Saturday, May 12, 2018

சித்திரச் செய்யுள் - பகுதி 2


                     "உயிரூட்டும் செய்யுள்கள்" 

                          வே.அனந்தநாராயணன் (அனந்த்)


சித்திரச் செய்யுள் என்று பெயர் கொண்ட கவிதை இனம் பற்றி முந்திய கட்டுரையில் பார்த்தோம். அதன் இறுதிப் பகுதியில் ரமண மஹர்ஷியின் பாடல் ஒன்றில் காணும் சொல் அமைப்பை ஒரு ” சுருள் இணை” (a pair of interacting helices in a zipper arrangement) வடிவச் சித்திர கவியாகத் தந்திருந்தேன்.  இவ்வடிவம் புரதங்கள் (proteins) பலவற்றில் காணப்படுவதையும் சுட்டியிருந்தேன்.  அதையொட்டிமேலும் சில செய்திகளை இங்குப் பரிமாறிக் கொள்ளலாம் எனத் தோன்றியது. அதற்கு  முன்னுரையாக, ஒரு சிறு மீனின் கற்பனையில் உருவான சித்திரம் ஒன்றைக் கீழே பாருங்கள்:

ஒரு கவிதையை இயற்றுவது போன்ற கவனத்துடனும் திறமையோடும் இந்த மீன் தனது ஓவியத்தைப் படிப்படியாக உருவாக்கும் அழகைக் காட்டும் காணொளி ஒன்றை இந்த இணைய தளத்தில் பாருங்கள்:  https://www.youtube.com/watch?v=B91tozyQs9M
அதைப் பார்த்த பின்னர் (உங்கள் வியப்பு அடங்க நேரம் தந்தபின்) மேலே படியுங்கள். 

இயற்கையில் நிகழும் இத்தகைய அதிசயங்களை உயிரினங்களில் உள்ள மூலக்கூறுகளின் அமைப்புகளின் அடிப்படையில் நோக்கலாம் என்ற எண்ணத்தை இந்தக் கட்டுரையில் தர முயன்றிருக்கிறேன். அதற்கு முன்னுரையாகபுரதங்கள் பற்றிய அடிப்படைத் தகவல்களை முதலில் கீழே தந்துள்ளேன். அதன் பின்னர், எவ்வாறு புரதங்களின் முப்பரிமாண வடிவங்களை ‘உயிரூட்டும்’ சித்திரச் செய்யுள்களாக நாம் கருதலாம் என்பதை விளக்கியுள்ளேன். நம் உடலில் காணும் அற்புதமான மூலக்கூறுகள் (molecules) பற்றியும் அவற்றின் வடிவங்களைப் பற்றியுமான இந்த அடிப்படையான உயிர்வேதியியல் (biochemistry) அறிவு நமக்கு எப்போதும் பயனுள்ளதாக அமையும், எனவே உற்சாகமாக மேலே படியுங்கள்!

புரதங்களும்மரபணுவின் (gene) பகுதிகளான ஆர்என்ஏ (RNA- Ribo Nucleic Acid), டீஎன்ஏ (DNA- Deoxyribo Nucleic Acidபோன்ற உயிரியல் தொடர்பான மூலக்கூறுகள் (molecules) பல சிறிய மூலக்கூறுகளின் தொகுப்பாக அமைந்தவை. நம் உடலில் காணப்படும் 25-ஆயிரத்திற்கும் மேலான புரதங்கள் யாவும், 21 வகையான ’அமைனோ ஆசிட்’ (Amino acid) எனப்படும் சிறிய மூலக்கூறுகளை வெவ்வேறு வகைகளில் தொடுக்கப்பட்ட சங்கிலிகளாக அமைந்தவை. அதுபோல, டீஎன்ஏஆர்என்ஏ மூலக்கூறுகள் பெரும்பாலும் நான்கே வகையான நியூக்ளிக்ளியோடைட் எனப்படும்  மூலக்கூறுகளைப் பல்வேறு வகையில் தொடுத்து அமைந்த சங்கிலிகளாக அமையும். இந்தச் சங்கிலி போன்ற அமைப்பை முதல்நிலை வடிவம் (ஆங்கிலத்தில் primary structure) என்பார்கள். இவ்வடிவம் படிப்படியாக இரண்டு, மூன்று, நான்காவது நிலை அமைப்புகளில் பல அற்புத முப்பரிமாண அமைப்புகளாகப் பரிமாணம் அடைவதை அறிவியல் வல்லுநர்கள் நமக்குக் காட்டியுள்ளார்கள். அவ்வகை அமைப்புகளுக்கும் சித்திரகவிச் செய்யுள்களுக்கும் ஆழமான தொடர்பு இருப்பதாக எனக்குப் படுகிறது. அதை விளக்க எழுந்ததே இந்தக் கட்டுரை. 

எனது கண்ணோட்டத்தின்படிபுரதங்கள்,  டீஎன்ஏஆர்என்ஏ போன்றவற்றில் உள்ள அமைனோ ஆசிட் அல்லது நியூக்ளிக் ஆசிட் மூலக்கூறுகளை, கவிஞன் இயற்றும் செய்யுள்களின் அடிப்படையான எழுத்துக்களோடு ஒப்பிடலாம்.  எப்படிச் செய்யுள் எழுத்துக்களைக் குறிப்பிட்ட விதங்களில் அமைத்தால் பல்வேறு வகையான சித்திரச் செய்யுள் அமைப்புகள் எழுகின்றனவோ அதுபோலவேஉயிரினங்களில் காணப்படும் சங்கிலி போன்ற நீண்ட  புரதம் அல்லது நியூக்ளிக் ஆசிட் மூலக்கூறுகள் இயற்கையாகவேஇயற்கையின் இலக்கண  விதிகளின்படி, பல்வேறு முப்பரிமாண வடிவங்களை மேற்கொள்வதைக் காணலாம்.  அவற்றில் ஒன்றான ‘லூசீன் ஜிப்பர்’ வடிவை, ”சித்திரச் செய்யுள்- பகுதி 1-ல் சுட்டியுள்ளேன். அவ்வடிவைப் போன்ற மேலும் நூற்றுக்கணக்கான வகை வடிவங்களைப் புரதங்கள், நியூக்ளிக் ஆசிட்  'சங்கிலிகள்’ மேற்கொள்வதைக் கடந்த 60,70 ஆண்டுகளில் உயிரியல்உயிர்வேதியியல் ஆராய்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்தக் கண்டுபிடிப்புகள் மருத்துவத் துறை மிகப் பெரும் அளவில் முன்னேற வழிவகுத்து, புற்றுநோய் உட்படப் பல நோய்களுக்கான மருந்துகளைத் தந்துள்ளன.  

