உ
காப்பு
நெஞ்சக் குடிலினில் நீயெழுந் திந்தநன் னேரமுன்னைக்
கொஞ்சிக் குலவிக் களிப்புறுந் தாயினைக் கும்பிடயான்
அஞ்சித் துவங்கிடு மிந்தவந் தாதிக் கருள்புரிவாய்
குஞ்சர மாயுருக் கொண்டடி யாருளங் கொண்டவனே
அழகிய யானை வடிவம் பூண்டு அடியார் மனதைக் கவரும் விநாயகப் பெருமானே! நல்ல வேளையிதனில், உன்றன் அன்னையான
அங்கயற்கண்ணியைத் தொழுமெண்ணத்தோடும், அறிவுக்குறைவால் விளையும்
அச்சத்துடனும் யான் துவங்கியுள்ள இவ்வந்தாதி பழுதின்றி அமைய நீ என் உள்ளமாகிய இல்லத்தில்
தோன்றி அருள்புரிய வேண்டுகிறேன்.
அந்தாதி
1. தாயாய் நினைத்துன் தாளடைந்
தேற்குநின் தண்ணருளை
ஓயா தளித்திவ்
வறிவிலா ஏழையும் உன்புகழை
வாயால் வழுத்திட
வாய்ப்பளித் தாய்தன் வடிவழகில்
மாயா வினோதனச்
சொக்கனை விஞ்சிய மாணிக்கமே!
1.
தன் திருவிளையாடல்களாலும், மேனி அழகினாலும் உலகோரைச்
சொக்க வைக்கும் சுந்தரேசுவரனையும் மிஞ்சும் எழில்படைத்த மீனாட்சியம்மையெனும் மாணிக்கமே!
உன்னை என் தாயாகக் கருதி உன் திருவடியை நான் அடைந்த வேளையிலே உன் இனிய
அருளை வற்றாதளித்து, ஓரறிவுமிலாத நானுங்கூட உன் பெருமையைப் பாட
வாய்ப்பினைக் கொடுத்தனையே என்று நினைத்து உன்னைப் போற்றுகிறேன்.
2. மாணிக்க மேகலை பூணும்அம் மேனி மரகதமாம்
ஆணிமுத் தாமெங்கள்
ஆச்சி எயிற்றணி ஆங்கவள்தன்
வேணி மணியொளிர் சோதிவிண் மீனையும் விஞ்சுமெனப்
பாணி யமர்ந்தவப்
பைங்கிளி பேசிடப் பார்த்தனனே
2.
"எம் தாயானவள் மரகதமெனப் பச்சைநிறங்கொண்ட தன் திருமேனியில் சிவந்த
மாணிக்க ஒட்டியாணமணிந்தவள்; உயர்ந்த முத்தினை நிகர்த்த அழகிய
பல்வரிசை கொண்டவள்; அவளது கொண்டையில் புனைந்துள்ள வைர மணிகளின்
ஒளியானது வானிலுள்ள நட்சத்திரங்களின் பிரகாசத்தையும் மிஞ்சும்" என்றெல்லாம் அங்கயற்கண்ணியின் திருவழகை அவள் வலது கையில் அமர்ந்திருக்கும்
பச்சைக்கிளி சொல்வதாகக் கற்பனை செய்தவாறு.
3. பார்க்கு மிடமெங்கும் பார்வதி நீதோன்றிப்
பாசமுடன்
ஈர்க்கும் விதத்தினை
எண்ணி இறுமாந் தெனைமறந்தேன்
யார்க்கு மெதுவு
மளித்திடும் யாமளை யம்மவடி
யேற்குமிவ்
வானந்த மன்றிமற் றேது மினியெதற்கே
3.
பருவதராசனின் திருமகளே! அடியேன் நோக்குமிடங்களில்
எல்லாம் நீ காட்சியளித்து அன்னையின் பற்றோடு என்னைக் கவரும் வண்ணத்தை நினைத்து நினைத்துப்
பெருமகிழ்வெய்தி நான் என்னும் உணர்வை இழந்து நிற்பேன். கேட்போருக்கு
எதையும் கொடுத்திடும் இளமை எழிலுடைய என் அம்மையே! இத்தகைய இன்ப
உணர்வன்றி வேறெதுவும் உன்னிடம் நான் வேண்டேன்.
4. இனிக்குந் தமிழ்கொண் டிசைப்போர்க் கென்றுமுன் இன்னருளைத்
தனித்துத் தருநற்
றருவே குருபரன் சாற்றுபுகழ்
பனிக்கும்ப வெற்பின் புரவலன் பெற்ற பசுங்கொடியே!
கனிக்கு நிகர்மொழி
கொஞ்சுங் கிளிவளர் கோமளமே!
4.
