<> கொசுக் கதை <>
.. அனந்த் (கனடா) ..
(இது ‘ஹப் மாகஸீன்’ மின்னிதழில் 2008-ல் ’மரபில் நகைச்சுவை’
பகுதியில் எழுதிய பாடல்களின் கதை வடிவத் தொகுப்பு)
காட்சி- 1
கோடைக் காலம் வந்தும் குளிரும் மழையும் இன்னும் விடாத
இந்தக் கானடா தேசத்திலும் கொசுவுக்கு- அதாவது கொசுக்களின் எண்ணிக்கைக்குப்-
பஞ்சமில்லைதான். ஆனால், கொசு இனத்திற்கு அவற்றின் உணவாகிய இரத்தம்
கிட்டாமல் எழும் பஞ்சத்தையும் அப்போது கொசு படும் கஷ்டத்தையும்
அறிந்து ஆராய்ந்து சொல்ல ஒருவரும் முனைவதில்லை. இதை நினைத்து, மனம் நொந்து போன ஒரு கொசுவின் அங்கலாய்ப்பே கீழ்க்காணும் அந்தாதி வெண்பாப் பாடல்:
வலைவிரிப்பார் வத்திவைப்பார் வாயுண்டு சாகக்
கொலைமருந்து வைப்பார் கொசுநான் -அலைந்தலைந்(து)
ஓர்சொட்டு ரத்தம் உணவுக்காய் யாசித்தால்
போர்கொட்டும் புன்மைச் சனம்! 1
சனத்தொகை 'பில்லியனை'த்
தாண்டுவது தங்கள்
மனத்தில் உறைக்கா மனிதர் - சினத்துடன்
சீறுவார் என்றன் சிறுகுலம் சில்கோடி
மீறினால்; ஈதெம் விதி! 2
விதித்தார் கடவுளெங்கள் வேலையாய் மக்கள்
உதிரம் உறிஞ்சுதல் என்றே - மதித்தெம்மைத்
தாமே வரவேற்று நல்விருந்து தாராமல்
போமென்(று) இகழ்வார் பொரிந்து. 3
பொரியும் பழமோடு பொங்கலுமாய் மாந்தர்
பரிந்தளிப்பார் அந்தப் பசுவிற்(கு) - எரிந்தோர்
துளிக்குருதி யும்தாரார் சோர்ந்துஅந்த மாட்டின்
குளியாத்தோல் குந்தும் எமக்கு. 4
எமனேறும் அந்த எருமையும்தன் மேனி
அமரும்எமக் கீயும்ஆ காரம் - தமதுடலில்
ஓர்கணமும் எம்மை உவந்தேற்கா மானிடர்க்குப்
பேர்வைப்பேன் தன்னலப் பேய்! 5
பேயும் இரங்குமாம் பெண்டிர்க்கென் பாரிவர்எம்
தாய்க்குலத் திற்கும் தயைகாட்டார் - பாயில்
படுத்துறங்கும் போது பதறாமல் நாங்கள்
எடுக்கும் துளிதருமோ துன்பு? 6
துன்மார்க்கர் மேனியின் தோல்குத்தித் தின்றால்எம்
சன்மார்க்கம் விட்டொழிதல் சாத்தியமே - என்றாலும்
நாங்கள் இதையறிந்து நல்வழியை நாதமொடு
ரீங்காரம் செய்வோம் தினம். 7
தினவெடுக்கும் காலெம்மைத் தீர்ப்பதற்குத் தங்கள்
கனம்மிகுந்த கையெடுத்து மாந்தர் - மனம்போலச்
சாத்துவார் தம்முடலைத் தாமே அதைநாளும்
பார்த்துகுப்போம் கண்ணீர் பரிந்து. 8
பரிசாய்க் குருதிதரும் பாங்கில்லை யேனும்
பரிதாபப் பட்டேனும் தங்கள் - பெருமுடலில்
ஓர்இடத்தை எங்கட்(கு) ஒதுக்கிவைத்தால் எம்பசி
தீருமிதைச் சிந்தியா ரோ. 9
சிந்துவார் தம்மினம் வாழ்வதற்குத் தானமாய்
இந்த மனிதர் இரத்தத்தை - வந்திரவில்
பாட்டளிக்கும் எம்நிலைமை பார்த்தளித்தால் தீருமெம்மை
வாட்டும் பெருங்க வலை. 10.
