Saturday, June 30, 2018


கூற்றிருக்கைச் செய்யுள்கள்: யாப்பும் அமைப்பும்

வே.ச. அனந்தநாராயணன் (அனந்த்)

(வளைவுக் குறியில் காணும் எண்கள் துணை நூல்களின் வரிசையைக் குறிக்கும்;  ”கட்டுரை” கிளைத்தளத்திலும் இந்தப் பதிவு இடப்பட்டுள்ளது.))

1. முகப்பு

தமிழில் பயிலும், ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் என்ற நால்வகையான கவிதை வகைகளில் சித்திர கவி அல்லது மிறைக்கவி என்னும் பாவகை தமிழ் யாப்பிலும் இலக்கியத்திலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளது. இப்பாவகையில் இயற்றப்படும் பாடல்கள், வட்டம், சதுரம், முக்கோணம் போன்ற கணித வடிவங்களிலும், பாம்பு, விளக்கு, அன்னம், தேர் போன்ற பல ஓவிய வடிவங்களிலும் பொருந்தும் வகையில் அமைக்கப்படுவன. ’நாற்கவி ராஜன்’ என்று அருணகிநாதரால் போற்றப்படும் திருஞானசம்பந்தரால் அறிமுகப் பட்டதாகச் சொல்லப்படும் சித்திர கவிச் செய்யுள்களை இயற்றுபவர் தாம், தேர்ந்தெடுத்த செய்யுளுக்கான இலக்கண விதிகள் மட்டுமன்றி, சித்திர வடிவத்தை ஒட்டி வகுக்கப்பட்டுள்ள விதிகளையும் மனத்தில் கொண்டு தம் கவிதையை அமைக்க வேண்டும். சித்திரகவி பற்றிய நூல்கள் பல நமக்குக் கிட்டியுள்ளன. இவற்றுள் பழையனவான தண்டியலங்காரம் (1), மாறனலங்காரம் (2), யாப்பருங்கலம் (3), நவநீதப் பாட்டியல் (4) போன்றவைகள் மட்டுமன்றி, எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ள சில புதிய நூல்களும் உள்ளன. இவற்றுள், ‘சித்திரக் கவிகள்’ என்னும் தலைப்பில், வே.இரா. மாதவன் பதிப்பித்துள்ள மிக விரிவான நூல் (435 பக்கங்கள்) குறிப்பிடத்தக்கது (5). இந்நூலின் இறுதியில் சேர்க்கப்பட்டுள்ள பட்டியலில் மிறைக்கவியைப் பற்றிப் பேசும் நூல்களின் விவரங்களையும் சித்திர கவிகள் பாடியுள்ள 63 புலவர்களின் படைப்புகளைப் பற்றிய தகவல்களையும் காணலாம். இவற்றில் பல தனிப்பட்ட கவிஞர்களின் படைப்புகளைத் தொகுத்து இடப்பட்ட நூல்களாகும். இந்த வகையில், 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த, வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள், சதாசிவப் பண்டாரத்தார் ஆகியோரின் சித்திர செய்யுள்களின் தொகுப்பும் (6,7), தற்போது சிங்கப்பூரில் வாழ்ந்துவரும் வெண்பாச்சிற்பி கவிஞர் இக்குவனத்தின் அறுபதுக்கும் மேலான பலவகையான சித்திர கவிகளைக் கொண்ட ‘சித்திரச் செய்யுள்’ என்னும் நூலும் (8), பாவலர் க.பழனிவேலனின் பத்துச் சித்திர கவிகள் அடங்கிய ‘சித்திர கவி’ என்னும் நூலும் (9) குறிப்பிடத்தக்கன. ’சிங்கப்பூர்ச் சித்திர கவிகள்’ என்னும் கட்டுரையில், நாராயணசாமி நாயகர், சதாசிவப் பண்டாரத்தார், சின்னப்பனார், இக்குவனம் ஆகியோர் இயற்றியுள்ள சித்திர கவிகளின் சிறப்பைச் சிங்கப்பூர் பல்கலைக் கழகத்தைச் சார்ந்த முனைவர் சுப. திண்ணப்பன் விரிவாக எடுத்துரைத்துள்ளார் (10).  சென்னையில் வாழ்ந்துவரும் மூத்த கவிஞரான கவிமாமணி தமிழழகன் சித்திர கவி இயற்றுவதற்கான விதிகளின் விளக்கமும், தாம் இயற்றியுள்ள பலவகையான சித்திர கவிகளையும் கொண்ட காமாட்சி அலங்காரம் என்னும் நூலை உருவாக்கியுள்ளார். எனினும், அது இன்னும் அச்சேறவில்லை.

மேலே குறிப்பிட்ட சித்திர கவி வல்லுநர்களில் சிலர் மட்டுமே கூற்றிருக்கைச் செய்யுள்களை இயற்றியுள்ளனர். கூற்றிருக்கைப் பாடலின் இலக்கணத்தையும், அமைப்பையும் அது பற்றிய இலக்கியத்தையும் பற்றித் தெரிந்து கொள்வது இந்தக் கட்டுரையின் நோக்கம். மற்ற மிறைக்கவி வகைகளைப் பற்றிப் பல்வகையான தகவல்களை மேலே சுட்டிய நூல்களில் சில தந்தபோதிலும், கூற்றிருக்கை என்னும் பாவகையைப் பற்றிய செய்திகள் போதிய அளவு நமக்குக் கிடைக்கவில்லை என்ற அடிப்படையில், எனக்குத் தெரிந்தவரையில் இதுவரை வெளியாகியுள்ள கூற்றிருக்கைகளின் யாப்பையும் அப்பாடல்களில் பயன்படுத்தப்படும் அமைப்பையும் பற்றி இங்குத் தருகிறேன்.