தித்திக்கும் தமிழ்கொண்டு உன்னைத் துதிப்போர்க்குத் தனியானதொரு பாசத்துடன்
அருளைத் தரும் கற்பக மரம் போன்றவளே! குமரகுருபர அடிகள் பிள்ளைத்தமிழ்
கொண்டு போற்றுகின்ற புகழுடையவளே! பனிபடர்ந்த உச்சியுடைய இமய
மலையின் அரசனான மலத்துவசன் பெற்ற இளங்கொடியே! இனியமொழி பேசும்
கிளியை வளர்ப்பவளே! (அல்லது கிளி
கையில் தங்குபவளே!) மென்மையும் இளமையும் கொண்டவளே!
5. கோமக ளாகவுன் செவ்வியைக் கண்டோர் குவலயத்தே
மாமது ராபுரி
மாதுனை யன்றி மனத்தகத்தில்
தாமொரு தெய்வ
மெவரையும் போயினித் தாங்கிலரே
ஆமவர் சூழலில்
அம்மைநீ ஆக்கி(டு) அடியனையே
5.
புகழ் வாய்ந்த மதுரை நகரில் பட்டத்தரசியாக வீற்றிருக்கும் உன் அழகைப்
பார்த்தபின் உனது அடியார்கள் தம் நெஞ்சத்தில் வேறொரு கடவுளரையும் நினையார்.
அத்தகைய அடியார்கள் குழுவில் மூடனாகிய என்னையும் சேர்ப்பித்து அருள்புரிவாய்.
6. அடிநாள் தொடுத்தியான் ஆலவாய் மாநகர் ஆலயத்துன்
அடியே துணையென தம்மவென் றாரும் அறிந்திடுமா(று)
அடியேன் அரற்றிய
காலையில் அஞ்சிடேல் ஆரையு(ம்)நான்
அடியே னெனச்சொன்ன
அற்புதம் நெஞ்ச மகலரிதே
6.
சிறு வயதுதொட்டு நான் மதுரை நகரில் உனது கோவிலுக்குச் சென்று,
‘அம்மா! உன் திருவடியே சரணம்’ என்று யாவரும் அறியும் வகையில் கதறித் தொழுங்காலத்தில்,
அனைவருக்கும் அரசியும் அன்னையும் ஆகிய நீ உன் மக்களெவரையும் வருத்தமுறச்
செய்யாய் என்று நான் உணரச் செய்த விந்தையை என்றும் மறவேன்.
7. அரியின் இளையளே ஆங்குள்ள தேவர்கள் ஆனபலர்
வரிசை வகுத்துன்றன்
வாயிலில் வந்து வணங்குகையில்
பரிசென உன்கரம்
பற்றிய சொக்கப் பரமனவன்
கரிசனத் தோடுநின்
காலிற் கழல்சுட்டிக் காட்டுவனே
7.
திருமாலின் உடன்பிறப்பே! நீ வதியும் வானுலகிலுள்ளோர்
பலரும் அணிவகுத்து நின்று உன்னைத் தொழநிற்கும் வேளையில், தனக்கெனத்
தனியான பரிசாக உன்னைப் பெற்ற உன் கணவனான சிவபெருமான் அத்தேவர்களுக்கு உன் காலிலுள்ள
சிலம்பணியைக் காட்டி அவர்களை உன் திருவடியில் வீழச் சமிஞ்ஞை செய்யும் தொழிலைத் தான்
ஏற்று நிற்பான்.
8. காட்டுப் புலியுரி கட்டிக்கை யோட்டினில் காலமெல்லாம்
ஈட்டு முணவினை
இன்னுமோர் பெண்ணுக்கும் ஈந்துடலம்
வாட்ட மடைந்திட்ட
வேளையில் வந்தது வான்மழையாய்
நாட்டுக் கரசியுன்
நாயக னென்ற நலமவற்கே
8.
உடுத்தத் துணியில்லாமையால் காட்டுப்புலியின் தோலையணிந்தும்,
பொருளின்மையால் பிறரை இரந்து பெற்ற உணவில் ஒரு பகுதியைத் தன் தலையில்
அமர்ந்திருக்கும் கங்கைக்குக் கொடுத்ததுபோக மீதமுள்ள சிறிய அளவைத் தான்
உண்டும், இங்ஙனம் பலவாறாக வருந்தி உடலும் உள்ளமும்
வாட்டங் கொண்ட நிலையில் நெடுநாள் இருந்த அச்சிவபிரானுக்கு, ஆலவாய்
நகரின் அரசியான உன் கணவன் என்னும் மேலான நிலை, நீரின்றிக் காய்ந்த
நிலத்திற்கு மழைப்பொழிவால் கிட்டிய வளம்போல வந்து வாய்த்ததன்றோ?
