பாட்டுக்கு மெட்டு
அனந்தநாராயணன் (கானடா)
(இது, ‘கட்டுரைகள் ‘ தளத்தில் காண்பதன் மறு பதிவு.)
சென்னை நகரில் அமர்க்களமாக இசை விழா நடந்து கொண்டிருக்கும் இந்த டிசம்பர் மாதத்தில், பல்வேறுவகையான இசை நிகழ்ச்சிகளில், சாகித்ய கர்த்தாக்கள் என அழைக்கப்படும் பாடல் புனைபவர்களின்பாடல்களைப் பற்பல பாடகர்கள் பாடிக் காட்டுவதையும், நாட்டியக் கலைஞர்கள் ஆடிக் காட்டுவதையும்மக்கள் திரள்திரளாகச் சென்று கேட்கும் காட்சி என் கண்முன் விரிகிறது. பல ஆண்டுகளாக, நானும்உலகில் வேறெங்கும் இத்தனை பெரிய அளவில் நடைபெறாத இந்த இசைவிழாவைக் கண்டு, கேட்டுமகிழச் சென்றுள்ளேன் (இடையில், பல காண்டீன்களில் நாவார உண்டு மகிழ்வதும் உண்டு!)அப்பொழுதெல்லாம் என் மனத்தில், அழகழகாகச் சொற்களைக் கோத்துப் பாடல் வடிவில் உருவாக்கும்பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள், பாடகர்கள் இவர்களுக்கிடையே உள்ள உறவை எண்ணிப்பார்ப்பதுண்டு. நல்ல மொழியறிவும், மொழிப் புலமையும் கொண்டவராய் இருத்தல், ஓசை, பண்(இராகம்), தாளம் போன்ற இசை நுணுக்கங்களைப் பற்றிய அறிவு, நல்ல கருத்து வளம், அக்கருத்துகளைக்கேட்போர் உள்ளம் மகிழ இனிய ஓசையோடு பொருந்துமாறு எழுத்தில் பாடலாக வடிக்கும் திறன் ஆகியஅனைத்தும் பாடலாசிரியருக்கான இலக்கணம் ஆகும். இவ்வாறு அமைக்கப்பட்ட பாடலை,பாடலாசிரியரின் உள்ளக் கருத்தும், பாடலில் தெரிவிக்கப்படும் உணர்வும் நன்கு வெளிப்படுமாறுஅப்பாடலுக்கு ஏற்ற மெட்டையும் தாளத்தையும் தேர்ந்து, பாட்டின் இசையை மக்கள் விரும்பத்தக்கவகையில் அமைக்கும் வல்லமை உடையவராக இருக்க வேண்டும். இறுதியில், இவர்கள் இருவருடையஉள்ளக் கிடக்கைகளையும் புரிந்துகொண்டு, பாடலை இனிய குரலில் உச்சரிப்புச் சுத்தமாகப் பாடும்திறன் பாடுபவருக்கு இருக்க வேண்டும். இப்படி மூவகைப் பொருத்தமும் அமைந்த பாடல்களைப்பண்டிதர் முதல் பாமரர் வரை விரும்பிக் கேட்பதைப் பார்க்கலாம். பண்டைய நாளில், ‘கான கலாதர’என்ற பட்டம் பெற்ற சங்கீத வித்வான் மதுரை மணி ஐயரின் தமிழ் இசையை ரிக்ஷா இழுப்பவர்கள் கூடரசித்துக் கேட்டு மகிழ்வார்கள் எனச் சொல்வார்கள்.