காட்சி- 2
இந்தக் கவிதையைப்
படித்ததும், என் நண்பர்களில் ஒருவரும், கொசு
எதிர்ப்புக் கழ/லகத்தின் (கொ.எ.க.) தலைவரும் ஆன ஒரு புலவர்
பெருமான் படுகோபங் கொண்டுவிட்டார். தமக்கே தளை தட்டாமல் எழுத வராத வெண்பாப் பாவினத்தில், அதுவும் மண்டலித்த அந்த்தாதிப்
பதிகமாய், ஒரு அற்பக் கொசு கவிதை படைத்தது பற்றி மட்டுமல்ல அவரது சினத்தின் காரணம்.
அவர் தினமும் காலையில் எழுந்தவுடன் 'கோபூஜை' என்னும்
பசுவழிபாட்டை ஒழுங்காகச் செய்துவரும் பசு ஆதரவாளர். (அவர் தம் மகளுக்குப்
பசுப்ரியா என்று பெயரிட்டதிலிருந்து அவரது பசுமோகம் நன்கு தெரியவரும்).
அவருக்குக் கொசுவைக் கண்ணால் காணவும் அதற்குத் தம் குருதியைக் கொடுக்கவும்
கட்டோடு பிடிக்காது. தம் வீடு முழுவதும் உள்ளும் வெளியுமாகக் கொசுவலையால்
போர்த்திப் பாதுகாத்து வருபவர்.
இத்தகைய குணநலன் வாய்ந்த நம் கவிஞர் நண்பர் கொசுவின் மேலுள்ள தம் ஆத்திரத்தை வெளிப்படுத்தும் வகையில், பண்டு
பண்டு காலத்தில் வெளியான சிவகவி என்னும் திரைப்படத்தில் எம்.கே. தியாகராஜ பாகவதர்
(எம்.கே.டீ) தாம் சிவபெருமானைப் பாடும் வாயால் முருகனைப் பாட மாட்டேன் என்று பாடிய
ஒரு அழகிய கீர்த்தனத்தை (https://www.youtube.com/watch?v=h7_AKTFpGvk ) அடிப்படையாகக் கொண்டு, கீழ்க்கண்ட
பாடலை இயற்றிப் பாடினார்:
<> பசுக்கவி <>
இராகம்: செஞ்சுருட்டி; தாளம்: ஆதி
பல்லவி:
பசுவினைப் பாடும் வாயால் - அற்பக்
கொசுவினைப் பாடுவேனோ?- வெள்ளைமனப்
பசுவினைப் பாடும் வாயால் - அற்பக்
கொசுவினைப் பாடுவேனோ? - பரம
சாதுவைப் பாடும் வாயால் - அரக்கன்
மீதுநான் பாடுவேனோ
சரணம்:
1. ஆவினைப்
பாடும் வாயால் - கெடுக்கும்
பாவியைப் பாடுவேனோ - எங்கள்
நள்ளிர வில்கடித்தே மறைந்திடும்
கள்ளனைப் பாடுவேனோ?
