ்க்கண்ட சுட்டியைத் திறந்து படிக்கலாம்:
நாட்காட்டித் தெய்வங்கள் (அனந்த்- 2003).pdf Selected

இந்தச் சுட்டியைத் திறக்க இயலாவிடில், அங்குள்ள நாட்காட்டித் தாள்களின் படங்கள் நீங்கலாகச் செய்யுள்களை மட்டும் கீழே காணலாம். நேரம் கிடைக்கும்போது, நாட்காட்டித் தாள்களின் படங்களை இணைக்க முயல்வேன்.


<>>>><><><><><><><><><>>>><><><><><><><><><>>>><><><><><><<>  


திருத்தங்கல் பதியில்ஐயா! தினமும்நீர் நின்றுகண்ட
வருத்தத்தைப் போக்குதற்கு வந்தனை இன்றுநல்ல
திருத்தமாய் அமைத்ததேரில் தெருவெலாம் சுற்றநானும்
பொருத்தமாய்ச் சேர்ந்துகொண்டேன் புனிதநாட் குறிப்பைக்* கொண்டே

<>>>><><><><><><><><><>>>><><><><><><><><><>>>><><><><><><<> 


      நின்றும் நடந்தும் நேர்த்தியாய் வாகனத்தில்
      சென்றும் தெருஊர்ந்தும் சோர்வுற்றீர் - இன்றுயாம்
      தீர்த்தத்தை வாரித் தெளித்திட்டோம் மூலவ
      மூர்த்தமென மாறும் முயன்று!  

<>>>><><><><><><><><><>>>><><><><><><><><><>>>><><><><><>< 
    மங்காப் புகழ்மண்டும் மாமதுரைக் கோயிலுள்ளே
    தங்கிய வாறே தரணிக் கருள்புரியும்
    அங்கயற் கண்ணிஅன்னை அன்பர்தமைக் காணஇன்று
    தங்கரதம் ஏறினளோ தான்?
<>>>><><><><><><><><><>>>><><><><><><><><><>>>><><><><><><< 

      இராமே(ச்) சுவரத்து இமவான் புதல்வி
      பூமே விடுநல் பொதுமண் டபத்தில்
      நாமே பணிய நலமாய் அமர்ந்து
      போமே உலவப் பொன்னூர் தியிலே

<>>>><><><><><><><><><>>>><><><><><><><><><>>>><><><><><><< 

      குச்சனூர் வாழும் சனிபகவ கோருவோர்
      இச்சை நிறைவேற இந்நாளில் - மெச்சியுனை
      ஆரா தனைசெய்வோம் ஐயா! அடியார்எம்
      ஆறாத் துயரறுத்(து) ஆள்.
<>>>><><><><><><><><><>>>><><><><><><><><><>>>><><><><><><< 

20-7-2003

      ஈரா றிடைதுயின்(று) ஈரே ழுலகாளும்
      சீரான்எம் சீரங்கன் இன்றெழுந்து - ஜோராய்ப்
      புறப்பட்டான் அன்னான் பொலிவில்என் நெஞ்சம்
      சிறைப்பட்ட தேஎன் செய?

காவேரி, கொள்ளிட ஆறுகளுக்கிடையே படுத்துத் துயின்றவாறே பதினான்கு உலகங்களையும் ஆளும் எம்பெருமான் ஸ்ரீரங்கநாதன் இன்று தன் துயில்நீக்கிக் காற்றாட வெளியில் புறப்பட்டு வருகின்றான். அதனால் எனக்கு விளைந்த கதியாவது அவன் அழகில் மயங்கிய என் உள்ளம் சிறைப்பட்ட அவதியே! 

      மண்டலங்கள் யாவும் கடந்துநிற்கும் மாயன்வை
      குண்டபதி நாம்காணக் கோலமுடன் - குண்டலமும்
      வாச நறுங்குழலும் மாலையும் தாமசைய
      வாசலுக்கு வந்துவிட்டான் பார்! 

<>>>><><><><><><><><><>>>><><><><><><><><><>>>><><><><><><< 

(ஸ்ரீராமேஸ்வரம்ஸ்ரீ சேதுமாதவர் சன்னிதிக்கு ஸ்ரீ விநாயகப் பெருமான் எழுந்தருளி ஆராதனை. சுவாமி மலை ஸ்ரீ முருகப் பெருமான் பேராயிரங்கள் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.)