2. எழுகூற்றிருக்கை

எழுகூற்றிருக்கை என்பது தொன்னூற்றாறு பிரபந்த வகைகளில் ஒன்று. தண்டியலங்காரம் (1), மாறனலங்காரம் (2), யாப்பருங்கல விருத்தியுரை (3), நவநீதப் பாட்டியல் (4) ஆகிய நூல்கள் தந்திருக்கும் இலக்கணப்படி, ஒன்றுமுதல் ஏழு வரை உள்ள எண்கள் ஏழு கூறுகளை இடங்கள் ஆகக் கொண்டு, படிப்படியாக உயர்ந்தும் பின்னர் குறைந்தும் வரும் எண்ணலங்காரம் அமையப் பெற்ற ஆசிரியப்பா வகைப் பாடலைக் குறிக்கும்.

ஒன்று முதலா ஓரே(ழு) ஈறாச்
சென்றஎண் ஈரேழ் நிலம்தொறுந் திரிதர
எண்ணுவ(து) ஒன்றாம் எழுகூற்றிருக்கை..  (2,3)

ஒரு கூறு என்பதை ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட ‘அறை’களை (cell or box) கொண்ட வரிசை (row) என்று கருதலாம். கூறில் உள்ள ஒவ்வொரு அறையிலும், பொருளாலோ அல்லது ஒலியாலோ எண்ணைக் குறிக்கும் சொல்லொன்று தனியாகவோ அல்லது அதனுடன் இருக்கும் சொற்களின் கூட்டுடனோ அடைக்கப்படும். அறைகளில் குறிக்கப்படும் அதிகபட்ச எண்ணை ஒட்டிக் கூற்றிருக்கையின் பெயர் எழுகூற்றிருக்கை, எண்கூற்றிருக்கை என்ற வகையில் அமையும். இலக்கியத்தில் காணும் பெரும்பாலானவை எழுகூற்றிருக்கை அமைப்பைக் கொண்டவை. எழுகூற்றிருக்கையின் கூறுகளைக் கீழ்க்கண்ட வண்ணம் அமைத்தால் ஒரு தேரின் வடிவம் கிட்டும்.
          
மேலுள்ள எழுகூற்றிருக்கை அமைப்பின் முதல் கூறில் ஒரு அறை, இரண்டாவதில் மூன்று அறைகள் என்ற வகையில் ஏழாவது கூறில் பதின்மூன்று அறைகள் இருப்பதைக் கவனிக்கவும். இந்த அமைப்பில் தேர்த்தட்டுக்கு மேலுள்ள முக்கோண அமைப்பு, கணித இயலில் உள்ள ‘பாஸ்கல் முக்கோணம்’ (11) போலக் காணப்பட்டாலும், இதன் அறைகளுக்குள் உள்ள எண்களுக்கு இடையே உள்ள தொடர்பு மாறுபட்டது. எழுகூற்றிருக்கையின் இந்த அமைப்பில் உள்ள கணித நுண்மையைக் கீழுள்ள படம் விளக்கும்:

1 x 1 = 1
11 x 11 = 121
111 x 111 = 12321
1111 x 1111 = 1234321
11111 x 11111 = 123454321
111111 x 111111 = 12345654321
1111111 x 1111111 = 1234567654321
11111111 x 11111111 = 123456787654321
111111111 x 111111111 = 12345678987654321

படம் 2

அதாவது, தேர் அமைப்பின் ஒவ்வொரு கூறிலிலுள்ள எண்களும் 1 என்னும் எண்ணிலிருந்து விளைகிறது என்று காண்கிறோம். வேறொரு கண்ணோட்டத்தில், இது தன்னையன்றி வேறெதும் இல்லாத பிரமம் என்னும் ஒன்று (மாயை என்னும் ஆற்றலைப் பயன்படுத்தித்) தன்னைத் தானே பெருக்கிக் கொண்டு எண்ணற்ற வகைப் பொருள்கள் கொண்ட பிரபஞ்சத்தை உருவாக்குகிறது என்னும் ஆன்மிக உண்மையையும் விளக்குவதாகக் கொள்ளலாம். இதை, அருணகிரிநாதரின் திருப்புகழிலிலுள்ள திருவெழுகூற்றிருக்கையின் தொடக்கத்தில் உள்ள ‘ஓருருவாகிய தாரகப் பிரமத்து ஒன்றாய் ஒன்றி இருவகைத்தாகி…” என்ற தொடர் குறிப்பதாகக் கருதலாம்.  எழுகூற்றிருக்கை அமைப்பின் ஒவ்வொரு அறையிலுள்ள எண்கள் அனைத்தையும் கூட்டினால், 1, 4, 9, 16, 36, 49 என்றாகும். இதை 1x1, 2x2, 3x3… என்று நோக்குங்கால், எண்தற்பெருக்கின் (square of numbers) அழகு தெரியும். கூற்றிருக்கையின் எண்கள் யாவும் தேரின் வெளிப்புறத்தில் சூழ்ந்து நிற்கும் தொங்கல் மாலைகள் போல அமைந்து தேரை அலங்கரிப்பதாகக் கருதுவதுண்டு (5).