புத்தம் புதிதாக நமது உடலிலுள்ள செல்களில் உண்டாக்கப்பட்ட ஒரு புரதச் சங்கிலி ( primary structure)தொடக்கத்தில் ஒரு ஒழுங்கான வடிவ அமைப்பை மேற்கொள்ளாமல், எண்ணற்கரிய வடிவங்களின் கூட்டாகக் காணப்படும்; இது ஒரு செய்யுளை ஒரு விதியையும் பின்பற்றாமலும், நூற்றுக் கணக்கான வகைகளில் அமைப்பது போலாகும்.  அடுத்த சில நிமிடங்களுக்குள், இந்த ஒழுங்கில்லா வடிவம் (random structure) பட்டை (corrugated strip or sheet), சுருள் (helix) போன்ற இரண்டாவது நிலை (secondary structure) வடிவங்களை உருவாக்கத் தொடங்கும். இதையடுத்து, இந்த இரண்டாவது நிலை வடிவங்கள் ஒன்றோ பலவோ கூட்டாகச் சேர்ந்து மூன்றாவது நிலை வடிவத்தை (tertiary structure) உருவாக்கும். சில புரதங்களில் இதுவே அவற்றின் கடைசி வடிவமாக அமையும். மற்றும் சிலவற்றில், இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட மூன்றாவது நிலை வடிவங்களின் கூட்டாக அமைந்த நான்காவது நிலை வடிவம் (quaternary structure) உருவாகும். புரதம் நம் உடலில் தத்தமக்கான பணியைப் புரிய இத்தகைய ஒழுங்கான வடிவங்களை மேற்கொள்ளுதல் மிக அவசியம். இவ்வடிவங்களில் ஒரு சிறிய குறையிருந்தாலும் புரதத்தின் பணியாற்றலில் பழுது ஏற்பட்டு நோய்கள் வரச் சாத்தியமாக்கும்- சரியாக அமையாத செய்யுள் நமக்குத் தலை, மனவலி உண்டாக்குவதைப் போல!.       

சித்திரச் செய்யுள் ஒன்றின் எழுத்து வடிவத்தை புரதத்தின் முதல்நிலை வடிவத்தோடு ஒப்பிடலாம். அச்செய்யுள் கவிஞன் தேர்ந்தெடுத்த சித்திர வடிவத்திற்குள் அமைக்கப்பட்ட நிலையைப் புரதத்தின் இரண்டாவது நிலை வடிவத்தோடு ஒப்பிடலாம். எனினும், சித்திரச் செய்யுள்களில் காணும் இரண்டே பரிமாணம் கொண்ட (திரைச்சீலையில் வரையப்பட்ட) சித்திரங்கள் போலன்றி, புரதங்களின் இரண்டாவது நிலை வடிவங்கள் முப்பரிமாண ஓவியங்கள் மற்றும் சிற்பங்களைப் போல முப்பரிமாணம் கொண்டு திகழ்வதை நினைவிலிருத்த வேண்டும்.  சித்திரச் செய்யுளை  முப்பரிமாணம் கொண்ட சித்திர வடிவங்களில் உள்ளடக்கி அமைப்பது மிகவும் சிரமமான, இதுவரை முயலாத ஆனால் முடியக்கூடிய சாதனையே.   

இனிப் புரதங்களில் காணும் சித்திர வடிவங்களுக்கான ஓரிரு எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போம்:

1. இரத்தத்தில்ஆக்ஸிஜனைச் சுமக்கும் ஹீமோக்ளோபின் என்னும் புரதத்தின் அமைப்பு: 

மேலிருந்து கீழாக, முதல் நிலை (primary structure); பட்டை, சுருள் போன்ற அமைப்புகளைக் கொண்ட இரண்டாவது நிலை வடிவம் (secondary structure); முதல் நிலை வடிவங்களின் கூட்டாக அமைந்த மூன்றாவது நிலை வடிவம் (tertiary structure); நான்கு ஹீமோக்ளோபின் மூலக்கூறுகளின்  மூன்றாவது நிலை வடிவங்களின் கூட்டாக அமைந்த நான்காவது நிலை வடிவம் (quaternary structure) என்ற முப்பரிமாண அமைப்புக்கள் காட்டப்பட்டுள்ளன.      



                                  
2. மற்றொரு புரதத்தின் நான்காவது நிலை அமைப்பு:

3. புரதங்களைப் போலடீ.என்.ஏ. போன்ற நியூக்ளிக் ஆசிட் மூலக்கூறுகளும் தமக்கே உரித்தான வடிவங்களை தமது 4,5 வகையாக நியூக்ளிக் அமில மூலக்கூறுகளின் தொடுப்பிற்கேற்ற வண்ணம் மேற்கொள்ளும். 
டீ.என்.ஏ. அமைப்பு. இடமிருந்து வலம்: முதல், இரண்டாவது, மூன்றாவது நிலை வடிவங்கள்.  




4. சில வைரஸ்களின் வடிவங்கள்: இவை, ந்யூக்ளிக் ஆசிட் ஒன்றை மையமாகக் கொண்டு அதைச் சுற்றி அமைந்துள்ள பல புரதங்களின் மூன்றாவது நிலை வடிவங்களின் கூட்டாக அமைந்த மாபெரும் ‘சித்திரச் செய்யுள்களாகக்’ காட்சியளிப்பதைக் கண்டு வியக்கலாம். 