பாட்டுக்கு மெட்டமைப்பது என்றவுடன் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது தமிழ்த் திரைப்படப்பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள் ஆகியோர் பற்றிய எண்ணம் தான். முந்தைய காலப்பாடலாசிரியர்களான உடுமலைப்பேட்டை நாராயண கவி, மருதகாசி, பட்டுக்கோட்டைகல்யாணசுந்தரம் போன்றவர்களிலிருந்து, பின்னர் வந்த கண்ணதாசன், வாலி, வைரமுத்து, மு.மேத்தா,பா.விஜய் போன்ற பலரும் சிறந்த பாடல்களைப் படைத்து நம்மை மகிழ்விக்கிறார்கள்.இசையமைப்பாளர்கள் என்று எடுத்துக் கொண்டால், இளையராஜா, ரஹ்மான், கிப்ரான், வித்யாசாகர்,இம்மான், யுவான், பிரகாஷ் போன்ற பலர் நம் நினைவுக்கு வருகின்றனர். இவர்களைப் போல, நம் தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரும் ஏராளமான பாடலாசிரியர்களும்இசையமைப்பாளர்களும் இருந்திருக்கிறார்கள் என்பதைப் பலர் அறிந்திருக்க மாட்டார்கள். இந்தக்கட்டுரையில், பண்டைய காலத்துத் தமிழ் மரபில் பாடலாசிரியருக்கும் இசையமைப்பாளருக்கும்எவ்வகையான தகுதியும் உறவும் இருந்தன என்று பார்க்கப் போகிறோம். அதற்கு அடித்தளமாக, தமிழிசைபற்றிய சில செய்திகளை முதலில் தெரிந்து கொள்வது நல்லது.
இயல், இசை, கூத்து அல்லது நாடகம் என்ற மூன்று பிரிவுகளைக் கொண்ட தமிழ் மொழியில்,இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இசை ஒரு மேலான இடத்தை எட்டியிருந்ததென நாம்அறிவோம். இயற்றமிழுக்கான சொல், பொருள், செய்யுள் ஆகியவற்றிற்கான இலக்கணங்களைவரையறுத்த மிகப்பழைய நூலாகிய தொல்காப்பியத்தில், இசை பற்றிய குறிப்புகள் பல உள்ளன (1).இசை எழுத்துக்களின் மாத்திரை அளவுகள், நால்வகை நிலங்களுக்கான பண்கள், தெய்வங்களுக்குரியஇசை, பாடல் அமைப்புக்குத் தேவையான எதுகை, மோனை வகைகள் போன்ற பல இசைத் தொடர்பானசெய்திகளைத் தொல்காப்பியத்தில் காண்கிறோம். அடுத்தபடியாக, கடைச்சங்க காலத்தைச் சேர்ந்தபரிபாடலில், புலவர் ஒருவர் இயற்றிய பாடலுக்கு மற்றொருவர் அதற்கேற்ற பண்ணோடு சேர்த்துஇசையமைக்கும் முறை இருந்ததென நாம் காண்கையில், தமிழிசை மிகத் தொன்மையானகாலத்திலேயே பெருமளவில் வளர்ச்சி பெற்றிருந்தது என்பதை அறிந்து நாம் களிப்பெய்துகிறோம்.பரிபாடல் காலத்தில், கடுவன் இளம்வெயினனார், நல்லந்துவனார், மையோடக் கோவனார், குன்றம்பூதனார், இளம்பெருவழுதியார் என இயற்றமிழில் வல்லமை பெற்ற புலவர்களாக இருந்த பலபாடலாசிரியர்களின் பட்டியலைக் கர்நாடக இசை, திரைப்பட இசை ஆகியவற்றில் இயல் தமிழில்தேர்ச்சியுள்ள அண்மைக் காலத்திய பாடலாசிரியர்களின் வரிசையோடு ஒப்பிடலாம். அதுபோலப்பரிபாடலில் கலிப்பா என்னும் பாவகையைச் சார்ந்த கவிதைகளுக்கு, பித்தாமத்தர், மருத்துவன்நல்லச்சுதனார், கண்ணனாகனார் பெட்டனாகனார், கேசவனார் போன்ற பல இசையமைப்பாளர்களின்பட்டியலும் உள்ளது. கேசவனார் போன்ற சிலர் தாமே கவிஞராகவும் இசையமைப்பாளராகவும்இருந்தனர் என்றும் பார்க்கிறோம். இத்தகைய திறம் படைத்தவர்களை, கர்நாடக இசை மரபில்வாக்கேயகாரர்கள் என்று அழைப்பார்கள். இத்துறையில் மூத்தவர்களான தமிழ் மூவர் என்றுஅழைக்கப்படுவோரில், முத்துத் தாண்டவர், மாரிமுத்தா பிள்ளை இருவரும் வாக்கேயகாரர்கள்.அருணாசலக் கவிராயர் பாடல்களுக்கு அவருடைய ஆசான்கள் மெட்டமைத்ததாகத் தெரிகிறது. சங்கீதமும்மூர்த்திகள் என்றழைக்கப்படும் தியாகராஜர், முத்துஸ்வாமி தீக்ஷிதர், சியாமா சாஸ்திரி ஆகியோர்சிறந்த கீர்த்தனங்களை இயற்றுபவர்களாகவும் அவற்றைப் பற்பல இராகங்களிலும் தாளங்களிலும்அமைக்கும் வல்லமை பெற்றவராகவும் இருந்தனர்.