எழுகூற்றிருக்கையும் இரதபந்தம் என்னும் மிறைக்கவிப் பாவகை ஆகிய இரண்டும் தேர் அமைப்பைப் பயன்படுத்தினாலும், இவை யாப்பின் அமைப்பில் முற்றிலும் மாறுபட்டவை. இரதபந்தத்தில் பாடலின் முதல் எழுத்தைச் தேர்ச் சக்கரங்கள் ஒன்றில் பொருத்தி மற்ற எழுத்துக்களைத் தேரின் கீழ்ப்பகுதியில் முதல் வரிசையிலிருந்து மேலே உள்ள அறைகளில் இட்டு, உச்சியில் உள்ள ஒரு அறையில் செய்யுளின் நான்காவது அடியின் முதலெழுத்தை இட்டுப் பின் கீழிறங்கி மற்ற எழுத்துகளை வரிசையாக இடுவர். இந்த அமைப்பை முன் சுட்டியுள்ள நூல்களில் காணலாம்.
திரு என்ற சிறப்பு அடைமொழி கொண்ட திருவெழுகூற்றிருக்கை என்பது இறைவனின் அருட்செயல்களையும் சில தத்துவங்களையும் உள்ளடக்கிய பாடலைக் குறிக்கும். திரு என்பது முத்தி இன்பத்தையும், எழு என்னும் சொல் அந்த இன்பம் நம்முள் எழுவதையும், கூற்று என்பது அதன் இருக்கையையும் குறிக்கும் என்பர் (3). இப்பாடல்களில், எண்களைக் குறிக்கும் சொற்களால் அமைந்த தேர் வடிவின் நடுவிலுள்ள தட்டில் இறையின் உருவத்தை வரைதல் வழக்கம் (பார்க்க: படம் 3).
               
                       
                                                                      படம்-3
இத்தகைய ஓவியங்கள் திருவருள் பெற்றதாகக் கருதப்பட்டு, ஆலயங்களில் வைக்கப்படுவதுண்டு. இறை பற்றி அமைக்கப்பட்ட எழுகூற்றிருக்கைகளில் சில ’திரு’ என்ற அடைமொழியின்றி வருதலும் உண்டு (7).

சிவபெருமான், திருமால், முருகன் ஆகிய கடவுளரைப் பற்றி நக்கீரர் (12), திருஞானசம்பந்தர் (13), திருமங்கையாழ்வார் (14), அருணகிரிநாதர் (15) ஆகியோர் யாத்துள்ள திருவெழுகூற்றிருக்கைகள் நன்கறிப்பட்டவை. (யாப்பருங்கல விருத்தியுரையில்,காணும் நக்கீரரின் திருவெழுகூற்றிருக்கை பதினோராந் திருமுறை அச்சுப்பிரதியில் உள்ளதிலிருந்து மிகவும் வேறுபட்டது என்று குறிக்கப்பட்டுள்ளது (4). நக்கீரர் அருளிய திருவெழுகூற்றிருக்கையை மதுரை மீனாக்ஷி சுந்தரேசுவரர் கோவிலிலும், திருமங்கை ஆழ்வார் அருளியதைக் கும்பகோணம் சாரங்கபாணி கோவிலிலும், திருஞானசம்பந்தர் அருளியதைக் கும்பகோணம் ஆதிகும்பேசுவரர் கோவிலிலும் அருணகிரிநாதர் அருளியதைச் சுவாமிமலை, திருவண்ணாமலை கோவில்களிலும் காணலாம். யாப்பருங்கல விருத்தியுரையில் (3), திருப்பாமாலை என்ற பெயரில், சமணத் தெய்வமான அருக்க பரமனைப் பற்றிய எழுகூற்றிருக்கை ஒன்று காணப்படுகிறது. 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த, வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள் பல கடவுளர்களை முன்னிட்டுப் பன்னிரண்டு கூற்றிருக்கைகளை இயற்றியுள்ளார். இவற்றை, ‘சித்திர கவிகள்’ என்னும் வெளியீட்டில் காணலாம்(6). அண்மையில், இந்தக் கட்டுரை ஆசிரியர் இயற்றிய ’திருவண்ணாமலையான் திருவெழுகூற்றிருக்கை’ என்னும் பாடலும் (16), கவிஞர் ஓகை நடராஜன் என்பார் இயற்றிய ‘படஞ்சுட்டும் கவிதை’ என்ற எழுகூற்றிருக்கைப் பாடலும் (17) இணைய வலைத்தளங்களில் வெளிடப்பட்டுள்ளன.

எழுகூற்றிருக்கைச் செய்யுள்களைத் தேர் அமைப்பில் பொருத்திப் பார்க்கையில், அவற்றில் உள்ள சொற்கள் தேர்த்தட்டின் மேலும் கீழுமுள்ள பகுதிகளை முக்கோண வடிவில் நிரப்புவனவாக இருப்பதைக் காணலாம். தேர் அமைப்பின் மேலுச்சியில் இருக்கும் கூறு, கீழ்ப்பகுதியின் அடித்தளக் கூறாக அமையும். இதுபோல மேற்பகுதியின் உச்சியிலிருந்து இரண்டாவது கூறு கீழ்ப்பகுதியின் அடித்தளத்திலிருந்து இரண்டாவது கூறு என்ற வகையில் தொடர்ந்து தேர் அமைப்பு முழுமையாகும் (படம்-1). பெரும்பாலான கூற்றிருக்கைப் பாடல்களில், மேல் பகுதியில் உள்ள கூறுகளின் அறைகளில் உள்ள சொற்களே கீழ்ப் பகுதியிலும் காணப்படும். ஒரு சில கூற்றிருக்கைப் பாடல்களில் மட்டுமே இவ்விரண்டு பகுதிகளும் வெவ்வேறான சொற்கள் கொண்டனவாக அமையும். இவற்றிற்கான எடுத்துக்காட்டுகளைப் பின்னர் காண்போம்.