9. நிலைதள ராதுன் நினைவென்றன் நெஞ்சம் நிறுத்தியொரு
மலைபெயர்ந்
தாலு மயங்கா தியானுன் மகிமையிலே
அலைகடற் சேர்ந்திட்ட
ஆறென ஒன்றுமவ் வானந்தநாள்
தொலைவினில்
இல்லென்று சொல்திரு வாணி தொழுபவளே
9. திருமகளும் கலைமகளும் தொழுதேத்தும்
அங்கயற்கண்ணி அம்மையே! உன் திருவுருவை என்னுள்ளத்தில் சற்றேனும்
சலியாமல் நிலைநிறுத்தி, அதன் பயனாக உனது அளவில்லாப் பெருமையில்
நானும் கடலோடு கலந்த ஆற்றுவெள்ளமென ஒன்றிப் பேரானந்த நிலையை நான் எய்துமாறு நீ விரைவில்
அருள்புரிதல் வேண்டும்.
10. தொழுவோர்க் கருளத் துடிக்கின்ற தாய்பதம் தொட்டுணர்ந்தேன்
பழுதா மவள்புகழ்
பாடாப் பொழுதென்று; பார்பதங்கள்
முழுதும் படைத்துப்
புரந்து முடித்தவள் மூடியருள்
பழுத்தெம்மை
ஆட்கொளும் பாங்கினைப் பத்தர் பகர்ந்திடுமே
10.
அண்ட சராசரங்களையும் படைத்தல், காத்தல்,
அழித்தல், மறைத்தல், அருளல்
என்னும் ஐந்தொழில் புரிபவளான நீ உன்னடியார்களை அருள்கனிந்து ஆட்கொள்ளும் தன்மையள்
என்று உன் அன்பர்கள் கூறுவர். அவ்வண்ணமே, உன்னைச்
சார்ந்து துதிப்போர்க்கு அருள் புரியப் பேராவலுடனும் கருணையுடனும் அன்னையான நீ காத்திருப்பதை
நான் உன்னடி சேர்ந்தபோது உணர்ந்து கொண்டேன். இனி உன்னைப் பாடாத வேளையெல்லாம் பழுதானதாமென்றுங்
கண்டுகொண்டேன்.
11. இடுவார் வரம்பல தேவரும் ஈசனும் இந்திரனும்
நெடுநாள் தவம்புரிந்
தேத்துவர்க் கிங்(கு)அனை நீயெனைப்போல்
படுபாவி யாயொரு
புண்ணியம் செய்திலாப் பாமரற்கும்
மடுவாய்ச் சுரந்தவர்
மாசறுப் பாயெங்கள் மாதரசே
11.
ஆலவாய் அரசியே! மற்ற கடவுளரெல்லோரும் இவ்வுலகில்
பலகாலந் தவமிருந்து தம்மைத் துதிப்போருக்கே அருள்செய்வர். அதற்கு மாறாக, அன்னையாகிய நீ தீயவற்றையே புரிந்து நல்லசெயல்கள் ஏதும் செய்திடாத அறிவிலாத
மக்களுக்கும், எல்லா மாந்தருக்கும் பயன்தரும் சுனைநீர் போல உன்னருளைச்
சுரந்து அவர்தம் மாசினை
நீக்குவாய்.
12. மாதங்கி யென்று மதாலசை யென்றுனை மாதவத்தோர்
வேதம் முழங்கி
விளித்திடு(ம்) வேளையில் விம்மிவிம்மி
ஓதவங் கேது
மறிந்திடா(து) ஓரத்தில் நிற்கையிலுன்
பாதங் கிடைத்திடப்
பண்ணிநீ யென்னையும் பாலித்தயே
12.
நல்லொழுக்கங் கொண்ட உயர்ந்தோர் உன் நாமங்கள் பலவும் கொண்டு அழைத்து,
மறைகள் ஓதி உன்னைப் போற்றுகையில், ஒன்றும் படித்திராத
நான் ஓரமாக நின்று செய்வதறியாமல் நிற்கும் வேளையில், நீ உன் திருவடியில்
என்னையும் சேர்த்து அருள் புரிந்தனையன்றோ?
13. பால்வண்ணன் பக்கலில் பச்சைப் பசேலென்று பார்வதியுன்
மேல்வண்ணஞ்
சேர்கையில் வெண்பனி மேனியன் விண்ணவரை
மால்வண்ணங்
கொண்டன மென்று மயக்கிடு வேளையில்நின்
கால்வண்ணச்
சாந்தது காட்டிக் கொடுத்திடும் கள்ளத்தையே
13.
பால், பனி இவைபோன்ற வெண்மைநிறங் கொண்ட பரமசிவன்
பச்சை நிறத்தளான உன்னை அணைத்து நிற்கையில், உன்வண்ணம் தனக்கும்
வந்ததென நினைத்து வானோரைத் தான் திருமாலென மயக்க முயலும் நேரத்தில், உன்றன் காலில் நீ பூசியுள்ள செம்பஞ்சுக்குழம்பின் நிறமானது அப்பரமனின் திருட்டுத்தனத்தைக்
காட்டிக்கொடுத்து விடும். (மீனாட்சி அம்மையும் ஆலவாய் ஐயனுமாகச்
சேர்ந்து காட்சிதருவதை நினைவுகூர்தல்).