அடுத்து, சிலப்பதிகாரக் காலத்தில் பாட்டுக்கு மெட்டமைத்தல் எவ்வாறு இருந்ததெனப் பார்ப்போம்.அந்தக் காலகட்டத்தில், தமிழிசை ஓங்கி வளர்ந்து முழுமை பெற்றிருந்தது என்பது அடியார்க்கு நல்லாரின்உரையிலுள்ள குறிப்புகளிலிருந்தும், ஆபிரகாம் பண்டிதர் (2), விபுலானந்தர் (3), எஸ். ராமநாதன் (4),விபுலானந்தரின் மாணவரான வெள்ளைவாரணர் (5) போன்ற அறிஞர்களின் ஆய்விலிருந்தும்தெளிவாகிறது. அடியார்க்கு நல்லார் தமது உரையில் பாட்டுக்கு மெட்டமைப்பதற்கான வழிமுறைகளைக்கூறும் இசையிலக்கண நூல்கள் பற்றிக் குறிப்பிட்டுள்ளதைப் பார்க்கையில், பாட்டுக்கு மெட்டமைத்தல்என்பது அக்காலத்தில் யாப்பிலக்கண விதிப்படி இயற்றப்பட்ட பாடலுக்கு இசையிலக்கண விதிப்படி ஆற்றப்பட்ட செயலென்று தெரிகிறது. துரதிஷ்டவசமாக, அத்தகைய விதிகள் கொண்ட இலக்கண நூலாகநமக்குத் தெரிய வருவது அடியார்க்கு நல்லார் உரையில் குறிப்பிடப்பட்ட பஞ்சமரபு என்னும் நூல் ஒன்றே.இந்நூல் மேலே சுட்டிய ஆய்வாளர்களுக்கு அவர்கள் எழுதிய காலத்தில் கிட்டாமல் இருந்தது. இந்தநிலைமை 1970-ஆம் ஆண்டளவில், தெய்வசிகாமணிக் கவுண்டர் என்னும் பெரியாரின் அரிய உழைப்பால்மாறியது. முன்னம் தமிழ்க் கடல் உ.வே.சாமிநாதையர் செய்தது போல இவரும் பஞ்சமரபு நூலைப் பலஇடங்களில் தேடித் தமக்குக் கிடைத்த பழைய ஓலைச் சுவடிகளிலிருந்த செய்திகளைத் தொகுத்துஅருட்செல்வர், சேலம் நா. மகாலிங்கம் அவர்களின் துணையோடு 1973-ல் அதை அச்சேற்றினார்.இந்நூலுக்கு மிக விரிவான உரையை இசைக்கலைச் செல்வர் வீ.ப.கா. சுந்தரம் அவர்கள் 1973-ல்வெளியிட்டுள்ளார் (6). அதன்படி, அடியார்க்கு நல்லார் முப்பதுக்கும் மேலான பஞ்சமரபு நூற்பாக்களைத்தமது சிலப்பதிகார உரையில், குறிப்பாக அரங்கேற்று காதை, ஆய்ச்சியர் குரவைப் பகுதிகளில்கையாண்டுள்ளார் என்று அறிகிறோம். சேறை அறிவனார் என்பவர் இயற்றிய இந்நூலில் காணும் இசைபற்றிய தகவல்கள் நம்மைப் பிரமிக்க வைக்கின்றன: குரலிசை மரபு, வாத்திய (யாழ், துளைக்கருவி,தோல்கருவி போன்றவை) மரபு, தாள மரபு, நாட்டிய மரபு, அவிநய மரபு என்ற ஐந்து பகுதிகளைக்கொண்ட இந்நூல் இவை ஒவ்வொன்றிற்குமான விதி முறைகளை, உரையோடு கூடிய 241 வெண்பாக்கள்வழியே விவரிக்கிறது. இசைமரபுப் பகுதியில், குரலொலி எழும்பும் எட்டு இடங்கள், நாடிகள், என்பவைபற்றிய விவரங்களில் தொடங்கி, இசைப்பாடல்களை