           


5. மரபணுவில் (gene) காணப்படும் ’க்ரோமோஸோம்’ (chromosome) என்னும் பகுதியில் விதவிதமான டீஎன்ஏ அமைப்புகளைக் காணலாம்:



இப்போது கூறுங்கள்நம் உடலில் இருக்கும் மூலக்கூறுகளை உயிரூட்டும் சித்திரச் செய்யுள்களாகக் கருதலாம் தானே?


இப்போது இடைச்செருகலாகச் சில செய்திகள்: 
நான் உயிர்வேதியியல் பேராசிரியராகப் பணி புரிகையில்புரதங்களின் வெவ்வேறு வகையான அற்புத முப்பரிமாண அமைப்புகள் ( 3-dimensional structure (or 'conformation' of proteins)  பற்றியும் அவை எவ்வாறு அம்மூலக்கூறுகள் தத்தம் தொழில்களை ஆற்றத் துணை செய்கின்றன என்பது பற்றியும்  மாணவர்களுக்கு வகுப்பில் விவரிப்பது எனக்குப் பிடித்தமான வேலைஅத்துடன்அவ்வடிவங்களின்  கலையழகு பற்றியும் பேசுவதுண்டு அவ்வகையில் நான் புரதங்களைப் பாம்புகளோடு ஒப்பிட்டு அவற்றின் விதம் விதமான அமைப்புகளை விவரிப்பதுண்டு.  முன்பு கூறியது போலநம் உடலில்அமைனோ அமிலங்களின் (amino acids) தொகுப்பான ஒரு சங்கிலியைப் போல உருவாகும் புரதங்கள் தங்கள் பிறப்பிடமான ரைபோஸோம் (ribosome) கூட்டிலிருந்து வெளிவருகையில் பாம்புகள் போலப் பல்வகையில் நெளிந்துநீண்டும் சுருண்டும் பலவகையான உருவங்களோடு வெளிவரும் (எவ்வாறு ஒரு பாம்புகள் நிறைந்த பள்ளத்தில் (snake pit) ஒவ்வொரு பாம்பும் ஒவ்வொரு கணத்திலும் வெவ்வேறு வடிவங்கள் பூண்டு நெளியுமோ அதுபோல.) இதைக் கவிதைக்கான எழுத்துகளைஒருவகைத்தான குறிப்பிட்ட வடிவத்திலன்றிக் கோடிக்கணக்கான உரைநடை அல்லது பாவடிவங்களிலோ அமைப்பது போல எண்ணலாம். பௌதிகக் கணக்குப் படி ஒரு சராசரிப் பரிமாணம் கொண்ட புரதத்திற்கு (சுமார் 100 அமைனோ ஆசிட்களின் சங்கிலித் தொகுப்பு) இந்தப் பிரபஞ்சம் யாவிலும் உள்ள அணுக்களின் எண்ணிக்கையை விட அதிகமான (ஒன்று என்ற எண்ணை அடுத்து 89 பூஜ்யங்கள் கொண்ட தொகையுள்ள) முப்பரிமாண வடிவங்களை மேற்கொள்ள வாய்ப்பிருக்கிறது! ஆனால்என்னே அதிசயம்! மிக விரைவில் (1-20 நிமிடங்களுக்குள்) ஒவ்வொரு புரதமும் எக்காலத்தும், எல்லா உயிரினங்களிலும் தனக்கே உரித்தான ஒரே ஒரு தனிவடிவை மேற்கொண்டு விடுவதைப் பார்க்கிறோம். (இதுஒவ்வொரு பாடலும் ஒரு தனிப்பட்ட சித்திரகவி அமைப்பைத் தேர்ந்துகொள்வது போன்றது.) இது அறிவியலாளர்களைப் பிரமிக்க வைக்கும் செயல். 


இப்படித் தேர்ந்தெடுப்பதற்கு எந்த பௌதிக-இரசாயன விதிகளைப் பின்பற்றுகின்றன என்ற ஆய்வு பல நோபல் பரிசுகளை வாங்கித் தந்திருக்கிறதுஆனால் முடிவான விளக்கம் இன்னும் கிட்டியபாடில்லை!

புரதங்கள் போலப் பாம்புகளும் சுருள் போன்ற வடிவங்களை மேற்கொள்வதாகச் சித்தரிக்கும் கார்ட்டூன் படங்களைக் கேரி லார்ஸன் (Gary Larson) என்னும் கார்ட்டூன் கலைஞரின் படைப்புகள் பலவற்றில் நான் கண்டதுண்டு. தனது இறுதி முப்பரிமாண வடிவத்தை மேற்கொள்வதற்கான விதிகளைப் புரிந்து கொள்ள இயலாமல் தலையைச் சொரிந்து கொள்ளும் ஒரு பாம்பின் கேலிச் சித்திரம் கீழே:  



​மற்றொரு
 பாம்புப் ‘படம்’- சுழல் நடனம் (twist dance) ஆடும் பாம்புகளின் உடலில் உள்ள சுருள் (helical) அமைப்பு எப்படி அவற்றிற்குத் துணைபுரிகின்றன என்று பாருங்கள்! 



என் உயிர்வேதியியல் வகுப்புகளின் தொடக்கத்தில் கேரி லார்ஸன் படங்களில் ஒன்றை முதலில் திரையில் காட்டிய பின்னரே எனது உரையைத் தொடங்குவது எனது வழக்கம். இதன் வழியாகமாணவர்களின் கவனத்தை முழுமையாக இழுத்து வைப்பதும் சாத்தியமாகும்! 

இனி, நாம் முந்தைய பகுதிகளில் பார்த்த சித்திரச் செய்யுள்-புரத வடிவம் தொடர்பைப் பற்றித் தொடர்வோம். 