14. கள்ளக் குறத்தி கனிந்தொரு பாலுன்றன் கால்பிடிக்கத்
தள்ளி யமர்ந்துதெய்
வானையுந் தான்மறு தாள்பிடிக்கப்
புள்ளி மயிலோன்
பொறுமையில் லாதந்தப் பூவையர்க்கு
மெள்ளச் சமிஞ்ஞை
விடுத்திடும் வேடிக்கை வேண்டுவையே
14.
தனக்கு மாமியான உனது ஒருகாலை குறப்பெண்ணாகிய வள்ளி அன்புடன் பிடிப்பாள். முருகனின் மறு மனைவியாகிய தேவானை
வள்ளியிடமிருந்து சற்றே விலகி அமர்ந்து உனது மறு தாளைப் பிடிப்பாள். இவ்வாறு இவர்கள் உனக்குச் செய்யும்
பணிவிடையை மயில் மேலமர்ந்து அவர்களிருவருடனும் வெளியில் செல்லத் தயாராக நிற்கும் முருகப்பெருமான்
கண்டு, தன் பொறுமையை இழந்து, தன் மனைவியரைப்
பணிவிடை செய்வதை விட்டுத் தன்னிடம் வருமாறு கண்சாடை விட்டுத் தவித்து நிற்பான்.
அந்தக் காட்சியை நீ விரும்பிப் பார்த்திடுவாய்.
15. வைகுந்த வாசன் மகிழ்திரு மாதும் மலரயன்நா
வைகுமவ் வாணியும்
வேண்டித் தொழுதிட வானவர்தம்
செய்கை சிறந்திடச்
சென்னிமண் தாழ்த்தியுன் சீர்புகழக்
கைகுவித் தேழையுன்
காலடி நிற்பதைக் கண்டுகொள்ளே
15.
அம்மையே! ஒருபுறம் திருமாலின் துணைவியான திருமகளும்
பிரமன் நாவிலுறையும் கலைவாணியும் போற்றிநிற்க, மறுபுறம் தேவர்கள் யாவரும் உன்னால் விதிக்கப்பட்ட
தத்தம் அலுவல்களைச் செவ்வனே செய்ய ஆற்றலைத் தருமாறு வேண்டித் தம் சிரம் நிலம்நோக்கித்
தாழ்த்தி உன் பெருமையை ஏத்திநிற்கும் அவ்வுயர்ந்த சூழ்நிலையில், கீழோனான நான் உன்காலடியின்
நிழலில் நிற்பதைப் பார்த்து எனக்கும் உன் அருளைத் தந்திடுவாய்.
16. கொள்ளேன் பலவாய்த் தனமதைக் கொட்டிக் கொடுப்பினும்நீ
உள்ளே இலாத
உளத்தினர் நட்பை உயர்சிமையப்
புள்ளே புனிதப்
பெருந்தவத் தோர்விழை பூரணமே
கள்ளே கதம்பப்
பொழிலினில் வாழ்கின்ற கற்பகமே
16.
உயர்ந்த சிகரங்களை உடைய இமயமலையில் உலாவும் பறவை போன்றவளே! மெஞ்ஞானம் விரும்பித் தவம்புரிவோர் வேண்டிடும் முழுமைப்பொருளானவளே!
தேன் அனைய இனியவளே! கதம்ப மரங்கள் நிறைந்த மதுரை
நகரில் நினைத்தைத் தரும் கற்பகத் தருவென வாழும் மீனாட்சியம்மையே! உன்னை நினையாதவர்களின் சேர்க்கையை
நான் மிக்க செல்வம் கிடைப்பதாயினும் நாட மாட்டேன்.
17. பகர்ந்திட வொண்ணாப் பரமென நிற்கு(ம்)நீ பாரினிலிந்
நகர்வந் தருளும்
நலம துணர்ந்துவென் னாளுமுன்னை
அகந்தனி லாக்கு
மனுபவ மெய்திடு மானந்தமிச்
சகந்தனில் ஏழைக்குந்
தந்திடு வாய்பரா சத்தியளே
17.
சொல்லால் விளக்குதற்கரியதான, பரவத்துவோடு இயைந்த
மாயை என்னும் தத்துவமாகிய பராசத்தியான நீ அடியவரை உய்விக்கும் பொருட்டு மதுரைப்பதியில்
அங்கயற்கண்ணியாகத் தோன்றி அருள்புரிகிறாய். இதைத் தெரிந்துகொண்டு
நாடோறும் உன் அழகிய வடிவினைக் கண்டு, அவ்வுருவை உள்ளாக்கி,
அதனால் உண்டாகும் மேலான நுகர்ச்சியில் அடையும் பேரின்பத்தை எளியனாகிய
எனக்கும் அருள்வாய்.