இயற்றும் முறை, இழைபு என்னும் சொற்சேர்க்கை முறை, சுர அமைப்பு, ஆளத்தி என்னும் ஆலாபனை பாடும் முறை, நாட்டியத்திற்குப் பாடும் முறை,ஒவ்வொரு பாடல் வகைக்கும் இசையமைப்பதற்கான விதிகள் என்று பல்வேறு செய்திகள் கொண்டஇசைக் கருவூலமாக உள்ளது பஞ்சமரபு. (பாடுபவர் தம் குரலைப் பாதுகாப்பதற்கான பத்திய முறை,பதப்படுத்தற்கான மருந்து போன்ற செய்திகளைக் கூட இந்நூலில் காணலாம்!). மேலும், ஒவ்வொருஇசைக் கருவியையும் உண்டாக்க எந்த வகையான மரம் உகந்தது, எவ்வாறு கருவியை உருவாக்குவதுஎன்ற செய்திகளும், பாடலுக்கேற்பக் கருவியை இசைக்கும் முறையும் கூறப்பட்டுள்ளது. இதுபோல,நாட்டியம் (கூத்து) பற்றிய விவரங்களும் ஏராளமாக உள்ளன. (’இலக்கிய வேலை’ப் படித்துவரும்அன்பர்கள் இந்நூலையும், சிலப்பதிகாரத்தையும் ஒரு முறையேனும் படிக்க வேண்டும் என்பது எனதுஅவா.)
பாட்டுக்கு மெட்டமைப்பது பற்றிப் பஞ்சமரபு கூறுவதைச் சுருக்கமாகப் பார்ப்போம். இந்நூல் சிந்து,திரிபாதம், சவலை, சமபாதம், செந்துறை, வெண்டுறை, தேவபாணி, வண்ணம் ஆகிய இயற்றமிழ்ப்பாவகைகளின் ஓசையை ஒட்டி இசையமைப்பதற்கான இலக்கணத்தை இசைபுணர்த்தல் என்னும் பெயரில் விரிவாகக் கூறுகிறது. சிலப்பதிகாரத்தில் காணப்படும் வரிப்பாடல், குரவை, வள்ளை,தேவபாணி போன்ற பாடல் வகைகள் பஞ்சமரபின் இலக்கணப்படி அமைந்தவை என அடியார்க்குநல்லார் உரையிலிருந்து நாம் அறிகிறோம். பரிபாடல் காலத்தில் கலிப்பா என்னும் பாவகையைஇசையமைக்கத் தகுந்ததாகத் தேர்ந்தெடுத்ததாகத் தெரிகிறது. இப்பாவினம் தரவு, தாழிசை, சிற்றெண்,பேரெண், சுரிதகம், அராகம், கொச்சகம், முடுகு என்ற பல செய்யுள் பகுதிகளைக் கொண்டது. இதற்கும்கர்நாடக இசையமைப்புக்கும் இருக்கக் கூடிய சாத்தியம் பற்றிப் பின்பு காண்போம்.சிலப்பதிகாரத்திற்குப் பின், தமிழ்ப் பாடல் அமைப்பிலும் இசையிலும் ஒரு புரட்சியைக்காரைக்காலம்மையார் (3-ஆம் நூற்றாண்டு) செய்துள்ளார். இவர் முதன்முறையாகத் தரவு கொச்சகக்கலிப்பா வகையில் அமைந்த பத்துப் பாடல்களின் தொகுப்பான பதிகம் என்ற பாடல் வகையை அறிமுகப்படுத்தினார். மேலும், அப்பாடல்களுக்கு நட்டபாடை, இந்தளம் போன்ற பண்களை அமைத்துப்’பண்சுமந்த பாடல்கள்’ என்னும் மரபை உருவாக்கினார். இதுவே பின்னர் (5-8ஆம் நூற்றாண்டு) எழுந்ததேவாரப் பாடல்களின் அமைப்பிற்கும் இசைக்கும் அடிகோலியது. ஆழ்வார்கள் இயற்றிய