நம் உடலிலுள்ள புரதங்கள்ந்யூக்லிக் ஆசிட் போன்ற மூலக்கூறுகள் பல்வகையான சித்திர கவி அமைப்புகளைப் போலவும் அவற்றிற்கும் அதிகமானதுமான வடிவங்களைக் கொண்டு தமது பணிகளைச் செய்வதைப் பார்க்கையில்நாம் நம்முடைய சொந்தக் கற்பனையிலிருந்து உண்டாக்கும் அழகழகான வடிவங்களை (சித்திர கவி வடிவங்கள் உட்பட!)கண்ணுக்குத் தெரியாமல் நம் உடலுள் வாழும் மூலக்கூறுகள்தாம் தீர்மானிக்கின்றனவோ என்ற ஐயம் எனக்குள் எழுகிறது

இக்கட்டுரையின் முதல் பாகத்தில் நாம் கண்ட ஹீமோக்ளோபின், டிஎன் ஏ., வைரஸ்கள் ஆகியவற்றின் முப்பரிமாண வடிவங்களை மீண்டும் பாருங்கள். அத்தோடு, கீழே தந்துள்ள எடுத்துக்காட்டுகளுமாகச் சேர்ந்து மேலே கூறிய என் கருத்தை உறுதிப் படுத்துகின்றன. 

1. கீழே காணும் படத்தில் உள்ள கோப்பைஜாடி போன்றவைகளில் வரையப்பட்ட சித்திர வேலைப்பாடுகள் புரதங்கள் மேற்கொள்ளும் அடிப்படை அமைப்புகளை (protein motifs like Greek Key motif) ஒத்திருப்பதைக் காட்டுகின்றன. (இடப்பக்கம் உள்ளவை  நடைமுறையில் நாம் காணும் கலைப்படைப்புகள் வலதுபக்கம் உள்ளவை புரதங்களிலும்வைரஸ் என்னும் உயிரிகளிலும் காணப்படும் வடிவங்களில் காணும் ஓவிய வடிவங்கள்.) 

  
இதுபோலகூடைகளிலும் கோலங்களிலும் காணும் சித்திர அமைப்புகளும் உடலுள் வாழும் மூலக்கூறுகளில் இருப்பதை உயிர்வேதியியல் ஆய்வுகளின் கண்டுபிடிப்புகளில் (?) காண்கிறோம். 


கூடையின் அடிப்பாகப் பின்னல் வடிவமைப்பு                                      Zika-வைரஸ்ஸின் புரதங்களின் அமைப்பு.


ஆக, . நம் பெருமையாகக் கூறிக்கொள்ளும் நமது கற்பனை ஆற்றல் இவ்வளவு தானா?? மேலும் பார்க்கப் போனால், ஒரு அணுவிலிருந்து இந்தப் பிரபஞ்சம் வரை எங்கும் சித்திரகவி போன்ற அமைப்பு பரந்து காணப்படுவது,  இயற்கையின் சித்திரக் கலைத் திறனை நம் மனத்தில் ஆணியறைந்தாற் போல உணர வைக்கிறது:


அணுவின் அமைப்பு


    
அகிலத்தின் அமைப்பு

சிலந்தியின் வலைதூக்கணாங் குருவிக் கூடுஇலைகள்பூக்கள்காய் கனிகள் போன்ற இயற்கையான ஒழுங்கு வடிவங்களுக்கும்,  நாம் படைக்கும் ஓவியசிற்ப வடிவங்களுக்கும் நமது உடலினுள்ளே உலவும் புரதங்கள், நியூக்ளிக் ஆசிட் போன்றவற்றால் உருவாக்கப்பட்ட ’உயிரூட்டும் செய்யுள்களே’ காரணமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.  இத்தோடு, இக்கட்டுரையின் தொடக்கத்தில் நாம் கண்ட சிறு மீனின் “கற்பனை”யில் உருவாகும் ”சித்திரச் செய்யுளையும்”  சேர்த்துப் பார்த்தால் நாம் நமது கற்பனை என்று பெருமைப் பட்டுக்கொள்ளும் கலை வடிவங்களுக்கு அடிப்படைக் காரணமாய் இருப்பவை உயிரினங்களின் உடலுள் இருக்கும்  மூலக்கூறுகள் தாமோ என்ற கேள்வி  வலுப்பெறுகிறது. இதை உணர்ந்ததால் தானோ பிகாஸோ போன்ற கலைஞர்கள் ஒழுங்கற்ற (asymmetric) வடிவங்களைப் படைத்துத் திருப்தி கொள்கிறார்கள்?   நமது கற்பனை ஆற்றல் இவ்வளவு தானாசிந்தியுங்கள் (சுயமாக!).      



சித்திரச் செய்யுள்- பகுதி 1

சித்திரச் செய்யுள்

வே.. அனந்தநாராயணன் (அனந்த்)

(அடைப்புக்குறிக்குள் காணும் எண்கள் இறுதியில் தந்துள்ள துணைநூல் பட்டியலைச் சார்ந்தவை.)

யாப்பிலக்கணம் வழுவாமல் இயற்றப்பட்ட கவிதை ஒன்றின் எழுத்துக்கள் ஒரு ஓவிய அமைப்புக்குள் ஒரு குறிப்பிட்ட விதத்தில் அடக்கப்படுவதைச் சித்திரச் செய்யுள் அல்லது சித்திரக் கவி என்று அழைப்பர் (1-3). ஆசுமதுரம்சித்திரம்வித்தாரம் என்ற நால்வகையான மரபுக் கவிதை வகைகளில் ஒன்றான சித்திரக் கவிதைகள் சமஸ்கிருதத்திலும்தமிழிலும்பிற இந்திய மொழிகளிலும் படைக்கப்பட்டுள்ளன.  பாம்பு, தேர், சதுரங்கம், மாலை போன்ற பல்வேறு ஓவிய வடிவங்களில் அமைக்கப்படும் சித்திரக் கவிதைகளை பழங்காலத் தமிழ் இலக்கியத்திலும் தற்காலத்திலும்  காணலாம்.  மரபுக் கவிதைக்கான இலக்கணக் கட்டுப்பாட்டையும் அதன் மேலாகக் குறிப்பிட்ட வடிவத்தில் அமைப்பதற்கான விதிகளின் கட்டுப்பாட்டையும் பின்பற்றி அமைக்க வேண்டிய காரணத்தால் சித்திரச் செய்யுள்களை இயற்றுவது கவிஞரின் யாப்புத் திறனுக்குச் சவால் விடும் ஒரு முயற்சியாகும்