18. சத்துவ ஞானமாய்த் தற்பர வத்துவாய்ச் சாற்றுதிரு
வித்தியா பீடம்
விளங்கிடு மீனாக்கி வேண்டுவர்க்கு
நித்திய மான
நிலையளித் தாட்கொளும் நேர்த்தியையப்
பத்தரே யன்றியிப்
பாரினி லியார்க்கும் புகலரிதே
18.
உண்மையறிவின் வடிவமாய்ப் பரம்பொருளாய் மதுரையில் திருவித்யை (ஸ்ரீ வித்யா) என்று அழைக்கப்படும் இருக்கையில் அமர்ந்து
அங்கயற்கண்ணி என்ற பெயரில் விளங்கும் அன்னையானவள் தன்னை வேண்டுவோர்க்கு அழியாத பேரின்ப
நிலையைத் தந்து ஆட்கொள்ளும் திறத்தை அவளுடைய அடியார்கள் அன்றிப் பிறர் எடுத்தியம்புதற்காகாது.
19. தேனின் சுவைநிகர்த் தீந்தமிழ்ப் பாடல் சிறக்கவொரு கோனின் மகளாய்க் குவலயம் வாழக் குறித்தவுனை
வானின் உறைவோர்
வழுத்தி மகிழ்ந்திட வாய்ப்பிலதால்
ஏனிப் புவியில்
சனித்தில மென்றவ ரேங்குவரே
19.
இனிக்குந் தமிழ்ப் பாடல்கள் மேலும் சிறப்புற செய்யத் திருவுள்ளங்கொண்டு
பாண்டியநாட்டு அரசனின் மகளாக உலகமுய்யத் தோன்றிய அங்கயற்கண்ணியாகிய உன்னை அத்தகைய
இனிய தமிழ்ப்பாடல்கள் கொண்டு வாழ்த்திக் களிப்புற இயலாத ஆற்றாமையினால் விண்ணில் உள்ள
தேவர்கள் நாம் ஏன் பூமியில் (மதுரைப் பதியில்) பிறக்காமற்போனோம் என்று ஏக்கமடைவர்.
20. ஏங்கு மடியேன் இதயத் துடிப்பினில் என்றுமுயர்ந்
தோங்கிடு மந்திர
ஓசை பயந்திடும் உள்ளொளியால்
வீங்கு மகந்தையை
வேரொ டெறிந்தர விந்தபதம்
யாங்கினி எய்துமென்
றன்புடன் காட்டி யருள்புரியே
20.
உன் அருளை வேண்டிநிற்கும் நான் எனது இதய ஒலியில் எக்காலத்தும் உனது உயர்ந்த
மந்திர ஓசையைக் கேட்டு அது விளைவிக்கும் நல்லறிவினால் என் பெரும் அகந்தையை அறவே களைந்து
உன் தாமரை மலரடிகளை எந்நாள் அடைவேன் என்று அன்போடு நீ காட்டி அருள்புரிவாயாக.
21. அருளினை யன்றவ் வரன்தன் மிடர்பற்றி ஆலமென்னும்
பெருவிடம் மேனியுட்
போகா வணமாய்ப் பிறிதுமங்குத்
திருவுளங் கொண்டவன்
தேகந் தனிலுடன் சேர்ந்தவன்மேல்
ஒருவகை யின்னலு
மொட்டாது காத்தனை உத்தமியே
21.
முன்பொரு காலத்தில் ஆலகால விடமானது உன் கணவனான சிவபெருமான் உடலிற் செல்லாதவாறு
அவன் கழுத்தை உன் கைகொண்டு பிடித்துக் காத்தருளினாய். பிறகு,
இதுபோன்று பிற இன்னல்கள் பரமனை அணுகவே முடியாதவாறு அவன் உடலில் பாதியாய்
அமர்ந்து எப்பொழுதும் கணவனைக் காத்து வரும் உத்தமியாகத் திகழ்கின்றாய்.
22. உத்தியஃ தாமே உலகெலா மாளும் உமையுனையே
நித்தியம் கண்டுபே
ரின்பநல் லாற்றிலே நீந்துதற்குப்
பத்தியில் பாவியே
ஆயினும் புத்திரன் பாரெனயான்
கத்தியுன் காலடி
வீழ்ந்தும் புரண்டும் கதறுதலே
22.
புவியாளும் உமையாளே!
பக்தியில்லாது பாவம் புரிபவனாயினும் நான் உன்னை நான் எப்பொழுதும்
என்னுள் கண்டு மேலான இன்பநிலையடைய ஒரு எளிய வழி உள்ளது. 'அன்னையே! உன்
பிள்ளையன்றோ நான்'
என்று கூவி உன் திருவடியில் விழுந்தும் உருண்டும் கதறுவதுதான் அந்த வழியாகும்.