3. யாப்பமைதி

இந்நாள் வரை நமக்குக் கிட்டியிருக்கும் கூற்றிருக்கைச் செய்யுள்கள் அனைத்தும் அகவலோசை கொண்ட ஆசிரியப்பா யாப்பு வகையைச் சார்ந்தனவாக உள்ளன. அவற்றுள் பழங்காலத் திருவெழுகூற்றிருக்கைகள் இணைக்குறள் ஆசிரியப்பா வகையிலும், அருணகிநாதரின் திருப்புகழில் திருவேரகம் பற்றிய திருவெழுகூற்றிருக்கை நேரிசை ஆசிரியப்பா வடிவிலும், அண்மைக் காலத்தில் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் கூற்றிருக்கைகளும் இணைய தளத்தில் வெளியாகிய கூற்றிருக்கைகளும் நிலைமண்டில ஆசிரியப்பா வகையிலும் அமைந்துள்ளதை நோக்கலாம். மேலும், சில கூற்றிருக்கைகளில், மற்ற இலக்கியங்களில் நாம் காணும் ஆசிரியப்பாக்களில் பொருந்திய எதுகை மோனை அமைப்பு முழுமையாக இல்லாமலிருப்பதைப் பார்க்கலாம். இதற்குக் காரணம் கூற்றிருக்கைகள் எண்ணலங்காரம் என்னும் அணிக்கு முதன்மை இடம் தந்துள்ளமையே என்று கருதலாம்.

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் கூற்றிருக்கைகளில், திருவரங்கத் திருவெழுகூற்றிருக்கை தவிர, மற்றவை பாட்டில் குறிப்பிடப்படும் கடவுள் பேரில் காப்பு வெண்பாவோடு தொடங்குவது குறிப்பிடத்தக்கது. இவற்றின் அழகு கீழுள்ள சில எடுத்துக் காட்டுகளால் விளங்கும்.

ஏனோர் விதிதொட்(டு) எழுகூற் றிருக்கைசொல்லி
யானோர்ந்த வாறும் இசைக்கின்றேன் - வானோர்நேர்
ஒண்டகைய நெஞ்சம் உடையார் உலகிலுண்டேல்
கண்டறிந்து கொள்ளல் கடன்.  (முருகவேள் எழுகூற்றிருக்கை-II)

”ஏனோர் விதிதொட்டு’ என்னும் தொடரால் தண்டபாணி சுவாமிகள் தம் கூற்றிருக்கைகளை முன்னோர் கூறிய விதிப்படி அமைத்தார் என்றும், ’யான் ஓர்ந்தவாறும்’ என்பதால் அவ்விதியினின்று மாறுபட்ட வகையிலும் அமைத்தார் எனக் கொள்ளலாம். இவ்வமைப்பு வகைகள் பற்றிப் பின்னர் விரிவாகக் காண்போம்.

கூன்வாட்கை மங்கைமன்னன் கூறுமெழு கூற்றிருக்கை
தேன்வார்த்த பைந்துளவத் திண்டோட்காம் - யான்வாயாற்
சொல்வதும்ஆம் சொல்லோ?நீ சொன்னபடி சொல்கின்றேன்
நல்வரம்செய் நாரா யணா. (திருமால் எழுகூற்றிருக்கை)

பத்துத் திசையும் பரந்த பரஞ்சுடர்க்கா
முத்துப்போல் தோன்றும் முழுப்புலவோர் - நத்தும்
இயற்றசாங் கக்கூற் றிருக்கையென்னும் பாடல்
செயற்குமதே காப்பெனத்தேர்ந் தேன்.   (பொதுக்கடவுள் தசாங்கக் கூற்றிருக்கை)

வண்ணச்சரபத்தாரின் திருவரங்கத் திருவெழுகூற்றிருக்கை அவரது ’திருவரங்கத் திருவாயிரம்’ என்னும் படைப்பில் ஒன்று. அதன் முடிவில் கீழ்காணும் ஒருவருக்கப் பா காணப்படுகிறது (6):

தீதுதத்துத் தொத்தத்தே தித்தித்த தேதேது
தாதுதத்தத் தத்தத் ததிதாதா தாத்தாதா
தூதித்த தாதை துதித்துத் திதத்ததித்தா
தோதுதைத்த துத்தத்தத் தாதூத் திதித்தீதே

படிப்பவருக்கு உதவியாக, மேலுள்ள பாட்டின் பொருளையும், மேலும் எல்லா கூற்றிருக்கைகளின் பொருள் விளக்கத்தையும் தந்துள்ளது குறிப்பிடத்தக்கது (6).  

தற்போது நமக்குக் கிட்டியுள்ள கூற்றிருக்கைகளின் பட்டியலைக் கீழே தந்துள்ளேன். அதில் எழுகூற்றிருக்கைகள் தவிர முதன்முறையாக வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளால் அறிமுகப்படுத்தப்பட்ட எட்டு, ஒன்பது, பத்துக் கூற்றிருக்கைகளையும் சேர்த்துள்ளேன்.