அண்மையில், ’சந்தவசந்தம்’  என்னும் மரபிலக்கிய இணையக் குழு நடத்திய சித்திரக் கவியரங்கத்தில் பல கவிஞர்கள் பங்கேற்றுப் பலவகையான சித்திரச் செய்யுள்களை வழங்கினர் (https://mail.google.com/mail/u/0/#search/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/161b1a30ed2d1928.) 
அந்தச் சித்திரக் கவியரங்கத்தில் நான் இட்ட கவிதைகளைக் கீழே தந்துள்ளேன்:

சந்தவசந்தம்: சித்திரக்கவியரங்கம். 
தலைவர்: கவிஞர் அஷோக் சுப்பிரமணியம்

தலைமை வாழ்த்து

சோகம் தமக்கில்லார் துரத்திடுவார் பிறர்கவலை
யாகம் எனும்வண்ணம் இவ் வரங்கை நடத்திடுவார்
நாகம் முதலாக நானா வகைப்படம்மேல்
மோகம் கொளச்செய்தல் மூச்(சு)இவர்க்(கு) என்வணக்கம்.

இவர்வழி சென்று
கவலை களைவோம்! (அட்டநாகம்)

அட்டநாகம்: எட்டு பாம்புகள் பின்னிப் பிணைந்த வடிவம் கொண்ட சித்திரத்தில், மேலுள்ள கவிதை ஒவ்வொரு பாம்பின் வாயில் தொடங்கி, வாலில் முடியுமாறு அமைப்பது. இந்த அமைப்பில்,  பாம்புகளின் உடல் மடங்கித் திரும்பும்போதும், பிற பாம்பொன்றின் உடலைச் சந்திக்கும் போதும் உள்ள அறைகளின் எழுத்துக்கள் பொதுவாக இருக்கும்படி செய்ய வேண்டும். 


அவை வணக்கம்:


வானத்தை வில்லாய் வளைக்கும் திறனுடையார்

கானம்சேர் சந்தக் கவிபடைப்பார் – ஊன(ம்)மிகு

மென்றன் கவிதையையும் ஏற்றிடுவார் சித்ரகவி

மன்றத்தோர்க்(கு) இங்கெனது வாழ்த்து.



சித்திர கவிதை- 1:  இரட்டை நாகபந்தம்


குறிப்பு: இரட்டைநாகபந்த இலக்கணம்http://www.tamilvu.org/slet/l0100/l0100pd2.jsp?bookid=5&pno=210

இரண்டு பாம்புகள் தம்முள் இணைவனவாக உபதேச முறையான் பாம்பு 

உருவங்களில் கணக்கிட்ட அறைகள் வரையப்பட்டு, அவற்றுள் இரண்டு 

கவி எழுதப்பட்டுச் சந்திகளினின்ற அறைகளில் பொதுவாக 

எழுத்துகளமைய ஒரே எண்ணிக்கை கொண்ட எழுத்துக்களாலான 

கவிகள் சித்திரத்தில் பொருத்தப்படுவது இரட்டை நாகபந்தமாம்.”


வாலுள் இருமூன்றும் தலையில் இரண்டெழுத்தும்

மூலைகள் நான்கும் வயிறிரண்டும் ஐவைந்தாய்

நாலெட்டு நாலைந்தே ழாகி நடைபெறுமே

சேலிட்ட கண்ணரவின் சீர்.

ஒவ்வொரு பாம்பும் தமக்குள் ஆறு இடங்களில் மடங்குமாறும் எதிர்ப்பாம்புடன்பன்னிரண்டு 
 இடங்களில் வெட்டும் வண்ணமும் அமைக்கப்படும் இந்தப் பந்த அமைப்பில்,ஒவ்வொரு 
 வெண்பாவும் 57 எழுத்துகள் கொண்டு, மொத்தம் 114 எழுத்துகள் அமையும்.


நாகம்-1  நேரிசை வெண்பா


தஞ்ச மெனவுன தண்பாதஞ் சேர்கையி  

லஞ்சா யெனநீகை தான்கொடுப்பாய் - குஞ்சர

பாலனே மெய்மறை போற்றிடு மப்புனித

சீலனே `யென்குறை தீர்.


பதம் பிரித்து:

தஞ்சம் எனஉன தண்பாதம்  சேர்கையில்  

அஞ்சாய்  எனநீகை தான்கொடுப்பாய் - குஞ்சர

பாலனே மெய்மறை* போற்றிடும் அப்புனித

சீலனே என்குறை தீர்.

(*மெய்ம்மறை என்பது எழுத்துக் கட்டுப்பாடு கருதி, மெல்லின ஒற்றின்றி வந்தது.)   


நாகம்-2 இன்னிசை வெண்பா 


நெஞ்ச மலரவினி தேகொஞ் சமுமினி

யஞ்ச லெனவேநீ  காலடி பால்வீழி        

னன்புலவு வால வமலநி ரந்தரியே

ரஞ்சனிமா தாவெனக்குச் சொல்.


பதம் பிரித்து:

நெஞ்சம் அலரஇனி தேகொஞ் சமும்இனி

அஞ்சல் எனவேநீ  காலடி பால்வீழின்        

அன்புலவு வால அமல நிரந்தரியே

ரஞ்சனி மாதா எனக்குச் சொல்.


வெண்பா 1: யானை வடிவமுள்ள பாலனே! மெய்யான வேதங்கள் 

போற்றும் தூயவனே! நான் அடைக்கலமாகத் (தாபத்தைத் தணிக்கும்) 

குளுமை பொருந்திய உனது அடியைச் சாரும்போது, எனக்கு நீ அஞ்சற்க 

என உனது கையால் (அபய வரதம்) அளித்திட வேண்டுகிறேன்.   

வெண்பா 2:   அன்புள்ளம் கொண்ட 

வாலையே!, களங்கமற்றவளேநிலைத்திருப்பவளேமனத்தை 

மகிழ்விப்பவளே! கலைவாணித் தாயேநான் உனது காலடியில் 

வீழுங்கால்என் உள்ளம் மலரும் வண்ணம்நீ இனிமையோடு இனிமேல் 

சிறிதும் அஞ்சற்க’ என்று எனக்குச் சொல்வாயாக.