23. கதவம் திறந்திடுங் காலையுன் கோயிலில் காத்திருந்துன்
உதய மலரா மொளிர்முகங் கண்டிட ஓடிவந்தென்
இதயம் கரையநின்
இன்னருள் தாவென் றிறைஞ்சியதும்
உதறலா காதென
ஓவென் றழுததும் ஓர்ந்திடம்மே
23.
அம்மையே! அடியேன் மதுரை நகரில் உனது திருக்கோவில்
வாயில் திறந்திடும் அதிகாலை வேளையில் மலரும் பூவென ஒளிவிடும் உன் திருமுகத்தைக் காண்பதற்காக விரைந்து வந்து என் உள்ளம்
உருகிட உனது இனிய அருளை வேண்டிநின்றதையும், 'என்னை உதறித் தள்ளலாகாது'
என ஓலமிட்டு அழுததைதையும் நீ நினைவு கூர்ந்திட வேண்டுகிறேன்.
24. அம்மா எனஇவ் வடியேன் அழைக்கையில் அன்புடனே
அம்மா தவரறி
யாதவ ரும்பொருள் ஆனவளே
அம்மான் மகள்மகிழ்
ஆறு முகனொடும் ஆனையொடும்
அம்மா அடியனு
முன்மக னாமென் றணைத்தருளே
24.
பெருந்தவஞ் செய்வோரும் அறியாத பரம்பொருள் வடிவானவளே! உன்னை அம்மா என்று நான் அழைக்கும்போது,
மான் ஈன்ற வள்ளியின் மணாளனான முருகனையும் ஆனைமுகமுடைய விநாயகனையும் போல
என்னையும் உன் பிள்ளைகளில் ஒருவனாய்க் கருதி என்னை அணைத்து அன்பு காட்டி அருளுவாய்.
25. அணைத்தொரு காலினை அன்றுவான் தூக்கிநின் றாடினவர்க்
கிணையென ஆட
லியல்வதே யாயினு மீசனுக்குத்
துணையெனக் காட்டவே தோற்றதாய் உன்பதந் தூக்கிலளாய்ப்
பிணைத்தனை பெண்ணின்
பெருமையைத் தேவிநின் பேருடனே.
25.
ஒருகால் பூமியிலிருக்க மறுகாலைத் தன் உடலோடு அணைத்தவாறு உயரத் தூக்கி
ஊர்த்துவ தாண்டவமாடிய சிவபெருமானுடன் நீ காளி உருவில் பங்குகொண்ட போட்டியில் அவருக்கு
ஈடாகக் காலை உயரத்தூக்கி ஆட உன்னால் முடியுமெனினும் அவ்வாறு செய்யாமல், ஈசன் தன் காலைத் தூக்கி ஆடுதற்குண்டான ஆற்றலை அவனுக்கு அளித்து நீ துணைபுரிந்ததை
உலகோருக்கு (மறைமுகமாக) அறிவித்ததோடு
நின்று, பெண்ணென்ற முறையில் காலைத் தலைவரை உயர்த்தாமல் நீ அவருக்குத்
தோற்றதாகக் காட்டினாய். இச்செயலால் பெண்ணினத்தின் நாணமுடைமையும்
விட்டுக்கொடுக்கும் உயர்ந்த தன்மையும் உன் பெயரோடு சேருமாறு செய்தனை அன்றோ?
(இப்பாட்டு மதுரை ஆலயத்தில் காணும் ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி,
காளி என்று வணங்கப்படும் திருவுருவச் சிலைகளை மனதிற் கொண்டு அமைத்தது).
26. ஓடினேன் நின்னைவிட் டூர்பல சென்றிவ் வுலகமெல்லாந்
தேடினேன் வேறொரு
செல்வமும் வேண்டுஞ் சுகங்களும்பின்
வாடினேன் என்றன்
மனத்திலோர் இன்பமும் வாய்த்திலனாய்
நாடினேன் மீண்டுமுன்
நற்பதம் ஆலவாய் நாயகியே
26.
கூடல் மாநகரை ஆளும் அரசியே! நான் நீயிருக்கும்
அவ்விடத்தை விட்டுப் பல இடங்களுக்கும் சென்று, உன்னைவிட்டுப்
பிறிதொரு செல்வம் உள்ளதென்று அறியாமையால் நினைத்துப் பொருளையும் பிற இன்பங்களையும்
தேடி அலைந்து, பின் அவை ஏதும் கிட்டாமல் மனம் வாடிச் சிறிதும்
இன்பங்கிட்டாமல் ஆனபின் உன் திருவடியை மீண்டும் நாடி வந்துள்ளேன். என்னைக் காத்தருள்வாய்.
(பின்வரும் மூன்று பாடல்களும் மதுரையில் ஆண்டுதோறும் நடக்கும் சித்திரைத் திருவிழாவோடு
தொடர்புள்ள கருத்துகளைக் கூற முயல்கின்றன).