          பட்டியல்-1 கூற்றிருக்கை யாப்பு, அமைப்பு வகைகள்


இயற்றியவர்

கூற்றிருக்கை


பாவினம்

அமைப்பு
வகை
  
  திருஞானசம்பந்தர்

  சிவபெருமான் திருவெழுகூற்றிருக்கை


இணைக்குறள்
ஆசிரியப்பா

1


  திருமங்கையாழ்வார்


  திருமால்          திருவெழுகூற்றிருக்கை

இணைக்குறள்
ஆசிரியப்பா

2

யாப்பருங்கல விருத்தியுரை     ஆசிரியர்


அருகபரமன்     எழுகூற்றிருக்கை

இணைக்குறள்
ஆசிரியப்பா

3

   நக்கீரதேவ நாயனார்


 சிவபெருமான்         திருவெழுகூற்றிருக்கை


இணைக்குறள்
ஆசிரியப்பா

4

  அருணகிரிநாதர்

 சுவாமிமலை முருகன்
 திருவெழுகூற்றிருக்கை


நேரிசை
ஆசிரியப்பா

5

வண்ணச்சரபம் தண்டபாணி    சுவாமிகள்






 யானைமுகன் எழுகூற்றிருக்கை

முருகவேள்  எழுகூற்றிருக்கை-2
பராசக்தி எழுகூற்றிருக்கை

திருவரங்கத் திருவெழுகூற்றிருக்கை
திருவல்லிக்கேணித்
திருவெழுகூற்றிருக்கை


நிலைமண்டில
ஆசிரியப்பா



நிலைமண்டில
ஆசிரியப்பா

நிலைமண்டில
ஆசிரியப்பா

நிலைமண்டில
ஆசிரியப்பா

நிலைமண்டில
ஆசிரியப்பா



5


5


5

5

5

வண்ணச்சரபம் தண்டபாணி            சுவாமிகள்


முருகவேள் திருவெழு-  கூற்றிருக்கை-1

நிலைமண்டில
ஆசிரியப்பா
4

வண்ணச்சரபம் தண்டபாணி            சுவாமிகள்


திருமால்
எழுகூற்றிருக்கை

நிலைமண்டில
ஆசிரியப்பா


6

வண்ணச்சரபம் தண்டபாணி            சுவாமிகள்


சூரியன்       எழுகூற்றிருக்கை

நிலைமண்டில
ஆசிரியப்பா


7

அனந்தநாராயணன்

 அண்ணாமலையான்
 திருவெழுகூற்றிருக்கை


இணைக்குறள்
ஆசிரியப்பா
5


ஓகை நடராஜன்


படஞ்சுட்டுங்கதை எழுகூற்றிருக்கை*


நிலைமண்டில
ஆசிரியப்பா


8

வண்ணச்சரபம் தண்டபாணி            சுவாமிகள்

சண்முகன் எண்கூற்றிருக்கை

நிலைமண்டில
ஆசிரியப்பா


5

வண்ணச்சரபம் தண்டபாணி            சுவாமிகள்


சிவபெருமான் ஒன்பது கூற்றிருக்கை


நிலைமண்டில
ஆசிரியப்பா

5

வண்ணச்சரபம் தண்டபாணி            சுவாமிகள்


திருமால் ஒருபது கூற்றிருக்கை

நிலைமண்டில
ஆசிரியப்பா


5

வண்ணச்சரபம் தண்டபாணி            சுவாமிகள்


பொதுக்கடவுள் தசாங்கக் கூற்றிருக்கை

நிலைமண்டில
ஆசிரியப்பா


8
* இச்செய்யுளின் வாழ்த்துப் பகுதி, நான்கு, ஐந்து, ஆறு கூறுகளைக் கொண்ட கூற்றிருக்கைச் செய்யுள்களைக் கொண்டதாகவும் படக்கவிதைப் பகுதி எழுகூற்றிருக்கையாகவும் அமைந்துள்ளன.

வே.இரா. மாதவனின் நூலில் (5),”எழுகூற்றிருக்கையை அடிப்படையாகக் கொண்டு நாற்கூற்றிருக்கை, எண்கூற்றிருக்கை, ஒன்பது கூற்றிருக்கை, ஒருபது கூற்றிருக்கை போன்றவற்றை முறையே, வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் போன்றோர் பாடியிருப்பதை அறியலாம்” என்ற குறிப்பு உள்ளது. எனினும், இக்குறிப்பைத் தவிர இச்செய்யுள்களையோ இவை பற்றிய மற்ற செய்திகளையோ இந்நூலில் காணவில்லை. பாம்பன் சுவாமிகளின், பலவகைச் சித்திர கவிகளைக் கொண்ட பத்துப் பிரபந்தம் என்னும் (இப்போது கிட்டாத) நூலில் இந்த நாற்கூற்றிருக்கை இருக்க வாய்ப்புள்ளது. அண்மையில், சந்தவசந்தம்  வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் அனைத்துக் கூற்றிருக்கைகளும் மற்ற வகை மிறைக்கவிகளும் உரையுடன் வெளியிடப் பட்டிருப்பது போற்றத்தக்கது (6). சைவம், வைணவம், காணாபத்தியம், சாக்தம், கௌமாரம், சௌரம் என்னும் அறுவகைச் சமயக் கடவுளர்களைப் பற்றியும் தனித்தும், கூட்டாகவும் கூற்றிருக்கைகள் அமைத்திருப்பதும், இச்செய்யுள்களின் தேர் வடிவ அமைப்புகளில் சில முந்தைய கூற்றிருக்கைகளில் காண்பதினின்றும் வேறுபட்ட அமைப்புக்களைக் கொண்டனவாகச் செய்திருப்பதும், எழுகூற்றிருக்கை மட்டுமன்றி எட்டு, ஒன்பது, பத்துக்கூறுகள் கொண்ட கூற்றிருக்கைகளை இயற்றியிருப்பதும் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் இவ்வகைச் செய்யுள்களில் புகுத்தியுள்ள புதுமைகளாகும். மேலுள்ள பட்டியலில், இறைவனைப் பற்றிய கூற்றிருக்கைகளில் எண்களைக் குறிக்கும் சொற்கள் உள்ள பகுதிக்குப் பின்னுள்ள இறுதி அடிகள் எண்கள் பற்றிய குறிப்பின்றி, செய்யுளை இயற்றுபவருடைய கருத்துக்களை இயம்புவனவாக அமையும்.