 சித்திர கவிதை- 2:  கூடசதுர்த்தம் [நான்காமடி மறைந்திருக்கும் ஓவியக்கவி]


(நாலடியால் ஆன ஒரு செய்யுளின் முதல் மூன்று அடிகளை மூன்று வரிகளில்,

மேலிருந்து  கீழிறங்கியும், கீழிருந்து மேலேறுவதுமாக எழுதி, நான்காவது 

அடி இவ்வாறு அமைத்த மூன்று வரிகளுக்குள் மறைந்து நிற்பதாக

அமைக்கப்படுவது  கூட சதுர்த்தம் எனப்படும்.)


கவியா லுலகைக் காத்து

மதியா லேஅவி செய்துய்யச்

சிறியவ னுள(ம்)மேவி

விலகாம லேசெய் சிவமே  


(அவி = யாகத் தீயில் இடும் படையல்)
                                                       

 

கை

க் 

 தி

 யா

 ய்

து

றி


 வி
 வி

 

 கா

 

 லே

செ

ய் 

சி


 மே
 யா

 லு

 த்

 து

 

 வி


 ச்

னு

 


சித்திர கவிதை- 3      தேர் அமைப்பு.  எழுகூற்றிருக்கை
எழுகூற்றிருக்கை என்பது தொன்னூற்றாறு பிரபந்த வகைகளில் ஒன்று. தண்டியலங்காரம் (1), மாறனலங்காரம் (2), யாப்பருங்கல விருத்தியுரை (3), நவநீதப் பாட்டியல் (4) ஆகிய நூல்கள் தந்திருக்கும் இலக்கணப்படி, ஒன்றுமுதல் ஏழு வரை உள்ள எண்கள் ஏழு கூறுகளை இடங்கள் ஆகக் கொண்டு, படிப்படியாக உயர்ந்தும் பின்னர் குறைந்தும் வரும் எண்ணலங்காரம் அமையப் பெற்ற ஆசிரியப்பா வகைப் பாடலைக் குறிக்கும். (கூற்றிருக்கைச் செய்யுள்கள் பற்றிய எனது கட்டுரையை  http://vsa-
writes.blogspot.ca/2018/05/blog-post_7.html -ல் காணலாம்.)

சக்கரங்களுக்கான மாலைமாற்றுச் செய்யுள்கள்:  இடப்பக்கம்:  சிவனேவசி”  வலப்பக்கம்: ”மோனகானமோ”     (மேலும் தெளிவான படத்தைப் பின்னர் இடுகிறேன்.)  
                                         திருவண்ணாமலையான்  திருவெழுகூற்றிருக்கை
                                                                                    திருச்சிற்றம்பலம்
                                                 ஓரிமைப் போதுமோ ரோய்விலா தையவுன்
                                                இருதாள் பற்றி யொருமுக நோக்குடன்
                                                ஒன்றியுள் ளிருத்தி மும்மல மொழித்திலன்
                                                இருவினை விரைவினி லிறுத்திட விழைந்திலன்
                                                இம்மையில்  மருந்தொன் றீங்குள தெனயான்
                                                ஓர்ந்துநற் குழுசார்ந் திருந்திலன் முன்னி
                                                நால்வகை  யறம்புரி  ஆன்றநல் லோரை
                                                மும்முறை  வலம்வந் திருதாள் முடியணிந்(து)
                                                ஒருதவம் செய்திலன்

                                                ஒருதர மோதில னிரும்புள முருகிட
                                                மூவா தினிக்கும் நால்வரின் திருமுறை
                                                ஐம்புல னடக்கில னாற்றிசை யலைந்துடல்
                                                மூப்பினை யடைந்து மிருப்பதைப் பகிர்ந்திங்(கு)
                                                ஒருவர்க் கீந்திலன்
                                                ஒருபாற் கனிவாய் உமையவ ளிருத்தி
                                                முக்கட் சுடராய் நான்மறை முடிபாய்
                                                ஐந்தொழில் புரிந்தனை அடியவர் துயரறு
                                                ஐங்கரன் தனது நால்வாய் அழகும்
                                                மூவிரு முகத்தோன் ஒருதனி யொட்பமும்

                                                ஒருங்கே கண்டுமற் றிருவர்க் கொண்ணா
                                                வின்பம் நுகர்ந்தனை
                                                முப்புர மெரித்து நாற்றிசை அஞ்ச
                                                அறுகென வெழுந்துல கதிர்ந்திட நடன
                                                மாடினை ஐயநல் லாறுத லளிக்கும்
                                                ஐந்தெழுத் தோதி நாற்பயன் எய்தியுன்
                                                முன்னிலைக் காட்சி பெறவிரும்பே ரருள்
                                                ஒன்றே துணையென யுணர்ந்தனன் இனியே
                                                மறுபிறப் பில்லாப் பரகதி யெவரும்
                                                பெறுநற் றலமெனப் பெரியோர் புகலும்
                                                அருணைப் பதிவாழ் ஆரழற் சுடரே
                                                கருணை புரிந்தெனைக் காப்பதுன் கடனே
                                                                திருச்சிற்றம்பலம்
*மும்மலம்: ஆன்ம, கன்ம, மாயா மலங்கள்;  இருவினை: நல்வினை, தீவினை; நால்வகையறம்: நான்குவகையான ஆசிரமங்கள்; முன்னிலைக் காட்சி:  இறைவனை அணிந்துறக் காணல்.


குறிப்பு:  இப்பாடலில் காணும் எண்ணமைப்பும் யாப்பமைதியும்  அருணகிரியார், திருஞான சம்பந்தர் ஆகியோரின் திருவெழுகூற்றிருக்கைகளைப் பின்பற்றியது. அதன்படி, ஒரு தேர்/கோபுர வடிவில்: 1, 1 2 1, 12321, 1234321, 123454321, 12345654321, 1234567654321 என்று எண்குறிப்புக் கொண்ட சொற்கள் அமைந்துள்ளன.