27. நாதம் முழங்கிட நான்மதிற் கூடலில் நன்குகற்றோர்
தேதி குறித்துன்
திருமணம் நேர்ந்திடுஞ் சித்திரையில்
மோதித் திரளுநல்
மாந்தரின் காட்சிகண் முன்ன(ம்)நிற்கப்
பாதந் தலையொடு
பாய்ந்திடும் பத்திப் பரவசமே
27.
நாற்புறமும் மதில்களை உடைய மதுரையம்பதியில், சித்திரைத்
திங்களில் மங்கள வாத்திய ஓசை முழங்கப் பெரியோர்கள் நன்னாள் குறிப்பிட்டுச் சுந்தரேசருக்கும்
மீனாக்ஷியான உனக்கும் திருமண விழா எடுத்திடும் வேளையில் அந்த நற்காட்சியைக் காணத் திரண்டு
வரும் அன்பர் கூட்டத்தை என் உளக்கண்ணால் பார்க்கையில் என் உடல் முழுதும் இறையுணர்வு
பாய்வதை உணர்கிறேன்.
28. பரவும் அடியவர் பார்த்து மகிழ்ந்திடப் பற்பலராய்ச்
சுரரும் முனிவரும்
சூழ்ந்து துதித்திடச் சுந்தரனாம்
வரன்கை தனில்புனல்
மாயவன் வார்த்திட மாதுமையுன்
கரமலர் கொண்டிடுங்
காட்சி கயிலையில் காண்பரிதே.
28.
தொழுது வழிபடும் அன்பர் குழாம் கண்டு மகிழ்ந்திடத் தேவர்களும் முனிவர்களும்
கோடிக்கணக்கில் புடைசூழ்ந்து போற்ற, வரனாக வந்துள்ள சுந்தரேசனின்
கையில் திருமால் புனித நீர் வார்த்து உன்னைக் கொடுக்க, அழகிய
உமையின் அவதாரமாகிய உன் மலரனைய கரத்தைச் சொக்கன் பற்றிடும் காட்சி கயிலாலயத்திலும்
கிட்டாது.
29. அரிதன் இளையளே அன்றொரு நாளவன் அன்புடன்சீர்
வரிசை கொணர்ந்து
மடங்கிய தெண்ணிநீ வாட்டமுறக்
கரிசனம் பொங்கியக்
கண்ணுதற் காதலன் கைத்தலத்தே
பரிசாய் அளித்தனன்
பாடிக் களிதரப் பைங்கிளியே
29.
திருமாலின் தங்கையே! உனக்கு அண்ணனென்ற முறையில்
மாலவன் பலவகைச் சீர் வரிசைகளை (அழகர் கோவிலிலிருந்து புறப்பட்டு
வைகை ஆற்றில் இறங்கிக்)
கொண்டுவருகையில் அதற்குள்ளாக உன் திருமணம் முடிந்து விட்ட சேதி கேட்டுத்
திரும்பிபோன நிகழ்ச்சியை நினைத்து நீ வருந்துகையில், உன் கவலையைப்
போக்குதற்காக அன்புக் கணவனான சிவபிரான் உன்கையில் அமர்ந்து எப்போதும் இனிதாகப் பாடி
மகிழ்விக்கும் பசுங்கிளியைப் பரிசாகத் தந்து உன் துயர் தீர்த்தனன் அன்றோ? என்று கற்பனை செய்தவாறு.
30. கிளியுடன் முத்துடைக் கொண்டையும் கெம்புக் கிரீடமுமாய்
ஒளிரும் மரகத
ஓவிய மாய்நிற்கும் உன்னெழிலில்
களியும் கரையிலாக்
காதலும் கொண்டதால் காலனையும்
நெளியும் படிசெயும்
நெஞ்சினைத் தந்தனை நின்மகற்கே
30.
அங்கயற்கண்ணியே! உன் வலது கையில் பைங்கிளியும்,
தலையில் முத்துக்களால் அலங்கரிப்பட்ட அழகிய கொண்டையும் இரத்தினங்கள்
பதித்த மணிமுடியும் தாங்கிப் பச்சை மரகதமென மேனியுடன் ஒளிவிடும் உன்னழகை நித்தம் கண்டு
உள்ளத்தில் மகிழ்ச்சியும் உன்மேல் எல்லையில்லாத அன்பும் தாங்கும் பேறு பெற்றதால் உன்
மகனான எனக்குக் கூற்றுவனையும் விரட்டி ஓடவைக்கும் மன உறுதியைத் தந்துவிட்டாய்.
31. கற்கு மடியவர் கண்டிடு வாருனைக் காற்றிலசை
நெற்குள் மணியென
நீலத் திரைக்கடல் சிப்பியதன்
பற்குள் ஒளிந்து
பளிச்சிடும் முத்தெனப் பல்லறிஞர்
சொற்குள் ஒளிரும்
சுடரெனத் தோன்றிடும் சோதியென்றே
31.