*   ராமே சுவரத்(து) இரத்தினமே! நீயுன்றன் 
   மாமன்முன் பூண்டிடுவாய் மாலை - சுவாமிமலைத்
   தம்பியும்இன்(று) ஆயிரம்பேர் தாங்குமொரு தங்கத்தார்
   தெம்போ டணிந்திடுவான் தேர்.

23-7-2003 சென்னை கந்தகோட்டம் ஸ்ரீ முருகப் பெருமான் வெள்ளிரதக் காட்சி

   துள்ளு மயிலும் துணையாகத் தேவானை
   வள்ளி மயிலாரு மாகஅவன் - வெள்ளித்தேர்
   வந்தருளும் காட்சி மனக்கண்ணில் காணவைத்தான்
   கந்தகோட் டத்தன் கனிந்து

 ---------------------------------------------------------------
       திருச்சிற்றம்பலம்   
     
ஆகா! ஒரேநாளில் அன்பன்யான் மூவிடங்கள்*
போகும் வகைகண்டேன் புத்தூரில் - ஏகாந்தச்
சொந்தமுடன் மாலவற்குச் சூடிக் கொடுத்தவளை;
சுந்தரியாள் வள்ளியுடன் சேர்ந்திருக்கும் - கந்தனை;
கோலமுடன் நாகைநகர்க் கோவில் கொலுவிருக்கும்
நீலவிழித் தாயை நினைந்து. 

(*மூவிடங்கள்: மூன்று இடங்கள்/தலங்கள்; மேலும், மூன்று விடங்கள்=மும்மலம்)
அழகார் நயினார் கோயிலிலே  அன்னை சவுந்தர நாயகிஇன்(று)
    அரசு புரியும் அலங்காரம் அகக்கண் ணாலே அருந்துகின்றேன்

குழையார் பரமன் கொஞ்சுகின்ற கோல மயிலின் பரந்திடும்வெண்
   குடைக்கீழ் இன்று குனிந்துநிற்பார் கோடிக் கணக்கில் வானவரும்

மழையாய்ப் பொழியும் விழிகளுடன் மாந்தர் திரளும்; அவளும்பெரு
    மதர்ப்பாய் ரசத சிம்மமதில் வலமாய் வந்தே அவர்செய்யும்

பிழைகள் தூசாய்ப் பறந்திடுமோர் பெரிய விந்தை ஆற்றிடுவாள்
     பேதை என்னை அவர்மிதிக்கும் புல்லாய் அவள்தான் மாற்றுவளோ? 
-------------------------

ஆடானை ஊர்உறையும் அன்னை சிநேகவல்லி
வாடாத அன்புபொழி மாரியன்னாள் - நாடியவள்
அன்னப்புள் வாகனத்தில் அன்பருக்குக் காட்சிதரும்
வண்ணத்தைக் காணவா ரீர்!  

திங்கள் அணிந்தோன் சிதம்பரத்(து) அம்பலத்தான்

திங்கள் தொறும்ஒரு ராத்திரியில் – எங்கள்

பிறவிப் பிணிநீங்கிப் பேரின்பம் எய்த

இரங்கி நடம்புரிவான் இன்று.  

தேடாத மக்களைத் தேடி அருள்புரியும்
ஆடானை ‘அன்பாயி' ஆனவளைப் - பாடாதே 
இந்நாள் வரையிருந்த ஏழையெனக் கின்றிந்த
நன்னாளில் நல்கினாள் வாய்ப்பு   
(அன்பாயி = சிநேகவல்லி)    