4. தேர்வடிவ அமைப்பு வகைகள்

கூற்றிருக்கைச் செய்யுள்களில் காணும் தேர் அமைப்பில் மேலுள்ள பட்டியலில் உள்ள 19 பாடல்கள் எவ்வாறு வேறுபடுகின்றன என்பதை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம். கீழுள்ள படங்களில், கூற்றிருக்கைச் செய்யுளின் ஒவ்வொரு கூறிலும் இருக்கும் சொற்களின் எண் வரிசையை ஒட்டி, மேற்சொன்ன பத்தொன்பது கவிதைகளிலும் காணப்படும் தேர் வடிவ அமைப்பை ஏழு வகையாகப் பிரித்துள்ளேன்.
   




மேலுள்ள படங்களில் காணும் அமைப்புகளில், காலத்தினால் முந்திய திருஞான சம்பந்தர், திருமங்கைமன்னன் ஆகியோரின் கூற்றிருக்கைச் செய்யுள்கள் 1-2-3 என்ற கூறோடு தொடங்கி  ஆறாவது கூறிலும் ஏழாவது கூறிலும் ஏழு எண்களும் வருமாறு அமைக்கப்பட்டுள்ளதைப் பார்க்கிறோம் (வகை 1, 2). சம்பந்தரின் செய்யுள் இறுதியில் எண் ஒன்று மேலுமொரு முறை வந்துள்ளது. படத்தில் இது எட்டாவது வரிசையாகக் காட்டப்பட்டுள்ளது (வகை-1). (எழுகூற்றிருக்கை என்பது செய்யுளில் அதிக பட்சமாக உள்ள எண்ணான ஏழின் அடிப்படையில் எழுந்த சொல்; இது கீழுள்ள படங்களில் மேலிருந்து கீழாகக் காணப்படும் வரிசைகளின் மொத்த எண்ணைக் குறிக்காது என்பதை நினைவில் கொள்ளல் நலம்.)

சுமார் ஒன்பதாம் நூற்றாண்டுக் காலத்தைச் சேர்ந்த நக்கீரதேவ நாயனாரின் சிவபெருமான் திருவெழுகூற்றிருக்கையின் அமைப்பு திருமங்கைமன்னனின் செய்யுளை ஒத்திருக்கிறது (வகை-2). எனினும், கிட்டத்தட்ட அதே காலத்தைச் சேர்ந்த யாப்பருங்கல விருத்தி உரையாசிரியர் தந்துள்ள எழுகூற்றிருக்கை முந்தைய இரண்டு வகைகளிலிருந்தும் மாறுபட்டிருக்கிறது. தொடக்கத்தில் 12 என்ற இரண்டு அறைகள் கொண்டிருப்பதோடு, குறிப்பாக, ஆறாம் வரிசை தவிர மற்றவற்றின் வலப்புறத்தில் ஈற்று எண் 1-ஆக இல்லாமல் 2- என்று இருப்பதும், ஈற்று வரிசையில் ஏறுவகையில் எண் ஏழு வரை சென்றபின் இறங்குவரிசை இல்லாமல் முடிந்திருப்பதும் (வகை-3) கவனிக்கத்தக்கது. இந்த மாற்றத்திற்கான காரணம் விளங்கவில்லை. கோவில் அமைப்புகளில் காணும் மாறுதல்களைப் போல, கூற்றிருக்கைகளின் சித்திர அமைப்பில் இவ்வாறு காணப்படும் வேறுபடுகளுக்குச் சமய ரீதியான காரணம் ஏதும் உள்ளதா என்று தெரியவில்லை. எண்களுக்கும் சமயங்களில் வழங்கும் தத்துவங்களுக்கும் தொடர்பிருப்பதை ஒட்டிச் சில அமைப்பு வேறுபாடு இருக்கவும் வாய்ப்புள்ளது. இவை போக, தேர் வடிவங்களை அவரவர்க்குப் பிடித்தமான வகையில் அமைத்து அலங்காரம் செய்வது போன்றது இவ்வேறுபாடுகள் என்று கருதவும் இடமிருக்கிறது.   

கூற்றிருக்கையின் முதல் வரிசை 1 என்ற எண்ணுடன் மட்டும் அமைந்து தேரின் கூம்பு வடிவான உச்சியைக் காட்டும் வகையில் இருப்பதை (வகை-4) முதன்முதலாக,  அருணகிரிநாதரின் (15-ஆம் நூற்றாண்டு) திருப்புகழில் உள்ள திருவேரகத்தில் உள்ள முருகனைப் பற்றிய திருவெழுகூற்றிருக்கைப் பாடலில் காண்கிறோம். இந்த அழகிய அமைப்பை வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் தமது எட்டுக் கூற்றிருக்கைகளில் ஐந்தில் பயன்படுத்தியிருக்கிறார். எஞ்சியுள்ள மூன்று செய்யுள்களும் வெவ்வேறு வகையான அமைப்புகளைக் கொண்டுள்ளன (பட்டியல்-1.) அவற்றில், முருகவேள் திருவெழு-  கூற்றிருக்கை, திருமால் எழுகூற்றிருக்கை ஆகிய இரண்டும், முதல் ஆறு வரிசைகளில் நக்கீரர், திருமங்கையாழ்வார் எழுகூற்றிருக்கைகளில் காணும் அமைப்பைக் கொண்டு, இறுதி ஏழாம் வரிசையில் எண் இரண்டிலிருந்து தொடங்குமாறு அமைக்கப்பட்டு ஒரு புது வகையைச் சார்ந்தனவாக (வகை-5) காண்கின்றன. சூரியன் எழுகூற்றிருக்கையில், முதல் மூன்று வரிசைகள் இதுவரை பார்த்த அமைப்புகளிலிருந்து மாறுபட்டும், பின்னர் வருவன இரண்டாம் வகையை ஒத்தும் இருப்பதைப் பார்க்கிறோம். இதற்கு ஏதேனும் விசேஷ காரணம் உண்டா என்பது தெரியவில்லை. (முதல் வரிசை, சூரிய பகவான் பவனிவரும் தேரில் அவர் தனியாக அமர்ந்திருக்கும் தட்டாகவும் 2,3 வரிசைகளை அவரது சாரதியான அருணன் அமரும் இடங்களாகவும் நாம் கற்பனை செய்து கொள்ளலாம்.)