2. நம்பிடும்
நம் குடும்ப - நலம்
விரும்பியைப் பாடும் வாயால்
துன்பமொன்றே விளைக்க - எமன்விடும்
தூதனைப் பாடுவேனோ
(இப்பாட்டின்
ஒலிப்பதிவை இங்கே கேட்கலாம்:
காட்சி- 3
மேற்கண்ட பாடலைப் பாட நம் கொ.எ.க. நண்பர் 'சிவகவி' கதையில்
வரும் மெட்டையும் நடையையும் தேர்ந்தெடுத்த காரணத்தாலோ என்னமோ, அக்கதையில்
வருவது போல, அவருக்கு ஒரு பெரிய சோதனையை அளித்து அவரைத் தமது அருமை
பெருமையை உணரச் செய்யப் பதினைந்தாவது உலகமாகிய கொசு லோகத்தில் கொலு விற்றிருக்கும்
கொசு பகவான் திருவுள்ளங் கொண்டார். அதன்படி, பசுக்கவியைப்
பாடலைப் பாடிய சிலதினங்களுக்குள், கொசுவின் 'தொல்லை' இல்லாமல்
நிம்மதியாகத் தினம் உறங்கி வந்த நம் கவிஞர் பெருமானின் வீட்டில் திருடர்கள்
புகுந்து,
ஒரு பொருள் பாக்கியில்லாமல் கொள்ளை கொண்டு சென்றுவிட்டனர். பிறரைப் போல, கொசுவின்
உதவியால் இரவெல்லாம் விழித்திருந்து தங்களுடைய உடைமைகளைப் பாதுகாக்கும் மற்ற
மாந்தரைப் போலன்றித் தாம் கொசுவை வெறுத்துக் கொசுப் பழிப்புக் கவிதையும்
பாடியதே தம் இழப்புக்குக் காரணம் என்று உணர நம் புலவர் பெருமானுக்கு
அதிக நேரம் பிடிக்கவில்லை. உடனே அவர் (மீண்டும் சிவகவி-எம்.கே.டீ- சொப்பன
வாழ்வில்..பாடலின் மெட்டில் கீழ்க்கண்ட கீர்த்தனப் பாடலை இயற்றி மனமுருக, கூடியவரை
எம்.கே. தியாகராஜ பாகவதரைப் பின்பற்றிப்
பாடினார் (https://www.youtube.com/watch?v=WoMo_Tp7edc ):
கொசுப் பெருமான் |
<> கொசுக்கவி <>
இராகம்: விஜயநாகரி; தாளம்: ஆதி
பல்லவி:
சொப்பன வேளை மகிழ்ந்து - பறந்துவரும்
சுவாமி உனைமறந்தார் -அந்தோ
அற்பக் குணப்பேய் பிடித்தே உனைத்துரத்த
ஆனவரை முயல்வார்
சரணம்:
நாவால் பழித்திடுவார் பலமருந்தை
நாடிநாள் பாழ்செய்வார் - ஒரு
பாவமும் செய்தறியா உன்னை அழிக்கும்
பாதகம் செய்திடுவார்
அந்தோ விந்தை இதே - அறிவிழந்து
ஆழ்துயிலில் வீழ்வாரே - மாந்தர்
அந்தோ விந்தை இதே - அறிவிழந்து
ஆழ்துயிலில் வீழ்வாரே - இனிச்
சிந்தை திருந்திக் கொசுவே! இவர்குருதி
தினமுனக் களியாரோ?
(இப்பாட்டின் ஒலிப்பதிவை இங்கே கேட்கலாம்:
காட்சி- 4
இப்பாடலைக் கேட்டு மிகவும் மனம் நெகிழ்ந்துபோன கொசுப்பெருமான்
நம் நண்பர் முன் பிரத்தியட்சமாகி அவர் கவலையைத் தாம் உடனே தீர்ப்பதாக உறுதி
கூறினார். அடுத்த கணமே அவர் தமது பரிவார கணங்களோடு, கொள்ளையடித்த
கள்வர் குகையில் புகுந்து அவர்களை ஓட ஓட விரட்டி, நம்
நண்பரின் காலில் விழச்செய்து அவரது வீட்டுப் பொருள்களை அவரிடம் ஒப்படைக்கச்
செய்தார். என்னே கொசுவாரின் மகிமை! நாமும் கொசுப் பெருமானுக்குத் தினமும் குருதி
நைவேத்தியம் அளித்து, அவர் அருள் கடியைப் பெற்றுப் பயனுற வாழ்வோமாக!