Description: This Shivastalam is a  vast temple visited by many in the Sethu belt of Tamilnadu in Ramanathapuram district (which includes the well known Rameswaram), this shrine has been under the administration of the Royal Sethu Samasthanam, and is well connected by road to many towns in the vicinity.
Legend has it that Vaaruni, the son of Varuna was relieved of Durvasa's curse which had given him an elephant's body and a goat's head. Surya is said to have worshipped a blue - diamond image of Shiva here. This shrine was originally known as Parijatavanam; the stala vriksham through the yugams have been Parijatam, Vanni and Kurukkatti Surya is said to have worshipped here, there is a separate shrine for SuryaTejaschandar (Surya Chandikeswarar) here.
Architecture: A 9 tiered Rajagopuram (130 ft high) with several stucco figures, beautiful mandapams (esp. the Chokkatanchari mandapam with 291 carved pillars), well spaced prakarams and majestic walls adorn this temple with a 10 acre spread..Bhaskara Setupati the Maharaja then, carried out major renovations here, under the management of Arunachalam Chettiar and effected a Kumbhabishekam in the year 1900. The next Kumbhabishekam was carried out in 1953.
Festivals: The festival image of Ambal is taken in procession in a palanquin each Friday. The annual Bhrammotsavam is held in the month of Vaikasi while the annual festival for Ambal is held in the month of Aadi. 6 worship services are carried out each day. Other festivals such as Arudra Darisanam and Kartikai Deepam are celebrated with great splendour here. The Kailasa Kaatchi festival is celebrated each year to commemorate Sundarar's vision of Kailasam. There are several festival Vahanams and the well known diamond chariots (vairatter) owned by the temple that are used during the annual Bhrammotsavam.

30-7-2003 அன்று எழுதிய பாடல் கைக்குக் கிட்டாததால், இன்றைய (30-7-2009) நாட்குறிப்பில் காணும் அம்பில் மேதா தக்ஷிணாமூர்த்தி பேரில் அமைத்த ஒரு பாடல் கீழே: (Festival note Taken from another thamizh daily paper calendar) 

வேதா கமங்கள் விரிக்கவொணாத் தத்துவத்தை
நீதான் உணர்த்த நினைத்ததனால் - மேதா
வடிவாக வந்தாய் வரவேற்கும் எங்கள்
கடலைத்தார் ஏற்பாய் கனிந்து.

குறிப்பு: மேதா= அறிவு, ஞானம் (medhA f. mental vigour or power , intelligence , prudence , wisdom (pl. products of intelligence , thoughts , opinions). 3,4 அடிகளில், ’வடிவாக, கடலை’ - வருக்க எதுகை  

வியாழக் கிழமையன்று தக்ஷிணாமூர்த்திக்குக் கடலை மாலை சாற்றுதல் சிறப்பு என்பர். இன்று அம்பில் என்னும் தலத்தில் அவ்வண்ணம் செய்து வழிபடுவதாக நாட்குறிப்பில் காண்கிறது. அம்பில் பாடல்பெற்ற தலம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது: http://paadal-petra-sthalangal.blogspot.com/2007/07/i-have-recently-released-information.html. இந்தச் சுட்டியின் கீழ்ப்பகுதியில் மாயவரத்தைச் சுற்றியுள்ள தலங்களின் பெயர்களைக் கொண்ட படத்தைக்  காணலாம்).

அனந்த்
30-7-2009

அன்பில் என்பதும் அம்பில் என்பதும் வெவ்வேறு தலங்கள் எனத் தெரிகிறது. அன்பில் (திருஅன்பிலாலந்துறை) இறைவன் மேல் சம்பந்தர், அப்பர் பாடியுள்ளனர்.

அனந்த் 30-7-2009

31-7-2003 அன்று எழுதிய நாட்காட்டித் தெய்வப்பாடல் கிட்டவில்லை. ஸ்ரீ வரலக்ஷ்மி விரதம் கொண்டாடப்படும் இன்றைய (31-7-2009) நாட்காட்டி, ஆற்காடு ஸ்ரீபெருந்தேவித் தாயார் வரலக்ஷ்மி அலங்காரக் காட்சியெனக் குறிக்கிறது. (Festival note Taken from another thamizh daily paper calendar) 
அதை ஒட்டி அமைத்த ஒரு பாடல் கீழே:

ஆற்கா டுறையும்எம் அன்னாய்இன் னாளில்நீ

ஏற்பாய் வரந்தரும் இலக்குமியின் - தோற்றமதில்

மூழ்கித் திளைத்திருப்பேன் முன்செய்த வல்வினைகள்

மாழ்கவரம் ஈவாய் மகிழ்ந்து.