’அகத்தியர்’, ‘சந்தவசந்தம்’ என்னும் இணைய வலைத்தளங்களில், நான் பல ஆண்டுகளுக்கு முன் எழுதிய திருவண்ணாமலையான் எழுகூற்றிருக்கை, நான்காம் வகை அமைப்பைக் கொண்டது (16). இச்செய்யுளின் முன்பகுதியில் பாடுவோனின் அவலநிலை பற்றியும் பின்பகுதியில் இறைவனின் சீர்கள் பற்றியும் எண்களைக் குறிக்கும் சொற்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது மற்ற கூற்றிருக்கைகளின்றும் சற்றே மாறுபட்ட கருத்து அமைப்பாகும். ’சந்தவசந்தம்’ வலைத்தளத்தில் அண்மையில் நடைபெற்ற படமொழிக் கவியரங்கம் ஒன்றில், புதுவகையான எழுகூற்றிருக்கைச் செய்யுள் ஒன்றைக் கவிஞர் ஓகை நடராஜன் இயற்றியுள்ளார் (17). அது வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் பொதுக்கடவுள் தசாங்கக் கூற்றிருக்கையின் தேர் அமைப்பை (வகை-7) கொண்டது. . இதுவரை நாம் கண்ட மற்ற கூற்றிருக்கைகள் ஒரு குறிப்பிட்ட கடவுளைப் பாடுபொருளாகக் கொண்டு அமைந்த விதத்தைப் பார்த்துள்ளோம். இதனின்றும் மாறுபட்டு, ஓகை நடராஜன் தமக்குக் கொடுக்கப்பட்ட படம் ஒன்று தமக்குள் எழுப்பிய பொருளை விளக்குவதற்கு எழுகூற்றிருக்கை யாப்பமைதியைப் பயன்படுத்தியுள்ளார். இலக்குவன் அனுமன் ஆகிய இருவரைச் சுற்றி அமைக்கப்பட்ட இக்கவிதை கற்பனை வளம் நிறைந்த ஒரு பாராட்டத்தக்க, புதுமையான முயற்சியாகும். மற்றோரின் எழுகூற்றிருக்கைச் செய்யுள்களைப் போலன்றி, இவரது செய்யுளில், இறுதிப் பகுதியில் கூற்றிருக்கை அமைப்பு இல்லாத மேலதிகமான அடிகள் இல.        

5. எழுகூற்றிருக்கை அல்லாத கூற்றிருக்கைகள்

கூற்றிருக்கை யாப்பில் எழுகூற்றிருக்கைகள் மட்டுமிருந்த நிலையை மாற்றி, வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், எட்டு, ஒன்பது, பத்து எண்கள் கொண்ட கூற்றிருக்கைகளை ஒரு புது முயற்சியாக இயற்றியுள்ளார். இக்கூற்றிருக்கைச் செய்யுளை எழுதுவதற்கு எழுகூற்றிருக்கையை விட மிகுதியான திறன் தேவைப்படும் என்பதை எளிதில் ஊகிக்கலாம். சண்முகன் எண்கூற்றறிக்கை, சிவபெருமான் ஒன்பதுகூற்றிருக்கை, திருமால் ஒருபது கூற்றிருக்கை, என்ற மூன்றும் அருணகிரியார் வகுத்த தேர் அமைப்பு உடையன (வகை-4.) மாறாக, பொதுக்கடவுள் தசாங்கக் கூற்றிருக்கையில், வண்ணச்சரபம் சுவாமிகள் ஒரு முற்றிலும் புதிய வகையான அமைப்பை அறிமுகப்படுத்தியிருக்கிறார் (வகை-7). இது மிகவும் அருமையானதும், அமைக்கச் சற்றுக் கடினமானதுமான வகை. மற்ற கவிஞர்களின் அமைப்புகளில், ஏழாம் எண்ணைக் குறிப்பிடும் வரிசையை எட்டியதும் செய்யுளில் மேலதிகமாக எண்களைக் குறிக்கும் சொற்கள் தேவைப்படா. தேர் அமைப்பில், தட்டுக்கு மேல் பகுதியில் உள்ள சொற்களே கீழ்ப் பகுதியிலும் பயிலும். ஆனால் இந்தப் புதிய ஏழாம் வகை அமைப்பில், செய்யுள் மேலும் தொடர்ந்து, ஏழு எண்களையும் குறிக்கும் வேறு சொற்கள் கொண்டதாக இருக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. முன்னர் குறித்தபடி, ஓகை நடராஜன் இந்த வகையில் தம் எழுகூற்றிருக்கைக் கவிதையை அமைத்துள்ளார். மேலதிகமாக, இவர் எழுகூற்றிருக்கைப் பகுதியைத் தவிர, தமது செய்யுளின் வாழ்த்துப் பகுதியில் மூன்று, நான்கு, ஆறு கூற்றிருக்கை அமைப்புகளைக் கையாண்டுள்ளார் என்பதும் நோக்கற்பாலது.