நாலாயிரதிவ்வியப் பிரபந்தமும் இவ்வகையில் அமைந்தது. அடுத்து, 15-ஆம் நூற்றாண்டில், திருஞானசம்பந்தர்கையாண்ட வண்ணச்சந்தம் என்னும் விருத்தவகையைப் பெருமளவில் விரிவு படுத்தி அருணகிரிநாதர்ஆயிரக்கணக்கான வண்ணச் சந்தப் பாடல்களை இயற்றித் தமிழிசையில் புதுமை செய்தார் (7). தான,தன்ன, தத்த என்பன போன்ற பல்வகைச் சந்தங்களின் வரிசையில் (சந்தக் குழிப்பில்) அமைந்ததிருப்புகழ்ப் பாடல்களுக்கு வள்ளிமலை சுவாமிகள், சாமி அய்யர், கிருபானந்த வாரியார்,கிருஷ்ணசுவாமி அய்யர், சாதுராம் சுவாமிகள் முன்னரும், ஏ.எஸ்.ராகவன் அவர்கள் அண்மையிலும் (8)சந்தக் குழிப்பை ஒட்டி இராக, தாளங்கள் அமைத்துள்ளனர். (இங்ஙனம் சந்தக் குழிப்பை முன்வைத்துஇசையமைப்பதை, திரைப்பட இசையில், சிலவேளைகளில் தேவைப்படும் ’மெட்டுக்கேற்பப் பாட்டு’எழுதும் முறையின் முன்னோடியாகச் சொல்லலாம்.)
இவ்வாறு படிப்படியாக வளர்ந்த தமிழிசையின் பாடல் அமைப்பும் இசையமைப்பும் 16-ஆம் நூற்றாண்டுக்காலகட்டத்தில், கீர்த்தனம் என்ற புதுவகைப் பாடல் அமைப்பால் வேறொரு திசைநோக்கிச் செல்லத்தொடங்கின. இந்தப் பாடல் அமைப்பிற்கு, வடமொழியில் சாரங்க தேவர் இயற்றிய சங்கீத ரத்னாகரம்என்னும் தமிழ்ப் பண்களின் அடிப்படையில் எழுந்த இசை நூலும், வேங்கடமகியின் மேளகர்த்தா ராக அமைப்பும் அடிப்படையானவை எனக் கருதுவர். இதன் விளைவே தற்போதைய கர்நாடக சங்கீதம் எனநம்பப்படுகிறது. திருஞானசம்பந்தரின் யாழ்முரிப் பதிகமே கமக அமைப்பிற்கும், வீணையின் பயன்பாட்டிற்கும், இவற்றின் விளைவாகக் கர்நாடக இசையின் ராகங்களின் தோற்றத்திற்கும் வித்திட்டதுஎன்ற கருத்தும் எழுப்பப்பட்டுள்ளது (8) முத்துத்தாண்டவர் (1525 – 1600) முதன் முறையாகத் தமிழில்பல்லவி, அநுபல்லவி, சரணம் என்ற அமைப்புக் கொண்ட கீர்த்தனங்களை இயற்றி ராக, தாளங்களோடுசேர்த்துப் பாடும் வகையில் வழங்கினார். இவருக்குச் சற்றே முந்திய காலத்தில், தெலுங்கில்அன்னமாச்சாரியா (1408-1503), கன்னடத்தில் புரந்தரதாசர் [1484–1564] ஆகியோர் கீர்த்தன வடிவில்பாடல்கள் அமைத்துப் பாடியிருந்தனர். தொடர்ந்து தமிழில், மாரிமுத்தா பிள்ளை (1712-1787), அருணாசலக்கவிராயர் (1712-1779), ஊத்துக்காடு வெங்கடசுப்பையர் (1700, 1765) ஆகியோரும் கீர்த்தன வடிவில் பாடல்கள்அமைத்துப் பாடினர். பின்னர், சங்கீத மும்மூர்த்திகள் தெலுங்கு, சம்ஸ்கிருத மொழிகளிலும், பாபநாசம்சிவன், பெ.