(மாழ்குதல் = சாதல், அழிதல்)


அனந்த்
31-7-2009

என்புறக் கண்களால் இன்றுநீ காட்டிடும்
.. எழில்மிகு காட்சி தன்னை
... எங்ஙனம் காண்பதென் றேங்கியே நிற்குமிவ்
.... வேழையேற் கிரங்கி யுன்றன்

அன்பரில் ஒருவனாய் அன்னைநீ கருதிஎன்
.. அகவிழி திறந்து வைத்தே
... ஆயிரம் ஆயிரம் மின்விளக் கேற்றியே
.... அலங்கரித் தழகு செய்த

பொன்விமா னத்திலே பொங்கியே எங்குமாய்ப்
.. பரவிடும் பூவின் மணமும்
... புதுவகை ஆடையும் வளையலும் சடையிலே
.... பூண்டநல் முத்தின் அணியும்

தென்பட வைத்தஎன் தேவியே! திருவளர்
.. சேலம்செவ் வாய்ப்பேட் டையில்
... திருவுலா செய்திடும் மாரியே! அம்மையே!
.... தெரிசனம் தந்த தாயே!

அனந்த்
1-8-2009

இன்றைய நாட்காட்டியில் திருமெய்யம் பெருமாள் தேரில் பவனி வருதல் குறிக்கப்பட்டுள்ளது. (Festival note Taken from another thamizh daily paper calendar) 

அதை நினைத்து:

ஐயம் எனக்கில்லை ஐயாநீ வாழ்திரு
மெய்யம் பதியில்தேர் மேலேறி - வையத்தோர்
வாழ அருளைநீ வாரி வழங்கையிலிவ்
வேழையும்கை ஏந்திவரு வேன்.

அனந்த்
2-8-2009

பி.கு. 2003 ஜூலை-ஆகஸ்ட் மாத நாட்காட்டித் தெய்வங்கள் பற்றி எழுதி வந்த தொடரில் விட்டுப் போன நாட்களில் இவ்வாண்டு நாட்காட்டியில் காணும் விழாக்கள் பற்றி எழுத முயன்றுள்ளேன். இன்று காணும் திருமெய்யம் (திருமயம்) வைணவத் திவ்ய தேசங்கள் 108-ல் ஒன்றாகும். இது புதுக்கோட்டையிலிருந்து 28 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.    
=========================
மெய்யம் பெருமாள் மிகவருள் செய்வரே
வையம்  புகழ உமக்கே.
அன்புடன்
தாஸன்
அன்பில் ஸ்ரீனிவாஸன்

நடையாய் நடந்துன்றன் கோவிலைநான் காணக்
கிடைக்க வரம்உன்னைக் கேட்டேன் - தடையேதும்  
இன்றிஉளக் கண்முன் இடபம்அமர் கோமதிநீ
இன்றுவந்(து) ஈந்தாய் அதை.  


      என்னுள் விளக்காய் இருப்பவள் இன்றங்கே
      மின்விளக்கு வெள்ளி விமானத்தில் - கொள்ளை
      அழகோடு செவ்வாய் தவழ்சிரிப்பால் அன்பு
      மழைபொழிதல் எண்ணும் மனம்.




இன்று (5-8-2009) நாட்காட்டியில் காஞ்சிபுரத்தில் எம்பெருமான் கஜேந்திர மோட்சம் கருடசேவை என்ற குறிப்புக் காண்பதை ஒட்டி:


கலுழன்மே லூர்ந்து கயவரசைக் காக்க
உலகோர் வியக்கவிரைந் துற்றாய் - நலம்பயக்கும்
அக்கோலம் தன்னை அடியார்க்குக் காட்டவந்தாய்
இக்காஞ்சி வீதியிலே இன்று.

அனந்த்
5-8-2009
கலுழன்=கருடன் கயவரசன் = கஜேந்திரன்
ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர் தலங்களிலும் இன்று பெருமாள் கருட சேவையில் காட்சி தருகிறார்.
------------
உ சிவமயம் திருச்சிற்றம்பலம்

இராமேஸ்வரம் சுவாமி இராமநாதர் அம்பாள் ஏகசிம்மாசனத்தில் பவனி:
     
            என்றும் பிரியேன் எனவுன் இடப்பாகம்

              ஒன்றினாள் என்ப(து) உலகுணர – இன்றுநீ

              ஏறினாய் அம்மையுடன் ஏகசிம் மாதனத்தில்

              கூறினேன் நானுமுன் குணம்.