பொருள் விளக்கம்
ஐயனே! பெருந்தவத்தினர் செய்வதுபோல உனது திருவடிகளை ஒருகணமும் விடாது பற்றிஉட்புறம் திருப்பிய நோக்குடன் உன்னை என் நெஞ்சில் நிறுத்திஉன்னோடு ஒன்றிய நிலையெய்தி என் மும்மலங்களை அறுத்தெரிய யான் வல்லேனல்லன். அவ்வண்ணம் செய்து என்வினைகளைக் களையும் ஆவலுங்கூடக் கொண்டிலேன். நல்லோரின் கூட்டத்தைச் சேரல் எனது தீவினைப்பயன் தீர மருந்தாகுமென உணர்ந்து அவர்களுள் ஒருவனாகிலேன். நல்லறம் செய்யும் அன்னாரைப் பணிந்து அவருக்குச் சேவைசெய்தல் என்னுந் தவச் செயலையும் ஆற்றிலேன். இவையெல்லாம் செய்யாதொழியினும்சமயக் குரவர் நால்வர் திருவாய் மலர்ந்தருளிய திருமுறைப் பாடல்களை ஒருமுறையேனும் ஓதிஇரும்பெனக் கடிய என் மனத்தை உருகச் செய்திலேன். புலனடக்கங்கொண்ட வாழ்வைப் பற்றிலேன். மாறாகக்கண்டவாறு திரிந்து சேர்த்த செல்வத்தை முதியகாலத்திலேனும் பிறர்க்கு ஈயும் பாங்கில்லாதவ னாகினேன். (இந்நிலையில் யானிருக்க:)

உமையை ஒருபுறமிருத்தியவனாய்முக்கண்ணுடையோனாய்மறையின் பொருளாய் விளங்கிப் படைத்தல்காத்தல்அழித்தல்மறைத்தல்அருளல் என்னும் ஐவகைத் தொழில் புரியும் பரமனே! பணிவோரின் இடைஞ்சல் அறுக்கும் ஐந்து கரமும் ஆனைமுகமுங் கொண்ட மூத்த புதல்வன் விநாயகப் பெருமானின் அழகையும்,  இளையவன் ஆறுமுகப் பெருமானின் ஒளிரும் எழிலையும் ஒருசேரக் கண்டு நீ மகிழ்வாய். அவ்வண்ணம் இரு அழகிய குழந்தைகளைப் பெற்று நீ அடையுமின்பம் மூவரில் மற்றிருவரான பிரமனுக்கும் திருமாலுக்கும் கிட்டாததொன்று.  (உலக வழக்கிலில்லாத புற உருவங்களைக் கொண்ட தன்  இருமைந்தரின்முறையேஓங்கார வடிவமும் பிரமச்சொரூபமுமான உண்மைத் தத்துவங்களை உணர்ந்து மகிழும் ஆற்றலும் பேறும் சிவபெருமானுக்கே உண்டெனக் கூறியவாறு). ஐய! நீ திரிபுரங்களை எரித்தவன்எத்திசையில் உள்ளோரும் அஞ்சுமாறு அரிமாவென எழுந்து உலகமுழுதும் அதிரும் வண்ணம் நடமாடுபவன். மேலே கூறியவாறு இழிநிலையிலுள்ள அடியேன் மனவமைதியளிக்கும் உன் பஞ்சாக்கர மந்திரமோதிநால்வகைப் பயனுமெய்தி உன்னை என்னுள்ளே கண்டு உய்யவேண்டுமெனின் உனது பெரும்பேரருளை வேண்டித் துணையாகக் கொள்ளல் ஒன்றே வழியாகும் என உணர்ந்திட்டேன். பிறப்பிறப்பில்லா நிலையை ஈனருமடையும் தலமெனப் பெரியோர் கூறும் திருவண்ணாமலையில் சோதி வடிவாய்த் திகழும் சிவபெருமானே! உன்னருளைக் கீழோனான எனக்கும் தந்து என்னைக் காப்பது உன் கடனாகும்.  

சித்திர கவிதை- 4: பருவத மார்க்க பந்தம்  
முன்னுரை: பகவான் ஸ்ரீ ரமண மஹர்ஷியின் உபதேசங்களின் தொகுப்பாக அவரால் இயற்றப் பட்ட கவிதைப் படைப்புகளில், கலிவெண்பா யாப்பில் அமைக்கப்பெற்ற உள்ளது நாற்பது தலைசிறந்ததாகக் கருதப்படுகிறது. அதிலுள்ள நாற்பது வெண்பாக்களில் முதல் வெண்பாவாகவும் அதன் பின் வரும் வெண்பாக்களின் உட்கருத்தாகவும் அமைந்த பாடல்  கீழே தரப்பட்டுள்ளது: 

உள்ளதல துள்ளவுணர் வுள்ளதோ வுள்ளபொரு
ளுள்ளலற வுள்ளத்தே யுள்ளதா – லுள்ளமெனு
முள்ளபொரு ளுள்ளலெவ னுள்ளத்தே யுள்ளபடி
யுள்ளதே யுள்ள லுணர்.

பொருள் விளக்கம்: https://anmikam4dumbme.blogspot.ca/2015/02/2_28.html -லில் இருந்து:
ஆதி அந்தமில்லாது எப்போதும் இருக்கிற ஞான ஸ்வரூபம் ஒன்றே உண்மை. அது அல்லாமல் வேறு ஒரு உண்மையான வஸ்து உள்ளதோ? இல்லை. அந்த ஞான ஸ்வரூப சத்திய வஸ்துவானது, மனம் சகல நினைப்புக்களும் நீங்கி தன்னுள்ளே ஒடுங்கும் போது ஹ்ருதயத்தில் பிரகாசிக்கிறது. ஆகவே மனம் எப்படி அந்த சத்திய வஸ்துவை நினைக்க முடியும்? ஞான மயமான ஹ்ருதயத்தில் அந்த ஞான ஸ்வரூபம் உள்ளது போலவே மனம் அதன் உள்ளே மறப்போ நினைப்போ இல்லாது அம்மயமாகவே ஒடுங்கிக்கிடப்பதே அதை நினைத்தல் ஆகும் என அறிவாயாக.