தூரன், அம்புஜம் கிருஷ்ணா ஆகியோரும் இன்னும் பலரும் தமிழ்க் கீர்த்தனப் பட்டியலைவிரிவுபடுத்தினர். இப்போது நடைபெறும் கச்சேரிகளில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ள கீர்த்தனம் என்றபாடல் அமைப்பின் அஸ்திவாரம் எது என்பது பற்றிய ஆய்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது (9,10).ஒத்தாழிசைக் கலிப்பாவின் தாழிசை, அராகம் முடுகு போன்ற உறுப்புகள் கர்நாடக இசையின் பல்லவி,அநுபல்லவி, சரணம், மத்தியம காலப் பகுதி ஆகியவற்றின் மூலங்களாக இருக்க வாய்ப்புள்ளது என்றகருத்து முன்வைக்கப்பட்டுள்ளது (9); இது இசையறிஞர்களால் மேலும் ஆராயத்தக்கது. கீர்த்தனம் தவிர,தான வர்ணம், பதவர்ணம், தில்லானா போன்ற வடிவங்களும் சுரம், தாளத்துடன் மெட்டமைத்துஇயற்றப்பட்டுள்ளன (9).
தற்கால இசைக் கலைஞர்கள் தமிழிசையின் பெருமையை உணர்ந்து அதைப் பரப்பி வருவது நமக்குமகிழ்ச்சியைத் தருகிறது. மறைந்த பத்மபூஷண் எம்.எஸ். சுப்புலக்ஷ்மி அவர்கள், கலிப்பாவின் தாழிசைஅமைப்புக் கொண்ட சிலப்பதிகாரத்தின் ஆய்ச்சியர் குரவைப் பாடலை இராகமாலிகையாகஇசையமைத்துப் பாடியது போல (11), பரிபாடல் போன்ற மற்ற சங்க காலப் பாடல்களுக்கும் இசை,நாட்டிய அமைப்புகளை இசைவல்லுநர்கள், தமிழிசை இலக்கண விதிகளை ஒட்டி அமைப்பார்கள் என்றுஎதிர்பார்ப்போம்.
மேற்கோள் நூல்கள்:
1. வீ.ப.கா. சுந்தரம் (1994) தொல்காப்பியத்தில் இசைக் குறிப்புகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,சென்னை.
3, விபுலானந்தர் (1974), ‘யாழ் நூல்’ கரந்தைத் தமிழ்ச் சங்கம், தஞ்சாவூர்(http://noolaham.net/project/181/18040/18040.pdf)
4. எஸ். ராமநாதன் (1981), ‘சிலப்பதிகாரத்து இசைத் தமிழ்’ தமிழ் எழுத்தாளர் கூட்டுறவுச் சங்கம்,சென்னை.
5. வெள்ளைவாரணர்(1979) ’இசைத் தமிழ்’ ராமகிருஷ்ண வித்யாசாலை, சிதம்பரம்.
6. வீ.ப.கா. சுந்தரம் (1991) ‘சேறை அறிவனார் இயற்றிய பஞ்சமரபு” கழக வெளியீடு, சென்னை.
8. க. தியாகராஜன், (1997) ’இசைத் தமிழின் உண்மை வரலாறு’ விவேகானந்தா அச்சகம், மதுரை.
9. கௌ. சுப்பிரமணியன் (2017) அ) ‘தமிழில் இசைப்பாடல் வகைகள்’, ஆ) ’இசைத்தமிழ்ச் சிந்தனைகள்’,குமரன் புத்தக இல்லம், கொழும்பு-சென்னை.