6. முடிப்பு

இறைவன் திருவருள் பெற்ற அடியார்களாகிய சம்பந்தர், திருமங்கையாழ்வார், அருணகிரிநாதர், தண்டபாணி சுவாமிகள் ஆகியோரின் திருவெழுகூற்றிருக்கைகள் இறைவனின் சீர்களை எண்வரிசைகளில் அமைத்துச் சித்திர கவிப் பாவகைக்குச் சிறப்புச் சேர்ப்பதுடன், மக்களுக்குத் தன் அருளைவழங்க ஊர்வலம் வரும்போது இறைவன் அமரும் தேரைப் பாமாலைகளால் அலங்கரிப்பது போன்று அமைந்த கூற்றிருக்கைப் பாடல்கள் அவற்றைப் படிக்கும் அடியார்களின் இறையுணர்வை மிகுதியாக்க வல்லவை. சமயம் தொடர்பான இலக்கியத்தில் இக்கூற்றிருக்கைகள் மந்திரங்கள் போன்று மதிக்கப்படுவன என்றும் அறிகிறோம் (12-14). இது தொடர்பான மேலதிகச் செய்திகளை சமய நூல்களில் பார்க்கலாம். இறைவனை முன்னிட்டு அமைக்கப்படாத கூற்றிருக்கைகள் இந்த யாப்பில் புதுமையைப் புகுத்தக் கவிஞர்களுக்கு வாய்ப்புத் தருவனவாக அமையும். எனினும், பக்தி இலக்கிய மரபின்படி கூற்றிருக்கைச் செய்யுள்கள் புனிதமானவை என்று கருதப்படுவதால், வழிவழியாக வந்துள்ள அக்கூற்றை மதிக்கும் வகையில் இந்தப் பாவினத்தில் கவிதைகள் படைத்தல் நன்று.   

7. துணைநூல்கள் பட்டியல்

1. தண்டியலங்காரம், உரையுடன் (1998) கொ. இராமலிங்கத் தம்பிரான் (குறிப்பாசிரியர்), திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.
2. மாறனலங்காரம் - திரு.நாராயணையங்கார், (பதிப்பாசிரியர்), பதிப்பித்த ஆண்டு, பதிப்பக விவரங்கள் கிட்டவில்லை.
3. யாப்பருங்கலம் (பழைய விருத்தியுரையுடன்) (1998) மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை (பதிப்பாசிரியர்), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
4.நவநீதப் பாட்டியல் (1944) எஸ்.கலியாண சுந்தரையர், எஸ்.ஜி.கணபதி ஐயர் (பதிப்பாசிரியர்கள்)    http://www.tamilvu.org/library/l0L00/html/l0L00ind.htm
5. சித்திரக் கவிகள் (1983) வே.இரா. மாதவன் (பதிப்பாசிரியர்), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
6. சித்திர கவிகள் - வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளியது (1987), தி.செ. முருகதாச சுவாமிகள் (உரையாசிரியர்), சால்பகம், தஞ்சாவூர்.
7.. வண்ணையந்தாதி-சித்திர கவிகள் (1887) சி.ந. சதாசிவ பண்டாரத்தார், தீனோதயவேந்திரசாலை அச்சகம், சிங்கப்பூர்
8. சித்திரச் செய்யுள் (2000) ப.வி. இக்குவனம், Stamford Press, சிங்கப்பூர்
9. சித்திர கவி (1996) க.பழனிவேலன், ஏ.ஆர். அச்சகம், சென்னை
10. சிங்கப்பூர்ச் சித்திர கவிகள் (2000) சுப. திண்ணப்பன், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் சங்கம் வெள்ளி விழா மலர், பக். 87-95.
11. Pascal’s Triangle, வலைத்தளச் சுட்டி: http://en.wikipedia.org/wiki/Pascal's_triangle
12. பதினொன்றாந்திருமுறை (1995) ஞானசம்பந்தம் பதிப்பகம், சென்னை; பக். 317-321. http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=11&Song_idField=11012&padhi=040&button=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95
13. தேவாரத் திருப்பதிகங்கள் (2005) அ.ச. ஞானசம்பந்தன் (பதிப்பாசிரியர்), கங்கை புத்தக நிலையம், சென்னை; பக். 197-198: வலைத்தளச் சுட்டி: http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=1&Song_idField=1128&padhi=136+&button=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95
14. ஸ்ரீநாலாயிர திவ்வியப் பிரபந்தம், பாகம் 1. (2000) லிப்கோ, திருச்சி; பக். 935-938. வலைத்தளச் சுட்டி: http://www.tamilkalanjiyam.com/literatures/divya_prabandham/thiruvezhu_koorrirukkai.html)
15திருப்புகழ் (1987) வ.சு. செங்கல்வராய பிள்ளை (உரையாசிரியர்), பகுதி 6, திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்; வலைத்தளச் சுட்டி: http://www.kaumaram.com/thiru_uni/tpun1326.html
16. திருவண்ணாமலையான் திருவெழுகூற்றிருக்கை (2004) வே.ச. அனந்தநாராயணன், வலைத்தளச் சுட்டி: http://www.treasurehouseofagathiyar.net/29000/29087.htmhttps://groups.google.com/forum/?fromgroups#!topic/santhavasantham/1SWeaKH20rM
17. படஞ்சுட்டுங் கதை (2012) ஓகை நடராஜன், வலைத்தளச் சுட்டி: https://groups.google.com/forum/?fromgroups#!topic/santhavasantham/FaYZI_Bo17Y