இன்று (7-8-2009) திருத்தணி முருகப் பெருமான் கிளிவாகனத்தில் பவனி வருகிறான். (நாட்காட்டி இணைப்பைக் காணவும்):

உயர்ஞான வெளியினிலே உலவிவந்த தத்தையுன்றன்

பெயர்பாடித் தானனன்று பெற்றஅனு பூதியையாம்*

நயந்துரைக்கக் கேட்டிந்த நாளிலந்தக் கிளிமொழியை

வியந்துசெவி மடுக்கஅதன் மேலேறி வந்தனையோ?


(*அருணகிரிநாதர் கிளிவடிவங் கொண்டு அருளிய கந்தர் அனுபூதி)

அனந்த்
7-8-2009
      இருக்கன் குடியில் இலங்கிடும் மாரியே என்அ(ன்)னையாய்

      இருந்தெனை என்றும் இரட்சிக்கும் உன்அழ(கு) இன்றுகாண

      விருப்பம் மிகுந்து விழிகளை மூடிஉள் வீற்றிருக்கும்

      கருப்பக் கிரகத்து நாயகி யாயுனைக் காணுவனே   


          அருஞ்சோலை திருமால் இருஞ்சோலை ஆனந்தம்

           தருஞ்சோலை தன்னில்இன்று மோகினியாய் உருவெடுத்து

           வருஞ்சோலை வந்தடைய வாய்ப்பெனக்கும் தந்தஅருள்

           பெருஞ்சோலை ஆனவனைப் பிடித்தடைத்தேன் என்னுள்ளே

சங்கர நயினார் கோவிலிலே தபசு செய்யும் கோமதியை

அங்கொரு காளை மீதூரும் ஐயன் அழகுச் சேவையைநான்

இங்கென திடத்தில் இருந்துகொண்டே இன்று காண வழிசெய்த

எங்கும் நிறைந்துஇவ் ஏழையையும் இயக்கும் பொருளை ஏத்துவனே



                     கூடியுள்ள அன்பர் குளிர்ந்தமனப் பூவெடுத்துச்
சோடித்த பல்லக்கில் சோபித்தே - ஆடிவரும்
சேலம்செவ் வாய்ப்பேட்டைச் சிங்காரி மாரியுன்றன்
கோலம்நான் கொண்டேன் உளம்  

      அண்ணன்ஒரு தேரேறி அன்பருக்குத் தன்கள்ள
      வண்ணமதைக் காட்டி மகிழ்ந்திருக்கத் - திண்ணமாய்த்
      தங்கையும்தன் பேட்டை  தனில்வசந்தக் கோலத்தில்
      மங்களமாய் வீற்றிருப்பாள் இன்று     

வடமதுரைக் கோயில்நீ வந்துபார் ஏழாய்
 இடங்கொண்டான் சௌந்தரன்அங்(கு) இந்நாள் - உடனதன்பின்
 சங்கரநை னார்கோயில் சார்ந்தங்கே கோமதியின்
 பொங்குமெழில் ஊஞ்சலையும் பார்


இடம்பிடிக்க ஓடிவந்தேன் இன்றெம் அழகன்
வடமதுரை தன்னில் வசந்தம் - நடமாட
முத்துப்பல் லக்கேறும் மோகனத்தைக் காணநிற்கும்
பத்தரொடு ஒன்றிடப் பார்த்து

இன்றுஆடி வெள்ளி இறுதிநாள் என்பதனால்

சென்றிடுவாய் அன்னையைச் சேவைசெய - என்று(ம்)நமைக்

காத்தருளும் மாரியம்மன் காட்சிகண்டு ரேணுகையாய்ப்

பூத்தாள் புரவிவலம் பார். 


      கருடன்மேல் ஏறிக் ககனமெலாம் சுற்றி

       வரும்களைப்புத் தீரஇங்கு வந்து - திருநாளைக்
      
       கொண்டாடு வோர்முன் குதிரைமேல் ஏறுசுகம்
      
       கண்ட சவுந்தரனைக் காண்    

புறப்பட்டான் இன்று புவிவாழத் தேவர்
சிறப்புற்ற கோட்டைவாழ் செல்வன் - திரண்டங்கே
சீரங்கா! கண்ணா! எனக்கூவிச் சேவிக்கும்
ஊராரோ(டு) ஒன்றிடுவோம் நாம் 

============
Dates used from 2009 Calendar to fill up gaps in the 2003 calendar entires: July 30, 31; Aug 1,2, 5 and 7