நூல்கள் பலவும் கற்ற பெரியோர்கள், உன்னைக் காற்றிலசைந்தாடும்
நெற்கதிரினுள் இருக்கும் மணியாகவும் சிப்பிக்குள் ஒளிந்து ஒளிரும் முத்தாகவும் முற்றுமுணர்ந்தோர்
பகரும் சொற்களிடை விளங்கும் அறிவாகவும், எங்குமாய்க் காணும்
சோதியாகவும் உணர்வர் (பெரியோர்கள் உன் திருவடிவை யாவற்றிலும்
காண்பர் என்பதாம்).
32. சோதிக்க வேண்டிநீ தந்திட்ட பொல்லாத் துயரமென்னைப்
பாதிக்க வொட்டாதுன்
பாத மலரடி பற்றிநிற்பேன்
ஆதிக்கங் கொண்டனை
அண்ட மனைத்தும் அடியனிதைச்
சாதிக்க வைத்த
திறங்கண்டு போற்றுவன் தாயுனையே
32.
என் தாயான அங்கயற்கண்ணியே! நான் உன்மேற் பூண்ட
பற்றினைச் சோதிப்பதற்காக நீ தந்த துன்பங்கள் என்னை வருத்தாதிருக்க உன் மலர்த்தாளையே
துணையாகக் கொண்டுள்ளேன். அகிலமனைத்தும் ஆளுபவளான நீ அற்பனான எனக்கு இங்ஙனம் துன்பங்களைக் கடக்கும் ஆற்றலைத்
தந்ததற்காக உன்னைப் போற்றி வணங்குகின்றேன்.
அவையடக்கம்
இச்சையாய் எல்லாச்
செயலுமாய் ஞானமாய் எங்குநிறை
சச்சிதா னந்தச்
சொரூபிநீ என்றுனைச் சாற்றுதற்கே
இச்சிறு பாடலை
ஏழையேன் யாத்தனன் என்மொழியைத்
துச்சமா யெண்ணிடா
தேற்றருள் மாம துரைமணியே
புகழ்மிக்க மதுரைநகரில் விளங்கும் மணியே!
எண்ணம், செயல், அறிவு இவற்றிற்கு
ஆதாரமான சத்தியாய் (இச்சாசத்தி, கிரியாசத்தி,
ஞான சத்தி) மூவகை ஆற்றலுருக் கொண்டு எங்கும் நிறைந்த
உண்மைப் பொருளாக நீ திகழ்வதைக் கூறும் முயற்சியாக நான் இயற்றிய இந்த அற்பப் பாடல்களை
நீ கீழாகக் கருதாமல் ஏற்றுக்கொண்டு எனக்கு அருள்புரிய வேண்டுகின்றேன்.
---------------------------------------------------------------------------------------------------------------------
சொற்பொருள் விளக்கம்:
பாடல் 3: யாமளை: இளம்பெண்;
பச்சைநிறத்தவள்
பாடல் 4: கோமளம்: இளமைச்
செவ்வி; மென்மை; அழகு; மாணிக்கம்
பாடல் 5. கழல் = சிலம்பு;
கால் மோதிரம்:
பாடல் 6. அடிநாள் = முதல் நாள்; ஆதி காலம்
பாடல் 7: கரிசனம் = அன்பு
பாடல் 10: பதம் = வரிசை
பாடல் 12: மாதங்கி: மதங்க முனிவரின் மகளாகத் தோன்றியவள்; மதாலசை:
களிப்பு மேலிட்டவள்; பாலித்தல்= அருளல், ஈதல், காத்தல்.
பாடல் 14: சமிஞ்ஞை: குறி
பாடல் 16: சிமையம் = உச்சி, சிகரம்
பாடல் 18: தற்பரம் =பரம்பொருள்; கடவுள்
பாடல் 19: சனித்தல்= பிறத்தல்
பாடல் 22: உத்தி= தந்திரம்,
வழி
பாடல் 28: வரன்= சிறந்தவன்,
மருமகன், கடவுள், கணவன்
குறிப்பு: விஷு ஆண்டு, சித்திரைத் திங்கள் 21-ஆம் நாள், உத்தர நட்சத்திரம் (மே 4, 2001) மதுரை மீனாட்சி திருக்கல்யாண நன்னாளில் தொடங்கி, வைகாசித் திங்கள், 21-ஆம் நாள், விசாக நட்சத்திரம், பிரதோஷ நன்னாளில் 32 பாடல்களுடன் நிறைவு செய்தது.
.. அனந்த் (அனந்தநாராயணன்).
.. அனந்த் (அனந்தநாராயணன்).
இவ்வந்தாதி ‘அம்மன் தரிசனம்’ ஜனவரி 2002 , பிப்ருவரி 2002 இதழ்களில் வெளியானது.