நினைத்தல், உட்பக்கம், இருப்பு என்ற மூவகைப் பொருள் கொண்ட உள் எனும் சொல் மேற்கண்ட பாடலில், ’உள்ள என்னும் சொல்லாட்சியாக 14 முறை பயில்கிறது. பாடலில் ஒவ்வொரு முறையும் இச்சொல் இந்த மூன்று விதமான பொருள்களில் ஒன்றையோ ஒன்றிற்கும் மேலானவற்றையோ கொண்டு,மெய்ப்பொருளின் தன்மையை விரித்துரைக்கும். நம்மை நாமே உணர்வதற்கான வழியைச் சொல்லும் உள்ளது நாற்பது நூலின் தலையானதான இந்த வெண்பாவில் ஒரே சொல் (உள்ள) பன்முறை பயில்வதை ஆன்ம விசாரத்திற்கான வழியின் படிக்கட்டுகளாக உருவகப் படுத்தும் ஒரு சித்திர அமைப்பாக்க முயன்று விளைந்த வடிவத்தைக் கீழே காணலாம்:
. (இதனை நிரோட்டகம், வல்லினப் பாட்டு, அக்கரச் சுதகம், அக்கர வருத்தனை,கூற்றிருக்கை போன்ற சொல்லமைப்பின் அடிப்படையில் அமையும் மிறைக்கவிகளைப் போலக் கருதலாமெனத் தோன்றியது- மாறனலங்காரம்,பக். 466-476.) 

இதையொட்டி, எனது ஆய்வுத் தளமாகிய உயிர்வேதியியலின் பெரும்பகுதியான புரதங்களின் கட்டுமானத்தில் (Protein Structure) காணப்படும் ஒரு முக்கிய அமைப்பான ”லூஸீன் ஜிப்பர்” (Leucine Zipper) என்னும் அமைப்பு, மேலே தந்த ஸ்ரீரமணரின் கவிதையில் பொதிந்திருக்கிறது என்ற கண்ணோட்டம் எனக்குள் எழுந்தது. உயிரினங்களின் அடிப்படையான மரபணுக்களில் உள்ள டீ.என்.ஏ (DNA)-யில் அடங்கியுள்ள செய்தியை வெளிக்கொணரல் என்னும் இன்றியமையாத தொழிலை ஆற்றும் புரதங்களிடையே லூஸீன் ஜிப்பர் என்னும் கட்டுமானம் பரவலாகக் காணப்படுகிறது. இந்தச் சொல் அமைப்பை ஒரு ” சுருள் இணை” (a pair of interacting helices in a zipper arrangement) வடிவச் சித்திர கவியாகக் கருதலாம்.  நமக்குள் எப்போதும் ஒளிரும் ஆன்ம உணர்வை வெளிக்கொணரும் வகையாக அமைந்துள்ள ரமணரின் இந்த வெண்பாவில் லூஸீன் ஜிப்பர் அமைப்பு போன்ற சொல்லமைப்பு இருப்பதைக் கண்டேன். (இதுபோல, வேறெந்தக் கவிதையிலும் கண்டதாக என் சிற்றறிவிற்குத் தென்படவில்லை.) அதன் விளைவாக இந்தச் சொல்லமைப்பை ஒரு சித்திர/மிறைக் கவியின் கட்டுமானமாகக் கருதலாம் எனவும் தோன்றியது.  கீழே தந்துள்ள படத்தில், திருவண்ணாமலையின் உச்சியில் காணும் அருணாசலப் பேரொளியை, மெய்யறிவை அடையும் வழியாக  லூஸீன் ஜிப்பர் வடிவை அமைத்து அதில்  ஸ்ரீரமணரின் வெண்பாவில் பலமுறை காணும் ’உள்ள’ என்னும் சொல்லைப் படிக்கட்டுகளாக  அமைத்துள்ளேன். (இந்தப் புதுவகையான சித்திரச் செய்யுள் வடிவத்தைப் பற்றிய உங்கள் கருத்துகளை "உள்ளபடி” தெரிவிக்க வேண்டுகிறேன்.) 
     

மேலே காணும் திருவண்ணாமலையின் படத்தின் உள்ளே காட்டப்பட்டிருக்கும் படிபோன்ற அமைப்பை, கீழுள்ள படத்தில் தெளிவாகக் காட்டியுள்ளேன்.


மேலே உள்ள படத்தில் காட்டியுள்ள படிக்கட்டு வழி போன்ற அமைப்பைக் கீழே தந்துள்ள புரதங்களில் காணப்படும் ”லூஸீன் ஜிப்பர்” (Leucine Zipper)   அமைப்போடு ஒப்பிடலாம்.  இருபக்கத்திலும் உள்ள சுருள்களுக்கு இடையே படிகள் போன்று  காண்பவை புரதங்களில் உள்ள அமைனோ ஆசிட் (amino acid)  என்னும் மூலக்கூறுகளின் பகுதிகள் :


லூஸீன் ஜிப்பர்” அமைப்புப் பற்றிய மேலதிகத் தகவல்களை இணையத்தில் காணலாம். காட்டாக:https://en.wikipedia.org/wiki/Leucine_zipper ; http://csmbio.csm.jmu.edu/biology/courses/bio220/zipper.html

மேலே தந்துள்ள சித்திரச் செய்யுள்களின் தொடர்ச்சியாக, “சித்திரச் செய்யுள்கள். பகுதி-2: ”உயிரூட்டும் சித்திரச் செய்யுள்கள்” என்னும் தலைப்பில் அடுத்துவரும் கட்டுரையில் காணவும். 

துணை நூல்கள் சில:
1. வே.இராமாதவன், ‘சித்திரக் கவிகள்’ உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்சென்னை (1983).
3.  ’சித்திரக் கவித்திரட்டு’, ஞா. பாலசந்திரன், ஞானம் வெளியீடு (2016)